மலையக வரலாற்றில் பெருந்தோட்ட தொழிலாளர்களின் மிக முக்கிய பிரச்சினையாக கருதப்படுவது சம்பள பிரச்சினையாகும். காலம் காலமாக தமது உடல், பொருள், ஆவியனைத்தையும் இந்நாட்டின் அபிவிருத்திக்காக கொடுத்துவிட்டு, இன்று ஏனைய சமூகங்களுடன் ஒப்பிடும் போது பொருளாதாரத்தில் கீழ்நிலையில் மலையக மக்கள் இருப்தற்கு அவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த சம்பளமே காரணமாகும். தேயிலை செடிகளுக்கிடையில் தமது வாழ்வினை தொலைத்தவர்களாய் வாழும் இச்சமூகத்தின் வாழ்வில் திருப்புமனையை ஏற்படுத்தும் அரசியல் தலைமைத்துவம் இன்னும் உருவாகவில்லை.
இம்மக்களின் உழைப்பினை சுறண்டி அதில் வாழும் முதலாளித்துவ சமூகம் தமது இலாபத்திற்காக தொழிலாளர்களின் நலன்களை புதைத்து வருகின்றது.
கடந்த காலத்தில் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை பெருந்தோட்ட தொழிற்சங்கங்களுக்கும், பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனதிற்கும் இடையில் கைச்சாத்திடப்படும் கூட்டு ஒப்பந்தத்தின் ஊடாக போதிய சம்பள உயர்வு வழங்கப்பட்டிருக்கவில்லை.
அந்தவகையில் 2013 ஆம் ஆண்டு செய்துக்கொள்ளப்பட்ட கூட்டு ஒப்பந்தம் நிறைவடையும் தருவாயில் அடுத்த கூட்டு ஒப்பந்தத்திற்கான முன்னெடுப்புகளில் பல தொழிற்சங்கங்கள் களமிறங்கியுள்ளன.
அடுத்த கூட்டு ஒப்பந்தத்தில் மலையக தோட்ட தொழிலாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு 1000 ரூபாய் சம்பளத்தை பெற்று தருவதற்கான காய்நகர்த்தல்களை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் முன்னெடுத்துள்ளது.
மறுபுறம் வரவு செலவு திட்டத்தில் தனியார்துறை ஊழியர்களுக்கு வழங்கப்படுவதாக உறுதியளிக்கப்பட்ட 2500 ரூபா சம்பள உயர்வினை மலையக தொழிலாளர்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளும் வெளிப்படுத்தப்பட்டு வருகின்றன. இவர்கள் மத்தியில் கூட்டொருமைப்பாடு காணப்படாமை பாரிய குறைபாடாகும். அத்தோடு இவ்வாறு கோசங்களை எழுப்புகின்றவர்கள் சம்பள உயர்வு மற்றும் கூட்டு ஒப்பந்தம் என்ற இரு வியூகங்களை வைத்துக்கொண்டு தமது எதிர்கால அரசியல் அபிலாசைகளை அடைந்து கொள்ள எத்தனிப்பது கவலையளிக்கின்றது.
மக்கள் நலனில் அக்கறைக்கொண்ட மலையக தொழிற்சங்கங்கள் இவ்விடயத்தில் தம்முள் ஒரு ஒருமைப்பாட்டுக்கு வருதல் வேண்டும். இல்லையேல் கடந்த காலங்களில் பெரும்பான்மை அரசாங்கத்தினர் விரித்த வலையில் சிக்கி தமது மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாது போன துர்பாக்கிய நிலை மீண்டும் ஏற்படலாம்.
ஆகவே மலையகத்தில் அங்கம் வகிக்கும் தொழிற்சங்கங்கள் தமது அரசியலுக்காக அன்றி மலையக மக்களுக்காக ஒன்றிணைந்து பொதுவான தீர்மானத்தின் கீழ் அடுத்த கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட வேண்டும். அதே நேரம் எதிர்வரும் கூட்டு ஒப்பந்தத்தின் போது மலையக சமூகத்தில் காணப்படும் புத்தி ஜீவிகள், சிவில் அமைப்புகள், மாணவர் அமைப்புகள், மதத்தலைமைகள்,சமூக நலன்விரும்பிகள் என பலதரப்பட்ட தரப்பினரும் மலையக மக்களை பிரதிநிதித்துவப்படுத்தி ஒப்பந்தத்தில் கலந்து கொள்ள சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும்.
அத்தோடு கூட்டு ஒப்பந்தத்திற்கு முன்பு மக்களை சந்தித்து அவர்களின் மனவுணர்வுகளை ஆய்வு செய்ய வேண்டும். கூட்டு ஒப்பந்தம் தொடர்பான விழிப்புணர்வுகளை ஏற்படுத்த இவ்வாரான மக்கள் சந்திப்புகள் துணைபுரியும். மேலும் கடந்த முறை இடப்பெற்றதை போல் அல்லாமல் இம்முறை அடிப்படை சம்பளமாக கோரப்படும் தொகையை தெளிவாக வரையறுத்துக்கொள்ள வேண்டும். திரைமறைவில் மலையக மக்களை கூட்டு ஒப்பந்தத்தில் விற்கும் அற்பத்தனமான வியாபார நடவடிக்கையை அரசியல்வாதிகள் தவிர்த்துகொண்டு, எம் சமூகத்தின் எதிர்கால வளர்ச்சிக்கான முன்னேற்பாடுகளை இவ்வொப்பந்தத்தின் கீழ் வென்றெடுக்க அனைத்து தரப்பினரும் முன்வர வேண்டும் என அழைப்பு விடுக்கின்றோம்.
நன்றி - கூக்குரல்
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...