ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் செனன் சந்தியில் அமைந்துள்ள மதுபான கடையை அகற்றுமாறு கோரி 500க்கு மேற்பட்ட செனன் தோட்ட பெண் தொழிலாளர்கள் இன்று காலை 10.30 மணியளவில் ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் மதுபான கடைக்கு முன்பாக வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டிருந்தனர்.
தினமும் ஆண்கள் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து சண்டையிடுவதாகவும் குடும்பத்தில் பல பிரச்சினைகள் ஏற்படுவதாகவும் தற்போது மாணவர்களும் குடி பழகத்தில் ஈடுப்பட்டு வருவதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட பெண்கள் தெரிவித்தனர்.
அத்தோடு மது என்பது மரணம், மலையக மக்களை குடிப்பழக்கத்திலிருந்து விடுதலை செய்வோம், இளைஞர்களை பாதுகாப்போம், நோய் உள்ளவர்களை காப்பாற்றுவோம், பிள்ளைகளின் கல்வியை காப்பாற்றுவோம், போன்ற பாததைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டகாரர்கள் கோஷங்களையும் எழுப்பினர்.
மலையகத்தில் குறிப்பாக அதிகமான மதுபானசாலைக்கான அனுமதிப்பத்திரங்களை அரசியல்தலைவர்களே கொடுத்துள்ளார்கள். கொடுத்த அரசியல் தலைவர்களே இக்கடையை மூட வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட பெண்கள் மேலும் தெரிவித்தனர்.
இதன்போது இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான முத்து சிவலிங்கம், இ.தொ.கா மத்திய மாகாண சபை உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதன்போது மத்திய மாகாண சபை உறுப்பினர் கணபதி கனகராஜ் பிரதான வீதியில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டார். அத்தோடு சம்பவ இடத்திற்கு வந்த அட்டன் பொலிஸ் நிலைய உதவி பொலிஸ் அத்தியட்சகர் தென்னகோன் இவ் மதுபானசாலையை மூடுமாறு கோரி ஆர்ப்பாட்டம் மேற்கொண்டதை தொடர்பாக நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வருவதாகவும் நீதிமன்றத்தினால் உத்தரவு வழங்கினால் மூடுவது தொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக பொது செயலாளர் ஆறுமுகன் தொண்டமானிடம் கூறினார்.
இதன்போது இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொது செயலாளர் ஆறுமுகன் தொண்டமான் தெரிவிக்கையில், இவ்விடயம் சம்மந்தமாக உதவி பொலிஸ் அத்தியட்சகர் கவனம் செலுத்துவதாகவும் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வருவதாகவும் அதன் பிறகு சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக அவர் தெரிவித்ததாக ஆர்ப்பாட்டகாரர்களிடம் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொது செயலாளர் தெரிவித்தார்.
இவ்வாறு தெரிவித்ததையடுத்து ஆர்ப்பாட்டகாரர்கள் கலைந்து சென்றனர். சுமார் இரண்டு மணித்தியாலங்கள் இவ் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது. இதனால் போக்குவரத்தும் தடைப்பட்டிருந்தது. இவ் ஆர்ப்பாட்டத்தை இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மகளிர் பிரிவு ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடதக்கது.
இவ் ஆர்ப்பாட்டத்தின் போது சிலர் கருத்து தெரிவிக்கையில், மதுபானசாலைக்கு அனுமதிப்பத்திரம் வழங்கியது அரசியல்தலைவர்கள் தான் தற்போது அவர்களின் சந்தர்ப்பத்திற்காக அவர்களே இவ் ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்து அவர்களே கலைந்து சென்றுள்ளனர். இவ்வாறு செய்வது அநாகரிகமான செயல் என கருத்து தெரிவித்தனர்.
மதுபானசாலையை மூடுமாறு கோரி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தை பற்றி ஹட்டன் பொலிஸார், ஹட்டன் நீதவான் ஜ.பீ.டீ.லியனகேவின் கவனத்திற்கொண்டு வந்தனர்.
இதனையடுத்து குறித்த மதுபானசாலைக்கு கலால் திணைகள ஆணையாளரினால் அனுமதிப்பத்திரம் இருப்பதாகவும் மதுபானசாலையை கலால் திணைகளத்தின் ஆணைளாயரினால் மட்டும் தடை செய்ய முடியும் எனவும் இதை பற்றி அவரிடம் முறைபாடு செய்யுமாறு ஹட்டன் நீதவான் பொலிஸாருக்கு தெரிவித்தார்.
நன்றி - தமிழ்வின்
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...