மலையகத்தில் சமூக மாற்றம் பற்றி பேசியும் எழுதியும் வருவதால் மாத்திரமே சமூக மாற்றம் ஏற்பட்டு விடாது, செயற்பாடு தேவை.
யாருக்கு சமூக மாற்றம் மிக அத்தியாவசியமாகத் தேவையோ, யார் சமூக மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கூடியவர்களோ அந்த இளைஞர்களுக்கு அதற்கான வழிமுறைகளைக் கற்றுக் கொடுத்தல் வேண்டும். கருவிகளைக் கையளித்தல் வேண்டும்.
இயல்பாகவே எழுச்சியும் புரட்சிகர நோக்கமும் கொண்ட இளைஞர்களின் சமூக ரீதியான சிந்தனையை அவர்களை தனி மனித முன்னேற்றத்தின் பால் மாத்திரம் திசை திருப்பும் தாராளமயமாக்கல், தனியார் மயமாக்கல், உலகமயமாக்கல், பின்னணியில் எழுந்த பின் நவீனத்துவம் எண்பதுகளின் பின்னர் வளர்ந்து வலிமை பெற்றது.
இது சமூக மாற்றம் குறித்த வளர்ச்சிப் போக்குகளைத் தடுத்தது. பின்தங்கிய சமூகப்பகுதியினரிடையே இயங்கி வந்த சமூக மறுமலர்ச்சிக்கான அமைப்புக்களை இல்லாதொழித்துவிட்டது. இந்த நிலைமையானது மலையகத்தை முற்றாக பின்னடைவு காணச் செய்துள்ளது.
இந்த சூழ்நிலையில் சமூக மாற்றத்தினை ஏற்படுத்துவதற்கான சில கருவிகளை இளைய தலைமுறையினரிடம் கையளிக்க வேண்டியது நமது சமூகக்கடமையாகின்றது.
முதலில் மலையகத்தில் முறையான சமூக மாற்றம் ஏற்படாமைக்கு பிரதான காரணமாக அமைவது என்னவென்று பார்த்தோமானால், சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்புபவர்களிடம் அதிகாரம் இல்லாததும், அதிகாரம் உள்ளவர்கள் சமூக மாற்றத்தை விரும்புவதில்லை என்பதும் தெளிவாகும்.
அதிகாரத்தைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்
ஆகவே, சமூக மாற்றத்தில் ஆர்வம் கொண்ட இளைஞர்கள் இந்த சமூக அமைப்பைப் பற்றியும் அதிகாரத்தைப் பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும்.
ஆனால், இவைகள் புத்தகத்தில் படிக்கும் பாடங்கள் அல்ல. செயற்பாடுகள், நடவடிக்கைகள் மற்றும் போராட்டங்களினூடாகவே இவைகளைக் கற்றுக் கொள்ளுதல் சாத்தியம்.
இதற்கு உங்களுக்கோர் தூண்டுகோல், ஒரு நோக்கம், ஒரு உத்தேச வேலைத்திட்டம் தேவை. இப்போது நெருக்கடி தந்து கொண்டிருக்கும் ஒரு பிரச்சினையைக் கையாள்வதை சமூக மாற்றத்திற்கான ஒரு ஆரம்பப்படியாக எடுத்துக்கொள்ளலாம். அதன் மூலம் பயில ஆரம்பிக்கலாம்.
காணி உரிமையும் வீட்டுரிமை
இப்போது பார்த்தோமானால், இன்று மலையகத்தில் பெரிதாகப் பேசப்பட்டு வரும் மக்கள் அனைவரினதும் சம்பந்தப்பட்ட, மக்களைப் பெரிதும் கவர்ந்துள்ள விடயம் இந்தக் காணியுரிமை, வீட்டுரிமைப் பிரச்சினைதான். பல தசாப்தங்களாக பேசப்பட்டுவரும் இந்த விடயம் இன்றளவும் தீர்க்கப்பட்டதாயில்லை. இந்தப் பிரச்சினையை சமூக மாற்றத்தின் ஓர் ஆரம்பப் புள்ளியாக நாம் கையாண்டு பார்க்கலாம்.
இப்போது மலர்ந்துள்ள மைத்திரி ஆட்சியிலும் இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதாகத்தான் வாக்குறுதியளித்துள்ளார்கள். மலையக மக்களும் நம்பித்தான் வாக்களித்திருக்கின்றார்கள்.
இந்த அணியினரை ஆதரித்த மலையகத் தலைவர்களும் பெற்றுத் தருவதாகத்தான் சொல்லியிருக்கின்றார்கள். நடக்குமா? நடக்கும் என்று நம்புவோமாக.
ஆனால், இந்த அரசிலும் இந்தப் பிரச்சினை போதுமானவு முன்னேற்றம் காணாவிட்டால் என்ன செய்வது என்பதற்கான வேலைத்திட்டம் எவரிடமும் இருப்பதாகத் தெரியவில்லை.
இந்த இடத்தில்தான் சமூக மாற்றத்திற்கான ஆரம்பப் பாடத்தை நாம் கற்றுக்கொள்ள வேண்டும். ஆம், மக்கள் தம் அதிகாரத்தை பிரயோகித்து இந்த உரிமையை வென்றெடுக்க வேண்டும்.
இவ்வாறு தமது அதிகாரத்தைப் பிரயோகித்து தமது உரிமைகளை வென்றெடுக்கும் சக்தி ஏற்கனவே பெருந்தோட்டத்துறைத் தொழிலாளர்களிடம் இருந்து வந்ததுதான்.
தொழிற்சங்க நடவடிக்கைகளும் வேலை நிறுத்தம் என்ற ஆயுதமூலமே அந்த சக்தியாகும். ஆனால் கூட்டுப்பேரம் என்னும் நாசகார ஒப்பந்தத்தினால் தொழிலாளர்கள் இன்று அந்த சக்தியை இழந்து நிற்கின்றார்கள்.
அதிகாரம் குவிந்துள்ளதெங்கே?
காணி மற்றும் வீட்டுரிமைப் பிரச்சினை யில் அதிகாரம் குவிந்துள்ளது எங்கே என்பது பற்றிய பூரண விளக்கத்தை நாம் பெற்றுக் கொள்ள வேண்டும். இந்த விட யத்தில் அதிகாரத்தைப் பயன்படுத்துவோர் யார் இது சம்பந்தமான தீர்மானங்கள் எவ்வாறு மேற்கொள்ளப்படுகின்றன? இத் தீர்மானங்களை மேற்கொள்ளும் நிறுவனங்கள் எவை இந்நிறுவனங்கள் யாருடைய அதிகாரத்தின் கீழ் உள்ளன? போன்றதகவல்களை நாம் பெற்றுக்கொள்ளுதல் அவசியமாகும்.
மறுபக்கத்தில் பாரம்பரியமாக அதிகாரம் செலுத்தி வருகிறவர்கள் யார்? அவ்வப்போது மாறிவரும் சூழ்நிலைகளுக்கேற்ப அதிகாரம் செலுத்தி வருபவர்கள் யார்? என்பதையும் நாம் தெளிவாகப் புரிந்து வைத்துக்கொள்ள வேண்டும்.
இதையும் விட இவ்வதிகாரங்கள் அவர்களுக்கு எவ்வாறு வந்து சேர்ந்தது? இப்போதிருக்கும் அதிகாரங்களை விட அதிக மாக மக்கள் பெற்றுக் கொள்ள என்ன செய்ய வேண்டும்? போன்ற விடயங்கள் பற்றியும் சிந்தித்தல் பயனுடையது.
அதிகாரத்தைப் பிரயோகியுங்கள்
இனி, உங்கள் காணி மற்றும் வீட்டுரிமையை பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதைத் தீர்மானியுங்கள் இப்போது உங்களிடமுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்த ஆரம்பியுங்கள்.
இதற்கு மக்களை அமைப்பு ரீதியாக அணி திரட்டல் மிக அவசியமாகும். கருத்துக்களைப் பரப்பி மக்கள் மனதில் உத்வேகத்தை ஏற்படுத்த வேண்டும். இதுவே அதிகாரத்தைப் பிரயோகிப்பதற்கான உறுதியான சக்தியாகும்.
நடவடிக்கைகள் மக்களிடையே எழுச்சியை எற்படுத்துவதாக மாத்திரம் அமையாது. சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு நெருக்குவாரங்களை ஏற்படுத்தி, தேவையான மாற்றங்களை ஏற்படுத்துவதாக அமைய வேண்டும்.
நேச சக்திகளை இணைத்துக் கொள்ளுங்கள்
இந்தக் கட்டத்திலே வலிமையுடன் அதி காரத்தைப் பிரயோகிப்பதற்காக ஏனைய நேச சக்திகளை இணைத்துக் கொள்ளுங் கள்.
ஊடகங்களின் ஆதரவைப் பெற்றுக் கொள்ளுங்கள். இன்று முகநூல் போன்ற சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தும் அரிய வாய்ப்புள்ளது. அவைகளூடாக அதிகபட்ச நலன்களைப் பெறவேண்டும்.
மக்களை அமைப்பு ரீதியாக திரட்டுவதில் வெற்றி காண்பதற்கு சரியானதும் பொருத்த மான புள்ளிவிபரங்களையும் தகவல்களை யும் முன்வைப்பதுடன் பிரச்சினை மற்றும் தீர்வுபற்றிய தெளிவான விளக்கத்தை ஏற் படுத்த வேண்டும்.
திரும்பத் திரும்ப பலவழிகளிலும் முய லுதல் அனுபவங்களை பதிவு செய்தலும் பகிர்ந்து கொள்ளலும் ஆகியவை வெற்றி க்கு வழிவகுக்கும்.
நன்றி - வீரகேசரி
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...