மலையக மக்கள் கடுமையான உழைப்பாளிகள்.
அவர்களது உழைப்பின் செழுமையினாலேயே நாடு இன்று அபிவிருத்தியடைந்துள்ளது என்பதற்கு
சாட்சியங்கள் அவசியமில்லை. நாடு தேசியரீதியில் அபிவிருத்தியடைய இந்த மக்கள் ஈட்டிக்கொடுத்த
வருமானம் பெரும் பங்களிப்புச் செய்துள்ளது.
ஆனால், மலையக தொழிலாளர்களின் உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்காமை அவர்களுக்கு
இழைக்கப்படும் பாரிய அநீதியாகும். இது ஒரு புறமிருக்க, அவர்களுக்கு கிடைத்த குறைந்த பட்ச ஊதியமும் குடும்பத்தை பராமரிப்பதற்குப்
போதுமானதாக இருக்கவில்லை. இந்த நிலையில் அவர்களுக்குக் கிடைத்த அந்த குறைந்த பட்ச
வருமானத்தின் பெரும்பகுதி மதுபாவனைக்காகவே விரயம் செய்யப்பட்டது. தொடர்ந்தும் விரயமாகிக்
கொண்டிருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.
தமக்குக் கிடைத்த வருமானத்தில் பெரும்பகுதியை
மதுபான நுகர்வுக்கு செலவு செய்ததால், குடும்பப்
பராமரிப்பு குறிப்பாக உணவு, உடை, பிள்ளைகளுக்கான கல்வியூட்டல் செயற்பாடுகளுக்கு பணமில்லாது திண்டாடும்
நிலை ஏற்பட்டது. உணவு, உடை மட்டுமின்றி பிள்ளைகளை பாடசாலைகளுக்கு
அனுப்பி கற்பிக்க முடியாத நிலைமை உருவானது.
இதனால்தான் கல்வி கற்காதோரின் எண்ணிக்கை
அதிகரித்ததுடன் சிறுவயதிலேயே பிள்ளைகளை தொழிலுக்கு அனுப்பும் நிலைமையும் ஏற்பட்டது.
சிறுவர் தொழிலாளர் எண்ணிக்கை அதிகரிப்பதற்கும் இதுவே காரணமாக இருந்தது. கொழும்பு
போன்ற நகரப்பகுதிகளில் செல்வந்தர்களின் வீடுகளிலும் நிறுவனங்களிலும் வர்த்தக நிலையங்களிலும்
மலையக சிறுவர் சிறுமியரே பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
போதிய உணவு அல்லது போஷாக்கான உணவு உட்கொள்ளாத
காரணத்தால் மந்தபோஷனம் நிறைந்த பிள்ளைகளாக மலையகத்தில் அதிகமானோர் காணப்பட்டனர்.
போஷாக்கு நிறைந்த உணவுகளையோ அல்லது மூன்று வேளை உணவையோ முழுமையாக பெறமுடியாத
நிலைமை மலையகப் பிள்ளைகளுக்கு ஏற்பட்டது. இதற்கெல்லாம் காரணம் என்ன?
குடும்பத்தலைவன் தான் உழைத்துப் பெறும்
சம்பளத்தில் பெருந்தொகையை மதுபானத்துக்கே செலவிட்டதுதான் காரணம் என்பதை எவராவது
மறுத்துரைக்க முடியுமா?
தோட்டத் தொழிலாளர்கள் தொடர்ந்தும் வறியவர்களாக
அபிவிருத்தி காணாதவர்களாக கல்வியறிவற்றவர்களாக லயன் காம்பிரா என்ற சிறைக்குள்ளேயே
அடைந்து கிடக்க வேண்டும் என்று முதலாளித்துவ சக்திகளும் ஆட்சியாளர்களும் சிந்தித்தனர்.
அதற்காக அவர்கள் பயன்படுத்தியது கத்தியோ, துப்பாக்கியோ
அல்ல. மது என்ற ஆயுதந்தான். கத்தியும் துப்பாக்கியும் செய்யாதவற்றை இந்த மது என்ற
சாராயம் செய்தது; செய்து கொண்டிருக்கிறது.
மது போதையில் உள்ள ஒரு மனிதன் தன்னை
மறந்தவனாகவே இருப்பான். அவனுக்கு குடும்பமோ குழந்தையோ அவர்களுக்குரிய உணவு பற்றியோ அல்லது கல்வி பற்றியோ எந்தவித கவலையும் இல்லை. அது
பற்றி சிந்திக்கவும் அவனால் முடியாது.
அவன் சமூக அந்தஸ்தோ, காணி, தனி வீடு, பிள்ளைகளுக்கு கல்வி, தொழில், செல்வம் என்று எதையுமே கேட்கமாட்டான். அவனது உலகமே முற்றிலும் வேறுபட்டதாகவே
இருக்கும். இதன் காரணமாகவே முதலாளித்துவ சக்திகளும் ஏகாதிபத்திய அரசுகளும் தோட்டத்
தொழிலாளர்கள் அதிகளவில் வாழ்ந்துவரும் இடங்களில் அதிகளவில் மதுபான நிலையங்களை ஆரம்பித்தன.
இந்தச் சக்திகளுக்கு தோள் கொடுத்தவை
மலையக மக்களுக்கு சேவை செய்துவருவதாக கூறிக் கொண்டிருக்கும் தோட்டத் தொழிற்சங்கங்கள்
தான்! தோட்டத் தொழிற்சங்கங்கள் எப்போது அரசியல் ரீதியாக செயற்பட ஆரம்பித்தனவோ அப்போதிருந்தே
மதுபான நிலையங்கள் மலையகத்தை ஆக்கிரமிக்கத் தொடங்கிவிட்டன.
கடந்த 25 வருடங்களாக மலையக நகரங்களில்
மதுபான நிலையங்களின் எண்ணிக்கை பல மடங்காக அதிகரித்து விட்டன. ஒரு நகரில் குறைந்த
பட்சம் 6, 7 மதுபான நிலையங்களாவது செயற்படுகின்றன.
மட்டுமன்றி நகரங்கள் இல்லாத தோட்டங்கள் மட்டுமே இருக்கும் இடங்களில்கூட மதுபான
விற்பனை நிலையங்கள் இன்று இருக்கின்றன. இதற்கு உதாரணம் தேவை இல்லை.
இது மட்டுமல்ல, பிரதேச அரசியல் வாதிகளின் அனுசரணையுடன் தோட்டங்களில் மதுபானம் விற்பனை
செய்யப்படுகின்றது அல்லது சட்டவிரோத மதுபானம் (கசிப்பு) உற்பத்தி செய்யப்படுகிறது.
ஒரு சில அரசியல்வாதிகளே நேரடியாக இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டுவந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
மதுபானத்தினால் மலையக தோட்டத்தொழிலாளர்கள்
படும் அவஸ்தைகளையும் வேதனைகளையும் எடுத்து கூறி அவற்றை ஒழிப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டுமென்று கடந்த காலங்களில்
தொழிலாளர்கள் பல போராட்டங்களை நடத்தியிருக்கின்றனர். பல சமூக அமைப்புக்கள்,
சமூக சேவை நிறுவனங்கள், அரசசார்பற்ற நிறுவனங்கள் என்பன மதுபான விற்பனை நிறுவனங்களை அகற்றவேண்டும்
என்று குரல் கொடுத்து வருகின்றன.
மலையகக் கட்சிகள் பொதுத் தேர்தலில்
தாம் கூட்டுச்சேரும் கட்சிகள் வெற்றி பெற்றதும் அந்தக் கட்சியிடம் முதலில் கேட்பது
தமக்கு சாராய தவறணை நடத்துவதற்கான அனுமதி பத்திரம்தான். மக்கள் தேவைகள், பிரச்சினைகள் எல்லாம் இரண்டாம் பட்சந்தான். அவ்வாறு அரசுகளிடம் மலையக
அரசியல்வாதிகள் பெற்றுக்கொண்ட மதுபான விற்பனை நிலையங்களே அதிகமாக இருக்கின்றன.
தமது பெயரில் இல்லாவிட்டாலும் தமது உறவினர்கள், நண்பர்கள், வேண்டிய
நபர்களின் பெயர்களில் இந்த நிலையங்கள் செயற்படுகின்றன.
ஏற்கனவே இந்த மதுபான நிலையங்களை தடைசெய்யவும்
புதிய மதுபான நிலையங்கள் திறப்பதற்கான அனுமதிப்பத்திரங்கள் வழங்கக்கூடாதெனவும் மலையகக்
கட்சிகள் அரசை அல்லது சம்பந்தப்பட்ட திணைக்களத்தை வலியுறுத்தியிருக்குமானால் இன்று
அவ்வளவு பெருந்தொகையான மதுபான விற்பனை நிலையங்கள் மலையகத்தில் தோன்றியிருக்காது.
இந்த நிலையில் ஹட்டன் செனன் பகுதியில்
அமைந்துள்ள மதுபான விற்பனை நிலையத்தை அகற்றுமாறு கோரி கடந்த செவ்வாய்க்கிழமை வீதி
மறியல் போராட்டம் ஒன்று நடத்தப்பட்டது. பெரும் எண்ணிக்கையிலான தொழிலாளர்கள் குறிப்பாக
பெண்கள் மிகவும் ஆர்வத்துடன் கலந்துகொண்டு தமது எதிர்ப்பை வெளியிட்டனர். இது
மிகவும் வரவேற்கக்கூடியது. மக்கள் எப்போதும் விழிப்புணர்வு பெற்று தங்களது உரிமைகளை
வெல்வதற்கும் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண்பதற்கும் சுயமாக வீதியில் இறங்குகின்றார்களோ
அப்போதுதான் நியாயம் கிடைக்கும்.
செனன் ஆர்ப்பாட்டத்தில் இலங்கை தொழிலாளர்
காங்கிரஸ் பிரமுகர்கள் பலர் கலந்துகொண்டனர். முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான
ஆறுமுகன் தொண்டமான், முன்னாள் பிரதியமைச்சரும் பாராளுமன்ற
உறுப்பினருமான முத்து சிவலிங்கம் மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள் ஆகியோர் அங்கு
சமுகமளித்திருந்தனர். அவர்களின் பங்களிப்பு மதுபான விற்பனை நிலையங்களை அகற்றுவதற்கு
மிகமிக அவசியமாகும்.
இதுபற்றி அரசுடனோ அல்லது அனுமதிப்
பத்திரம் வழங்கிய கலால் திணைக்களத்துடனோ பேச்சுவார்த்தை நடத்தி தோட்டங்களின் மத்தியிலுள்ள
மதுபான விற்பனை நிலையங்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டுமென்பதே மக்களின்
எதிர்பார்ப்பாக உள்ளது.
மக்களை வீதியில் இறக்கி ஆர்ப்பாட்டம்
செய்வதை விடுத்து இராஜதந்திர முறையில் இவற்றுக்கு தீர்வு காணலாம் என்பதே அநேகரின்
வேண்டுகோளாகும்.
இதேவேளை, தோட்டத் தொழிலாளர்களின் பிரதேசங்களை இலக்கு வைத்து சாராயக்கடைகள்
திறக்கப்படுவதை தடைசெய்வதற்கு குறிப்பாக, அனுமதிப்பத்திரங்களை
இரத்து செய்வதற்கான பிரேரணையை மத்திய மாகாண சபையில் கொண்டு வரவுள்ளதாக இ.தொ.கா பிரமுகரும்
மத்திய மாகாணசபை உறுப்பினருமான கணபதி கனகராஜ் தெரிவித்தார்.
இந்த முயற்சி மிகவும் பாராட்டத்தக்கது.
இவ்வாறான ஒரு பிரேரணை கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்படுவதற்கு மலையக மக்கள் தமது
முழுமையான ஆதரவை வழங்குவர். எனவே, அவ்வாறானதொரு
பிரேரணையை மாகாணசபையில் விரைவில் கொண்டுவந்து நிறைவேற்ற வேண்டும்.
மத்திய மாகாணசபையில் மட்டுமன்றி,
இந்திய வம்சாவளி தமிழ் தோட்ட மக்கள் பெரும் எண்ணிக்கையில்
உள்ள சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாண சபைகளிலும் கொண்டுவர வேண்டும். இதனால் பெருந்தோட்ட மக்கள் பெரும் நன்மையடைவர்.
இப்போதெல்லாம் தேர்தல்கள் வந்துவிட்டால்
தோட்டங்களிலுள்ள சிலருக்கு கொண்டாட்டம்தான். தேர்தலின்போது சில கட்சிகள் சாராய
போத்தல்களை கொடுத்து வாக்குகளை அறுவடை செய்து கொள்கின்றன.
தேர்தலில் ஒவ்வொரு கட்சியும் மக்களுக்காக
தாம் செய்த சேவைகளையும் பெற்றுக்கொடுத்த உரிமைகளை பற்றியும் எதிர்காலத்தில் பெற்றுக்கொடுக்கவுள்ள
நன்மைகளைப் பற்றி சொல்லியுந்தான் மக்களிடம் வாக்குகளை கேட்பது வழக்கம். இதுதான்
ஜனநாயக பண்பாடும் கூட. ஆனால், மலையகத்தைப்
பொறுத்தவரையில் இவையெல்லாம் தேவையில்லை. சாராயமும் சாப்பாடு பார்சலும் கொடுத்தால்
போதும் வாக்குகள் குவியும் என்றொரு அவப்பெயர் ஏற்பட்டுள்ளது. இது இனியும்
வேண்டாம். எந்த கட்சியினரும் சாராயம் வழங்கக்கூடாது.
சில மலையக தமிழ் கட்சிகள் மட்டுமன்றி,
வேற்று இன அரசியல்வாதிகளும் நீண்ட நாட்களாக
சாராயத்தை வழங்கி இலகுவாக வாக்குகளை அறுவடை செய்து கொள்கின்றனர். எமது ஜனநாயக உரிமையில்
மிகப்பெரியதுதான் வாக்களிக்கும் உரிமை. அந்த உரிமையைக்கூட சாராயத்துக்காக விற்பனை
செய்துவிட்டு ஜனநாயக உரிமைகள் பற்றி எப்படி பேசுவது?
எனவே மது ஒழிப்பு, மதுபான விற்பனை நிலையங்களை அகற்றுவதை ஒரு பொது வேலைத்திட்டத்தின்
கீழ் கொண்டுவரப்பட வேண்டும். சகல கட்சிகளும் அமைப்புக்களும் இதற்கு தமது தார்மீக
ஆதரவை வழங்க வேண்டும். ஒன்றுபட்டு மதுபான ஒழிப்புக்கு செயற்பட வேண்டும். இதற்கு
மலையக மக்கள் அனைவரும் தமது முழுமையான ஒத்துழைப்பை வழங்குவார்கள் என்பதில் சந்தேகம்
இல்லை.
மதுவை ஒழிப்பதன் மூலமே மலையக
சமூகத்தின் வறுமை, பிரச்சினைகள் ஒழிந்து, சிறந்த கற்ற சமூகமாக பரிணமிக்க முடியும்.
நன்றி - வீரகேசரி
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...