Headlines News :
முகப்பு » » கூலித் தமிழ் (கட்டுரைகள்) : 'கசக்கும் உண்மைகள்' - ஆ. சிவசுப்பிரமணியன்

கூலித் தமிழ் (கட்டுரைகள்) : 'கசக்கும் உண்மைகள்' - ஆ. சிவசுப்பிரமணியன்


மு. நித்தியானந்தன்
வெளியீடு: 
க்ரியா 
புதிய எண்: 2, பழைய எண்: 25, 
17ஆவது கிழக்குத் தெரு,
காமராஜர் நகர், திருவான்மியூர்,
சென்னை & 600 041.
பக்கம்: 179 விலை: 400

இலங்கையின் மத்தியப் பகுதியான மலைநாட்டுப் பகுதியில் வாழும் தமிழர்கள் ‘மலையகத் தமிழர்கள்’ என்ற பெயரைத் தாங்கி நிற்பவர்கள். இவர்களது பூர்வீகம் இந்தியாதான். இதன் காரணமாகவே இவ்விரு நாடுகளின் அனைத்து அரசியல் இயக்கங்களின் (தமிழ்த் தேசிய இயக்கங்கள் உட்பட) புறக்கணிப்புக்கு ஆளானவர்கள்.

ஆங்கிலக் காலனிய ஆட்சியின் வேளாண் கொள்கையினாலும் வறட்சியினாலும் கடன்பிடிக்குள்ளும் நிலவுடைமைக் கொடுமைக்குள்ளும் வறுமைக்குள்ளும் சிக்கித்தவித்த தமிழ்க் குடியானவர்களின் புகலிடமாக ஆங்கிலக் காலனியாட்சிக் காலத்தில் இம்மலைப் பகுதிகள் அமைந்தன. சாதிமீறித் திருமணம் செய்துகொண்டோர், காவல்துறையின் தேடுதல் வேட்டைக்கு ஆட்பட்டோர் ஆகியோரின் அடைக்கலப் பூமியாகவும் இப்பகுதி அமைந்தது.

இலங்கையின் மலையகப் பகுதிகளில் ஆங்கிலேயர்கள் காஃபி, தேயிலை, இரப்பர் தோட்டங்களை உருவாக்கத் தொடங்கினர். காட்டை அழித்துத் தோட்டங்களை உருவாக்கவும், இவற்றில் தேயிலை, காஃபி, இரப்பர் ஆகிய பணப் பயிர்களைப் பயிரிடவும் அவற்றைப் பராமரிக்கவும் அதிக அளவிலான மனித உழைப்பு தேவைப்பட்டது. இதை நிறைவுசெய்யும் வகையில், தமிழ்நாட்டின் கிராமப்புறக் குடியானவர்களை, வளமான வாழ்வளிப்பதாகக் கூறிப் பொய்யான வாக்குறுதிகளை வழங்கி, ‘ஒப்பந்தக் கூலி’ என்ற பெயரில் அழைத்து வந்தனர். இது ஒரு வகையான அடிமைமுறைதான்.

இதற்குள் சிக்கிய எந்தமிழர் தம் அடையாளம் இழந்து, உரிமையிழந்து, ‘கூலி’ என்ற பெயரைப் பெற்றனர். இவர்களுக்கு வழங்கப்பட்ட ஊதியம் ‘கூலி’ என்றும், இவர்களது குடியிருப்பு ‘கூலி லயன்’ என்றும் சுட்டப்படலாயிற்று. இம்மக்களிடம் கிறித்தவத்தைப் பரப்ப உருவான கிறித்தவ மறைத்தளம்கூட தன்னைக் கூலி மிஷன் என்றே அடையாளப்படுத்திக் கொண்டது. யாழ்ப்பாணத் தமிழர்கள் தம் பங்கிற்கு ‘தோட்டக்காட்டான்’, ‘பறைத் தமிழன்’ என்று பெயரிட்டு மகிழ்ந்தனர். வாதாபிகொண்டானையும் கங்கைகொண்டானையும் கடாரம் கொண்டானையும் அறிமுகப்படுத்திய நம் வரலாற்றாசிரியர்கள் இம் மக்களைக் குறித்த பதிவு எதையும் நம்மிடம் காட்டவில்லை.

தோட்டத்துரைகளின் நாட்குறிப்புகளும், ஆங்கில அரசின் ஆவணங்களும் மட்டுமே இம்மக்களின் வரலாற்றாவணமாக விளங்கிய நிலையில் அவர்களின் அவல வாழ்க்கை குறித்த பதிவுகளை அம்மக்களின் வாய்மொழிப் பாடல்களில் இருந்து வெளிப்படுத்தும் பணியினை அறிஞர்கள் சிலர் மேற்கொண்டனர். சி.வி. வேலுப்பிள்ளை, சாரல்நாடன், நவஜோதி போன்றோர் வெளியிட்ட நாட்டார் பாடல்கள் இம்மக்களின் அவல வாழ்வை நாம் அறியச் செய்தன. ‘துன்பக்கேணி’ என்ற தலைப்பிலான நீண்ட சிறுகதையின்

வாயிலாக புதுமைப்பித்தன் மலையகத் தமிழரின் அவல வாழ்வைத் தமிழ்நாட்டினருக்கு அறிமுகம் செய்வித்தார். தமிழ்நாட்டின் நடேசைய்யர், சில்வியா பெடராம், பாசித்தியாம்பிள்ளை என்ற இலங்கை வரலாற்றறிஞர்களும் இம்முயற்சியில் ஈடுபட்டவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்.

தற்போது ஏழுகட்டுரைகளின் தொகுப்பாக வெளிவந்துள்ள மு. நித்தியானந்தன் எழுதிய ‘கூலித்தமிழ்’ என்ற நூல் மேற்கூறிய வரிசையில் குறிப்பிடத்தக்க ஒரு நூலாக இணைந்துள்ளது. இந்நூலில் இடம் பெற்றுள்ள முதல் மூன்று கட்டுரைகளும் காலனிய ஆட்சியின்போது வெளியான நான்கு நூல்களை மையமாகக்கொண்டு மலைத் தோட்டத் தொழிலாளர்களின் அவலவாழ்வை நாம் அறியச் செய்கின்றன.

காஃபி தோட்டத்தில் கண்டக்டர் என்ற பதவி வகித்த ஆபிரகாம் ஜோசப் என்பவர் 1869ஆம் ஆண்டில் ‘கோப்பி கிருஷிக்கும்மி’ என்ற பெயரில் நூல் ஒன்றை வெளியிட்டுள்ளார். காஃபி பயிரிடும் தொழில்நுட்பத்தைப் போதிப்பது என்பதைக் காட்டிலும், தோட்ட முதலாளிகளான வெள்ளைத் துரைகளைப் போற்றி வணங்குவதையே அடிப்படையான நோக்கமாக இந்நூல் கொண்டுள்ளது என்ற உண்மையை நூலின் ஆங்கில முன்னுரை உணர்த்தி நிற்கிறது. இம்முன்னுரையை ஆசிரியர் தமிழ் மொழியில் பெயர்த்துத் தந்துள்ளார். அதில் இருந்து சில பகுதிகள் வருமாறு:

“மாண்புமிகு கனவான்கள், கோப்பித் தோட்டத் துரைமார் சங்கத் தலைவர், அங்கத்தவர்கள் மற்றும் சகல கோப்பித் தோட்ட மனேஜர்கள் அனைவருக்கும் இந்நூல் சமர்ப்பணம்.’ ‘கனவான்களே! இதன் கீழே கையொப்பமிட்டிருப்பவன், இந்நூலை உங்கள் சன்னிதானத்தின் முன் சமர்ப்பணம் செய்வதற்கு இச்சந்தர்ப்பத்தினைப் பாவித்துக் கொள்வதற்கான வாய்ப்பை நல்குமாறு இறைஞ்சி நிற்கிறான். உடல் உழைப்பில் ஈடுபடும்போதும் ஓய்வின்போதும் அலுப்பை மறந்து உற்சாகம் பெற கோப்பித் தோட்டத் தொழிலாளிகள் தமக்குள் பாடித்திரியும் பல்வேறு விதமான ஆட்சேபகரமான பாடல்களுக்கு (Objectionable songs) புதிய மாற்றாக, நடைமுறையில் பிரயோசனமானதும் தார்மீகரீதியில் பூரணத்துவமும் கொண்ட மாற்றினைக் காண வேண்டும் என்பது அவனது நீண்டகால ஆவலாக இருந்தது. இம்முன்னுரையின் இறுதிப்பகுதி உங்களின் விசுவாசம் மிகுந்த ஊழியனாக இருக்க விரும்பும் ஆ.ஜோசப்” என்று முடிவடைகிறது.

நூலின் ஆங்கில முன்னுரையில் ஆட்சேபகரமான பாடல்கள் என்று ஜோசப் குறிப்பிடுவது, மலைத் தோட்டத் தொழிலாளர்களிடம் உருவாகி வழங்கிவந்த நாட்டார் பாடல்களைத்தான் என்பது இந்நூலாசிரியரின் பொருத்தமான முடிவாக உள்ளது. தம் கருத்துக்கு வலுசேர்க்க மலையக நாட்டார் பாடல்கள் சிலவற்றை மேற்கோளாகக் காட்டியுள்ளார்.

‘கசக்கும் உண்மைகள்’ என்ற உட்தலைப்பில் தோட்டத் தொழிலாளர்கள்மீது அரசின் துணையுடன் நிகழ்த்தப்பட்ட வன்முறைகளும் தோட்டத் தொழிலாளர்களின் அவல வாழ்க்கையும் இடம்பெற்றுள்ளன.

இக்கட்டுரையில் இடம்பெறும் முக்கிய செய்தி மலைத் தோட்டப் பகுதியில் செயல்பட்ட ‘தமிழ்க் கூலி மிஷன்’ என்ற பெயரிலான கிறித்தவ மறைபரப்பல் அமைப்பின் செயல்பாடுகள் குறித்ததாகும். “கிறிஸ்தவ மிஷனரிகள் தமது மதம் பரப்பும் பணியில் பிறசமயங்களைத் தாக்கி அவர்களின் விரோதத்தை வளர்த்துச் செயல்பட்ட ஆரம்பகாலப் போக்கையே கோப்பி கிருஷிக் கும்மியும் பின்பற்றிச் செல்கிறது” என்று கணிக்கும் ஆசிரியர் இது தொடர்பான எடுத்துக்காட்டுகள் சிலவற்றை இக்கும்மி நூலில் இருந்தும், ஏனைய நூல்களில் இருந்தும் கையாளுகிறார்.

வேலைத் தளத்தில் மரம் விழுந்து இறந்துபோன முனியாண்டி என்பவன் முனியாண்டி என்ற தெய்வ மாக்கப்பட்டதாக இக்கும்மிப்பாடல் தெரிவிக்கிறது. சங்ககால நடுகல் வழிபாட்டில் இருந்து, இறந்தோரை வணங்கும் மரபு தமிழர்களிடம் தொடர்ந்து நிலைபெற்ற ஒன்றாகும். கொலையுண்டும் விபத்தில் இறந்துபோனவர்களுமான மனிதர்களைத் தெய்வமாக்கி வணங்கும் தமிழக நாட்டார் சமயமரபு இங்கு பகடி செய்யப்படுகிறது. அத்துடன் இத் தெய்வவழிபாடுகளைக் கைவிட்டு ‘காதலாய் வேதம் வாசியுங்கள், காட்டிடும் போதனை கேட்டிடுங்க’ என்று சமயப் பரப்புரை செய்கிறது.

டபிள்யூ நைட்டன் என்பவர் எழுதிய ‘இலங்கையின் காட்டு வாழ்க்கை’ என்ற நூலில் இருந்து ஆசிரியர் காட்டும் மேற்கொள்கள், தோட்டங்களை நோக்கிய காட்டு வழிப்பயணத்தின்போது எதிர்கொண்ட கொடூரங்களை நாம் அறியச் செய்கின்றன.

‘கோப்பி கிருஷிக்கும்மி’ எழுதி மூன்றாண்டுகள் கழித்து 1872இல் ஆபிரஹாம் ஜோசப் ‘The Plantest Colloquial Tamil Guide’ என்ற நூலை வெளியிட்டார்.

‘ஜோசப்பின் ஆங்கில, தமிழ்ப்புலமையை மட்டுமல்ல, இலங்கையின் கோப்பியுகத்தின் தோட்ட துரைமாரது வாழ்க்கையின் ஒரு குறுக்கு வெட்டுத் தோற்றத்தையும் நமக்குத் தருகிறது என்று இந்நூலை மதிப்பிடும் ஆசிரியர், இந்நூல் ‘இலங்கையின் தோட்டத் துரைமார்களுக்காகவும் ஆங்கில வர்த்தகர்களுக்காகவுமே எழுதப்பட்டிருக்கிறது’ என்ற உண்மையையும் குறிப்பிடுகிறார். இவை எல்லாவற்றிற்கும் மேலாக ‘இந்நூலின் தமிழ்ப் போதனையைவிட கோப்பிக் காலத் துரைமார்களதும் அவர்களது நாளாந்த சுவராஷ்யமான விபரங்களைத் தருவதில் ஆ. ஜோசப்பின் இந்நூல் கோப்பிகால மலையகத் தமிழரின் வாழ்க்கைக் கோலத்தைச் சித்திரிக்கும் முக்கிய ஆவண அந்தஸ்தைப் பெறுகிறது’ என்றும், கோப்பித் தோட்டங்களில் இடம்பெறும் தொழில் நடவடிக்கைகளைவிட, தோட்டத் துரையைச் சார்ந்து இடம்பெறும் நாளார்ந்த நிகழ்வுகளும், தொழிலாளரின் எதிர்வினைகளும், துரைமாரின் கூர்மையான அவதானிப்புகளும் சேர்ந்து, ஜோசப்பின் இந்த நூலை சுவாராஸ்யமான வாசிப்பிற்குரியதாக்குகின்றன’ என்றும் மிகச் சரியாக அவதானித்துள்ள நூலாசிரியர், தம் அவதானிப்பிற்கு வலுசேர்க்கும்வகையில் நூலில் இருந்து சில உரையாடல் பகுதிகளை மேற்கோளாகக் காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தோட்ட உரிமையாளர்களான வெள்ளையர்கள், தொழிலாளர்களுடன்
உரையாட உதவும்வகையில் தமிழ் கற்றுத்தரும் வகுப்புகள் ஸ்காட்லாந்தின் துறைமுக நகரமான ‘அபார்டின்’ நகரில் ஆரம்பிக்கப்பட்டன (பக்கம் 80 - 81). அத்துடன் தோட்டத் துரைமார்கள் தமிழ் படிப்பதற்கு அல்லது கூலிகளின் தமிழைப் புரிந்துகொள்வதற்கு ‘Inge vaa’, ‘Cooly tamil’ என்ற இரு முக்கிய நூல்கள் பெருமளவில் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன என்று குறிப்பிடும் ஆசிரியர் (பக்கம் 82) இவ்விரு நூல்களையும் ‘துரைத்தன அடக்குமுறையும் கூலித்தமிழும்’ என்ற தலைப்பிலான கட்டுரையில் அறிமுகம் செய்வதுடன் ஆய்வையும் நிகழ்த்தியுள்ளார்.

கட்டுரையின் தொடக்கத்தில், தொழிலாளரின் அவலநிலை, தொழிற் சட்டங்கள் குறித்தும் தொழிலாளர்கள் மீதான வன்முறைத் தண்டனைகள் (சரீர தண்டனை) குறித்தும் ஆசிரியர் கூறும் செய்திகள் அதிர்ச்சியூட்டுவன (பக்கம் 68 - 78). இவற்றை வெளிப்படுத்த எழுத்தாவணங்களுடன் நாட்டார் பாடல்களையும் பயன்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இக்கட்டுரையில் அவர் ஆராயும் இருநூல்களையும் ‘கூலித் தமிழ்ப் போதினிகள்’ என்று குறிப்பிடும் ஆசிரியர் இவற்றின் அமைப்பு குறித்தும் பேசுகிறார். “இந்நூல் கள் முழுவதும் ஆங்கிலத்திலேயே அமைந்தன. தமிழ் எழுத்துகள் எதுவுமே காணப்படமாட்டாது. முதலில் ஆங்கில வாக்கியத்தை எழுதி அதனை எவ்வாறு தொழிலாளர்கள் பேசுவார்களோ அந்தப் பேச்சு மொழியை அப்படியே ஆங்கிலத்தில் எழுதி வைத்துப் பேசுவதற்குத் துணைபுரிவதாகவே இவை அமைந்துள்ளன.

உதாரணம் :

Send her to the line - Layathukku Poha Sollu 
(லையனுக்கு போகச் சொல்லு)
Silent - Pesamal iru, Vay Modu (பேசாமல் இரு, வாய் மூடு)”

இந்நூல்கள் குறித்த தம் ஆய்வின் நோக்கம் மொழி சார்ந்த ஒன்றல்ல என்பதையும் “தோட்டத் துரைத்தனத்தின் ஒடுக்குமுறை, தொழிலாளர்களின் எதிர்ப்புணர்வு ஆகியவற்றை எவ்வளவு தூரம் வெளிப்படுத்துகின்றன” என்பதே தம் ஆய்வின் நோக்கம் என்றும் தெளிவாக வரையறுத்துக் கொண்டுள்ளார் ஆசிரியர்.

‘இங்கே வா’ என்ற நூலைக் குறித்து, “ஒரு கூலிக்கு ஆணையிடும் தன்மையை இந்நூலின் தலைப்பு பறையாற்றுகிறது” என்று அறிமுகம் செய்துவிட்டு நூலில் இடம்பெற்றுள்ள வாக்கியங்கள், ‘தப்பு அடி’, ‘வாய்பொத்து’, ‘பேசாமல் இரு’ என ஏவல் வாக்கியங்களாக அமைந்துள்ளதைச் சுட்டிக் காட்டுகிறார். இந்நூலின் உள்ளடக்கம் குறித்து ஆராயும் ஆசிரியர் (பக்கம் 84 - 89) உரையாடல் வழியாக அறியலாகும் தொழிலாளரின் அவலநிலையையும் எதிர்க்குரலையும் வெளிப்படுத்துகிறார்.

‘பேசாமல் இரு’, ‘வாய்மூடு’, ‘வாய்பொத்து’ என்று துரைமாருக்கு இந்தத் தமிழ்போதினி நிறைய உதவுகிறது என்று இந்நூலின் பயன்பாட்டை எள்ளல் தன்மையுடன் குறிப்பிடும் ஆசிரியர், யாழ்ப்பாணப் பேச்சு வழக்கு இந்நூலில் இடம்பெற்றுள்ளதையும் எடுத்துரைக்கிறார்.

1915ஆம் ஆண்டில் வெளியான ‘கூலித் தமிழ்’ என்ற நூலின் ஆசிரியரான டபிள்யூ.ஜி.பி. வெல்ஸ் தம் நூலின் ஆங்கில முன்னுரையில் ‘கூலிகளின் இலக்கணமில்லாத மொழியைக் கற்றுக் கொள்ளவும், கூலி சொல்வதைப் புரிந்துகொள்ளவும், தான் சொல்வதைக் கூலி புரிந்துகொள்ளவும் உதவக்கூடிய ஒரு நூலை சின்னத் துரைமாரின் கரங்களுக்கு வழங்குவதே எனது ஒரே நோக்கம், என்று குறிப்பிட்டுள்ளார் (பக்கம் 89). இந்நோக்கத்திற்கு அப்பால் ‘நூலில் உறைந்திருக்கும் துரைத்தன ஒடுக்குமுறையின் சொல்லாடல் பற்றியே’ இந்நூலாசிரியர் கவனம் செலுத்தியுள்ளார். இத்தமிழ்ப்போதினிகள் குறித்து துரைமார்கள் கட்டளை பிறப்பிப்பார்கள், அதனைத் தொழிலாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இதுவே துரைமார் தயாரித்த தமிழ்போதினிகளின் அடிநாதமாக இருந்தது என்று மதிப்பிடுகிறார் நூலாசிரியர். தம் மதிப்பீட்டை நிறுவும்வகையில் நூலில் இருந்து சில பகுதிகளை எடுத்துக்காட்டாகக் காட்டியுள்ளார்.

இந்திய விடுதலைக்கு முன்னர் இக் கூலித்தமிழ்ப் புத்தகத்தைப் படித்தறிந்த ஏ.கே. செட்டியார் இந்நூல் குறித்து, “கூலித்தமிழ்ப் புத்தகம் தோட்டக்காரத் துரைகளுக்குக் கூலிகள் பேசும் தமிழை மட்டும் போதிக்கவில்லை, கூலிகளிடம் நடந்துகொள்ள வேண்டிய முறையையும் போதிக்கிறது” என்று பதிவு செய்துள்ளமையும் இங்கு ஒப்பு நோக்கத்தக்கது. இத்தமிழ் போதினிகளில் தொழிலாளர் மீதான துரைமார்களின் சுரண்டலையும் ஒடுக்குமுறைகளையும் மட்டுமின்றி தொழிலாளர்களின் எதிர்ப்புணர்வையும் பக்கத்திற்குப் பக்கம் நாம் பார்க்க முடிகிறது என்ற தமது அவதானிப்பை முன்வைக்கும் ஆசிரியர், தோட்டத் தொழிலாளர்களுக்காக நடேசையர் வெளியிட்ட ‘தொழிலாளர் சட்ட புஸ்தகம்’ என்ற நூல் ஏற்படுத்திய விழிப்புணர்வையும் குறிப்பிட்டுள்ளார். துரைமார்களுக்கான கூலிபோதினிகளுக்கு மாறாக, தோட்டத் தொழிலாளர்கள் துரைமார்களுக்கு என்ன சொல்ல வேண்டும் என்பதை நடேசையரின் நூல் உணர்த்தி நின்றது.

ஆலை அதிபராகவும் கல்வி நிறுவனங்களின் நிறுவனராகவும், தமிழ்நாடு என்ற பெயரிலான நாளிதழை நிறுவி நடத்தியவராகவும் தமிழ்நாட்டில் அறிமுகமாகியுள்ள ஆளுமையாளர் கருமுத்து தியாகராசர், மலையகத் தமிழரின் அவலம் போக்க அவர் மேற்கொண்ட முயற்சிகளை நான்காவது கட்டுரை ஆராய்கிறது. தமிழ்நாட்டில் இதுவரை பரவலாக அறியப்படாத அவரது வாழ்வின் சிறப்பான மறுபக்கத்தை மிகத் துல்லியமாக இக்கட்டுரை ஆராய்கிறது.

இலங்கையின் தோட்டத் தொழிலாளர் நிலை குறித்து அவர் வெளியிட்ட குறுநூல்கள், தொழிலாளர் நலன் தொடர்பான ஆணையங்களின் முன்பாக அவர் அளித்த சாட்சியங்கள், அவர் அங்கம் வகித்த தொழிலாளர் நல அமைப்புகள் தொடர்பான பல செய்திகள் இக்கட்டுரையில் இடம் பெற்றுள்ளன.

மண்டபம் முகாமில் கூலிகள் எதிர்கொள்ளும் அவமானங்கள், விலங்குகளைப்போல் கப்பலின் மூன்றாம் வகுப்பில் அவர்கள் அடைத்துச் செல்லப்படும் கொடுமை, சேங்கொட்டையால் நெஞ்சில் சூடுபோட்டு அடையாளப்படுத்தப்பட்ட கொடுமை, அவர்களுக்கு வழங்கப்பட்ட தரக்குறைவான உணவு, அவர்கள் விற்பனைப் பொருளாக ஆக்கப்பட்ட அவலம், கைதிகள்போல் தோட்டங்களுக்குள்ளேயே வாழ வேண்டிய கட்டாயம், உரிய ஊதியமின்மை, தோட்டத்தை விட்டுத் தப்பிச் சென்றோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படல், சிறைச்சாலையில் கடின வேலைக்கு உட்படுத்தப்படல், கங்காணிமார்கள் சவுக்கால் அடித்தல், உடல் நலக்குறைவால் வேலைக்குச் செல்லாதோருக்கு வாராந்திர அரிசியை நிறுத்திவைத்துப் பட்டினிபோடல், கொக்கிப்புழு நோயால் பாதிக்கப்படல், மருத்துவ வசதியின்மை எனப் பல்வேறு அநீதிகளுக்கு எதிராக இவர் குரல் கொடுத்துள்ளது, மலையகத் தொழிலாளரின் போராட்ட வரலாற்றில் தனி முக்கியத்துவம் வகிக்கிறது (பக்கம் 110)” என்று குறிப்பிடுகிறார்.

“இருண்ட மலைச் சிகரங்களுக்குள் - வனாந்தரப் பிரதேசத்தில் வீசியெறியப்பட்டு எவ்வித ஆதரவும் இல்லாத சூழலில் இந்தியத் தமிழர்கள் உழன்றபோது அவர்களின் ஈனநிலை கண்டு துயருற்று, கண்டனங்கள் எழுப்பிய முதல் பெருமகனாகக் கருமுத்து தியாகராசர் திகழ்கிறார்”. என்று கட்டுரையின் இறுதியில் இடம்பெற்றுள்ள மதிப்பீடு பொருத்தமானது என்பதற்கான சான்றுகள் இடம்பெற்றுள்ளன.

இறுதி மூன்று கட்டுரைகளும் மலையகத்தில் தோன்றிய, தொடக்கக் காலப் படைப்பிலக்கியங்கள் குறித்து ஆராய்கின்றன.

இலங்கையின் மலையகத் தமிழர் வரலாறானது ஆங்கிலக் காலனியத்தின் கொடூர முகத்தையும், சிங்கள அரசின் சிங்களப் பேரினவாதத்தையும், இந்திய அரசின் பொறுப்பற்ற தன்மையையும் உள்ளடக்கியது.

இம்மக்களை மையமாகக் கொண்ட ஆய்வென்பது இந்தியா - இலங்கை - இங்கிலாந்து என்ற மூன்று நாடுகளுக்குள்ளும் கிட்டும் தரவுகளைக் கொண்டு கட்டமைக்கப்பட வேண்டியதாகும். “தோள்கண்டார் தோளே கண்டார்” என்பதுபோல் தோட்டத்துரைகளின் எழுத்துப்பதிவுகளையும், காலனிய அரசின் ஆவணங்களையும் மட்டுமே சான்றாகக் கொண்டு எழுதமுடியாத ஒன்று. நமது மரபு சார்ந்த வரலாற்று வரைவில் சான்றுகளாகச் சுட்டப்படுவனவற்றை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு வரலாற்றை வரையும்போக்கிலிருந்து நம்மில் பலர் விடுபடவில்லை. எவற்றைத் தரவுகளாகக் கொள்வது என்பதில் பழைய மரபே ஆதிக்கம் செலுத்துகிறது.

ஆனால் இந்நூல் இப்பழைய போக்குகளில் இருந்து விடுபட்டுப் புதிதாக இயற்றப்பட்ட நவீனக் கும்மிப்பாடலையும், மொழி போதினிகளையும், வாய் மொழிப் பாடல்களையும் அடிப்படைச் சான்றுகளாகக் கொண்டு மலையகத் தொழிலாளர்களின் கடந்த கால வரலாற்றைக் கட்டமைக்கிறது. அதே நேரத்தில் ஆவணக் காப்பக ஆவணங்களைப் புறக்கணித்து விடவுமில்லை. இவ்விருவகைச் சான்றுகளையும் ஒன்றிணைக்கும் முயற்சியை வெற்றிகரமாகக் கையாண்டுள்ளது. இவ்வகையில் இந்நூல் ஒரு வழிகாட்டி யாக அமைகிறது.
நன்றி - காலச்சுவடு

915 இல் Wells எழுதிய Cooly Tamil முழுமையான நூல்
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates