Headlines News :
முகப்பு » » சொந்த வீட்டில் குடியிருப்பதே சுதந்திரம் – பானா. தங்கம்

சொந்த வீட்டில் குடியிருப்பதே சுதந்திரம் – பானா. தங்கம்



இலங்கையின் 67 ஆவது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகின்றது. வருடந்தோறும் கோலாகலமான கொண்டாட்டங்கள் இடம்பெற்று வருகின்ற போதிலும் மலையக மக்கள் உண்மையான சுதந்திரத்தை அனுபவிக்க முடியாத நிலையிலேயே இருக்கின்றார்கள்.

இலங்கை 1948 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 4 ஆந் திகதி சுதந்திரமடைந்த பிறகு அதே ஆண்டு நவம்பர் மாதம் 15 ஆந் திகதி மலையக இந்திய வம்சாவளி மக்களுக்கு முதலாவது சோதனை காலம் ஆரம்பமாகியது. ஆமாம், 1947 ஆம் ஆண்டில் பாராளுமன்ற உறுப்பினர்களாக இந்திய வம்சாவளி மக்களின் சார்பில் 7 பேர் இருந்த நாளையைத் தொடர விடக் கூடாது என்ற கரிசனையில் 1948 சுதந்திரத்துக்குப் பிறகு இந்திய வம்சாவளி மக்களுக்கு இருந்த பிரஜாவுரிமை பறிக்கப்பட்டது. அவர்களின் அரசியல் பிரதிநிதித்துவம் 1977 ஆம் ஆண்டு வரை கேள்விக் குறியாகவே இருந்து வந்தது.

1963 ஆம் ஆண்டு பண்டாரவளை நகரில் இலங்கை திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் அமரர் ஏ. இளஞ்செழியன் தலைமையில் நடைபெற்ற நாடற்றவர் மறுப்பு மாநாட்டின் போது இனக் கலவரமே மூண்டிருந்தது. அதன் எதிரொலியாக இந்திய வம்சாவளி மக்களுக்கு பிரஜாவுரிமை வழங்குவது தொடர்பான பிரச்சினைக்கு ஓரளவு தீர்வு காணும் வகையில், 1964 ஆம் ஆண்டு ஸ்ரீமா – சாஸ்திரி ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. அதன்படி அன்று இருந்த சுமார் 10 இலட்ச இந்திய வம்சாவளி மக்களில் இந்தியா 5 ¼ இலட்சம் பேரையும், இலங்கை 3 ¼ இலட்சம் பேரையும் எடுத்துக் கொள்வதென ஏற்றுக் கொள்ளப்பட்ட போதிலும், மிகுதியிருந்த 1½ இலட்சம் பேர் நாடற்றவர்களாகவே இருந்தார்கள். அவர்களை காலப்போக்கில் இந்தியாவும் இலங்கையும் சரிசமமாக ஏற்றுக் கொள்வதெனவும் 1975 ஆம் ஆண்டு பாரதப் பிரதமராக இருந்த இந்திரா காந்திக்கும் இலங்கைப் பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்காவுக்கும் இடையில் இணக்கம் காணப்பட்டது.

தொடர்ந்து 1985 ஆம் ஆண்டு திம்பு பேச்சுவார்த்தையின் பின்னர் 1988 ஆம் ஆண்டு சௌமியமூர்த்தி தொண்டமான் மேற்கொண்ட பிரார்த்தனைப் போராட்ட நடவடிக்கையின் பயனாக சத்தியக் கடதாசி மூலம் பிரஜாவுரிமை வழங்கப்பட்டது எனினும், இந்தியாவுக்குப் போவதற்காக விண்ணப்பித்திருந்த மக்களின் நிலையில் எந்த விதமான மாற்றமும் ஏற்படாமல் பிரஜாவுரிமை இன்றி அப்படியே இருந்தார்கள் அதன் பிறகு 1993 ஆம் ஆண்டு ஜனாதிபதி ஆர். பிரேமதாஸ காலத்தில் அவர்களுக்கு பிரஜாவுரிமை வழங்க இணக்கம் காணப்பட்டது. இறுதியாக 2003 ஆம் ஆண்டு சந்திரிகா அம்மையார் ஜனாதிபதியாக இருந்த போது, ஜே..வி.பி. யின் ஆதரவோடு அனைவருக்கும் பிராஜாவுரிமை வழங்கப்பட்டு நாடற்றோர் நிலைமைக்கு நிரந்தரத் தீர்வு காணப்பட்டது.

இவ்வாறு இலங்கை சுதந்திரம் அடைந்த காலத்திலிருந்து படிப்படியாக பல்வேறு போராட்டங்களுக்கு மத்தியிலேயே இந்திய வம்சாவளி மக்கள் பிரஜாவுரிமை பெற்று வாக்களித்து வருகின்றார்கள். அதன் பயனாக இன்று அரசாங்க உத்தியோகத்தர்களாகவும் நாட்டின் தேர்தல்களில் வாக்களித்து தமது பிரதிநிதிகளைத் தெரிவு செய்து அரசாங்கங்களைத் தீர்மானிக்கும் சக்தியாகவும் மலையக மக்கள் இருந்து வருகின்றார்கள் அவர்கள் வாக்குரிமை பெற்றுள்ள காரணத்தால் தேசியக் கட்சிகளுக்கும் அவர்களின் வாக்கு பலம் தேவையாக இருந்து வருவதைக் காண முடிகின்றது.

மலையக மக்கள் இந்த நாட்டின் பிரஜைகளாக இருக்கின்ற போதிலும் அவர்கள் உண்மையான சுதந்திரக் காற்றை இன்று வரை சுவாசிக்க முடியாத குறைப்பிரசவக் குழந்தைகளாகவே இருந்து வருகின்றார்கள். அவர்களுக்கு சொந்தமான காணி உரிமையோ வீடுகளோ இல்லாத நிலையில் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட இருநூறு வருட பாரம்பரியம் மிக்க “லயன்களிலே’ தான் வாழ வேண்டிய நிலையில் உள்ளார்கள். இன்று கல்வி கற்ற சமூகமாக மாறி வருகின்ற போதிலும் அடிப்படை உரிமைகள் அற்றவர்களாகவே வாழ்ந்து வருகின்றார்கள்.

இந்த நாட்டில் உள்ள ஏனைய பிரஜைகளுக்கு இருக்கின்ற உரிமைகளும் சலுகைகளும் மலையக இந்திய வம்சாவளி மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் மலையக மக்கள் தமது தலைமைகளுக்கும் கட்டுப்படாமல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு வாக்களித்துள்ளார்கள். அவர்களின் காணி உரிமையுடன் கூடிய தனி வீட்டுக் கோரிக்கைக்கு நியாயமான தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையிலேயே மக்கள் பெரும் எதிர்பார்ப்போடு வாக்களித்துள்ளார்கள். அதற்கு ஏற்ற வகையில் இந்திய வம்சாவளி மக்களின் சார்பில் அமைச்சர்களான பி. திகாம்பரம், வீ. இராதாகிருஷ்ணன், கே. வேலாயுதம் ஆகிய மூன்று பேரும் அமைச்சர்களாக நியமனம் பெற்றுள்ளமை நம்பிக்கை தருவதாகவும் அமைந்துள்ளது மலையக மக்களின் அடிப்படைப் பிரச்சினையான வீடமைப்புத் திட்டம் நிறைவேறி சொந்த வீடுகளில் குடியிருக்கும் நிலைமை உருவாகும் போதுதான் அவர்கள் இந்த நாட்டின் உண்மையான சுதந்திர பிரஜைகளாக மாறுவார்கள் என்பதே உண்மையாகும்.

நன்றி - வீரகேசரி
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates