பொதுவாகவே எல்லா நாடுகளிலும் உள்ள இன, மொழி மற்றும் சமய சிறுபான்மையினரின் தேசிய பங்களிப்புக்கள் பெரும்பான்மையினரின் அங்கீகாரத்தை பெறுவதில்லை. இலங்கையிலும் கூட அதே நிலைமையே காணப்படுகின்றது.
இலங்கையில் மலையக மக்கள் மட்டுமன்றி ஏனைய சிறுபான்மை இன மக்களும் எவ்வாறு தேசிய ரீதியிலான மேம்பாட்டுக்கு பணியாற்றியுள்ளனர் என்பது பற்றிய விடயம் முறையாக ஆவணப்படுத்தப்பட்டு மக்கள் மத்தியில் பரப்பப்படுவதில்லை. இதனால் சிறுபான்மை மக்கள் தேசிய பொருளாதாரத்துக்கும் நாட்டின் அபிவிருத்திக்கும் ஆற்றிய பெரும் பங்களிப்பு இருட்டடிப்பு செய்யப்படுகின்றது.
இலங்கையின் வரலாறும் இவ்வாறே பெரும்பான்மையினர் சார்பாக திரிபுபடுத்தப்படுகின்றது. பாடநூல்களும் திரிபுபடுத்தப்பட்ட கருத்தையே தெரிவிக்கின்றன என்பது அநேகரின் கருத்தாக உள்ளது. சிறுபான்மையினர் வந்தேறு குடிகளாகவும் ஆக்கிரமிப்பாளர்களாகவும் சித்திரிக்கப்படுகின்றனர் என்ற முறைப்பாடுகள் ஏராளமாக உள்ளன.
மலையக இந்திய வம்சாவளித் தொழிலாளர்களின் 200 ஆண்டு கால உடல் உழைப்பினாலும் அவர்கள் பட்ட சிரமங்களினாலும் பெருந்தோட்டங்கள் மட்டுமன்றி துறைமுகங்களும் ரயில் பாதைகளும் பெருந்தெருக்களும் ஏற்படுத்தப்பட்டன. இவை இன்றளவும் இலங்கையின் பொருளாதாரத்தில் முக்கியத்துவம் வகிக்கின்றன.
சில வருடங்களுக்கு முன்னர் பல்கலைக்கழகம் ஒன்றிலிருந்து மாணவர் குழுவொன்று மத்திய மலைநாட்டிலுள்ள பிரதான நகரம் ஒன்றுக்கு கற்கை ஆய்வுக்காக வருகை தந்திருந்தது. குறித்த நகரின் அப்போதைய முதல்வரை சந்தித்து நகரின் வரலாறு, பொருளாதாரம், பயிர்ச்செய்கை என்பவை குறித்த விபரங்களை மாணவர்கள் கேட்டுள்ளனர்.
அவர்களது கேள்விக்கு பதிலளித்த பெரும்பான்மை இனத்தவரான அந்த முன்னாள் நகர முதல்வர், மேற்படி பிரதேசத்தில் காலி, மாத்தறை போன்ற தென்னிலங்கை பகுதியிலிருந்து வந்த பெரும்பான்மையினத்தவர்களே முதலில் குடியேறியதாக தெரிவித்துள்ளார். பெரும்பான்மையின மக்கள் குடியேறிய பின்னரே இந்திய வம்சாவளியினர் அங்கு வந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், இந்திய வம்சாவளியினர் வருகையின் பின்னரே அடர்ந்த காடுகள் அழிக்கப்பட்டு ஆங்கிலேயரால் தேயிலைச் செய்கை ஆரம்பிக்கப்பட்டது என்பது அவர் அறியாததல்ல. தவிர அந்த நகரின் முதலாவது தலைவராக தமிழர் ஒருவரே இருந்துள்ளார். அத்துடன் ஆங்கிலேயர் தோட்ட மக்களின் நலன் கருதி அங்கு கடைகளையும் (தோட்ட நிலத்தில்) கட்டிக்கொடுத்திருந்தனர். நீண்ட காலத்தின் பின்னரே அங்கு பெரும்பான்மையினத்தவர் வருகை தந்ததாக முன்னோர்கள் தெரிவித்திருந்தனர்.
இது போன்றே மலையக மக்கள் பற்றிய தகவல்கள் திரிபுபடுத்தப்படுகின்றன.
பெருந்தோட்டப் பயிர்ச்செய்கை ஆங்கிலேயரால் ஆரம்பிக்கப்பட்டு மிக வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது. இதன் மூலம் இலங்கையின் ஏற்றுமதிப் பயிர்செய்கையாக தேயிலை முதலிடத்தைப் பெற்றது. பெரும் வருமானம் தரும் தொழிற்றுறையாகவும் தேயிலைச் செய்கை மாற்றம் பெற்றது. பெருந்தோட்டத் தொழிலாளர்களின் உழைப்பினால் உருவாகிய மிகை இலாபங்கள் இலங்கையில் கல்வி, சுகாதாரம் முதலிய சேவைகளை இலவசமாக வழங்குவதற்கும் பெரிதும் காரணமாக இருந்துள்ளது. குறிப்பாக ஒரு காலத்தில் தேயிலை மூலமே நாட்டுக்கு அந்நிய செலாவணி அதிகளவில் கிடைத்தது. அத்துடன் இறப்பர் செய்கையும் தென்னை செய்கையும் கூட அதிகளவில் ஏற்றுமதிப் பயிர்களாகவும் அந்நிய செலாவணியை பெற்று தருபவையாகவும் இருந்தது.
1975ஆம் ஆண்டு காணி சீர்திருத்தக் கொள்கை அப்போதைய அரசினால் அமுல்படுத்தப்பட்டதை தொடர்ந்து தோட்டக் காணிகள் பல்வேறு வகையில் துண்டாடப்பட்டன. அதாவது, அரசுைடமையாக்கப்பட்ட தோட்டங்கள் இலங்கை அரச பெருந்தோட்ட யாக்கம், மக்கள் பெருந்தோட்ட அபிவிருத்தி சபை மற்றும் உசவசம ஆகிய நிறுவனங்களின் கீழ் கொண்டு வரப்பட்டன. அதன் பின்னர் போதிய பராமரிப்பின்மை, நிர்வாக சீர்கேடு போன்ற காரணங்களினால் தேயிலை, இறப்பர் உற்பத்தியில் ஓரளவு பாதிப்பு ஏற்பட்டது. அதனால் இந்தப் பயிர்களின் மூலம் கிடைத்து வந்த அந்நிய செலாவணியிலும் சிறிய மாற்றம் ஏற்பட்டதே தவிர வருமானம் குறைவடையவில்லை.
எனவே, மலையக இந்திய வம்சாவளி மக்கள் தேசிய ரீதியில் பொருளாதாரத்துறையில் பாரிய பங்களிப்பை செய்துள்ளதுடன், இன்றுவரை அதனை மேற்கொண்டு வருகின்றனர் என்பதை எவராலும் மறுக்க முடியாது.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் அவர்களின் பங்கு மிகவும் முக்கியமான இடத்தினை பெற்றிருந்தது. நாட்டின் தலைவரை தீர்மானிக்கும் தேசிய சக்தியாக தமது பங்களிப்பை செய்துள்ளனர்.
அத்துடன் ஜனநாயக அரசமைவதற்கும் நல்லாட்சிக்கும் பெரும்பங்களிப்பை வழங்கியதன் மூலம் அவர்களின் தேசிய சக்தி புதிய பரிமாணத்தை பெற்றுள்ளது மட்டுமன்றி, மலையகத்திலும் மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. மலையக பாரம்பரிய கட்சி ஆதிக்கத்தை உடைத்தெறிந்துள்ளது.
காணி, வீட்டு வசதி சமூக, பொருளாதார நலன்களுக்கு மட்டுமன்றி தேசிய நலன் கருதிய காரணிகளுக்காகவும் வாக்களித்தனர்.
இவ்வகையில் ஏனைய இலங்கை தமிழர்கள், முஸ்லிம்கள் மற்றும் சுமார் 40 இலட்சம் நல்லாட்சியை விரும்பிய பெரும்பான்மை இன மக்களுடன் சேர்ந்து ஆட்சி மாற்றத்துக்கு வழிகோலினர். இதன் மூலம் மலையக மக்களும் தேசிய போராட்டத்தின் ஓர் அங்கமாக செயற்பட்டுள்ளார்கள் என்பதை சுட்டிக்காட்டக்கூடியதாக இருக்கின்றது. நாட்டில் பெரும்பான்மையினர் வாழ்கின்ற தொகுதிகளிலும் இடம்பெற்ற அவர்களின் வாக்களிப்பு பாணி அவர்களனைவருமே ஒன்றுபட்ட சிந்தனையுடன் ஆட்சி மாற்றத்தை விரும்பியிருக்கின்றனர் என்பது தெளிவு. இதனையே மலையக மக்களின் தேசிய பங்களிப்பு என்று கொள்ளலாம்.
மலையக மக்களை பொறுத்தவரையில் நல்லாட்சியாளர்களுக்கு ஒரு பிரதான பங்கு உள்ளது. வரலாற்று ரீதியாக பின்தங்கியுள்ள இந்த மக்களின் மேம்பாட்டுக்கான சிறப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
இதற்கு தற்போதைய மலையக அமைச்சர்கள் குரல் கொடுக்க வேண்டும். ஒரு சமூக பிரிவினரை பின்தங்கியவராக வைத்திருப்பதாலும் அவர்களுடைய பங்களிப்பு உரிய அங்கீகாரம் வழங்காததாலும்தான் நாடு தொடர்ந்து பின்தங்கி இருக்கின்றது என்று ஒரு பொருளியல் பேராசிரியர் ஒரு முறை தெரிவித்திருந்தார். எனவே, மலையக மக்கள் சகல உரிமைகளையும் அனுபவிக்க அவர்களுக்கு எல்லாத்தகுதிகளும் உண்டு என்பதை தமது வாக்களிப்பின் மூலம் உணர்த்தி யிருக்கின்றனர் என்பதே உண்மை. மலையக மக்கள் அன்று முதல் இன்றுவரை தேசிய ரீதியிலான மேம்பாட்டுக்கு தமது பெரும் பங்களிப்பை வழங்கியுள்ளார்கள். தொடர்ந்தும் வழங்கி வருகின்றார்கள் என்பதை எவராலும் மறுதலிக்க முடியாது.
நன்றி - வீரகேசரி
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...