மீண்டும் பொதுபல சேனா துணிந்து களத்தில் இறங்கியுள்ளது. சிங்கள பௌத்த பேரினவாதத்தை மட்டுமே நம்பி அதன் இருப்பு இதுவரை தொடர்ந்து வந்திருக்கிறது. ஆனால் கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் அதனை வளர்த்தெடுத்த கோத்தபாய தரப்பு கைவிட்டதன் பின்னர் பொதுபல சேனா கையறு நிலைக்கு தள்ளப்பட்டது. “மைத்திரிபால அலை”யின் போக்கு பொதுபல சேனாவுக்கு நெருக்கடியை தந்திருந்தது. அவர்கள் பொதுபல சேனாவை நேரடியாக எதிர்த்தார்கள். கண்டித்தார்கள். எச்சரித்தார்கள். பொதுபல சேனாவின் போட்டிப் பங்காளியான ஜாதிக ஹெல உறுமய பொதுபல சேனா தலைதூக்குவதை விரும்பியிருக்கவில்லை. இக்கட்டான காலகட்டங்களில் பொதுபல சேனாவை பாதுகாத்த ஜாதிக ஹெலறுமயவை சேர்ந்த சம்பிக்க, ரதன தேரர் போன்றோரை நேரடியாகவே தாக்கிப் பேசினார் ஞானசார தேரர்.
ஆனால் தேர்தலின் பின்னர் பொதுபல சேனா சற்று அடங்கியிருந்ததாகவே பலர் கருதினார்கள். ஆனால் ஏனைய சக்திகளைப் போல அல்ல அவர்கள். பொதுபல சேனாவின் இருப்பு பேரினவாதத்திலேயே தங்கியிருக்கிறது. வரலாற்றில் சிங்கள பௌத்த பேரினவாதம் சற்று தளர்வதை போல தெரிந்தால், அந்த இடைவெளியை நிரப்ப ஒன்றோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட அமைப்புகளோ திடீரென்று தோன்றி பேரினவாத செயற்பாடுகளில் முழு மூச்சில் இறங்கும். அதில் ஏதாவது நின்றுபிடிக்கும் ஏனைய அமைப்புகள் காணாமல் போய்விடும். ஆனால் அதில் உள்ளவர்கள் மாத்திரம் மீண்டும் தருணம் பார்த்து வேறு அமைப்புகளின் பெயர்களில் மீண்டும் வெளிவருவார்கள். அப்படித்தான் இந்த சிறிய இடைவெளியை பயன்படுத்தி கடந்த சில தினங்களுக்கு முன்னர் “சிங்கள தேசிய முன்னணி” என்கிற பெயரில் ஒரு அமைப்பும் உருவானது.
பொதுபல சேனா கடந்த இரண்டு ஆண்டுகளுக்குள் தனது இருப்புக்காக அதிக விலை கொடுத்திருக்கிறது. பல உயிர்களை காவு கொண்டும், பல சொத்துக்களை அழித்தும், சேதம் செய்தும், சண்டித்தனத்தை நிலைநாட்டியிருக்கிறது. அதன் வலைப்பின்னலையும், பிரசார இயந்திரத்தையும், கிளைகளையும் உருவாக்கி பலப்படுத்தி வந்திருக்கிறது. எனவே இடையில் எந்த ஒரு அமைப்பும் பொதுபல சேனாவின் இடத்தை கைப்பற்றுவதை பொதுபல சேனா தடுத்தே தீரும். “சிங்கள தேசிய முன்னணி”யின் தோற்றம் அப்பேர்பட்ட ஒரு சமிக்ஞையை தந்திருக்கிறது என்றே கருத முடிகிறது. எனவே புதிய அரச தரப்பின் எச்சரிக்கையை எதிர்கொள்வதைத் தவிர அதற்கு வேறு தெரிவில்லை.
குறிப்பாக முஸ்லிம்களுக்கு எதிராக மீண்டும் இனவெறுப்பை கையிலெடுக்கத் தொடங்கியிருக்கிறது. கடந்த 10ஆம் திகதி ஊடக சந்திப்பொன்றை கூட்டி பலவற்றை அறிவித்தது.
“இனி பொறுத்தது போதும்... நாங்கள் மீண்டும் ‘கூரகல’யில் இருந்து ஆரம்பிக்கப்போகிறோம். ராஜபக்ச அரசாங்கமும் கைவிட்டது. இந்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் ஒரு மாதத்திற்குள் நாங்கள் போய் அந்த பள்ளிவாசலின் சகல கற்களையும் கழற்றிக்கொண்டு வருவோம்.” என்று எச்சரித்துள்ளது.
எதிர்வரும் பௌர்ணமியன்று அதாவது மார்ச் 05 அன்று பலாங்கொட கூரகல பள்ளிவாசலை முற்றகையிடப்போவதாக இன்னொரு போஸ்டர் மூலமும் அறிவித்துள்ளது. பல்லாண்டு காலமாக இருந்துவந்த ஜெய்லானி பள்ளிவாசல் உள்ள பகுதி புராதன பௌத்த புனித பிரதேசமென்று கூறி பல தடவைகள் ஹெல உறுமய மற்றும் இன்னும் பல அமைப்புகள் அங்கிருந்த முஸ்லிம் பள்ளிவாசலை அகற்ற முயற்சி செய்தனர். பின்னர் 2013 ஏப்ரல் மாதம் கோத்தபாய ராஜபக்ச 400க்கும் மேற்பட்ட பிக்குமார் சகிதம் சென்று முற்றுகையிட்டார். அந்த பள்ளிவாசலை அகற்றுவதென்று தொல்பொருள் ஆராய்ச்சித் திணைக்களம் தீர்மானித்து உள்ளதென்று கூறி அங்கு மகிந்த ராஜபக்சவின் புகைப்படத்துடன் ஒரு பதாகையை நட்டு விட்டு வந்தார். அத பதாகையில் ஜனாதிபதியின் ஆசியுடன் இது நிகழ்வதாக அறிவித்திருந்தது. இது ஒரு மோசமான மிரட்டல் என்று அசாத் சாலி பின்னர் அறிவித்திருந்தார். பள்ளிவாசலை சேர்ந்தவர்களோடு ஒரு இணக்கப்பாட்டுக்கும் வந்தது தொல்பொருள் திணைக்களம். இந்த நிலையில் மீண்டும் பொதுபல சேனா அந்த பிரச்சினையை கையிலெடுத்துள்ளது.
பொதுபல சேனா 10ஆம் திகதி முஸ்லிம்களுக்கு எதிராக ஒரு நீண்ட அறிக்கையை வெளியிட்டிருகிறது. அந்த அறிக்கையில் இப்படி குறிப்பிட்டுள்ளது.
பொதுபல சேனா அறிக்கை
“பெப்ரவரி மாத முற்பகுதியில் அல்கைதா, தலிபான் போன்ற இஸ்லாமிய பயங்கரவாத இயக்கங்களுக்கு ஆதரவளிக்கும் நபர்களையும், அமைப்புகளையும் தடைசெய்து அவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்யும் வகையில் புதிய சட்டமூலமொன்றை வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர அவர்கள் லக்ஸ்மன் கிரிஎல்ல மூலம் சமர்ப்பித்திருந்தார். இதன் மூலம் நாங்கள் இதுவரை கூறிவந்தபடி இலங்கையில் இஸ்லாமிய பயங்கரவாத அச்சுறுத்தல் இருக்கிறது என்பதை புதிய அரசாங்கமும் ஏற்றுக்கொண்டுள்ளது... அரசாங்கத்தின் முதல் 30 நாட்களுக்குள் சர்வதேச பயங்கரவாதத்துக்கு எதிராக எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கை எங்களுக்கு கிடைத்த வெற்றி. இந்த விடயத்தில் நாங்கள் எங்கள் ஒத்துழைப்பை வழங்குவோம்.
• அமைச்சர் ரவுப் ஹக்கீம் அரசுக்கு எதிராக ஜெனிவாவுக்கு அனுப்பிய 50 பக்க அறிக்கையில் சம்பிக்க ரணவக்க “அல் கைதா” பற்றி நூலை எழுதியது குற்றமாக காட்டியிருந்தார். இதன் மூலம் அவரும் அல் கைதாவுக்கு ஆதவளிக்கும் ஒருவர் என்று நிரூபணமாகிறது. ஹக்கீம் மீதான விசாரணை மேற்கொள்ளப்படவேண்டும்.
• அல் கைதா தலைவன் பின் லாடனுக்கு சூரா சபை ஆலோசனை வழங்கி வந்திருக்கிறது. இலங்கையில் உருவாக்கப்பட்டுள்ள சூரா சபையின் உருவாக்கம் குறித்தும் அதன் நிதிமூலம் குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்.
• கனடாவில் ஹலால் சான்றிதழ் வழங்கும் “கனேடிய முஸ்லிம் சங்கம்” அல்கைதாவுக்கு நிதிவழங்கி வந்துள்ளது. இங்கும் அத்தகைய ஹலால் சான்றிதழ் வழங்கும் நிறுவனம் குறித்து விசாரிக்கப்படவேண்டும்.
• நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் தரும் வகையில் “முஸ்லிம் வலயம்” உருவாக்கும் நோக்கில் மேற்கொள்ளப்படுபவை குறித்து ஆராயப்படவேண்டும். ரிசாத் பதியுதீன் அரேபிய நாட்டு அரச சார்பற்ற நிறுவனங்களுடன் செய்துகொண்ட ஒப்பந்தங்களுக்கூடாக மேற்கொள்ளப்பட்ட குடியேற்ற நடவடிக்கைகளின் நிதிமூலம் ஆராயப்படவேண்டும். குறிப்பாக இந்த முஸ்லிம் வலயம் எதிர்காலத்தில் அல்கைதாவின் பயன்பாட்டுக்கான சாத்தியங்கள் குறித்து தேடப்படவேண்டும்.
• மத்ரசா என்கிற பெயரில் இஸ்லாமிய கல்வி நிறுவனங்கள் பாகிஸ்தானின் இஸ்லாமிய அடிப்படைவாத சக்திகளின் தேவைகளை நிறைவேற்றி வந்துள்ளன. இலங்கையில் கல்வி அமைச்சின் கட்டுப்பாடின்றி மேற்கொள்ளப்படும் இவற்றை ஆராய வேண்டும்.
• முகத்தை மூடுகின்ற உடையணிந்து பயங்கரவாத ஆயுதங்கள், குண்டுகளை காவித்திரிய வாய்ப்புள்ள அந்த உடைகளை பகிரங்க இடங்களில் அணிவதை தடை செய்தல் வேண்டும்.
இலங்கையில் மேற்கொள்ளப்படும் போதைவஸ்து கடத்தல், விற்பனைக்குப் பின்னால் அல் கைதா போன்ற பயங்கரவாதிகளுக்கு தொடர்புண்டா என்பதை ஆராய வேண்டும்.(சிங்களத்தில் வெளியான பொதுபல சேனாவின் அறிக்கை)
பயங்கரவாதம் நமது நாட்டில் புற்று நோயாக பரவுவதற்கு முன்னர் அதனை அடையாளம் கண்டு நாட்டு மக்களை காப்பதற்காக மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணிகளில் அரசுக்கு பொதுபல சேனா ஒத்துழைப்பு நல்கும்.”
இந்த அறிக்கை பல பத்திரிகைகளிலும், இணையத்தளங்களிலும் வெளியாகியிருந்தன. பொதுபல சேனா முஸ்லிம்களுக்கு எதிராக சிங்கள மக்கள் மத்தியில் மேகொண்டு வரும் விஷப் பிரசாரங்களின் தொடர்ச்சியே இது. ஏற்கெனவே, முஸ்லிம்களின் சனத்தொகை செயற்கையாக அதிகரிப்பதாகவும், சிங்கள மக்களை மலட்டுத்தனமாக்கும் சதி நிகழ்வதாகவும், மாடுகளை வெட்டுவதாகவும், பள்ளிவாசல்கள் அதிகரிப்பதாகவும், ஹலால் சான்றிதழ் நிறுத்தப்பட வேண்டும் என்றும், முஸ்லிம் பெண்கள் புர்கா அணிவதை தடை செய்ய வேண்டும் என்றும் தொடர் பிரசாரங்களை மேற்கொண்டு வந்துள்ளது. இந்த வெறுப்புணர்ச்சியை (Islamofobia) மேலும் அதிகரிப்பதற்கு சாதகமாக தற்போது மத்திய கிழக்கு மற்றும் அரபு நாடுகளில் இஸ்லாத்தின் பேரால் நடத்தப்பட்டு வரும் மனித விரோத செயல்கள் ஆகியுள்ளன.
முஸ்லிம் நிருவனங்களை சர்வதேச பயங்கரவாதத்துடன் தொடர்புறுத்தியும், “வஹாபிசம்” பற்றிய பீதியை கிளப்பியும் மேற்கொள்ளப்படும் பிரசாரங்கள் கடந்த காலங்களை விட இப்போது அதிகரித்து வருகின்றன. கடந்த ஒரு நூற்றாண்டு கால முஸ்லிம் விரோத போக்கின் ஆரம்பம் வர்த்தக மோதல்களில் இருந்து தொடங்கினாலும் கூட, காலப்போக்கில் அது மத சகிப்பின்மையால் வளர்த்தெடுக்கப்பட்டுள்ளது. கூடவே சிங்கள பௌத்த தூய்மை வாதம், சிங்கள பௌத்த ராஜ்ஜிய உருவாக்க சித்தாந்தம் என்பவற்றால் பலப்படுத்தப்பட்டுள்ளது. தமிழர்களுக்கு எதிரான சிங்கள பௌத்த வெறித்தனம் போரின் பின்னர் முஸ்லிம்களின் பக்கம் திரும்பி மையம் கொண்டுள்ளது. முஸ்லிம்களுக்கு எதிரான புனைவுகளும், ஐதீகங்களும், மாயைகளும் நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது.
பொதுபல சேனாவின் பிரச்சார இயந்திரத்தை குறைத்து மதிப்பிட்டு விட முடியாது. ஆயிரக்கணக்கான சமூக ஊடக தளங்களை அவர்களின் ஆதரவாளர்களைக் கொண்டு நடத்தி வருகிறார்கள். தமது பிரசாரங்களை நாளாந்தம் வேகமாக பரப்பி வருவதுடன், பல விவாதங்களில் புகுந்து தமது எதிரிகளை மோசமாக தாக்குகின்றனர். அவர்களின் பலத்துக்கு முன்னால் தாக்கு பிடிக்க முடியாமல் பலர் விட்டுவிட்டு ஓடிவிடுகிறார்கள். இறுதியில் பெரும்பாலான இடங்களில் இவர்களின் கருத்தே ஆதிக்கம் செலுத்தும் நிலைமை உருக்கப்பட்டுவிடுவதை காணக் கூடியதாக இருக்கிறது. எனவே பேரினவாத சித்தாந்தம் நிறுவனமயப்பட நிறுவனமயப்பட இனங்களுக்கு இடையிலான இடைவெளியும் பெருகி ஒரு சிறிய தீப்பொறிக்காகக் காத்திருகிறது ஒரு தீக்காடு.
மீண்டும் பாசிச முகத்துடன் களமிறங்கியிருக்கும் பொதுபல சேனாவின் புதிய வியூகம் முஸ்லிம்களை இலக்கு வைத்து கட்டமைக்கப்பட்டு வருகிறது தற்காப்பு நிலையிலிருந்து அதனை பொறுமையுடன் எதிர்கொண்டு வரும் மக்களின் “எல்லை வரம்பு” உரசிப் பார்க்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது. உரிய நடவடிக்கையை உரிய காலத்தில் எடுக்காது போனால் விபரீதங்கள் மோசமாக இருக்கும் என்று வரலாற்றுப் பாடங்கள் சொல்கின்றன.
இன மத குரோதங்களை வெளியிடும் சக்திகளின் மீது இனி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சில வாரங்களுக்கு முன்னர் பொலிஸ் பேச்சாளர் பகிரங்கமாக அறிவித்திருந்த போதும் ஞானசார தேரர் போன்றோர் பகிரங்கமாக பொலிசாரை சவாலிடும் வகையில் இனக்குரோத கருத்துக்களை தொடர்ந்த வண்ணம் உள்ளனர். உரிய சட்ட நடவடிக்கையின் மூலம் மட்டுமே இந்த போக்கை ஓரளவு கட்டுக்குள் கொண்டு வர முடியும். பூனைக்கு மணி கட்டுவது யார்.
ஏனைய அணிகள்
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை மீள உயிர்பிப்பதில் முன்னிலை வகிக்கும் விமல் வீரவங்ச, தினேஸ் குணவர்த்தன, உதய கம்மன்பில போன்றோருக்கும் இன்று எஞ்சியிருப்பது இனவாதமே. “விடுதலைபுலி”, மற்றும் “டயஸ்போரா” பீதியை கிளப்பி அரசியல் லாபமடைய முயல்பவர்கள் அவர்கள். ஜனாதிபதித் தேர்தலில் மகிந்தவுக்கு கிடைத்த வாக்குகள் சிங்கள பௌத்த வாக்குகள் என்றும் அவற்றை தக்கவைத்து கொள்வதிலேயே தமது அரசியல் வெற்றி தங்கியிருப்பதாக நம்புபவர்கள் அவர்கள். போதாததற்கு தமக்கு கிடைக்காமல் போன எஞ்சிய சிங்கள பௌத்த வாக்குகளை கைப்பற்றுவதே எதிர்வரும் தேர்தலில் அவர்களின் இலக்காகவும் அமையும். தமிழ்-முஸ்லிம் வாக்குகளுக்காக சிரத்தைகொள்வதில் அர்த்தமில்லை என்பதும் அவர்களுக்கு நிச்சயமாகத் தெரியும். எனவே அவர்கள் புலிப்பீதியை கிளப்ப நிச்சயம் தற்போதைய மைத்திரிபால அரசின் மீது அவதூறுகளை தொகுக்கவேண்டும். அந்த வரிசையில் அவர்கள் வடக்கில் அபிவிருத்தி வேலைகளுக்கு முட்டுக்கட்டை போட்டுக்கொண்டு வருகிறார்கள். மாகாணசபை ஆளுநர் மாற்றத்தைக் கூட கடுமையாக விமர்சித்தார்கள். வடக்கில் இராணுவக் குறைப்பு, உயர் பாதுகாப்பு வலய குறைப்பு, முகாம்களின் குறைப்பு, நிலங்களை மீள கையளிப்பது போன்ற பேச்சுக்களை கடுமையாக எதிர்த்து வருகிறார்கள். கூடவே 13வது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவதையும் எதிர்க்கிறார்கள்.
இந்த நிலையில் வடக்கு மாகாண சபையில் 11ஆம் திகதி “தமிழர் மீது நிகழ்த்தப்பட்டது இனஅழிப்பே” என்பதை வலியுறுத்தி, வடக்கு மாகாணசபையில் கொண்டுவரப்பட்ட தீர்மானமும் அது ஏகமானதாக நிறைவேற்றப்பட்டதும் தெற்கு சிங்கள பேரினவாதத் தரப்புக்கு பெரும் அரசியல் லாபத்தைத் தந்திருக்கிறது. விமல் அணி உட்பட அனைத்து பேரனவாத சக்திகளும் இதனை பெருமளவு பயன்படுத்த வாய்ப்புண்டு. புலிப்பீதியை கிளப்பி விட அவர்களுக்கு வழிதிறந்துவிட்டுள்ளது. டயஸ்போரா சதி, என்.ஜி.ஓ சதி, மேற்கின் சதி என்றும் தேசபக்தர்களை ஜெனீவாவில் காவு கொடுக்கபோகிறார்கள் என்றும், அரசு அதற்கு உடந்தை என்றும் புதிய அரசாங்கத்துக்கு எதிராக எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தல் பிரசாரத்துக்காக பாவிக்க வாய்ப்புண்டு. அவர்களிடம் எஞ்சியுள்ள மிகப் பெரும் ஆயுதம் அதுவே. வட மாகாண சபைத் தீர்மானம் அந்த வகையில் அரசாங்கத்தை இக்கட்டில் மாட்டிவிட்டது என்றே அரச ஆதரவு சக்திகள் புலம்பி வருகிறார்கள். வரப்போகும் பாராளுமன்றத் தேர்தலில் இது தம்மை பாதிக்கும் என்றும் நம்புகிறது அரச தரப்பு. ஆக, மகிந்த ஆதரவு அணி கையிலெடுத்திருக்கிற இனவாத பிரச்சாரம் தமிழர்களுக்கு எதிரான அரசியல் அழுத்தமாகவே நோக்க வேண்டியிருக்கிறது.
ஜாதிக ஹெல உறுமயவின் “சிங்கள பௌத்த தனத்தின்” மீது ஏனைய சிங்கள பௌத்த சக்திகள் சவாலிடத் தொடங்கியிருக்கிறார்கள். மத்தியில் சிங்கள அரசுடன் இணக்க அரசியல் செய்வது குறித்து எப்படி தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மீது விமர்சனங்கள் முன்வைக்கப்படுகிறதோ. அதே போன்ற கண்டனங்கள் ஜாதிக ஹெல உறுமயவின் “இணக்க அரசியல்” மீதும் கடும் சிங்கள பௌத்த போக்காளர்களால் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
பெரும்போக்கு மைய அரசியலில் நாம் அசட்டையாக இருக்கும் விடயம் பேரினவாதத்தின் பாத்திரம், இருப்பு, போக்கு, திசைவழி, மூலோபாயம், தந்திரோபாயம் பற்றியது. இலங்கையின் இனத்துவ அரசியலை தீர்மானிப்பதில் இவற்றின் வகிபாகம் உறுதியானது. பலமானது. சிங்கள சிவில் சமூகத்தை தமது சித்தாந்த கட்டுக்குள் வைத்திருப்பதில் கணிசமான பத்திரத்தை ஆற்றி வருபவை. அரசியல் நிகழ்ச்சி நிரலில் இவற்றை தவிர்த்து விட்டு கடந்து போகமுடியாது.
நன்றி - தினக்குரல் 15.02.2015
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...