Headlines News :
முகப்பு » » மு.நித்தியானந்தனின் 'கூலித்தமிழ்' நூல் ஓர் பார்வை

மு.நித்தியானந்தனின் 'கூலித்தமிழ்' நூல் ஓர் பார்வை



ஒரு சமுதாயம் கடந்து வந்த கற்களாலும் முட்களாலும் வேயப்பட்ட பாதை மட்டுமல்லாது, கண்ணீரிலும் செந்நீரிலும் மெழுகப்பெற்று பல்லாயிரம் உயிர்களை காவு கொண்ட பாவ யாத்திரையின் வரலாற்றுப் பதிவே கூலித்தமிழ். தமிழகத்தின் வானம் பார்த்த பூமியில் வரண்டுபோன கண்மாயைகளையும் பஞ்சம் பரிதவிக்கும் முகங்களையும் பார்த்து கதியற்று நின்றவர்கள், அடிமைகளாகக் கடத்தப்பட்டு இலங்கைக்கு கொண்டு செல்லப்பட்ட சரித்திரங்களின் மீள் ஆய்வின் வீரியமிக்க சிதறல்களே மு.நித்தியானந்தனின் கூலித்தமிழ்..

மு.நித்தியானந்தன் பற்றி அறியாத கற்றறிவாளர்கள் தமிழ் கூறும் நல்லுலகில் இருப்பது சாத்தியமல்ல... பதுளை மண்ணின் மைந்தனாக மலையகத்தின் வார்ப்பாக பரிணமித்த இவர் பத்திரிகையாளராக, பதிப்பாளராக, எழுத்தாளராக, விரிவுரையாளராக, ஆராய்ச்சியாளராக பண்வளங்கள் கொண்டவர்.

இவரின் "ஒரு பதுளைக்காரனின் இலக்கிய பதிவு – துங்கிந்த சாரலில்...” ஆய்வுத் தொடராக வெளிவந்த போது "பாலை மணலில் மழைத்தது போல..." ஒரு தேக்க நிலையில் ஸ்தம்பித்துக் கிடந்த மலைநாட்டு எழுத்துலகை ஒரு சிலிர்ப்போடும் விதிர்ப்போடும் திடுக்கிடச் செய்து சுயதரிசனம் செய்து வைத்தது. அதற்குப் பின்னரே அதையொட்டிய எழுத்துக்களும் அந்த ரீதியிலான தேடல்களும் மலையக எழுத்துலகின் தேக்கத்தை மீட்டு சலனத்தை யும் புதுப்பொழிவையும் ஏற்படுத்திக் கொடுத்தது.

அதே உத்வேகத்தோடும் மு.நித்தியானந்தன் அண்மைக்காலங்களில் எழுதி சென்னை க்ரியா மூலமாக வெளியிட்டுள்ள 'கூலித்தமிழ்' கட்டுரைகளின் தொகு ப்பு மலையக வரலாற்று வடிவமாக பரிண மிக்கின்றது. மலையகம் கடந்து வந்த காற்றாற்று ெவள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட வரலாற்று சாட்சியாக நிற்கின்றது "கூலித் தமிழ்".

தமிழகத்தில் கதியற்று நின்ற கூலிகளின் மரண யாத்திரையில் அவர்கள் குறித்த காலத்துக்குள் தோட்டங்களைப் போய் சேர்ந்துவிட வேண்டும்; அவர்கள் பயணத் தின் போது சாப்பிடுவதற்காகக் கையில் எடுத்து கட்டிக் கொண்டு வந்திருக்கும் உணவு மிகக் கொஞ்சம் தான்.

அந்த உணவு தீர்ந்து போனால் அவர்கள் காட்டுக்குள் சாக வேண்டியதுதான். சின்னச் சின்ன காரணங்களால் சம்பவித்த சிறு விபத்துக்களும் கூட அவர்களை மரணத்துக்கு இட்டுச் சென்று விடுவதாயிருந்தது; கூட வந்தவர்கள் அவருக்காகக் காத்துக்கொண்டிருக்க முடியாது. வாழ்க்கையின் பந்தைய ஓட்டம் – அந்த ஒருவனை பலி கொடுத்தாக வேண்டும்.

அல்லது எல்லோரும் அழிந்து போகும் அபாயம். எனவே, ஏதாவது ஒரு காரணத்தால் அக்கூட்டத்தில் நடக்க முடியாமல் பயணத்தை தொடரமுடியாமல் போனவரை இருண்ட வனாந்தரங்களின் உள்ளே கொடிய மிருகங்களும் மலைப் பாம்புக்கும் மத்தியில் கைவிட்டுத் தங்கள் பயணம் போவதைத் தவிர அவர்களுக்கு ஒரு வழியுமில்லை.

ஒரு இலையில் கோஞ்சம் சாதத்தையும் ஒரு சிரட்டையில் தண்ணீரையும் அந்தத் துர்ப்பாக்கியசாலியின் பக்கத்தில் வைத்து அவரை அப்படியே தனியே விட்டுவிட்டுப் புறப்பட்டு விடுவார்கள். நினைத்துபார்க்க முடியாத கொடூரம்! இதைவிடப் பயங்கரச் சித்திரமொன்றை யார் தீட்டமுடியும்?

''செழித்து வளர்ந்த அடர்க்காட்டில் எதுவுமேயில்லாத வெளியில், எப்போதாவது தான் ஆட்கள் வந்துபோகும் ஒரு பாதைக்கருகில் ஒரு மரத்தின் கீழ் அந்த அபாக்கியவாதி கிடத்தப்பட்டிருப்பான். அவனைப் பார்க்க யார் இருக்கின்றார்கள்? தன்னந் தனியே தன்னை விட்டு விட்டுச் செல்லும் அக்கூட்டத்தாரை நோக்கி அவன் கையை நீட்டிக் கெஞ்சி மன்றாடி அழுவாள். அவர்கள் தான் என்ன செய்யமுடியும். ஒன்றில் அவனைப் பார்க்க வேண்டும். அல்லது அவர்கள் தம்முடைய வாழ்வைப் பார்க்க வேண்டும். நடக்கமுடியாத அவனை ஏற்கனவே பத்து இருபது மைல் வரை அவர்கள் தூக்கிக் கொண்டு வந்து சேர்த்திருக்கிறார்கள்; இதற்கு மேல் அவர்கள் ஒன்றும் செய்வதற்கில்லை. அவனே வரவரக் குணமடைவதற்குப் பதிலாக மோசமாகிக் கொண்டே போகிறான். அநாதரவாக அவன் கிடத்தப்பட்டிருக்கின்றான்.

அவனுக்குப் பக்கத்தில் அவர்கள் சிறிது சாதத்தையும் சிரட்டையில் தண்ணீரையும் வைப்பதைப் பார்க்கிறான். கைநீட்டி அவன் கெஞ்சி கதறி அழுவதை கேட்பவர்கள் யாருமில்லை.

தமக்கு முன்னால் தெரியும் அடர்ந்த காட்டினூடாக அவர்கள் ஒவ்வொருவராக தன்னைவிட்டுப் புறப்பட்டு போய்க்கொண்டிருக்கின்றார்கள். அதையும் அவன் பார்க்கிறான். முன்னால் நம்பிக்கை பின்னால் வழி தெரியாத சூன்யமரணம். கடைசியில் எல்லோரும் போய் விட்டார்கள்.

இந்தப் பாழும் உலகிலோ சொர்க்கத்திலோ அவனுக்கு உதவி செய்ய யார் இருக்கிறார்கள்? இனி ஒரு துளி நம்பிக்கையுமில்லை. இம்மாதிரி நிலையில் மெதுவாக இருள் வந்து கவிவதை யோசித்துப்ப பாருங்கள். அதுவும் அந்த வழியால் இனிமேல் பல நாட்களுக்கோ பல வாரங்களுக்கோ யாரும் வரப்போவதில்லை என்பதும் அவனுக்கு நன்றாகவே தெரியுமென்றால் எப்படியிருக்கும்! வழுவழுவென்று ஒரு பாம்பு அல்லது ஒரு காட்டுச் சிறுத்தை மெதுவாக அவனை நெருங்குவதையும், தான் சாகப்போவதை தடுத்துக் கொள்ள ஒரு வழிவகையுமே இல்லாமல், அச்சிறுத்தையின் சிவந்த கண்களாய் அல்லது அப்பாம்பின் நச்சு நாக்கு மெதுவாக தன்னை நோக்கி நகர்வதை அவன் கண்ணுக்கு முன்னால் பார்த்துக் கொண்டிருப்பதையும் யோசித்துப் பாருங்கள்'' என்கிறார் நைட்டன்.

யார் துணை? மரண தேவதையின் முன்னால் மலையகத்தின் முதல் "கூலி" இப்படித்தான் மண்டியிட்டு விழுந்திருக்கிறான். மரணம் அவனைப் பார்த்துக் கெக்கலிகொட்டிச் சிரித்திருக்கிறது. வாழ்வு அவன் முகத்தில் அறைந்து சொன்ன செய்தி: மரணம்.

''இலங்கையின் வனாந்தர வாழ்வு'' என்ற நூலில் டபிள்யூ. நைட்டன் சுட்டிக்காட்டியிருக்கும் மேற்படி நிகழ்வுகளும், அந்த சோக சித்திரத்தை கவிதையை மீட்டி காட்டிய ஸி.வி.வேலுப்பிள்ளையின் "தேயிலைத் தோட்டத்திலே" நூலும் மு.நித்தியானந்தனால் உணர்வு பூர்வமாக வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது.

மு.நித்தியானந்தன் மலையகத்தின் மீது கொண்ட அதீத பற்றையும், அந்த அந்த மலையகத்தில் ஆழமாகப் புதைந்துள்ள வேரையும், வேரடிமண்னையும் தேடி அவர் பயணித்துள்ள வரலாற்று பரப்புகள் மலைக்க வவைப்பதாகும். ஆதாரங்கள் அற்றுப் போன, ஆவணப்படாத மனித கூட்டங்களின் பற்றுக் கோடில்லாத வாழ்வு; அன்றைய பாரம்பரியங்கள் செவிவழிச் செய்தியாகக் கூட தொடர முடியாத அவல நிலையின் நிதர்சனம்.

கலாசார பண்பாடுகனெல்லாம் தொலைந்து போய்விட்ட கால கட்டங்களில் விழுமியக் கூறுகள், சமய நெறிமுறைகள், சடங்குகள், சம்பிரதாயங்கள், வாழ்வின் எச்சங்கள் என்றெல்லாம் அலங்கரிக்க முடியாத, ஆவணப்படுத்தப்படாத பதிவுகளுக்கெல்லாம் அந்நியமாக நின்றுவிட்ட சமுதாயத்தின் கடைநிலை மனிதனின் இயலாமை இங்கு கவனிக்கத்தக்கது.

''உடலையும் உயிரையும் உறவுகளையும் காப்பதிலேயே தாங்கள் நேரம் முழுவதையுமே செலவிட வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருந்த மலையக தமிழர்கள், உணர்வுகளுக்கு உருகொடுத்து இலக்கிய படைப்புகள் மூலம் உள்ளக கருத்துக்களை வெளிக்கொணர முடியாமல் போனதில் வியப்பில்லை. வறுமை, வாய்ப்பின்மை, சமூகத்தடை போன்றவை ஆக்கத்துக்கு இடையூறாக இருந்தன என்பதில் ஐயமில்லை'' என்று தனது அணிந்துரையில் விபரிக்கும் திரு.மழவரையன் விஜயபாலனின் கூற்று கவனிக்கத்தக்கது.

இத்தனை இயலாமைக்கு மத்தியிலும் 'ஆழ்கடல் தோண்டி' முத்தெடுப்பது போல நித்தியானந்தன் மூச்சடக்கி பெற்ற முத்துக்களின் ஆரமே "கூலித்தமிழ்." பிரிட்டிஷ் நூலகத்தின் இந்த சேமிப்புகளும் அவற்றை ஆராய்வதற்கு மு.நித்தியானந்தன் போன்ற வரலாற்று ஆய்வாளர்களுக்கு இடமளிப்பதும் இதயபூர்வமான நன்றிக்கு உரித்தாகின்றது.

மலையகத்தின் முதல் நூலாக கருதப்படும் " கோப்பிக் கிருஷிக் கும்மி" மலையகத்தின் ஒன்றரை நூற்றாண்டு கால எழுத்துலகின் சரித்திரத்தை தேடிக்கொடுத்திருக்கும். பெருமையை தன்னகத்தே கொண்டுள்ளது. ஆபிரகாம் ஜோசப் என்பவரால் இயற்றப்பட்ட முதல் கோப்பியுகத்தின் நூல் என்று பெருமைப்படக்கூடிய நூலாக இது இருந்த போதும், ஒரு மலையக மண்ணின் மைந்தனால் இயற்றப்பெற்ற பெருமையை கொண்டிருந்த போதும், பெரும் அதிருப்திகளை தன்னகத்தே கொண்டிருந்ததை மு.நித்தியானந்தன் கோடிட்டு காட்டுகின்றனர். ஒன்றரை நூற்றாண்டு வரலாற்று அடிநாதத்தை கொண்டிருக்கும் இந்த ஆவணத்தை தனது எண்ணக் கோட்பாடுகளுக்கு மறுதலிப்பதாக நிற்கும் காரணத்தால் வெஞ்சினம் கொண்டு கண் சிவப்பது சரிதானா? என்பது இன்னுமோர் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டிய பொருளாகின்றது.

ஆங்கில துரைத்தனத்துக்கான வக்காலத்தாகவும் மலையகத்தின் துரதிஷ்டமாகவும் கோப்பிக் கிருஷிக் கும்மி கருதப்பட்ட போதும் அவருக்கான ஒரு வாசகர் வட்டம் இருந்ததையும், அவர்கள் இயம்பிய, கருத்துக்களும் பார்வையிட வேண்டியவை தான். இதனையும் தாண்டி அவரை பிரட்டிஷ் சாம்ராஜ்ராயத்தின் விசுவாசியும் சேவகனுமாக இருப்பதையும், ஏகாதிபத்தியவாதிகளால் கடைப்பிடிக்கப்பட்ட திமிரான மனோபாவமும் காலனித்துவ சனங்கள் ஆளப்பட வேண்டிய காட்டு மிராண்டிகள் என்ற கருத்துக்கு மறைமுகமாகவேனும் ஒரு சிந்தனை போக்கு கொண்டவராகவும் காட்டப்படுகின்றார். கோப்பித் தோட்டத்து அஞ்ஞானிகளான தொழிலாளர்களை மெய்ஞானமான கிறிஸ்தவ மதத்தை பின்பற்றி மனம் திரும்ம்பும் கிறிஸ்தவ மநமாற்றப் பணிகளும் ஜோசப்பின் பிறிதொரு நோக்கமாக இருந்நிருக்கின்றன. கோப்பித் தோட்டங்களுக்கு 1820களில் கடத்திவரப்பட்ட தொழிலாளர்கள் தங்களை யாரும் மனிதர்களாக கூட கவனிக்காத குரூரத்தையே நிதர்சனமாக தரிசிக்கின்றனர்.

தமிழகத்திலிருந்து பயணம் ஆரம்பிக்கும் திசையிலேயே அவர்களின் துயரப்படலம் ஆரம்பமாகி வருகின்றது. இந்த பேரவலத்தை கண்டனம் செய்த பத்திரிகையாளரும் மனிதாபிமானியுமாகவும் திகழ்ந்த கருமுத்து தியாகராசர், மலையக சமூக அரசியல் வரலாற்றில் முதன்மை பெரும் பெருமகனுமாவார். தொழிலாளர்களின் யுகமாற்றத்துக்கு அடிகோலிய நடேசய்யரின் “ தொழிலாளர்களின் சட்டபுத்தகம்” தொழிலாளர் சமூக வரலாற்றில் ஒரு யுகமாற்றத்தை எவ்வாறு கைக்கொண்டது என்பதை மு.நித்தியானந்தன் மிக நெகிழ்ச்சியோடு விபரிக்கின்றார்.

மலையக இலக்கியத்தின் முதல் பெண் ஆளுமை அஞ்சுகம் என்று அறியத்தரும் மு.நித்தியானந்தன், இழிவுபடுத்தப்பட்ட கணிகையர் குலத்தில் இருந்து வந்தவர் என அறியத்தந்து திகைப்படையச் செய்கின்றார். தமிழ்நாட்டுக் கோவில்களில் திருப்பணிக்காக அர்ப்பணிக்கப்பட்ட நடன மங்கையர்களை தேவதாசிகள் என்று கூறுவதோடு, பொது வழக்கில் இவர்களை தாசிகள், விபசாரிகள் என்றும் என்று கூறப்பட்டார்கள். இவரது பரம்பரையினர் பர்வதம், காமாட்சி, கமலாம்பிகை அனைவருமே பொட்டுகட்டி தேவதாசிகள் ஆக்கப்பட்ட சடங்குகள், "புண்ணியபூமி" தமிழ்நாட்டில் நிகழ்ந்துள்ளது. இலங்கை நோக்கி புலம்பெயர்ந்த மக்கள் கூட்டத்தில் தேவதாசிகளும் இசைநடனம் கலைஞர்களும் இடம்பெற்றுள்ள கதை சுவாரஷ்யமானது.

மலையக வரலாற்றை கண்டறிவதில் கடுமையான உழைப்பைச் சிந்தி கனன்று கொண்டிருந்த மு.நித்தியானந்தன், அப்படியே மெதுவாக இன்றைய இலக்கிய சூழலைத் தொட்டு தன்னை ஆசுவாசப்படுத்தி கொள்வது அற்புதமான காட்சியாக விரிவடைகின்றது. ஆபிரகாம் ஜோசப்பிலிருந்து தெளிவத்தை ஜோசப் வரையுமுள்ள ஒன்றரை நூற்றாண்டு கால மலையக இலக்கிய பாரம்பரியம், இந்த நீண்டகாலப் பகுதியில் வரட்சியில் மாய்ந்தும் பின் தளிர்த்தும் துளிர்த்தும், மந்தித்தும் மதாளித்தும் இன்று புது வௌ்ளமாய்ப் பிரவாகம் கொண்டிருக்கிறது என்று தமிழைக் குழைத்தெடுத்து தூரிகைகள் கொண்டு ஓவியமாக்கி நர்த்தனமாடியிருப்பது கிரங்க வைக்கின்றது.

“தெளிவத்தை ஜோசப், பி.மரியதாஸ், ஏ.பி.வி.கோமஸ், த.ரபேல், சொலமன்ராஜ், ஜசிந்தா சேவியர், பரிபூரணன், தேவதாசன், ஜெய்சிங், சி.எ. எலியாசான், அந்தனிஜீவா போன்ற மலையக எழுத்தாளர்கள் கிரிஸ்த்துவ விளைநிலத்தின் சிருஷ்டிகளாவர். தமிழில் கிறிஸ்தவ எழுத்துப் பதிவுகள் புதியவளங்களை சேர்த்திருக்கின்றன. எழுத்தின் எல்லைகளை விஸ்த்தரித்து த்துப் பதிவுகள் புதியவளங்களை சேர்த்திருக்கின்றன. எழுத்தின் எல்லைகளை விஸ்த்தரித்து போட முனைந்துள்ளன. புதிய படிமங்கள், பதப்பிரயோகங்கள், அர்த்தத் தொனிகளை காட்ட முனைந்துள்ளன. கே. டானியலின் "கானல்"என்ற நாவலில் எடுத்தாளப்படும் பகுதிகள் இந்தக் கூற்றை நிரூபணம் செய்கின்றது. தெளிவத்தை ஜோசப் தன் எழுத்தில் "தூங்கும் சம்மனசு போல" என்ற கையாண்டிருக்கும் வார்த்தை படிமங்கள் அழகானவை. அவரது பல சிறுகதைகள் கிறிஸ்தவ வேரில் விளைந்தவை" என்று விஸ்தாரம் செய்து மதச்சிதறல்களை வருடிக்கொடுத்திருப்பது மற்றையோரை நெருடிவிடச் செய்யத்தான் செய்யும். இராமன் இட்ட அணிலின் கோடுகளாக, ஏனையோரின் ஆக்கங்களும் இலக்கிய அந்தஸ்துகளும் மலையக விளைநிலங்களில் தங்களது பங்களிப்புக்களால் தடம் பதித்ததை மறுப்பதற்கில்லை.

பள்ளிப்பருவத்தின் பிள்ளைத் தோழனான மு. நித்தியானந்தன் அன்று முதல் இன்றுவரை இலக்கிய வானிலிருந்து ஓய்வு கொண்டதே இல்லை. அவரது இலக்கிய தேடல்களும், வரலாற்று ஆய்வுகளும் பிரமிக்கவைப்பவை. “ கூலித்தமிழ்" அவரது மலையக வரலாற்று ஞானத்தை அழகாக படம்பிடித்து காட்டுகின்றன. இதனை மலையகத் தமிழர்கள் மட்டுமன்றி தமிழ்கூறும் நல்லுலகின் ஒவ்வொருவரும் வாசித்து தங்கள் சக ஆத்மாக்களைக் கடந்து வந்த கண்ணீர் பாதையை தெரிந்து கொள்வது காலத்தின் கட்டாயமாகும்.

நன்றி - வீரகேசரி - 08.02.2015
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates