Headlines News :
முகப்பு » » மனோஜின் பரிதாப மரணம்...! நீதியான விசாரணை கோரும் மக்கள் - சிவலிங்கம் சிவகுமாரன்

மனோஜின் பரிதாப மரணம்...! நீதியான விசாரணை கோரும் மக்கள் - சிவலிங்கம் சிவகுமாரன்


படங்கள்: க.கிருஷாந்தன்

தலவாக்கலை கிரேட் வெஸ்டர்ன், கல்கந்தவத்தை தோட்டத்தைச்சேர்ந்த மாரிமுத்து மனோஜ் என்ற இளைஞன் கொத்மலை நீர்த்தேக்கத்தில் குதித்து மரணமான சம்பவம் இப்பகுதி மக்களிடையே பதற்றத்தையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும் நடந்த சம்பவம் குறித்த நீதியான விசாரணை நடத்தப்படல் வேண்டும் என்றும் பொதுமக்கள் மற்றும் சிவில் அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த சனிக்கிழமை 3 ஆம் திகதி மாலை 3 மணியளவில் மேற்படி மனோஜிடம் பாபுல் எனப்படும் போதை தரும் வெற்றிலை இருப்பதாகவும் அது குறித்து விசாரிக்க வேண்டும் எனவும் கூறி அங்கு சிவில் உடையில் இருந்த பொலிஸார் இவரை பொலிஸ் நிலையத்திற் அழைத்துச்சென்றுள்ளனர். இதன் போது அவர்களிடமிருந்து தப்பி ஓடியுள்ள மனோஜ், தலவாக்கலை ரயில் நிலையத்திற்கு அருகாமையில் இருக்கும் கொத்மலை நீர்த்தேக்கத்தில் ரயில் பாலத்திலிருந்து குதித்துள்ளார்

சம்பவத்தையறிந்த பொதுமக்கள் அவ்விடத்தில் கூடியதோடு மேற்படி இளைஞனின் தோட்டப்பகுதியான கல்கந்தவத்தை, கிரேட் வெஸ்டர்ன் ஆகிய இடங்களிலிருந்தும் தொழிலாளர்கள் அவ்விடத்தில் குவிந்தனர். இச்சம்பவத்திற்கு காரணமான பொலிஸாரை கைது செய்யும்படியும் காணாமல் போன தமது தோட்ட இளைஞரை உடனடியாக கண்டு பிடித்துத்தரும்படியும் அவர்கள் அவ்விடத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இச்சந்தர்ப்பத்தில் அவ்விடத்திற்கு வருகை தந்த நுவரெலியா மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர், இரண்டு பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாகவும் இளைஞனின் சடலத்தை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு முன்பதாக மீட்டுத்தருவதாகவும் உறுதியளிக்கவே அங்கிருந்து அனைவரும் கலைந்து சென்றுள்ளனர்.

போக்குவரத்திற்கு தடை ஏற்படுத்தி ஆர்ப்பாட்டம்
இதேவேளை, மறுநாள் காலை அவ்விடத்தில் கூடிய தோட்ட இளைஞர்கள் மனோஜின் சடலம் மீட்கப்படுவதில் அசமந்தம் நிலவுவதாகவும், அவரை என்ன ஆதாரத்துடன் பொலிஸார் கைது செய்தனர் என்றும் கோரியும் தலவாக்கலை நகரில் ஆர்ப்பாட்டமொன்றை நடத்தினர். இதன் காரணமாக தலவாக்கலை – நுவரெலியா மார்க்கத்தில் இரண்டு மணித்தியாலங்கள் வரை போக்குவரத்து தடைபட்டது. அதன் பின்னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் குறித்த இளைஞன் தப்பியோடி நீர்த்தேக்கத்தில் குதித்த ரயில் பாலத்தில் ஒன்று திரண்டனர். இதனால் பதுளையிலிருந்து கொழும்பு நோக்கிச்சென்ற ரயிலும் பாலத்திலேயே தரித்து நிற்க வேண்டியதாயிற்று. இதனிடையே ரயில் மற்றும் பயணிகளின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு பொலிஸாரினதும் விசேட அதிரடிப் படையினரிதும் உத்தரவிற்கு ஏற்ப ரயில் மீண்டும் நானுஓயாவிற்கு திருப்பி அனுப்பப்பட்டது.

ஆர்ப்பாட்டக்காரர்களை கலைத்த பொலிஸார்
நீர்த்தேக்கத்தில் பாய்ந்த இளைஞனின் உடல் கிடைக்காத காரணத்தினால் கொதிப்படைந்த இளைஞர்கள் கோஷமிட்டு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடவே, கலகம் அடக்கும் பொலிஸார் அங்கு வரவழைக்கப்பட்டனர். இதனிடையே கலகம் அடக்கும் பொலிஸாருக்கும் இளைஞர்களுக்கும் முறுகல் நிலை ஏற்படவே கண்ணீர் புகை குண்டுகளை பயன்படுத்தி ஆர்ப்பாட்டத்தை கலைக்க பொலிஸார் தயாராகினர்.
இதனையடுத்து கோபமுற்ற ஆர்ப்பாட்டக்காரர்கள் கற்களை வீசிஎறிந்ததால் அவ்விடம் அல்லோலகல்லோலப்பட்டது. கலகம் அடக்கும் பொலிஸாரினாலும் விசேட அதிரடி படையினராலும் இவர்கள் விரட்டி கலைக்கப்பட்டனர்.

சடலம் மீட்பு
இந்நிலையில் படகுகள் தேடுதல் நடத்திய பொலிஸார் காணாமல் போன இளைஞரான மனோஜின் சடலத்தை ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணியளவில் மீட்டனர். அவ்விடத்தில் மீண்டும் பதற்றநிலை ஏற்படாதிருக்க பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டிருந்தது.

நுவரெலியா மாவட்ட நீதிமன்றின் மேலதிக நீதவான் திருமதி நளின் திலக்க ஹேரத் முன்னிலையில் விசாரணை களை பொலிஸார் முன்னெடுத்தனர். அவ்விடத்தில் சடலத்தை அடையாளம் காட்ட வந்த மனோஜின் தாயார் அழுது புலம்பியது அனைவரது மனைதையும் உருக்கியது. சடலத்தை பிரேத பரிசோதனைக்காக அனுப்பும்படி மேலதிக நீதவான் உத்தரவிட்டார்.

பொலிஸார் இடமாற்றம்; பிரதேச மக்கள் எதிர்ப்பு
மேற்படி சம்பவத்தோடு தொடர்புடைய இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களையும் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்திருப்பதாக நுவரெலியா மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்ததாக தலவாக்கலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார். ஆனால் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் நீதியான விசாரணைகள் இடம்பெற வேண்டுமென பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர். என்ன காரணத்திற்காக இளைஞனை இவர்கள் விசாரணைக்கு அழைத்துச்செல்ல வேண்டும் என்பது சந்தேகமாக உள்ளது.

கண்ணீர் புகைக்குண்டுகளைப் பயன்படுத்தவில்லை
தலவாக்கலையில் இடம்பெற்ற சம்பவத்தில் தாம் கண்ணீர் புகைக்குண்டுகளை பயன்படுத்தவில்லை என தலவாக்கலை பொலிஸ் நிலைய பொ றுப்பதிகாரி ஹெட்டியாராச்சி தெரிவித்தார். சம்பவ இடத்தில் ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்க நாம் நடவடிக்கை எடுத்திருந்தோம். கலகம் அடக்கும் பொலிஸாரும் விசேட அதிரடிப் படையினரும் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். கண்ணீர் புகைக்குண்டுகளை பயன்படுத்துவதற்கு ஆயத்தமாக இருந்தாலும் நாம் அதை பயன்படுத்த வில்லை என அவர் தெரிவித்தார்.

எனது மகன் எந்த பாவமும் அறியாதவர்
எனது மகன் மிகவும் சாந்தமானவர். யாருக்கும் கெடுதல் நினைக்காதவர். அவர் தலவாக்கலை நகருக்கு கோழிதீவணம் வாங்கவே சென்றார். ஆனால் அவரை அநியாயமாகக்கொன்று விட்டனர் என மனோஜின் தாயார் சம்பவ இடத்தில் அழுது புலம்பினார். இதே வேளை மனோஜின் உறவினர்கள் இவரைப்பற்றி கூறுகையில், அவர் தலைநகரில் பணியாற்றுகிறார். அவருக்கு எந்த கெட்டப்பழக்க வழக்கங்களும் இல்லை. பொலிஸாருக்கு பயந்துதான் இவர் ஓடியிருக்க வேண்டும் எனத்தெரிவித்தனர். அப்படி அவரிடம் சந்தேகப்படும்படி ஏதாவது பொருள் இருந்திருந்தால் அதை கைப்பற்றியிருக்க வேண்டும். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை என பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.

எச்சரிக்கை அறிக்கையுடன் ஒப்படைக்கப்பட்ட சடலம்
மனோஜின் சடலம் பிரேத பரிசோதனைக்காக 01.02.2015 அன்று மாலை நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு செல்லப்பட்டது. 2ஆம் திகதி மாலை 6 மணி வரை இவரது சடலம் ஒப்படைக்கப்படாததால் அவரது சொந்த இடமான கல்கந்தவத்தை தோட்டத்தில் பொது மக்கள் இனம்புரியாத பதற்றமுடனேயே இருந்தனர். எனினும் அன்றைய தினம் 6 மணிக்குப்பின்னரே பிரதே பரிசோதனை முடிவடைந்து பிரேத அறிக்கையுடன் நீதிமன்ற பணிப்புரை ஒன்றினூடாக இரவு 8 மணிக்குப்பிறகு அவரது சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது.

நீரில் மூழ்கியதால் ஏற்பட்ட மூச்சு திணறலால் உயிரிழந்துள்ளார் என பிரேத அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது, மேலும் நீதிமன்ற அறிக்கையில் சடலத்தை உரிய நேரத்தில் நல்லடக்கம் செய்யப்பட வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் கோஷங்கள் எழுப்பக் கூடாதெனவும் அமைதியான முறையில் இறுதி கிரியைகளை நடத்துமாறும் குறிப்பிடப்பட்டிருந்ததோடு, எதாவது பிரச்சினைகள் ஏற்படுமாயின் சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பட்டிருந்தது. அதற்கமைய மறுநாள் தோட்ட மக்கள் அனைவரினதும் கண்ணீருக்கு மத்தியில் மனோஜின் இறுதி ஊர்வலம் மிக அமைதியாகவே இடம்பெற்றது.

விடையில்லா கேள்விகள்
தலவாக்கலை நகரில் மனோஜை விசாரணைக்காக அழைத்துச்செல்லும் போது அவரிடம் இருந்ததாகக் கூறப்படும் பாபுல் எனப்படும் பொருளை சிவில் உடையிலிருந்த பொலிஸார் ஏன் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்படவில்லை என்ற கேள்விக்கு பதிலில்லை. தன் மீது குற்றமில்லாத சந்தர்ப்பத்தில் மனோஜ் பொலிஸ் நிலையத்திற்கு வந்து அதை நிரூபித்திருக்கலாம்.

ஆனால் அதற்கிடையில் என்ன நடந்தது என்பது தெரியவில்லை. பொலிஸாரிடமிருந்து தப்பிச்செல்லும் நோக்குடன் ஓடிய மனோஜ் ஆபத்தான அந்த ரயில் பாலத்திலிருந்து நீர்த்தேக்கத்தில் குதித்ததற்கான காரணமும் விளங்கவில்லை. மரணம் நிச்சயம் என்று தெரிந்தும் அவர் ஏன் அத்தகைய முடிவை எடுத்தார் என்பதும் புரியாத புதிராக இருக்கின்றது. மேலும் குறித்த பொலிஸ் அதிகாரிகளிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணை அறிக்கைகள் என்ன என்பது குறித்தும் தெளிவில்லை. இடம்பெற்ற சம்பவத்திற்காக அவர்கள் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கின்றார்களே ஒழிய அவர்கள் மீது என்ன சட்ட நவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதும் குறித்தும் இதுவரை தெரியவில்லை. இச்சம்பவத்திற்காக பாரபட்சமற்ற, நீதியான விசாரணைகள் இடம்பெற வேண்டும் என்பதே அனைவரினதும் கோரிக்கையாகும்.

மனோஜ் என்ற இளைஞனின் மரணத்தின் உண்மை வெளிவருமா?

நன்றி - வீரகேசரி 08.02.2015
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates