Headlines News :
முகப்பு » » அவன் ஓர் அபூர்வ சிறுவன் : சமூக பிரஞ்ஞை மிக்க சிங்கள நாவல் - எம்.வாமதேவன்

அவன் ஓர் அபூர்வ சிறுவன் : சமூக பிரஞ்ஞை மிக்க சிங்கள நாவல் - எம்.வாமதேவன்



பியதாச வெலி கண்ணகே என்பவரது “அவன் ஓர் அபூர்வ சிறுவன்” என்ற சாகித்திய பரிசு பெற்ற சிங்கள நாவல் மலையக பிரபல எழுத்தாளரான மலரன்பனால் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளமை ஒரு மகிழ்ச்சிக்குரிய ஒன்றாகும். இந் நாவல் இலங்கை சுதந்திரம் அடைவதற்கு சற்று முன்பதாகஇ 1942ஆம் ஆண்டை சார்ந்த காலப்பகுதிக்கு உரியதாகும். இக் கதை சம்பவம் இடம் பெறுவது மலையக பகுதிகளில் ஒன்றான பதுளை
மாவட்டத்தில் அமைந்துள்ள பசறை நகருக்கு அருகில் அமைந்துள்ள பின்னலகந்த சிங்கள கிராமமொன்றிலாகும். இக் கிராமம் பசறைக்கு அருகில் உள்ள எல்டொப் தோட்டத்துக்கு அப்பால் அமைந்துள்ள பல கிராமங்களில் ஒன்றாக  அமைந்திருப்பதாலஇ இந் நாவல் தோட்ட சூழ்நிலைகளை அங்கும் மிங்கும் தொட்டு செல்வதாக அமைந்துள்ளது. பின்னலகந்த என்ற கிராமத்திலிருந்து எல்டொப் தோட்டத்தை கடந்து 7மைல் தூரத்திலேயே பசறை அமைந்திருக்கின்றது. பொதுவாக கிராமங்களுக்கும் தோட்டங்களுக்கும் இடையே அமைந்துள்ள பொருளாதார தொடர்புகள் சுட்டிக்காட்டப்படுவதோடு கிராமப்புற மக்கள் தங்களது உற்பத்திப்பொருட்களை அருகே அமைந்துள்ள பசறை நகரத்தில் ஞாயிறு சந்தைகளில்  விற்பனை செய்கின்ற தொடர்புகள் அடிக்கடி சுட்டிக்காட்டப்படுகின்றன.

இந்த நாவல் “இளைஞர் நாவல்” என்ற ஒரு இலக்கிய பரப்பிற்கு உட்படுத்தப்பட்டு சாகித்திய பரிசு கொடுக்கப்பட்டுள்ளதாக தெளிவத்தை ஜோசப் தனது முன்னுரையில் குறிப்பிடுகின்றார். இந் நூலின் ஆசிரியரான பியதாச வெலி கண்ணகே பல நூல்களை எழுதி பல விருதுகளை பெற்ற பிரபலமான சிங்கள நாவல் ஆசிரியர் ஆவார். அவரை தமிழ் கூறும் நல்லுலகத்துக்கு அறிமுகப்படுத்திய பெருமையை மலையகத்தின் மூத்த எழுத்தாளரான மலரன்பன் பெற்றுக்கொள்கின்றார். மலரன்பனின் படைப்புகளை வாசிப்பவர்களுக்கு தெரிந்த ஓர் விடயம் அவர் மாத்தளை பகுதியில் அமைந்துள்ள கிராமங்களின் உறவுகளை நன்கு அறிந்துள்ளவர் என்பதாகும். அந்த வகையில் தோட்டங்களோடு ஓரளவேனும் தொடர்புடைய சிங்கள  நாவல் ஒன்றை தெரிவு செய்தமையும் அதனை மொழி பெயர்த்ததும் மிகவும் பொருத்தமானதொனறே.

முதலாவதாக அந்நாவல் சொல்லும் கதையை பார்ப்போம்.
   
மலையக சிங்கள கிராமம் ஒன்றில் மிக மிக வறுமையான குடும்பத்தில் பிறந்த அப்புகாமி என்ற சிறுவன் தனது ஆரம்ப பள்ளிக்கூட வாழ்க்கையை தொடங்கியதிலிருந்து 10ம் தர வகுப்பு வரை ஏறக்குறைய 10 ஆண்டு வரை தனது கல்வியை தொடர்கின்ற  போது ஏற்பட்ட தடைகள் மற்றும் இடையூறுகளை சொல்லுகின்ற சிறுவனின் சுயசரிதையே இந் நாவல். 

அவனுடைய ஏடு தொடங்குதலில் ஆரம்பித்து பக்கத்து கிராமத்தில் அமைந்துள்ள பாடசாலையில் கல்வி கற்க தொடங்கியமை> அவனுக்கு பிறப்பிலேயே அமைந்திருந்த திறமை> அதிக ஞாபக சக்தி என்பவை அவனை ஏனைய மாணவர்களிருந்த வேறுபடுத்தி காட்டி தலைமையாசிரியரின் கவனத்திற்கு அவனை உட்படுத்துகின்றது. அவனுடைய கல்வி செயற்பாட்டிற்கு எதிரியாக அமைந்தமை அவனுடைய குடும்பத்தின் வறுமையும் குடும்பத்தின் மேல் எவ்விதமான அக்கறையும் அற்று கிடைத்த சொற்ப வருமானத்தை முழுமையாக சூதாட்டத்துக்கு செலவழிக்கின்ற அப்பா ஏனைய குடும்பங்களின சொந்தபந்தங்களின் ஆதரவற்ற நிலை என்பவையாகும். உழைக்கக்கூடிய அம்மாவுக்கு போதிய வேலை வாய்ப்புகள் இல்லாமல் இருந்தமை அவனுடைய கல்வியை தொடங்குவதற்கு அம்மாவின் ஆர்வமும் இவனது திறமையை அவதானித்த தலைமையாசிரியர் இவன் மேல் காட்டுகின்ற அரவணைப்புமே காரணமாக அமைகின்றது. இவன் தன் அபரிமிதமான  திறமை காரணமாக முதலாம் வகுப்பில் இருந்து மூன்றாம் வகுப்பிற்கு இரட்டை வகுப்பேற்றம் செய்யப்படுகின்றான். 

ஆரம்ப கல்வியை முடித்துக் கொண்டு புலமைப்பரிசு மூலமாக பசறை மத்திய கல்லூரிக்கு சேருவதற்கு சந்தர்ப்பம் இருந்தும் அந்த வாய்ப்பு அந்த பாடசாலை மாணவனுக்கு கிடைக்காமல் போனமை. அன்றைய கல்வி நிர்வாகத்தின் குறைபாட்டினை எடுத்து காட்டுகின்றது. தலைமையாசிரியரின் முயற்சி இருந்தும் இந்த கிராம மாணவர்கள் புலமை பரீட்சைக்கு தோற்ற முடியவில்லை. இருப்பினும் தலைமையாசிரியரின் தூண்டுதல் காரணமாக பசறை மத்திய கல்லூரியில் ஆங்கில மொழி மூலமாக கல்வி கற்பதற்கு அப்புகாமி சேர்க்கப்படுகின்றான். அந்த பள்ளிக்கூடத்தில் சேர்ந்து படிப்பை ஆரம்பிப்பதற்காக அந்த குடும்பம் எதிர் நோக்குகின்ற கஷ்டங்கள் வாசகர்களின் கண்களை குளமாக்குகின்றன. பள்ளிக்கூட உடைகள் மற்றும் புத்தகங்கள் கொப்பிகள்  போதியளவில் கிடைக்காமல் போனபோது தலைமை ஆசிரியரின் உதவிகள் மாணவர்களின் கல்வி முன்னேற்றத்தில் ஆசிரியரின் பங்களிப்பை எடுத்துக் காட்டுகின்றது. 

பசறையில் ஆங்கில கல்வி மூலமாக படிக்க ஆரம்பித்த போது ஆங்கில அறிவு எதுவுமற்ற நிலையில்  மற்ற மாணவர்களை பார்த்த  அப்புகாமிக்கு அது ஆறுதல் அளித்தது. அங்கிருந்த ஆசிரியர்கள் இவர்கள் மேல் காட்டிய அக்கறை அவர்களது ஆங்கில கல்வியை பெரிதும் மேம்படுத்த வழிவகுத்தது. தன்னுடைய கல்வியை மேற்கொள்வதற்காக 7மைல் நடக்க வேண்டி இருந்தது. பள்ளிக்கூடம் விட்டதன் பின்னர்> அம்மாவுடன் சேர்ந்து அம்மாவின் வேலைகளில் அவருக்கு உதவி செய்து சிறிதளவு பணம் சம்பாதித்தான். அத்தோடு விடுமுறை நாட்களில் மிளகு> கோப்பி> பாக்கு> பலாக்கொட்டை போன்றவற்றை சேர்த்து அம்மாவுடன் பசறை சந்தையில் விற்று வருமானத்தை கூட்டினான். 

கதையிலே அமைந்த ருசிகரமான சம்பவம் பின்னலகந்த தோட்டத்திற்கும் பசறைக்குமிடையில் அமைந்துள்ள சுடுகாட்டு பிரதேசத்தில் இடம் பெற்றதாகும். இச் சுடுகாட்டு பாதையில் பேய்கள் நடமாட்டம் என்று பயம் காரணமாக அந்த பாதையை போக்குவரத்துக்கு மக்கள் பயன்படுத்துவதில்லை. இந்த சுடுகாட்டு பாதையில் அமைந்துள்ள பாக்குமரங்களிலிருந்து பாக்குகள் குலைகுலையாக தொங்கிக்கொண்டிருந்தன. தனது கல்லூரியிலே கட்டணம் செலுத்த வேண்டியுள்ள நிலை> அப்பாவிடமும் அம்மாவிடமும் அல்லது வேறு உறவினர்களிலிருந்தும் பணம் பெற முடிய வில்லை. எப்படியும் கட்டணம் செலுத்த வேண்டும். அதற்காக அப்புகாமி சிரமப்பட்டு சுடுகாட்டில் அமைந்திருந்த பாக்கு மரங்களில் ஏறி தனியாக மிகவும் துணிகரமாக அட்டை கடிப்பட்டு குடும்பத்தின் அனுமதியினறு பாக்குகளை வெட்டி இரண்டு சாக்குகள் கொண்டுவருகின்றான். பிறகு அவனுடைய பெரிய மாமனின் உதவியோடு மீதமிருக்கும் பாக்குகளை வெட்டி சேகரிக்கின்றான். பணப் பிரச்சனைகளை தீர்த்து கொண்டதோடு மக்கள் மத்தியிலே பேய்கள் பற்றிய பயத்தையும் இல்லாமல் ஆக்குகின்றான்.

இந்த கதையின் முக்கியமானதுமாகவும் திருப்பு முனையாக அமைவது ஒரு சம்பவமாகும்.  ஒரு நாள் அப்புகாமியின் அப்பாவுட்பட சூதாட்ட கோஸ்டியை போலீஸ் சுற்றி வலைக்கின்றது. இவர்கள் அனைவருக்கும் விலங்கிடப்படுகின்றன. கிராமமே ஒன்று கூடியது. அப்புகாமியின் குடும்பம் கதறி அழுதது. அப்புகாமியும் அங்கே போய் பார்த்தான் அங்கு பொலிஸ் இன்ஸ்பெக்டர்  அப்புகாமியை பார்த்து “நீ பசறையில் தான் இருக்கிறாயா? என்றுகேற்கிறார். ஆம் அய்யா நான் பசறை சென்றல் கல்லூரியில் 10ம் வகுப்பு படிக்கின்றேன். பொலிஸ் இன்ஸ்பெக்டர் ‘ உன்னுடைய பெயர் அப்புகாமி தானே’ என ஆங்கிலத்திலே கேட்கின்றார். வசந்த பண்டார உன்னுடைய வகுப்பிலா படிக்கிறார்? ஆங்கிலத்திலேயே பேசுகின்றார் அப்புகாமி ஆம் என்று பொலிஸ் இன்ஸ்பெக்டர் தனது மகன் வசந்த பண்டார மூலம் அப்புகாமியை பற்றி கேள்விப்பட்டிருக்கினறார். இவன் நன்றாக படிப்பதையும் அவருடைய மகனுக்கும் இவன்  உதவி செய்வதையும் கேட்டிருக்கின்றார். பொலிஸ் இன்ஸ்பெக்டர் அந்த சந்தர்ப்பத்தில் அப்புகாமியோடு ஆங்கிலத்தில் பேசியது அந்த கிராமத்தை பொறுத்தவரை ஒரு வரலாற்று சம்பவமாக அமைகின்றது. அந்த கிராமத்தில் அப்புகாமிக்கு முன்னால் யாரும் ஆங்கிலத்தில் பேசியதே கிடையாது. பொலிஸ் இன்ஸ்பெக்டர் கூறுகிறார் ‘அடே சியாத்து (அப்புகாமியின் தந்தை பெயர்) இந்த பொடியனோட எதிர்காலத்த நாசமாக்கவாடா நினைச்சிருக்க. குடும்பத்துல ஒருத்தன் கோட்டில் தண்டனைப் பெற்றால் சிறைக்குப் போனால் அந்தக் குடும்பத்தில் யாருக்கும் அரசாங்க உத்தியோகத்திற்கு போக முடியுமா? தரித்திரம் பிடித்த சனியனே..! இந்தப் பொடியனோட பெரும தெரியாதவன்டா நீ!’ அப்புகாமியின் ஆங்கிலத் திறனும் கல்வி அறிவும் அந்த சூதாட்டக்காரர்களுக்கு மன்னிப்பு கிடைக்க வைக்கின்றது. 

10தாம் வகுப்பு பரீட்சைக்கு தோற்றியதன் பின்னர் அப்புகாமி மேற்கொண்டு படிப்பதா தொழில் தேடுவதா என்று குழம்பி போய் இருக்கின்றான். வேலைக்கு போவது என்று தீர்மானித்தான். அப்போது அப்புகாமியின் தந்தை சூதாட்டத்தை கைவிட்டு திருந்திய ஒருவனாக> குடும்ப பொறுப்பை ஏற்றுக்கொள்ளும் ஒருவனாக வீட்டுக்குள் நுழைகின்றான். முதன் முறையாக அப்புகாமியிடம் உம்முடைய கல்வியை தொடரும் மகனே நீ இனி மேல் கவலைப்படவோ> கஸ்டப்படவோ வேண்டாம். உனது விருப்பம் போல நீ தொடர்ந்து ஸ்கூலுக்கு போய் படி…. கதை இத்தோடு முடிகிறது. பூடகமாக அப்புகாமி தனது மேல் கல்வியை தொடர்கிறான்.

இந் நாவல் ஒரு சிக்கல் அற்ற கதை அம்சம் கொண்டதோடு மலரன்பன் என்னுரையில் கூறுவதை போல ‘இக் கதை நதி சமதரையில் பயனிப்பதை போல’  நகர்த்தப்படுகின்றது. இந்த கதை ஓர் அபூர்வ திறமை கொண்ட சிறுவனை பற்றிய ஒன்றாக அமைந்துள்ளது. இப்படிப்பட்ட சிறுவர்கள் நாம் நாளாந்தம் காணுகின்ற ஒன்றாகும். எனக்கு ஞாபகம் இருகின்றது நான் 50களில் ஹைலன்ஸ் கல்லூரியில் படிக்கும் போது ஒரு தோட்ட புற மாணவன் 3ஆம் வகுப்பில் இருந்து 5தாம் வகுப்பிற்கு இரட்டை வகுப்பேற்றம் செய்யப்பட்டார். பிறகு அவர் 10ஆண்டு படிக்கும் போது புலமைப் பரீசில் பெற்று யாழ்ப்பாணத்தின்  நெல்லியடி சென்றல் கல்லூரியில் சேர்ந்து அங்கிருந்து ஹைலன்ஸ் கல்லூரியின் முதலாவது பொறியியல் மாணவராக பேராதனை பல்கலைக்கழகம் சென்றார். இவரைப் போல் இன்னுமொரு மாணவன் திருக்குறள் 1330. குறள்களையும் மிக சிறு வயதிலேயே ஒப்புவிக்கும் ஞாபக திறன் பெற்றிருந்தார். இவர் தற்போது பிரபல சட்டதரணியாக திகழ்கிறார். ஆகவே இப்படிப்பட்ட அபூர்வ திறமைப் பெற்ற அப்புகாமி மிகமிக வறுமையானவனின் முன்னேற்றத்தை எடுத்துக்காட்டும் கதையே இது.   

அப்புகாமிக்கு ஏடு தொடக்கும் குஞ்சுலாரா மாமா “இவனுக்கு ‘புத்தி தெச’ சிறப்பாக இருக்கு நல்லாப் படிச்சுக்குவா” என்று கூறுகிறார். மற்றும் அவர் ‘எழுத்தறிவு படிக்கிறது மிகவும் கஸ்டமான விசயம். ஆனா கஸ்டப்பட்டு சிரமம் எடுத்து படித்துக் கொண்டால் ராஜாவைப்போல இருக்கலாம் விளங்குதா’ என்கிறார். “படித்தால் ராஜாவைப்போல இருக்கலாம்” என்ற இந்த கருத்து பல முறை உரமூட்டப்படுகிறது. அத்தோடு ஆங்கில கல்வியின் முக்கியத்துவமும் சுட்டிக்காட்டப்படுகின்றது. அதற்குரிய சமூக மரியாதை மிக அதிகமாக வலியுருத்தப்படுகின்றது. இதுவே இக் கதையின் திருப்பு முனையாக அமைந்து. சூதாட்டியான அப்புகாமியின் தந்தையை சிறை செல்வதிலிருந்து தடுத்து மனம் திருந்த வைக்கிறது. தோட்டங்களோடு ஒப்பிடுகையில் ஆங்சில துரைமார்கள் தோட்டத்திலிருந்த காரணத்தாலும் தோட்ட நிர்வாகம் ஆங்கில மொழியில் இருந்தமையாலும்> தோட்ட உத்தியோகத்தர்களின் சம்பாஷனைகள் பெரும்பாலும் ஆங்கிலத்திலேயே இடம் பெற்றன. இக்கால கட்டத்தில்  தோட்டங்களில் படித்தவன் என்றால் ஆங்கிலம் கட்டாயமாக பேசத் தெரிய வேண்டும் என்பது ஒரு நடைமுறையாக இருந்து வந்தது. 

இக் கதை சுட்டிக்காட்டும் சூழலை தோட்டப் புறங்களோடு ஒப்பிட்டுக்காட்டுவது பொருத்தமான ஒன்றாகும். சுதந்திரத்துக்கு முந்திய காலத்தில் தோட்டங்களை சுற்றியிருந்த கிராமங்கள் தோட்டங்களோடு ஒப்பிடுகையில் மிகவும் வறுமை நிலையில் காணப்பட்டன. 1947 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட சமூக சேவை ஆணைக்குழுவின் அறிக்கை இதனை உறுதிப்படுத்துகின்றது. கல்வியில் எவ்வித அக்கறையற்ற பெற்றோர்கள் தோட்டப்புறங்களில் செறிந்திருப்பது காணக் கூடிய ஒன்றாகும் பல மாணவர்களின் கல்வி தொடர முடியாது இடை விலகல் இடம் பெறுவதற்கு பெரும்பாலும் பெற்றோரின் சிரத்தை இன்மையே காரணம். அப்புகாமி கல்வியை தொடர முடியாத பல இக்கட்டான சூழ்நிலைகள் இடம் பெற்ற போதும் அவனது தாய் காட்டிய கரிசனையே அவனது கல்வியை தொடர்வதற்கு வழிசமைத்தது. அத்தோடு மிகவும் குறிப்பிட்டு கூறுவதனால் ஆசிரியரின் பங்களிப்பு ஆகும். அப்புகாமியின் கல்வி தொடரலுக்கு கிராம பாடசாலை  தலைமை ஆசிரியரின் பங்களிப்பு மிகவும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். கிராமத்து பாடசாலையிருந்து நகரப்புற பாடசாலைக்கு அனுப்புவதற்கு தலைமை ஆசிரியரின் முயற்சிகளை இக் கதை நன்கு எடுத்துக்காட்டுகிறது. தற்போது மலையக தோட்டபுற சில அதிபர்களின் நடத்தைகளை அவதானிக்கின்ற போது. அவர்களது பங்களிப்பு கேள்விக்குறியாக அமைந்துள்ளது. தோட்டங்களில் அமைந்துள்ள பள்ளிக்கூடங்களில் போதிய உரிய ஆசிரியர்கள் இல்லாத நிலையில் திறமை காட்டும் மாணவர்கள் நகர்ப்புற பள்ளிக்கூடங்களில் சேர்வதற்கு பல சிரமங்களை எதிர் நோக்குகின்றனர். சமிபத்தில் நான் கேள்விப்பட்ட ஒன்றுஇ பள்ளிக்கூட தலைமை ஆசிரியர் உயர்தர வகுப்பில் போதியளவு ஆசிரியர்கள் இல்லாத போதும் மாணவர்கள் அயலிலுள்ள வசதி கூடிய ஆசிரியர் வளம் மிகுந்த நகர்ப்புற பாடசாலை ஒன்றிற்கு செல்வதற்கு தடையாக செயற்பட்டுள்ளார். பின்னர் சம்பந்தப்பட்ட மாணவர்களின் பெற்றோர்கள் மாகாண சபை உறுப்பினர் பாராளுமன்ற உறுப்பினர் என்று அரசியல் வாதிகளின் தலையீட்டுடனே இம் மாணவர்கள் நகர்ப்புற பாடசாலையை நோக்கி செல்ல வேண்டியுள்ளது. 

இறுதியாக கிராமங்களின் பொருளாதார பின்தங்கிய நிலைமை சுதந்திரத்துக்கு பின்னால் மாறி அரசாங்கத்தின் நேரடி தலையீடுகள் காரணமாக இன்று மாறி வருகின்றமையை காணக்கூடியதாக இருக்கின்றது. அன்று நிலை தளம்பியிருந்த கிராமிய பொருளாதாரம்இ கிராமிய மக்கள் தங்களது பொருளாதார தேவைகளுக்கு உறுதியாக இருந்த தோட்ட பொருளாதாரத்தையே வேலை வாய்ப்புகளையே நம்பியிருந்தனர். இன்று அந்த நிலை மாறி தோட்டப் புற மக்கள் அண்டியுள்ள கிராமங்களையும்> நகரங்களையும் நாட வேண்டியுள்ளது.   

இன்னுமொரு முக்கியமான விடயத்தையும் இந் நாவல் குறிப்பிடுகிறது. 

“இது ரொம்ப கெட்டக் காலம் எங்க பார்த்தாலும் துக்கமான சேதி தான் வருது. அந்த
“எல்டொப்” தேயில தோட்டத்தில் மண்சரிவு. மூன்று லயக்காம்பிரா தரை மட்டமாகி 
மண் மூடிரிச்சாம். ஒரு காம்பிhரவில் இருந்த முழுக் குடும்பமும் மண்ணுக்கு 
அகப்பட்டாங்கலாம்.”உக்கும் மாமா சொன்னார். 

“எல்டொப்” தோட்டம் மட்டுமில்ல மூனு நாலு தோட்டங்கள். மண்சரிவு
ஏற்பட்டிருக்கலம்”” பெரிய மாமா கூறினார். 

“லெக்கல் ஒயா ஆத்தோரம் வரிசையாக இருந்த நாலைஞ்சி வீடுகள் மண்சரிஞ்சி தண்ணீல அடிச்சிக்கிட்டு போயிருச்சாம். மரம் அறுக்கிற இடத்தில கம்மட்டி 
சொன்னான்.”

தற்போது மலையகத்தில் இடம் பெற்று வரும் மண்சரிவுகள் தொடர் சம்பவங்களே கொஸ்லந்த மீரியபெத்தையில் இடம் பெற்ற மண்சரிவு சர்வதேச முக்கியதுவத்தை பெற்றுள்ளது. இந் நாவலில் பதிவுசெய்யப்பட்டுள்ள இம் மண்சரிவு நிகழ்வுகள் தோட்டப்புறங்களில் 1942களில் பசறை எல்டொப் 1966இல் அப்புத்தளை பெரகல 2014இல் மீரியபெத்தை என ஒரு தொடர்கதையாகவே அமைந்துள்ளது.

 இறுதியாக சமூக பிரஞ்ஞை மிக்க இம்மொழிபெயர்ப்பு நாவல் தமிழ் இலக்கிய உலகு விரும்பி வரவேற்கவேண்டிய ஒன்றாகும். குறிப்பாக பொருளாதார ரீதியில் வறுமை காரணமாக கல்வியை தொடரமுடியாத நிலை தொடருகின்ற மலையக கல்விச் சமூகம் இந்நூலை வாசிக்க வேண்டியது ஒரு சமூக கடமையாகும். 

Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates