இலங்கையை மாத்திரமன்றி முழு உலகத்தையும் மலையகத்தின் பக்கம் திருப்பிய திருப்புமுனை சம்பவம் என்றால் அது 40 உயிர்களுக்கும் மேல் மண் காவுகொண்ட மீரியபெத்தை மண்சரிவு சம்பவம் என்பதை யாராலும் மறுக்க முடியாது. மீரியபெத்தை மக்களுக்காக முழு உலகமும் கண்ணீர் வடித்ததை எம்மால் அவ்வளவு இலகுவில் மறந்துவிட முடியாது. இந்த மண்சரிவால் மீரியபெத்தை என்ற தோட்டமே அழிந்து போயுள்ளது. அங்கு வாழ்ந்த மக்களின் நிலையோ இன்று அதோ கதியாகியுள்ளது.
கண்ணீரையே தங்களது சொத்தாக வைத்துக் கொண்டு மீரியபெத்தை தோட்ட மக்கள் இன்னும் மாக்கந்தை தொழிற்சாலையில் அமைக்கப்பட்டுள்ள ஐந்துக்கு ஐந்தடி காம்பராவில் அவல வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர். எட்டுக்கு எட்டு மாட்டுக் கொட்டில் போலிருந்த லயத்தில் இருந்து அதைவிட மோசமான நிலைக்கு இந்த மக்கள் இன்று தள்ளப்பட்டுள்ளனர்.
ஆனால் இந்த மக்களை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டுவரும் அளவிற்கு மக்கள் முகத்தில் புன்னகையை கொண்டுவரும் சம்பவங்கள் இலங்கையில் ஆட்சி அமைத்துள்ள புதிய அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மண்சரிவில் உயிரிழந்த மக்களுக்கு நட்டஈடாக தலா ஒரு லட்சம் ரூபா ஊவா மாகாண முதலமைச்சர் ஹரீன் பெனாண்டோ தலைமையில் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. அதைவிட இந்த மக்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி அளிக்கக்கூடிய செயற்திட்டங்களும் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
மீரியபெத்தை மக்கள் மண்சரிவில் அழிந்தபோது முழு மலையகமும் காணி, வீட்டு உரிமைக்காக வீதிக்கு இறங்கி போராடத் தொடங்கியது. அதற்கு புதிய அரசாங்கத்தின் ஊடாக ஓரளவு திருப்தி தரக்கூடிய பலன் கிடைத்துள்ளது. அதுதான் மீரியபெத்தை மக்களுக்கான புதிய அரசாங்கத்தின் தனி வீட்டுத் திட்டம். முன்னைய அரசாங்கத்தில் இருந்த அமைச்சர் ரா.ஆறுமுகன் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸவுடன் இணைந்து மீரியபெத்தை மக்களுக்கு வீடு கட்டிக் கொடுக்கவென ஜனாதிபதித் தேர்தலுக்கு முன் அடிக்கல் நாட்டினார். ஆனால் அடிக்கல் நாட்டப்பட்ட இடத்தை மக்கள் விரும்பவில்லை. அது பாதுகாப்பற்ற இடம் என பாதிக்கப்பட்ட மக்கள் கூறியபோதும் அதிகாரிகள் அதனை கணக்கிலெடுக்காது தாங்கள் நினைத்தது போல மாடி வீடு கட்ட நடவடிக்கை எடுத்தனர்.
எனினும் இன்று அரசாங்கம் மாறியுள்ள நிலையில் புதிய அரசாங்கத்தின் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் பி.திகாம்பரம், பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் கே.வேலாயுதம், கல்வி இராஜாங்க அமைச்சர் வீ.இராதாகிருஸ்ணன் மற்றும் மேல் மாகாண சபை உறுப்பினர் மனோ கணேசன் ஆகியோரின் கூட்டு முற்சியில் மீரியபெத்தை மக்களுக்கு அவர்களுக்கு விருப்பமான பாதுகாப்பான இடத்தில் தனி வீடு கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி பூணாகலையை அடுத்து உள்ள 'மக்கள் தெனிய' சந்தியில் உள்ள பெரிய மலைகள் அற்ற ஓரளவு சமதரை காணியொன்றில் மீரியபெத்தை மக்களுக்கு 7 பேர்ச் காணியுடன் தனி வீடு கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வீடு கட்டுவதற்கான காணியை தோட்ட நிர்வாகத்திடம் இருந்து பெற்றுக் கொடுக்கும் கடமையை இராஜாங்க அமைச்சர் கே.வேலாயுதம் முன்னெடுக்கும் நிலையில் அந்த இடத்தில் வீடுகளை கட்டி முடிக்கும் பொறுப்பை அமைச்சர் ப.திகாம்பரம் ஏற்றுள்ளார்.
கடந்த வாரம் மீரியபெத்தை சென்ற தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் அதிகாரிகள், தோட்;ட நிர்வாகிகள் மற்றும் கட்டிட ஆராய்ச்சி நிறுவன அதிகாரிகள் ஆகியோர் மீரியபெத்தை மக்கள் காட்டிய இடங்களை பார்வையிட்டு அதில் 'மக்கள் தெனிய' சந்தியில் உள்ள இடத்தை மிகவும் பொறுத்தமான பாதுகாப்பான இடமாக அறிவித்தனர்.
அதன்பின் வெள்ளிக்கிழமை மீரியபெத்தைக்கு விஜயம் செய்த அமைச்சர் திகாம்பரம், மாக்கந்த தொழிற்சாலையில் தங்கியுள்ள மக்களை சந்தித்து அவர்களுக்கு சகல வசதிகளுடனும் கூடிய தனி வீடு கட்டிக் கொடுக்க உறுதி அளித்தார். மேலும் பல பொய் பிரச்சாரங்களை செய்து மக்களை குழப்பும் முயற்சியில் ஈடுபட்டுள்ளவர்கள் குறித்து மக்கள் தெளிவாக இருக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.
அதன்பின் கொட்டும் மழையையும் பாராது அமைச்சர் திகாம்பரம், இராஜாங்க அமைச்சர் வேலாயுதம், மாகாண அமைச்சர் வடிவேல் சுரேஸ், மாகாண சபை உறுப்பினர் உருத்திரதீபன் உள்ளிட்ட குழுவிவினர் தோட்ட நிர்வாகம் மற்றும் நகர அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகளுடன் ஊடகவியலாளர்களும் மக்கள் தெனிய பகுதிக்குச் சென்று தனி வீடு கட்ட தெரிவு செய்யப்பட்டுள்ள இடத்தை பார்;வையிட்டு எதிர்வரும் 27ம் திகதி தனி வீட்டுத் திட்டத்திற்கு அடிக்கல் நாட்ட திகதி குறித்தனர்.
இங்கு உரையாற்றிய அமைச்சர் திகாம்பரம் மற்றும் இராஜாங்க அமைச்சர் கே.வேலாயுதம் ஆகியோர், மலையக வரலாற்றில் முதல் தடவையாக தொழிலாளர்களுக்கு உறுதிப் பத்திரத்துடன் கூடிய 7 பேர்ச் சொந்த காணியில் தனி வீடு கட்டப்படவுள்ளதாக அறிவித்தனர். மேலும் 'மக்கள் தெனிய' பகுதியில் புதிய மீரியபெத்தை கிராமம் சகல வசதிகளுடனும் மீள கட்டியெழுப்பப்படும் என தெரிவித்தனர்.
அதன்பின் மலையகத்தில் தற்போது தேவையாகவுள்ள ஒரு லட்சத்து 80 ஆயிரம் வீடுகள் கட்டி முடிக்கப்படும் என்றும் அதற்கு இலங்கை மற்றும் இந்திய அரசாங்கங்கள் ஒத்துழைப்பு வழங்கும் என்றும் கூறினர். காணி உறுதிப்பத்திரம் வழங்கப்படும் போது அது வீட்டில் உள்ள ஆண், பெண் இருவரது பெயரிலும் வழங்கப்படும் என்றும் நிபந்தனைகள் உள்ளடக்கப்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
சொந்தங்களை மண்ணுக்குள் தொலைத்துவிட்டு எப்போது விடிவுவரும் என்று இருளுக்குள் காத்திருக்கும் மீரியபெத்தை மக்களுக்கு தனி வீட்டுத் திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளமை மகிழ்ச்சியே. இதேபோன்ற மலையக மக்கள் வாழும் அனைத்து பகுதிகளிலும் லயன்வீட்டு முறை ஒழிக்கப்பட்டு சொந்த வீடு சொந்த காணி வழங்கப்பட வேண்டும் என்ற மக்களின் எதிர்பார்ப்பை ஈடுசெய்ய மக்கள் தலைமைகள் முன்வர வேண்டும்.
ஆனால் மலையகத் தோட்டத் 7 பேர்ச் காணி போதுமா? இல்லையா? என்ற கேள்வி, விமர்சனம் தற்போது சமூகத்தில் பேசுபொருளாக மாறியுள்ள நிலையில் காணி உரித்துடையவர்களாக மாறப்போகும் மலையக மக்களிடமே இது தொடர்பான விவாதத்தை விட்டு விடுவோம்...! தனி வீடு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் விழித்திருப்போம்...!
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...