Headlines News :
முகப்பு » » மலையக அமைச்சர்கள் மூவரும் புதிய மாற்றத்திற்கான புதிய பாதைக்கு புத்துயிர் அளிப்போம்: திகாம்பரம்

மலையக அமைச்சர்கள் மூவரும் புதிய மாற்றத்திற்கான புதிய பாதைக்கு புத்துயிர் அளிப்போம்: திகாம்பரம்


மலையகத்தைச் சேர்ந்த மூன்று அமைச்சர்களும், மனோகணேசனும் சேர்ந்து மலையக மக்களின் புதிய மாற்றத்திற்கான பாதைக்கு புத்துயிர் அளிக்கப்போவதாக என்று தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்தார்.

அமைச்சுப் பதவியை பொறுப்பேற்ற அவர் மலையகத்தின் முக்கிய பிரச்சினையான மலையக வீடமைப்புத்திட்டத்தை ஆரம்பிக்கும் முன் மல்வத்து மகாநாயக்க தேரர் வண. திப்பட்டுவாவே சித்தார்த்த ஸ்ரீ சுமங்கள தேரரை சந்தித்து நல்லாசி பெற்றுக் கொண்டதன் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

மலையகத்தில் இன்று பாரிய பிரச்சினையாக இருப்பது தனி வீடு, கல்வி, சுகாதாரம் தொடர்பானவையாகும். முன்னர் சந்திரிகா அம்மையார் ஜனாதிபதியாக இருந்த போது தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சை தோட்ட மக்களுக்காகக் தந்திருந்தார்.

ஆனால் 2007 இன் பின் அவை நீக்கப்பட்டன. அன்று தோட்டப் பகுதி மக்களுக்கு இதனூடாக பல்வேறு சேவைகளை வழங்கி இருக்க முடிந்த போதும் அன்றைய எமது தலைவர்களது தனிப்போக்கு காரணமாக அவை வெற்றி அளிக்கவில்லை.

இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் தோட்ட மக்களின் பாரிய பிரச்சினையாகவுள்ள தனி வீட்டுப் பிரச்சினையை இனம் கண்டு தீர்ப்பதற்கு முன்வந்துள்ளனர்.இதனை அடுத்தே நாம் அவர்களது வெற்றிக்கு உதவினோம். தற்போது தோட்ட மக்களுக்கென்றே உருவாக்கப்பட்ட தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சு எனக்குத் தரப்பட்டுள்ளது.

கல்வி இராஜாங்க அமைச்சு, அமைச்சர் வீ. இராதாகிருஷ்ணனுக்கு வழங்கப்பட்டுள்ளது. எம் இருவருடன் அமைச்சர் வேலாயுதம் மற்றும் மனோகணேசன் ஆகியோர் இணைந்து மலையக மக்களின் புதிய எதிர்ப்பார்ப்பான 7 பேர்சஸ் காணியில் அமைந்த தனி வீடு பற்றிய எதிர்பார்ப்பை நிறைவு செய்யும் பொன்னான நாள் கனிந்துள்ளது. இது ஒரு நல்ல சந்தர்ப்பம்.

நூறு நாள் வேலைத்திட்டத்துடன் இதனையும் இணைத்து செயற்படவுள்ளோம். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எவரையும் பழிவாங்கும் எண்ணம் கொண்டவர் அல்ல. அவர் அனைத்து தரப்பையும் இணைத்தே செயற்பட விரும்புகின்றார். எனவே அவருடன் எவரும் இணையலாம். அது பற்றி எமக்கு எவ்வித கருத்து முரண்பாடுகளும் இல்லை. ஆனால் பெருந்தோட்டத் துறையைப் பொறுத்தவரை வெளியாருக்கு அதில் செல்வாக்கு செலுத்த முடியாது.

தோட்ட உட்கட்டமைப்பு, கல்வி, சுகாதாரம் போன்ற துறைகளை தற்போது தோட்டப் பகுதியில் இருந்து அமைச்சர்களாகப் பதவி வகிக்கும் எம் மூவருடன் மனோகணேசனும் இணைந்தே முன்னெடுப்போம். அதற்கு வேறு யாரையும் அனுமதிக்க மாட்டோம். பெருந்தோட்டப் பகுதிகளுக்கு சேவை செய்யும் பல்வேறு சந்தர்ப்பம் எம்மில் பலருக்குக் கிடைத்தது.

அதனை அவர்கள் தவற விட்டு விட்டனர். தனிப்பட்ட சுக போகங்களுக்கே அவற்றைப் பயன் படுத்தினர். இந்நிலையில் மாற்றம் தேவை என்ற கோஷம் தோட்டப் பகுதிகளிலும் தொடர ஆரம்பித்தது. இதன் விளைவாகவே என்போன்ற சிலர் இன்று அமைச்சர்களாக முடிந்தது. நான் தோட்டப் பகுதியில் பிறந்தவன், தோட்டப் பகுதியிலே வாழ்ந்தவன், தோட்ட மக்களின் இன்ப துன்பங்களை அறிந்தது மட்டுமல்ல அதில் ஒன்றறக் கலந்தவன். எனவே என்னால் தோட்டப் பகுதிக்கு கச்சிதமாக சேவையாற்றும் தகுதி உண்டு என்பதை உணர்கிறேன், பிரதமரும் அதனை உணர்ந்தே எனக்கு இப்பதவியை ஒப்படைத்துள்ளார். எனவே இது ஒரு பொன்னான சந்தர்ப்பமாகும், இவ் அரசின் புதிய வரவு– செலவுத்திட்டம் பற்றி பலர் பல்வேறு விதமாக விமர்சிக்கின்றனர்.

ஆனால் இது தோட்டப் பகுதி மக்களுக்கான வரவு செலவுத்திட்டம் என்பதில் ஐயமில்லை, ஏனெனில் கோதுமை மா, பாண், நெத்திலி, மண்ணெண்ணெய், கொத்தமல்லி, சரக்குத்தூள், இப்படியான பொருட்கள் தோட்டத் தொழிலாளர்களுடன் நேரடித் தொடர்பு கொண்டவையாகும். அத்துடன் திரவப் பாலுக்கான விலையேற்றமும் தோட்டத் தொழிலாளர்களைப் பொறுத்தவரை சாதகமான ஒன்றாகும்.

எனவே இது மற்றவர்கள் கூறும் கொத்தமல்லி வரவு– செலவுத்திட்டமல்ல தோட்டத் தொழிலாளர்களை மையமாக வைத்து தயாரிக்கப்பட்ட ஒரு வரவு– செலவுத்திட்டமாக இதனைக் கருதுகின்றேன்.

சாதாரணமாக தோட்டப் பிரதேசங்களில் தரிசாக உள்ள வீடு அமைக்கக் கூடிய சுமார் இரண்டு இலட்சம் ஏக்கருக்கு மேற்பட்ட காணிகள் உள்ளன. இதில் வீடு கட்டுவதற்கு தற்போது 8000 ஏக்கர் போதுமானது, அதிலும் ஒரேநேரத்தில் தேவைப்படாது, சுமார் ஒரு இலட்சத்து 75 ஆயிரம் வீடுகள் கட்டப்பட்டால் போதுமானது.

அவை அனைத்தும் ஒரே இடத்தில் ஒரே நேரத்தில் கட்டப்படுவதில்லை, பகுதி பகுதியாக அவ்வப்போது மேற்கொள்ளப்படுவதனால் அதில் பிரச்சினைகள் இல்லை.

அத்துடன் மகாநாயக்க தேரர் நமது தோட்டப் பகுதிப் பிரச்சினைகளை நன்கு அறிந்துள்ளார், அவர் ஆசீர்வாதமும் கிடைத்துள்ளது, எனவே, வெகுவிரைவில் எமது தனி வீடு பற்றிய நீண்டகாலக் கனவு நனவாகும் என்றார்.

நன்றி - 2தமிழ்
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates