ஜனாதிபதி தேர்தல் முடிவடைந்து விட்டது. புதிய ஜனாதிபதி பதவிப்பிரமாணம் செய்து கொண்ட அதேவேளை புதிய பிரதமரும் பதவிப்பிரமாணம் செய்து கொண்டார். புதிய அரசினால் மைத்திரியின் 100 நாள் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் அடுத்து என்ன?
பொதுத்தேர்தல் நடைபெறப்போகின்றது. தற்போதைய பாராளுமன்றம் கலைக்கப்பட்டு புதிய அரசாங்கம் ஒன்றைத் தெரிவு செய்வதற்கான பொதுத்தேர்தல் ஒன்று விரைவில் நடைபெறவுள்ளது.
எதிர்வரும் ஏப்ரல் மாதம் 24
ஆம் திகதிக்கு முன்னர் பாராளுமன்றம் கலைக்கப்பட்டுதேர்தல் நடத்தப்படலாம் என்று தெரிவிக்கப்படுகிறது. எவ்வாறெனினும் பொதுத் தேர்தல் நடைபெறுவது உறுதி.
இந்தத் தேர்தலில் வெற்றிபெறும் அணியுடன் இணைந்து பாராளுமன்றத்துக்கு செல்வதைப் பற்றி அரசியல்வாதிகள் ஆர்வம் காட்டத்தொடங்கியுள்ளனர்.
வெற்றிபெறும் என்று தாங்கள் எதிர்பார்க்கும் கட்சியில் இணைந்து கொள்வதற்கான முயற்சிகளில் பலர் ஈடுபட்டுள்ளனர். பெரும்பான்மையின அரசியல்வாதிகள் மட்டுமன்றி, மலையக அரசியல்வாதிகளும் அவ்வாறான முயற்சியில் இறங்கியிருப்பதை அவதானிக்கக்கூடியதாக இருக்கிறது.
மலையக அரசியல்வாதிகளைப் பொறுத்தவரையில் பலர் மலையக மக்களின் தற்போதைய மனநிலையை நன்றாகவே புரிந்து வைத்துள்ளனர். அதாவது யாருக்கு, எந்த தேசிய கட்சிக்கு வாக்களிப்பார்கள் என்பதை அறிந்துள்ளனர். எனவே, அந்தக் கட்சியில் அல்லது அணியில் சேர்வதன் மூலம் இலகுவாக பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்று விடலாம் என்பது அவர்களின் கணிப்பாக இருக்கின்றது.
எனவே, மலையக மக்கள் எங்கெல்லாம் பெரும்பான்மையாக அல்லது அதிகளவில் வாழ்கின்றார்களோ அங்கெல்லாம் அவர்களின் வாக்குகளைப் பெற்றுக் கொள்வதற்கான திட்டத்துடன் இந்த அரசியல்வாதிகள் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றனர் என்பது மறைக்கமுடியாத உண்மையாகும்.
குறிப்பாக மத்திய மாகாணத்திலும் ஊவா மாகாணத்திலும் இந்த நிலைமை சற்று அதிகரித்த நிலையிலேயே காணப்படுகிறது. ஏனெனில், பெரும்பான்மையான தமிழ் மக்களின் வாக்கு வங்கிகள் இந்த இரண்டு மாகாணங்களிலுமே இருக்கின்றன.
நுவரெலியா மாவட்டத்தை எடுத்துக் கொண்டால் சிறுபான்மை தமிழர்கள் மட்டுமன்றி பெரும்பான்மையின அரசியல் வாதிகள் சிலரும் கூட தமிழர்களின் வாக்குகளையே நம்பியிருக்கின்றனர் என்பது உண்மை. ஒரு காலத்தில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிட்ட பெரும்பான்மையின அரசியல்வாதிகள் முழுக்க முழுக்க தமிழர்களின் வாக்குகள் மூலமே அதிகப்படியான வெற்றியை பெற்றனர்.
காலம்செல்லச் செல்ல இந்த நிலைமையில் மாற்றம் ஏற்பட்டது. மலையக மக்கள் சிந்திக்கத் தொடங்கினர். அரசியல் தெளிவுபெற்றனர். தங்களது உரிமைகளையும் தேவைகளையும் வெல்வதற்கு வாக்குரிமை ஒன்றே ஆயுதம் என்பதை உணர்ந்தனர். அதன் பின்னரே மலையக சமூகத்துக்கு சேவை செய்யும் தலைவர்களுக்கும் சேவை செய்யும் தமிழ் மலையக பிரதிநிதிகளுக்கும் வாக்களிக்கத் தொடங்கினர்.
அதன் பின்னர் மலையக சமூகத்தவர், தமிழினம் என்ற அடிப்படையில் சில தலைவர்களுக்கு வாக்களித்து வந்தனர். ஆனால் அந்தத் தலைவர்கள் அதனை தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டனர்.
அடுத்தடுத்து பாராளுமன்றம் சென்றதுடன் அமைச்சுப் பதவிகளையும் பெற்று சுகபோகமாக வாழ்ந்தனர். தமது விசுவாசிகளுக்கு மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி சபைகளில் பதவிகளைப் பெற்றுக் கொடுத்தனர்.
அவ்வாறானவர்கள் மக்களுக்கு சேவை செய்யவுமில்லை, மக்களின் எண்ணத்தைப் பிரதிபலிக்கவுமில்லை. தொடர்ந்து மக்களை அடிமைகளாகவே வைத்திருப்பதற்கு முனைந்தனர். மக்களது விருப்பு வெறுப்புக்களுக்கு இடம் கொடுக்காமல் தாங்களே தீர்மானம் எடுப்பவர்களாக இருந்தார்கள். அவர்கள் காட்டும் நபருக்கோ அல்லது கட்சிக்கோ வாக்களிக்க வேண்டும் என்று எதிர்பார்த்தார்கள்.
ஆனால், அவர்கள் எதிர்பார்த்தது நடக்கவில்லை. மக்கள் சுயமாக சிந்திக்கத் தொடங்கிவிட்டனர்.
யாருக்கு வாக்களிக்க வேண்டும் யாருக்கு வாக்களிக்கக்கூடாது, யார் சமூகத்துக்கு சேவை செய்பவர்கள், யார் சமூகத்தை புறக்கணிப்பவர்கள் என்பதில் தெளிவுடன் இருக்கின்றனர். இதற்கு கடந்த ஜனாதிபதி தேர்தல் மட்டுமன்றி மாகாண சபைகளுக்கான வாக்களிப்புக்களும் சாட்சி பகரும்.
கடந்த அரசின் ஆட்சிக்காலத்தில் மலையக மக்கள் பெரும் துயரங்களை அனுபவித்தனர். அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையுயர்வு மா, எரிபொருள், அரிசி விலையுயர்வு, மீரியபெத்த மண்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடமைத்துக் கொடுக்காமை, உறுதியளித்தபடி காணி மற்றும் தனிவீடுகள் அமைத்துக் கொடுக்காமை போன்றவை மலையக மக்களிடம் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது.
இவற்றையெல்லாம் அவதானித்துக் கொண்டிருந்த மக்கள் சரியான நேரத்தில், சரியான பாடத்தைப் படிப்பித்திருக்கின்றனர். இந்தப் பாடத்தின் மூலம் மலையக அரசியல்வாதிகள் தெளிவினைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.
நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில் மக்களின் எண்ணங்களை புரிந்து கொண்ட சில கட்சிகள் அதற்கேற்றவாறு ஜனாதிபதி மைத்திரி – பிரதமர் ரணில் கூட்டணிக்கு ஆதரவு வழங்கின. அதில் முழுமையான வெற்றியும் பெற்றனர். சமூகத்துக்கு சேவை செய்யக்கூடிய மூன்று அமைச்சுக்கள் கிடைத்திருக்கின்றன. அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்றுள்ள மலையகத் தலைவர்கள் இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி சமூகத்துக்கு சேவை செய்ய வேண்டும்.
தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சு, பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சு மற்றும் கல்வி இராஜாங்க அமைச்சு ஆகிய மூன்று அமைச்சுக்களும் மலையக சமூகத்துக்குக் கிடைத்துள்ளமை ஒரு வரலாற்று நிகழ்வாகும்.
இது போன்றதொரு சந்தர்ப்பம் இனியொரு காலத்தில் கிடைக்குமா என்பதை காலந்தான் தீர்மானிக்கும். ஆனால், கிடைத்த இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
ஏற்கனவே இது போன்ற சந்தர்ப்பங்கள் மலையக சமூகத்துக்கு கிடைத்திருந்த போதும் அது பயன்படுத்திக் கொள்ளப்படவில்லை என்பது சுட்டிக்காட்டத்தக்கது. அவ்வாறு பயன்படுத்தப்பட்டிருந்தால் காணி, தனி வீடு, கல்வி, சம்பள உயர்வு போன்று விடயங்களில் ஓரளவேனும் அபிவிருத்தி ஏற்பட்டிருக்கும்.
எனவே, இன்றைய அரசின் அமைச்சர்கள் ஏப்ரல் 24ஆம் திகதிக்கு முன்னர் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு தேர்தல் நடத்தப்படலாம் என்ற செய்தியை மனதில் வைத்துக் கொண்டு சொல்லப்படுவது புத்திசாலித்தனமானது.
nஅன்றி - வீரகேசரி
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...