உலகில் தேயிலை உற்பத்தி செய்யப்படும் நாடுகளுடன் ஒப்பிடும்போது இலங்கையில் உள்ள தொழிலாளர்களுக்கே அதிகமான சம்பளம் வழங்கப்படுவதாக பெருந்தோட்ட முகாமைத்துவத்தில் மிக நீண்டகால அனுபவமிக்கவரும் பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனத்தின் தலைவருமான ரொசான் ராஜதுரை குறிப்பிட்டிருக்கின்றார். அதிக சம்பளம் வழங்கப்படுவதால் தேயிலையின் உற்பத்தி செலவும் அதிகரிக்கப்படுகிறது. இப்போதைய நிலையில் ஓவ்வொரு கிலோகிராம் தேயிலை உற்பத்தியின்போதும் 100 ரூபா நட்டம் ஏற்படுவதாகவும், இந்நிலையில் தொழிலாளர்களுக்கு எவ்வாறு சம்பள அதிகரிப்பு வழங்கப்படலாம் என்றும் வினவுகின்றார். உண்மையில் தேயிலை தொழிலின் புதிய பரிமாணங்கள் என்ன? பெருந்தோட்டங்களில் வாழ்பவர்கள் தமது வாழ்வாதாரத்தை எவ்வாறு தக்கவைத்துக் கொள்ளமுடியும் போன்ற சில விடயங்கள் இங்கு அவதானிப்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
தேயிலை தொழிலின் புதிய பரிமாணங்கள் :
இன்று தேயிலை உற்பத்தி என்பது பெருந்தோட்டங்களிலேயே முழுமையாக தங்கியிருப்பதாகக் கூறுவதற்கில்லை. இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் மொத்த தேயிலை உற்பத்தியில் (320 மில்லியன் கிலோ கிராம் ) சுமார் 70 வீதமானவற்றை (ஏறத்தாழ 225 மில்லியன் கிலோகிராம்) காலி, மாத்தறை, இரத்தினபுரி போன்ற மாவட்டங்களில் உள்ள சிறு தோட்டங்களே உற்பத்தி செய்கின்றன.
இரண்டாவதாக முதலாளிமார் சம்மேளத்தின் கீழ்வரும் தோட்டங்களில் உள்ள முழுமையான தேயிலை காணிகளும் தேயிலை உற்பத்திக்காக பயன்படுத்துவதில்லை. உதாரணமாக பெருந்தோட்ட கம்பனிகளிடம் சுமார் 1,18,000 ஹெக்டேயர் காணிகள் இருந்தாலும் அதில் சுமார் 85,000 ஹெக்டேயர் காணிகள் மட்டுமே முழுமையான தேயிலை பயிர்செய்கைக்காக பயன்படுத்தப்படுகின்றன. அதுமட்டுமன்றி, சுமார் 60 வீதமான தேயிலைச் செடிகள் 100 – 150 வருடம் ப.ைழமையானவையாகும். தாவரவியல் விளக்கங்களின்படி ஒரு தேயிலைச் செடியின் சராசரி பயன்தரும் காலம் சுமார் 50 வருடங்களாகும். இந்நிலையில் கம்பனிகள் பராமரித்த தேயிலைச் செடியிலிருந்து உச்ச பயனைப் பெற்றுக் கொள்ள முடியுமா என்பது கேள்விக் குறியாகும்.
அதன் காரணமாக கம்பனி தோட்டங்களில் சராசரி உற்பத்தித் திறன் ஒரு ஹெக்டேயருக்கு ஒரு வருடத்தில் சுமார் 900 கிலோ கிராமாகவே காணப்படுகின்றது. அதேவேளை சிறு தோட்டங்கள் தமது உற்பத்தியில் சுமார் 90 வீதமானவற்றை அதிக விளைச்சல் தரக்கூடிய தேயிலைச் செடிகளிலிருந்தே பெறுகின்றன. இதனூடாக வருடாந்த உற்பத்தித் திறன் சுமார் 3000 கிலோகிராம் வரை ஒரு ஹெக்டெயரில் வருடாந்தம் பெற்றுக்கொள்பவர்களாக உள்ளனர்.
கம்பனிகளிடமுள்ள மொத்த நிலத்தில் பழமையான (60 வீதம் ) தேயிலையை முகாமைத்துவப்படுத்தும் கம்பனிகளில் அதிக விளைச்சல் தரும் தேயிலையை விஸ்தரிப்பதில் போதுமான முதலீடுகளை மேற்கொள்ளத் தவறியுள்ளனர். இந் நிலையில் தொழிலாளர்கள் எதிர்பார்க்கின்ற அளவில் தேயிலைக் கொழுந்தை பறிப்பதில்லை என்று கூறுவது எந்தளவு பொருத்தமானது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. பயிர்ச் செய்கையில் பெருமளவு முதலீடுகள் மீது கவனம் செலுத்த முடியாதுபோன கம்பனிகள் எப்படி ஒரு இலாபம் தரும் நிறுவனமாக எதிர்பார்க்கலாம் என்பதெல்லாம் கேள்விக்குரியதாகவே உள்ளது. வருமானமே இல்லாத நேரம் அல்லது நட்டத்தில் இயங்கும் கம்பனிகள் தொழிற்சங்க சட்ட விதியின்படி தொழிலாளர்களின் சேம நலன்கள் பிறப்பு முதல் இறப்பு வரை உச்சளவில் வழங்கப்பட வேண்டும் என்பதும் நடைமுறைக்கு பொருத்தமானதல்ல.
சிறு தோட்டங்களைப் பொருத்த வரையில் மொத்தமாக உள்ள சுமார் 1,00,000 ஹெக்டேயர்களில் 80 வீதமானவை 1/4 ஹெக்டேயர்களுக்கு குறைவான பரப்பளவினைக் கொண்ட சிறு உடைமைகளாகும். இச்சிறு தோட்டங்கள் ஏற்கனவே குறிப்பிட்டதுபோல காலி, மாத்தறை, இரத்தினபுரி போன்ற மாவட்டங்களில் உள்ளவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. இவை சுமார் 4,00,000 பேரிடம் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. பெரும்பாலும் சிறு உடைமையாளர்களின் குடும்பத்தினரே தேயிலை பராமரிப்பில் ஈடுபட்டுள்ளனர். எனினும், தேயிலை சிற்றுடைமை அதிகார சபையினூடாக இச் சிறு தோட்டங்கள் அரசாங்கத்தின் அனுசரணையுடன் பராமரிக்கப்படுவதால் உற்பத்தி, சந்தைப்படுத்தல், ஆலோசனைகள் என்பன முறையாக செயற்படுத்தப்படுவதால் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ச்சியடைந்து செல்கின்றன. சுருக்கமாகக் கூறினால் சிறு தோட்டங்கள் இலாபமிக்க துறையாகவும் தேயிலை தொழிலை நின்று நிலைத்திருக்க கூடிய தொழிலாகவும் மாற்றியுள்ளது. இந் நிலையில் பெருந் தோட்டங்கள் மந்த கதியிலேயே வளர்ந்துள்ளன. இதை தொழிலாளர்கள்தான் பாதுகாக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறாகும்.
சம்பள அதிகரிப்பு :
கூட்டு ஒப்பந்தத்தின்படி வருடாந்தம் 300 நாட்கள் வேலை வழங்கப்பட வேண்டும் என்பது ஏற்றுக்கொள்ளப்பட்ட நியதியாகும். உண்மையில் கம்பனிகள் இதனை நடைமுறைப்படுத்து வதாகவே குறிப்பிடவேண்டும். நாளாந்த வேலைக்கு ரூபா 620 என்றவாறு 300 நாள் வேலை செய்தால் ஒரு தொழிலாளிக்கான வருட வருமானம் ரூ.1,86,000 ஆகும். அவ்வாறாயின் ஒரு தொழிலாளிக்கான மாத வருமானம் (ரூ.1,86,000 /12) ரூபா . 15,500 ஆகும். ஒரு குடும்பத்தில் இருவர் வேலை செய்வதாக எடுத்துக் கொண்டால் பெருந்தோட்ட தொழிலாளர்களில் குடும்ப வருமானம் (ரூ. 15,500 x 2) ரூ.31,000 இருக்கவேண்டும். இந்த அனுமானங்களை கணக்கிட்டே தொழிலாளர்கள் “அதிக வருமானம்” பெறுபவர்களாக உள்ளனர். எனினும் வருமானம் அதிகமாக கிடைப்பதால் இவர்கள் அதனை வீணாகக் குடித்து கும்மாளம் போடுவதற்கும், களியாட்டங்களுக்கும் பெருமளவு செலவு செய்து வருகின்றனர் என்று கூறுகின்றனர். உண்மையில் தொழிலாளர்களுக்கு கிடைக்கும் வருமானத்தை மேலே குறிப்பிட்டது போல கிடைக்கும் என்பது வெறும் அனுமானமேயாகும்.
அது தோட்டத்தில் வேலை செய்யும் ஒவ்வொரு தொழிலாளிக்கும் நன்கு தெரிந்த விடயமாகும். கிடைக்கப் பெறுகின்ற தகவல்களின்படி தோட்ட வேலைகளிலேயே முழுமையாக தங்கியுள்ள தொழிலாளிக்கு சராசரி குடும்ப வருமானமாக ரூபா 8000 – 10,000 மட்டுமே கிடைக்கிறது. வருடம் 300 நாட்கள் என்றால் மாதாந்தம் 25 நாட்கள் வேலை வழங்கவேண்டும். இருப்பினும் சகல வகையிலும் தொழிலாளர்கள் மாதாந்தம் 17 அல்லது 18 நாட்கள் வேலை செய்ய முடிகின்றது. அப்படியான சூழ்நிலையிலேயே தோட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. கடந்த கூட்டு ஒப்பந்தத்தில் அடிப்படை சம்பளமாக ரூபா 450 நிர்ணயிக்கப்பட்டது. எதிர்வரும் மாதத்தில் இது பற்றிய பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்படலாம். இதன் போது பின்வருவனவற்றை கருத்திற் கொள்ளல் அவசியமாகும்.
1. தொழிலாளர்கள் தொடர்ந்து தோட்டங்களில் வேலை செய்தற்கான ஒப்பந்தத்தில் ஏற்றுக்கொள்ளப்படுகின்ற மேலதிக வருமானத்தைப் பெற்றுக்கொள்ள கம்பனிகள் தேயிலை உற்பத்தியை பொருத்தமானளவு அதிகரிக்க முதலீடுகளை மேற்கொள்ள வேண்டும். இதன் மூலம் அடிப்படை சம்பளத்தில் மாற்றம் ஏற்படுத்தாது போனாலும் மேலதிக கொழுந்திற்கு ஒரு கிலோ பச்சை கொழுந்தின் உற்பத்தியாக இறுதி உற்பத்தியை சுமார் 125 ரூபா விற்கு விற்க முடியும். எனவே இறுதி விலையில் குறைந்த பட்சம் 40 வீதத்தை அதாவது ரூபா 50 க்கு வழங்குமாறு கோரலாம்.
2. கம்பனிகளின் தொழிலாளர்கள் வேலைக்கு தொடர்ச்சியாக வருகை தர வேண்டும் என்பதற்கு சில கட்டுப்பாடுகள் வழங்கியுள்ளன. அதாவது வேலை வழங்கும் நாட்களில் 75 வீதத்திற்கு அதிகமாக வேலைக்கு வருபவர்களுக்கு மேலதிக கொடுப்பனவு என்று மொத்தமாக ரூபா 620 வழங்குகின்றனர். இது எந்தளவு தொழிலாளர்களை கவர்ந்துள்ளது? இதனால் தோட்டக் கம்பனிகள் நினைத்தவாறு தொழிலாளர்களை வேலைக்கு கவர்ந்திழுத்துள்;ளனரா? தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவதில் இது பொருத்தமான உபாயமாக தொடர்ந்தும் மேற்கொள்ளலாமா என்று ஆராய்வது அவசியமாகும்.
3. 1992 இல் கம்பனிகள் தோட்டத்தை பொறுப்பேற்றதில் இருந்தே வருடங்களுக்கு சராசரியாக சுமார் 16,500 பேர் தோட்ட வேலையில் இருந்து விலகிச் செல்கின்றனர். இப்போது சுமார் 2,32, 000 தொழிலாளர்கள் அங்குள்ள 1,18,000 ஹெக்டேயர் காணிகள் பராமரிப்பில் உள்ளனர். இந்நிலைமை தொடருமானால் அடுத்து வரும் 15 வருட காலத்தில் (வருடம் 16,500 பேர் விலகிச் செல்லல்) கம்பனி தோட்டங்களில் நிரந்தர தொழிலாளர்களின் எண்ணிக்கை ப+ச்சியமாகிவிடும்.
இவை யாவற்றையும் கவனத்திற் கொண்டு பொருத்தமான தீர்மானத்தை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும். தேயிலையை இலாபமுள்ள பொருளாகக் கொண்டு நடத்த முடியாதுபோன கம்பனிகளிடம் இலாபத்தில் பங்கு கேற்பது நியாயமானதாக இல்லை.
உலகில் அதிகளவு சம்பளம் கொடுத்தால் மேலதிக சம்பளம் கேட்பது என்பது முழு பிரபஞ்சத்திலும் வேலை செய்யும் தொழிலாளர்களைக் காட்டிலும் அதிக சம்பளத்தை இலங்கையில் உள்ள தோட்டத்தொழிலாளருக்கு கேட்பது போன்ற விடயமாகும். இது சாத்தியப்படுமா? மற்றது தேயிலை உற்பத்தியில் தொழிலாளர்களின் செலவே அதிகமானது என்கின்றனர். இந் நிலையில் அவர்களிடம் சம்பளம் கேட்பது என்பது மொட்டை தலையில் முடிச்சு போடும் முயற்சியாகும்.
இவ்வாறான நிலவரங்களை புரிந்து கொண்ட தொழிலாளர்கள் பலர் (சுமார் 2,50,000 பேர்) ஏற்கனவே தோட்டத் தொழிலை நிரந்தர தொழிலாக கருதவில்லை. எஞ்சியுள்;ள 2,32,000 பேர் மட்டுமே கம்பனி தோட்டங்களில் நிரந்தர தொழிலாளர்களாக உள்ளனர். இந்த எண்ணிக்கையானது சுமார் 1,15,000 குடும்பங்களுக்கு சமமானதாகும். இக் குடும்பங்கள் தோட்டத்தில் வேலைசெய்ய விரும்பலாம். ஆனால் தமது வாழ்வாதாரத்தைத் தக்கவைத்துக்கொள்ளத் தோட்ட வேலைகள் மூலம் கிடைக்கும் வருமானம் போதுமானதல்ல. அவ்வாறான நிலையில் அவர்கள் வேறு வருமானங்களை தேடிக்கொள்ளவேண்டும். அதற்கு பொருத்தமான உபாயங்களை தோட்டத்தில் ஏற்படுத்துவது அவசியமாகும்.
இதற்கு ஒரே வழி அவர்களுக்கு வாழும் இடம் மற்றும் வாழ்க்கையை கொண்டு நடத்த பொருத்தமான விவசாய நிலம் என்று சுமார் 20 பேர்ச் காணியில் வீடுகள் அமைத்து அதனை அவர்களுக்கு சொந்தமாக வழங்குவதேயாகும். இப்படியான நிலையில் இருக்கின்ற தொழிலாளர்கள் சொந்த வீடுகளில் அங்கேயே இருப்பர். அவர்களது வாழ்க்கையிழும் மறுமலர்ச்சி ஏற்படும். கம்பனிகளும் நிம்மதியாக பொருளாதார விதிகளின்படி மாற்று உபாயங்களை மேற் கொள்வர். யாவரும் நலமுடன் வாழலாம்.
நன்றி - வீரகேசரி
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...