Headlines News :
முகப்பு » » இரட்டை தனிவீட்டுத் தொகுதி மலையகத்துக்கு உகந்ததா? பெ.முத்துலிங்கம்

இரட்டை தனிவீட்டுத் தொகுதி மலையகத்துக்கு உகந்ததா? பெ.முத்துலிங்கம்

பெ.முத்துலிங்கம்
மலையக மக்களுக்கு எல்லா பிரதேசங்களிலும் தனிவீட்டுத் திட்டத்தையே ஊக்குவிப்பதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆங்கிலப்பத்திரிகை ஒன்றுக்கு நேர்காணல் ஒன்றினை வழங்கியிருந்த தோட்டத்துறை இராஜாங்க அமைச்சர் கே. வேலாயுதம் கூறியுள்ளார். அதேவேளை, இரு நுழைவாயில்களின் இருபக்கத்திலும் காணித்துண்டுகளை கொண்ட மாடி வீட்டுத்திட்டதையும் அமுல்படுத்துவதாகவும் கூறியுள்ளார். இவ்விரு நுழைவாயிலைக் கொண்ட மாடிவீட்டுத்திட்டம் நிலத்தை சுற்றிவரக் கொண்ட அயலவர்களின் தொந்தரவற்ற அழகான வீட்டுத்திட்டம் எனவும் கூறியுள்ளார்.
“ Every where we will be promoting the concept of single unit houses. That will be our first priority. There will also be upstairs houses but separately for each family with two entrances, with plots of land s on either side and not adjoined to another housing unit. It will be in a beautiful setting with lands surrounding and not disturbances from neighbours”
மலையகத்தில் பிறந்து வளர்ந்த அமைச்சர் கே. வேலாயுதம் மலையக தோட்ட மக்களின் பிரச்சினைகளை நன்கு அறிந்த தொழிற்சங்கவாதியாவார். தோட்டத்துறை மக்களின் அடிப்படை மனித உரிமை பிரச்சினையான காணியுரிமையுடனான வீட்டுப்பிரச்சினையை நன்கு அறிந்த அமைச்சர், இரு நுழைவாயிலைக் கொண்ட மாடிவீட்டுத்திட்டத்தை அறிமுகப்படுத்த முனைவது கவலைக்குரிய தொன்றாகும். இத்திட்டத்துடன் வேறு பல உகந்த திட்டங்களையும் அமுல்படுத்துவது பற்றி அரசாங்கம் கவனத்திற் கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மலையக மக்கள் தொடர் வறுமை “ Porsistent Poverty” நிலையில் இருப்பதற்கு பிரதான காரணங்களில் ஒன்று அவர்களுக்கென சிறுநிலத்துடன் கூடிய தனி வீடு ஒன்று இன்மையேயாகும் என்று பல ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். இலங்கையில் ஆட்சிபீடமேறிய அனைத்து அரசாங்கங்களும் சிறு துண்டுக் காணியையாவது தோட்ட மக்களுக்கு சொந்தமாக வழங்க ஒருபோதும் விரும்பியதில்லை. மாறாக, காலத்திற்கு காலம் நாட்டின் பெரும்பான்மை மக்களுக்கு குறிப்பாக 1972 முதல் இது நாள்வரை பல காரணிகளைக் காட்டி தோட்டக்காணிகளை பெரும்பான்மை மக்களுக்கு வழங்கி வந்துள்ளன. மஹிந்த ராஜப க் ஷ அரசாங்கமும் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பாக 37 ஆயிரம் ஹெக்டயார் தோட்ட காணிகளை அடையாளம் கண்டு பெரும்பான்மை மக்களுக்கு வழங்கும் முயற்சியை மேற்கொண்டு இடையில் கைவிட்டது.

மலையக மக்களுக்கு காணிவழங்க வேண்டும் எனும் கோரிக்கையை முன்வைக்கையில் காணிகள் வழங்குவதற்கு இல்லை. அப்படியே வழங்க வேண்டுமாயின் மாடி லயன்கள் கட்டித்தருவோம், அல்லது இரட்டை மாடி வீடு கட்டித்தருவோம், இல்லையெனில் 7 பேர்ச் காணிதுண்டு மட்டுமே வழங்குவோம் என்ற கொள்கைகளையே அனைத்து அரசாங்கங்களும் முன்வைத்தன.

தோட்டத்தில் பயிரிடும் நிலங்களை காப்பாற்றிக் கொள்ளும் வகையில் மாடி வீட்டுத்திட்டமும், இரட்டை வீட்டுத் திட்டமும் பிரித்தானிய தோட்டக் கம்பனிகளினால் 1950களில் அறிமுகப்படுத்தப்பட்டு பின்னர் கைவிடப்பட்டது. வெள்ளையர்களினால் அறிமுகப்படுத்தப்பட்ட மாடி மற்றும் இரட்டை வீட்டுத்திட்டங்களை ஹட்டன் மற்றும் பதுளை பகுதிகளின் ஒரு சில தோட்டங்களில் இன்றும் காணலாம்.

இப்பின்புலத்தில் அண்மைய மாடி மற்றும் இரட்டை வீட்டுத்திட்டங்களின் அறிமுகத்தை நோக்குவோமாயின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாராநாயக்க அரசாங்கத்தின் கீழ் அமைச்சராகவிருந்த ஆறுமுகன் தொண்டமான் அன்றைய அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட மாடிவீட்டுததிட்டத்தை அறிமுகப்படுத்தினார்.

இத்திட்டமானது மலையக தோட்ட மக்களின் அடிப்படை மனித உரிமையான நிலவுரிமையுடன் கூடிய தனி வீட்டுரிமையை மறுதலித்ததுடன், மீண்டும் லயக் கலாசாரத்திற்கே வித்திடும் என அடையாளம் காணப்பட்டது.

இவ்வடிப்படை மனித உரிமை மீறலைப்பற்றி இக்கட்டுரையாளர் 2003 இல் வீரகேசரியில் எழுதிய கட்டுரையொன்றின் மூலம் வெளிக்கொணர்ந்தார். பின்னர் கண்டி சமூக அபிவிருத்தி நிறுவகம், பெருந்தோட்டத்துறை சமூக மாமன்றம் மற்றும் ஏனைய பல சிவில் அமைப்புகள் மாடிவீட்டுத்திற்கு எதிரான கூட்டுப் பரப்புரையை மேற்கொண்டதுடன் கொழும்ப, ஹட்டன், பதுளை உள்ளிட்ட மலையகத்தின் பல நகரங்களில் ஆர்ப்பாட்டங்களையும் மேற்கொண்டன.

இதேவேளை, கண்டி சமூக அபிவிருத்தி நிறுவகம் இவ்வுரிமை மீறலை ஐக்கிய நாடுகளின் வாழ்வகப்பிரிவின் கவனத்திற்கு கொண்டு வரும் வகையில் வீட்டுரிமைக்கான ஐ.நா.சபையின் அதிகாரியான மிலோன் கோத்தாரியை 2003 ஆம் ஆண்டு ஹட்டனுக்கு வரவழைத்து அந்தப் பகுதியிலுள்ள சில தோட்டங்களில் முன்னெடுக்கப்பட்ட மாடி வீட்டுத்திட்டங்களை காட்டியதுடன் சிவில் அமைப்புகளுடன் கலந்துரையாடல் ஒன்றினையும் நடத்தியது. இதன்பின் ஐ.நா. சபைக்கு திரும்பிய வதிவிட பிரதிநிதி மிலோன் கோத்தாரி, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவிடம் மாடி வீட்டுத்திட்டத்திற்கு பதிலாக நாட்டின் ஏனைய பிரஜைகளுக்கு வழங்குவதுபோன்று இந்தநாட்டின் பிரஜைகளான தோட்ட மக்களுக்கும் காணியுடன் கூடிய தனிவீடு வழங்கவேண்டும் என்று விதந்துரைத்தார்.

இதேவேளை, 2005 இல் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில்போது போட்டியிட்ட இருவேட்பாளர்களான முன்னாள் ஜனாபதி மஹிந்த ராஜபக் ஷ மற்றும் இன்றைய பிரதம மந்திரி ஆகியோரிடம் மலையக மக்களுக்கு காணியுரிமையுடன் கூடிய தனிவீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை சிவில் அமைப்புகள் கூட்டாக முன்வைத்தன. இதன் ஒரு வெளிப்பாடகவே முன்னாள் ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட மஹிந்த சிந்தனை பிரகடனத்தில் காணியுரிமையுடன் கூடிய 7 பேர்ச் காணியில் 50 ஆயிரம் தனி வீடுகள் கட்டித்தரப்படும் எனக்கூறப்பட்டது.

அத்துடன் 2006 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி சபையின் அனுசரணையுடன், சிவில் சமூகத்தின் பங்களிப்புடன் தேசத்தை கட்டியெழுப்பல் மற்றும் தோட்ட உட்கட்ட அபிவிருத்தி அமைச்சினால் தோட்டத்துறைக்கான பத்தாண்டு செயற்றிட்டம் தயாரிக்கப்பட்டது. இத்திட்டத்தில் மஹிந்த சிந்தனையில் குறிப்பிட்டது போல் தனிவீடும் காணியுரிமையும் தோட்டத் தொழிலாளருக்கு வழங்க வேண்டும் என விதந்துரைப்பு செய்யப்பட்டது.

இவ்விதந்துரைப்பு செய்தவேளை, தோட்ட உட்கட்டமைச்சின் அமைச்சராக சி.பி. இரத்நாயக்க இருந்தார். இத்திட்டம் ஏற்புரை செய்யப்பட்டவேளை, முன்னாள் பிரதி அமைச்சர் முத்து சிவலிங்கம் தோட்டஉட்கட்ட பிரதி அமைச்சராக்கப்பட்டதுடன் முன்னாள் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் வேண்டுகோளின் பேரில் தனிவீட்டுடன் இரட்டை வீடுகளும் (வுறin hழரளநள)கட்ட இணக்கம் காணப்பட்டது.

இரட்டை வீட்டை சிவில சமூகம் முழுமையாக எதிர்த்தது. (கட்டுரையாளர் இவ் ஏற்புரை நிகழ்வின்போது இதனை கடுமையாக எதிர்த்தார். முன்னாள்; தோட்ட உட்கட்டமைப்பின் செயலாளர் எம். வாமதேவன் இவ்வாய்ப்பினை கட்டுரையாளருக்கு பெற்றுக்கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.) எனினும் இத்திட்டம் சில தோட்டங்களில் அமுல் படுத்தப்பட்டது. இந்நிலையில் அண்மைய ஜனாதிபதித் தேர்தலுக்கான ஆயத்தங்கள் நடைபெற்றவேளை தென்பகுதி தோட்டங்களில் தனிவீட்டிற்கு பதிலாக இரட்டைமாடித் வீட்டுத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இவ்விரட்டை மாடித்தி;ட்டத்தையே மீரியாபெத்த மண்சரிவு பகுதியில் அமுல்படுத்த முன்னாள்; அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் அடிக்கல் நாட்டினார்.
இரட்டை மாடிவீட்டுத்திட்டம் அல்லது இரட்டை ஃ தனி மாடி வீட்டுத்திட்;டத்தை ஆட்சியாளர்கள் அமுல்படுத்த முனைவதற்கான அடிப்படைக்காரணம் நிலப்பற்றாக்குறையோ அல்லது தோட்டத்துறை தொழிலாளர்களினால் சுயமாக வீடு கட்ட முடியாது என்ற அனுதாபத்தினாலல்ல. மாறாக 'தோட்டத் தொழிலாளர்களை தலைமுறை தலைமுறையாக தோட்டத் தொழிலுடன் பிணைத்து வைக்க வேண்டும்' என்ற நோக்கத்திற்காகவாகும் . இரட்டை மாடி வீடு அல்லது தனிமாடி வழங்கப்பட்டால் தோட்டத் தொழிலளார்கள் தமது வசதிக்கேற்ப நாளடைவில் அதனை பெருப்பித்துக்கொள்ளவோ அல்லது புதிதாக அமைத்துக் கொள்ளவோ வாய்ப்பு கிடைக்காது. தனிவீடாக இருப்பின் தமது குடும்பங்களின் விரிவாக்கத்திற்கேற்ப மற்றும் தமது பொருளாதார வசதிக்கேற்ப வீட்டை விரிவாக்கிக் கொள்ளலாம்

இந்நிலையில் இரட்டை அல்லது தனிமாடி வீட்டை ஆதரி;ப்போமாயின் முழு மலையகத்திலும் இரட்டை அல்லது தனி மாடி வீட்டுத்திட்டத்தை அரசாங்கம் அறிமுகப்படுத்த முனையும். எனவே, அமைச்சர் கே.வேலாயுதம் இவ்வபாயத்தை அடையாளம் கண்டு இம்முயற்சியை கைவிட முன்வரவேண்டும்

இதேவேளை, அரசாங்கத்தின் இச்சூழ்ச்சி வலையில் தோட்டத்துறை மக்களை சிக்கவிடாது பாதுகாக்க வேண்டிய பொறுப்பு சிவில் அமைப்புகள் மற்றும் தொழிற்சங்கங்கள் என்பனவற்றின் கையில் தங்கியுள்ளது. இன்று எழுந்துள்ள அரசியல் சூழ்நிலை மலையக மக்களின் பேரம் பேசும் சக்தியை அதிகரித்துள்ளது. எனவே மலையகத்தில் எந்தவொரு பகுதியில் வீடு அமைக்கப்பட்டாலும் அவை சிறு துண்டு காணியில் தனிவீடாகவே அமைக்கப்பட வேண்டும் என்பதே ஆட்சிக்கு வரும் அனைத்து அரசாங்கங்களின் கொள்கையாக இருக்கும் வகையில் நிரந்தரக் கொள்கை ஒன்றை வகுக்க சிவில் மற்றும் மலையக அரசியல் கட்சிகள் அழுத்தம் கொடுக்க வேண்டும.;

தோட்டங்களைப் பொறுத்தவரை தனிவீடு கட்டுவதற்குத் தேவையான நிலம் இருக்கின்றது. பத்தாண்டு திட்டத்தில் தனிவீட்டிற்கு 7 பேர்ச் காணியும் உட்கட்டமைப்பு வசதிகளுக்காக 30 வீத காணி ஒதுக்கப்படும.; அதாவது, சிறு நகரமயமாக்கலுக்கு காணி ஒதுக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, அமைச்சர் வேலாயுதம் இதனைக் கருத்திற் கொள்வதுடன், எங்காவது தோட்ட மக்களை ஏமாற்றி இரட்டை அல்லது தனிமாடி வீட்டுத் தொகுதி அமைக்கப்படுமாயின் அதனை நிராகரிக்க மக்கள் மத்தியில் சிவில் சமூகம் பரப்புரை மேற்கொண்டு அதனை முறியடிக்க வேண்டும். மலையக சிவில் சமூகம் இதனை செய்யத்தவறின் நாளைய மலையக சமூகம் இவர்களை பழிக்கும்.

1930கள் முதல் இன்றுவரையிலான காலப்பகுதியில் மலையக அரசியல் தலைமைகள் பல வலுவான பேரம் பேசும் சந்தர்ப்பங்களை தமது சொந்த நலன் கருதி தட்டிக்கழித்துள்ளன. இன்றைய புதிய அரசியல் சூழல் மலையக மக்களின் அனைத்து உரிமைகள் தொடர்பாகவும் பேரம் பேசி பெற்றுக்கொள்ளும் வாய்ப்பினை வழங்கியுள்ளது. நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் மலையக மக்கள் பெரும்பான்மையாக வாக்களித்துள்ளதுடன், எதிர்வரும் ஏப்ரலில் பொதுத்தேர்தலுக்கு வாக்களிக்கவுள்ளனர். எனவே மலையக மக்களுக்கு காணியுடன் கூடிய தனி வீடுகளே கட்டப்படும் என்ற பொதுக்கொள்கையை கடைப்பிடிக்க அரசாங்கத்தை நிர்ப்பந்திக்க வேண்டும்.

நன்றி - வீரகேசரி
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates