நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தல் இலங்கையை பொறுத்தவரையில் அனைத்துத் தரப்பினர் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பைக் கொண்ட தேர்தலாகவும் சிறுபான்மை மக்களை பொறுத்தவரையில் மஹிந்த அரசு மீது விரக்தியுற்றிருந்த நிலையில் ஆட்சி மாற்றத்தினை எதிர்பார்த்து வாக்களித்த தேர்தலாகவும் அமைந்திருந்தது.
அந்த வகையில் தேர்தல் முடிவுகளும் அவ்வாறே ஆட்சி மாற்றத்தை தீர்மானித்து மஹிந்த ராஜபக் ஷவை வீட்டுக்கு அனுப்பியிருந்தது. வரலாற்றில் இடம்பெற்ற தேர்தல்களில் இத்தேர்தல் கடும்போட்டிகள் நிறைந்ததாகவும் பெரும் பரபரப்பையும் சிறுபான்மை மக்கள் மத்தியில் ஆட்சி மாற்றத்திற்கான ஒருமித்த கருத்தையும் கொண்டிருந்தது.
மஹிந்தவா? மைத்திரியா? என்ற முடிவை மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் எதிர்பார்த்திருந்தனர். தேர்தல் நடைபெற்ற தினத்தன்றுவரை நாட்டின் ஜனாதிபதியாக இருந்த மஹிந்த ராஜபக் ஷ பக்கம் அதிகார பலம் இருந்தது. பொதுக்கூட்டணியின் வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் பக்கம் மக்கள் பலம் இருந்தது. தேர்தலின் இறுதிக்கட்டத்தில் தேர்தல் மோசடிகள் இடம்பெறலாம் என்றும் சூழ்ச்சியின் மூலம் ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள முயலக்கூடும் என்றும் பேசப்பட்டது. ஆனால், இறுதியில் மக்கள் ஆணை மைத்திரியின் பக்கமே அதிகமாக இருந்தது. அவர் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார்.
இந்நிலையில் பொதுக்கூட்டணியில் போட்டியிட்ட மைத்திரிக்கு மக்கள் அலை அதிகமாகவே வீசியிருந்தது. அதற்கேற்றால்போல் சிறுபான்மை மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் மைத்திரிக்கே ஆதரவு நல்கியிருந்தன. இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, முஸ்லிம் காங்கிரஸ், மலையக மக்கள் முன்னணி, தொழிலாளர் தேசிய சங்கம், ஜனநாயக மக்கள் முன்னணி என்பவற்றினை விசேடமாக குறிப்பிடலாம். நாட்டின் சிறுபான்மை தமிழ் மக்களை பொறுத்தமட்டில் ஒவ்வொரு பிரிவினருக்கும் இருந்த வெவ்வேறு தாக்கங்களை மஹிந்த அரசாங்கத்தின் மீது அதிருப்தி ஏற்படக் காரணமாயிருந்தது.
அந்த வகையில் வடபகுதி மக்கள் யுத்த வடுவிலிருந்து மீள முடியாதவர்களாகவும் இராணுவத்தினர் தமது சொந்த நிலங்களை ஆக்கிரமித்து அதிகாரம் செலுத்துகின்ற நிலையிலும் இனப்பிரச்சினைக்கு தீர்வின்றியும் தமது சொந்த இடங்களில் மீளக்குடியமர முடியாத நிலையிலும் மஹிந்த அரசாங்கத்தின் மீது அதிருப்தி அடைந்திருந்தனர்.
அதேபோல் முஸ்லிம் மக்கள் அண்மைக்காலத்தில் தமக்கு எதிராக இடம்பெற்ற கலவரங்கள், குறிப்பாக அளுத்கம சம்பவத்தில் அரசாங்கம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததை மறக்கவில்லை.
மலையக மக்கள் மத்தியில் இருக்கின்ற பிரச்சினைகளை நோக்குகின்ற பொழுது பிரதானமாக காணி வீட்டுப் பிரச்சினைகளை குறிப்பிடலாம். அதை மஹிந்த அரசாங்கம் அதாவது தனிவீட்டுத் திட்டத்தை நடைமுறைப்படுத்த தவறிவிட்டது. காலம் காலமாக மக்கள் தொடர்ந்து ஏமாற்றப்பட்டே வருகின்றனர். அத்துடன் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையுயர்வு, போதிய சம்பள உயர்வின்மை என்பவற்றின் காரணமாகவும் பாதிக்கப்பட்டிருந்தனர். இதனால் மலையக மக்களும் இம்முறை தேர்தல் முடிவுகளில் தகுந்த பாடத்தை புகட்டவே காத்திருந்தனர். அதற்கமையவே தேர்தலின்போது மலையக மக்கள் மாற்றத்திற்காக வாக்களித்து மஹிந்த அரசாங்கத்தை தோல்வியடைய செய்துள்ளனர்.
தேர்தல் காலத்தின்போது சிறுபான்மை தமிழ் மக்கள் எதனை விரும்பினார்களோ? யாரை ஆதரிக்க வேண்டும் என எண்ணிக் கொண்டார்களோ? அவர்களின் நிலையை அறிந்தே பொதுக்கூட்டணியில் போட்டியிட்ட மைத்திரிக்கு சிறுபான்மை மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் கட்சிகளின் தலைவர்கள் ஆதரவு நல்கியிருந்தமை அவர்களின் புத்தி சாதுர்யத்தையும் அவர்கள் தம் கட்சி சார்ந்த மக்களின் எண்ணங்களுக்கு கொடுத்திருந்த மதிப்பையும் வெளிக்காட்டியிருந்தது. மக்கள் முடிவைப் பெற்று பின் தன் முடிவை வெளியிடுவதே மக்கள் தலைவர்களின் சிறந்த பண்பாகும்.
ஆனால் இதை மலையக மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பெரிய கட்சியான இ.தொ.கா. தவறவிட்டிருப்பது எந்தளவில் அந்தக் கட்சித் தலைவர்கள் மலையக மக்களின் உணர்வுகளை புரிந்து வைத்திருக்கின்றனர் என்பதை கேள்விக்குறியாக்கியுள்ளது. ஏனைய கட்சிகள் உடன்படிக்கையுடன் மைத்திரிக்கு ஆதரவு நல்க முன்வந்திருந்த நிலையில் இ.தொ.கா. மட்டுமே நிபந்தனையற்ற ஆதரவை நல்குவதாக தெரிவித்திருந்தது. இதிலிருந்து தெரியவருவது என்னவெனில், மக்களின் தேவை என்ன என்பது இவர்களுக்கு அவசியமில்லை. தான் எடுக்கும் முடிவுக்கு மக்கள் அடிபணிய வேண்டும் என்பதேயாகும்.
மலையக மக்கள் தாங்கள் ஒன்றும் தெரியாத முட்டாள்கல்ல என்பதை தேர்தல் முடிவின் மூலம் நிரூபித்துக்காட்டியுள்ளனர். இது நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் மட்டுமல்ல, கடந்த மத்திய மாகாண சபை தேர்தல், ஊவா மாகாண சபைத்தேர்தல் என்பவற்றிலும் உறுதிப்படுத்தியுள்ளனர் என்பது இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.
மக்களின் தேவையை அறிந்து அதாவது, வீட்டுப்பிரச்சினைக்கு தீர்வினை பெற்றுத்தந்திருந்தால் மஹிந்த அரசு அதனை நிறைவேற்றியிருந்தால் மலையக மக்கள் மகிந்தவுக்கு வாக்களித்திருப்பார்கள். இ.தொ.காவின் வேண்டுகோளுக்கும் செவிசாய்த்திருப்பார்கள். இந்த தேர்தல் முடிவுகள் இரு விடயங்களை பெரும்பான்மை அரசியல்வாதிகளுக்கு உணர்த்தியிருக்கின்றது. ஒன்று சிறுபான்மை வாக்குகள் இன்றி எந்தவொரு நபரும் ஆட்சியமைக்க முடியாது. அதேநேரம் ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள வேண்டுமானால் சிறுபான்மை மக்களின் தேவைகளை அறிந்து அதனை பூர்த்தி செய்து அவர்களின் ஆதரவை பெற முயற்சிக்க வேண்டும் என்பதாகும்.
மலையக மக்களை பொறுத்தவரையில் யார் ஆட்சிக்கு வந்தாலும் பரவாயில்லை. அவர்களின் அடிப்படை பிரச்சினைகள் எந்த அரசாங்கத்தினால் முழுமையாக தீர்க்கப்படுகின்றனதோ? எப்போது அவர்கள் லயச்சிறைக்குள் இருந்து வெளியேறுகின்றனரோ, எப்போது அவர்களுக்கு தனி வீடுகள் அமைத்துக் கொடுக்கப்படுகின்றதோ அப்போதே அவர்களுக்கு விடிவுக்கான தருணம் கிடைக்கும். அதை எந்த அரசாங்கம் ஏற்படுத்திக்கொடுக்கின்றதோ அதற்கு அவர்கள் ஆதரவு வழங்குவார்கள்.
மஹிந்த அரசாங்கத்தில் அதற்கான வாய்ப்பு தவறவிடப்பட்டிருக்கின்றது. அவ்வரசாங்கத்திற்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்கிய இ.தொ.காவும் அரசாங்கத்திற்கு அழுத்தத்தை கொடுத்து அதை நிறைவேற்றத் தவறிவிட்டது. இ.தொ.கா. கொஸ்லாந்தை, மீரியபெத்த தோட்டத்திலும் டயகம தோட்டத்திலும் அமைக்கப்படும் வீட்டுத்திட்டத்தை உதாரணம் காட்டி மஹிந்த அரசாங்கம் வீடுகளை கட்டி தருகின்றது என பூச்சாண்டி காட்டிய காலம் கடந்து போய்விட்டது. முழு மலையகத்திலும் தனிவீடு கொண்டுவரப்பட வேண்டும். அதுதான் மலையக மக்களின் எதிர்பார்ப்பும் தேவையும்கூட.
இனியும் மக்கள் ஏமாற்று அரசியலுக்கு பலியாக மாட்டார்கள். இ.தொ.கா. காலம் அறிந்து மக்களின் தேவைகளை புரிந்து அது செயற்பட வேண்டியுள்ளது. மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யப்பட்டிருந்தால் ஏன் இ.தொ.கவின் ஆதரவை மலையக மக்கள் புறக்கணித்திருக்க வேண்டும்? இதன் மூலம் பெரும்பான்மை பிரதிநிதிகள் மட்டுமன்றி, மலையகத்தின் ஏனைய தலைவர்களும் தகுந்த பாடமாக கற்றுக்கொள்ள வேண்டும்.
நன்றி - வீரகேசரி
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...