Headlines News :
முகப்பு » » கூட்டு ஒப்பந்தமும் மலையக மக்களின் எதிர்காலமும்

கூட்டு ஒப்பந்தமும் மலையக மக்களின் எதிர்காலமும்


இலங்கையின் வருமானத்தில் பிரதான பங்காளிகளாக மலையக தோட்ட தொழிலாளர்கள் 1820ஆம் ஆண்டின் முன்பிருந்தே தமது பங்களிப்பபை வழங்கி வருகின்றனர். ஆனால் இச் சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் அளவிட முடியாதவை.

குறிப்பாக வீட்டுரிமை, காணியுரிமை, கல்வியுரிமை, பாதுகாப்புரிமை தொடர்பாக பல்வேறு பிரச்சினைகள் மத்தியில் வாழும் இவர்களின் நலன்களை மேம்படுத்தும் செயற்பாடுகளை மலையக வரலாற்றில் எந்தவொரு அரசாங்கமும் மேற்கொண்டிருக்கவில்லை.

மலையக பெருந்தோட்ட மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளில் தலையாயதாக விளங்குவது கூட்டு ஒப்பந்தத்தின் ஊடாக பெற்றுக்கொண்ட சம்பளமாகும். 1998ஆம் ஆண்டு முதன்முதலாக பெருந்தோட்ட தொழிற்சங்கங்களுக்கும், பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனத்துக்கும் இடையில் 2 வருடங்கள் நிலைத்திருக்கும் கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

இவ்வொப்பந்தத்தின் கீழ் மாதாந்தம் 25 நாள் வேலை வழங்கப்படும் என்றும், ஒரு நாள் சம்பளம் 300 ரூபா எனவும் தீர்மானிக்கப்பட்டது. இச்சம்பள உயர்வை பெற்றுக்கொள்ள நடாத்தப்பட்ட போராட்டங்கள் பல, அதில் இடம்பெற்ற காட்டிக்கொடுப்புகள் பல.

1973 ஆம் ஆண்டு மார்கழி 18 ஆம் திகதி சம்பள உயர்வு கோரி மலையக பெருந்தோட்ட தொழிற்சங்கங்கள் சார்பாக ஐக்கிய பெருந்தோட்ட தொழிலாளர் சங்கம் பொது வேலை நிறத்தப் போராட்டம் ஒன்றினை நடத்தியிருந்தது. இதில் இலங்கை தொழிலாளர் காங்கிரசும் பங்கேற்றது.

இப்போராட்டத்தின் போது இலங்கை தோட்ட தொழிலாளர் யூனியன் தலைவர் என்.எம் பெரேரா “மாதாந்த வேதனம் என்பது அதிகபடியான கோரிக்கையாகும், உலகத்தில் எந்தவொரு நாட்டிலும் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு மாதாந்த வேதனம் வழங்கப்படுவதில்லை” என கூறி எம் சமூகத்தின் நியாயமான கோரிக்கையை நிராகரித்திருந்தார்.

அத்தோடு இவ்வேலை நிறுத்தப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு 10 நாட்களில் தற்போது மலையக மக்களின் ஏகோபித்த தெரிவு நாங்களே என்று கூறிக்கொள்ளும் இலங்கை தொழிலாளர் காங்கிஸை; ஒரு தலைபட்சமாக போராட்டத்தில் இருந்து பின்வாங்கியது. இது எமது சமூகத்தை காட்டிக்கொடுத்த முதலாவது சந்தர்ப்பமாக மலையக வரலாற்றில் பதிவாகியது.

பின்னர் 1981 ஆம் ஆண்டு ஐக்கிய தேசிய கட்சியின் வரவு செலவுத்திட்டத்தில் அரசாங்க ஊழியர்களுக்கு 70 ரூபாய் சம்பள உயர்வு வழங்கப்படும் என தீர்மானிக்கப்பட்டது. ஆனால் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு இச்சம்பள உயர்வு மறுக்கப்பட்டது. இதன்போது பெருந்தோட்ட தொழிலாளர்கள் அரசாங்கத்தால் திட்டமிட்ட முறையில் பாரபட்சமாக நடாத்தப்பட்டனர்.

1981 ஆம் ஆண்டு பொருந்தோட்டங்களில் உள்ள 14 தொழிற்சங்கங்கள் ஒன்று கூடி தமக்குள் பெருந்தோட்ட தொழிற்சங்க கூட்டுக்குழு என்ற அமைப்பை உருவாக்கி 1981 ஆவணி மாதம் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கும் 70 ரூபாய் சம்பள் உயர்வு வழங்க வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்த ஒரு நாள் வேலை நிறுத்தத்தினை மேற்கொண்டனர்.

இவ்வேலை நிறுத்தத்தினை எதிர்த்து இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அறிக்கையொன்றினை வெளியிட்டது. இது எமக்கிளைக்கப்பட்ட மற்றுமொரு துரோகமாகும். இதனை தொடர்ந்து 1983 ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்டத்தில் அரசாங்க ஊழியர்களுக்கு 100 ருபாய் சம்பள உயர்வு வழங்கப்படுவதற்கு அப்போதைய அரசாங்கத்தால் உறுதியளிக்கப்பட்டது.

ஆனால் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு ஒரு ரூபாய் சம்பள உயர்வினை கூட வழங்க அரசாங்கம் எவ்விதமான ஏற்பாடுகளையும் செய்யவில்லை. அரசாங்கத்தில் அங்கம் வகித்த மலையக மக்களின் பிரதிநிதிகளும் இது தொடர்பாக அரசாங்கத்துக்கு அழுத்தங்களை தெரிவிக்கவில்லை.

இவ்வாரான வரலாறுகளின் மத்தியில் 1998 மார்கழி மாதம் 04 ஆம் திகதி முதலாவது கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. இதனை தொடர்ந்து இன்று வரை 2 வருடங்களுக்கு ஒருமுறை பெருந்தோட்ட தொழிற்சங்கங்களுக்கும் பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனத்திற்கும் இடையில் ஒப்பந்தம் சம்பள் கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு வருகின்றது. இவ்வொப்பந்தங்களின் ஊடாக மலையக மக்களின் வாழ்க்கை சுறண்டப்பட்டு வருகின்றமை வருத்தமளிக்கின்றது.

இறுதியாக 2013.03.31 அன்று கைச்சாத்திடப்பட்ட கூட்டு ஒப்பந்தமானது எதிர்வரும் 2015.04.04 உடன் முடிவுக்கு வரும் நிலையில் அடுத்த இரு வருடங்களுக்குறிய கூட்டு ஒப்பந்தத்திற்கான முன்னாயத்தங்கள் செய்யப்படுகின்றன. கூட்டுவொப்பந்தம் என்ற பெயரில் மலையக மக்கள,; தொழிற்சங்கங்கள் மற்றும் முதலாளிமார் சம்மேளனம் போன்றவற்றினால் சுறண்டப்பட்டு வருகின்றனர்.

அதன்படி 2013 ஆம் ஆண்டு செய்துகொள்ளப்பட்ட கூட்டு ஒப்பந்தத்திற்கிணங்க பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளம் 620 ரூபாவாக உயர்த்தப்பட்டது. அத்துடன் மொத்த வேலை நாட்கள் 25 என தீர்மானிக்கப்பட்டது. இங்கு அவதானிக்கப்பட வேண்டிய முக்கியமானதொரு விடயம் என்னவெனில் அதிகரிக்கப்பட்ட சம்பளம் தொடர்பானதாகும்.

அதாவது இவ்வொப்பந்தத்தின் ஊடாக ஏற்கனவே இருந்த சம்பளத் தொகையான 380 ரூபா வானது 450 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது. எனவே இந்த 620 ரூபாய் சம்பளம் எவ்வாறு வழங்கப்படுகின்றது? என்ற வினா எழும்பலாம். இவ் 620 ரூபா சம்பளமானது, அடிப்படை சம்பளமான 450 ரூபா, வழங்கப்படும் 25 நாட்கள் வேலைகளில் 76மூ சதவீதத்தினை (19 நாட்கள் வேலை செய்வோர்) பூர்த்திசெய்யும் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் வரவுத் தொகை 140 ரூபாவும், நியமக் கொடுப்பனவு 30 ரூபாவும் (450 + 140 +30ஸ்ரீ620) சேர்த்து 620 ருபாவாக வழங்கப்படுகின்றது. உண்மையில் இங்கு அடிப்படை சம்பளம் 450 ரூபாவாகவே இருக்கின்றது.

இந்த 620 ரூபாவை பெற்றுக்கொள்வதில் பெருந்தோட்ட மக்களில் 10மூ சதவீதமானவருக்கே வாய்ப்புள்ளது. ஏனையோர் 19 நாட்கள் வேளைகளில் தவிர்க்க முடியாதபடி ஒருநாள் வேலைக்கு போக முடியாத சந்தர்ப்பத்தில் 620 ரூபா சம்பளத்தை பெற்றுக்கொள்ளாமல் அடிப்படை சம்பளத்தை மாத்திரமே பெற வேண்டிய துர்பாக்கிய நிலை இக்கூட்டு ஒப்பந்தத்தினால் ஏற்பட்டுள்ளது. இவ்வாரான சுரண்டலினால் அதிகமான இலாபத்தினை பெருந்தோட்ட கம்பனிகள் கடந்த காலங்களில் அடைந்திருந்தன.

எடுத்தக்காட்டாக 2011 ஆம் ஆண்டு 19 கம்பனிகள் 450 கோடியே 94 லட்சம் இலாபத்தையும், 2012 இல் 18 கம்பனிகள் 404 கோடியே 86 இலட்சம் ரூபா இலாபமாக பெற்றன. இவை தொழிலாளர்களின் உழைப்பை சுறண்டி பெற்ற இலாபமாகவே கொள்ளப்படுகின்றது. இவ்வொப்பந்தம் நடைமுறையில் இருந்த இந்த இரண்டு வருடங்களில் பெரும்பாலான தோட்டங்களில் 16 நாட்களுக்கு குறைவான வேலை நாட்களே வழங்கப்பட்டுள்ளது. இதனால் 90 வீதமான பெருந்தோட்ட தொழிலாளர்கள் 620 ரூபாய் சம்பளத்தை முழுமையாக பெறமுடியாமல் போனது.

இதற்கு காரணம் கூட்டு ஒப்பந்தத்தின் போது தனித்து தொழிற்சங்கங்கள், முதலாளிமார் சம்மேளனம் என்பன மாத்திரம் கலந்து கொண்டமையாகும். உண்மையில் பெருந்தோட்டங்களில் காணப்படும் சிவில் அமைப்புகள், புத்திஜீவிகள் சங்கம், மாணவர் அமைப்புகள், நலன்புரி அமைப்புகள் என்பன கூட்டு ஒப்பந்தத்தில் கலந்த கொண்டிருப்பின் உண்மையில் பெருந்தோட் மக்களுக்கு நியாயமான நீதியும், சம்பளமும் கிடைத்திருக்கும்.

அண்மையில் இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில் எதிரணி வேட்பாளரின் வெற்றிக்க துணைநின்ற பெருந்தோட்ட தொழிலாளர்களின் வாழ்க்கையில் மாற்றம் ஏற்படவில்லை. கடந்த மாதம் 29 ஆம் திகதி அரசாங்கத்தால் முன்னொழியப்பட்ட இடைகால வரவு செலவுத்திட்டத்தில் அரசாங்க ஊழியர்களின் சம்பளம் 10000 ரூபாவினாலும், தனியார் துறையினரின் சம்பளம் 2500 ரூபாவியாலும் உயர்த்துவதற்கு அரசாங்கம் உறுதியளித்திருந்தது.

ஆனால் காலம் காலமாக நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்காக தம் உடல் பொருள் ஆவியனைத்தையும் அர்ப்பணித்துவிட்டு அரசியல் தமக்கொரு தேசிய அடையாளம் இல்லாமல் வாழ்ந்து வரும் மலையக மக்களுக்கு எவ்விதமானச சம்பள உயர்வு தொடர்பாக கூறப்படவில்லை. அத்தோட அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் மலையக கட்சிகள் இது தொடர்பான அழுத்தங்களை தெரிவிப்பதாக இல்லை. காரணம் கூட்டு ஒப்பந்தத்தில் முழுமையாக மலையக மக்களை நாங்கள் நியாயமான விலைக்கு விற்போம் என்று மைத்திரி அரசாங்கத்துக்கு வழங்கியுள்ள வாக்குறுதியே காரணமாகும்.

அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ள இவ ;வரசு செலவு திட்டமானது உண்மையில் மலையக மக்களுக்குறிய வரவு செலவு திட்டமே என்ற மார்தட்டி கொள்ளும் சில மலையக அரசியல்வாதிகள் தம்மக்களின் உள்ளத்தினை அறியாது பிதற்றுகின்றனர் போலும்.

எனவே காலம் தந்த படிப்பினைகளை கருத்தில் கொண்டு அடுத்த மாதம் இடம்பெறவுள்ள கூட்டு ஒப்பந்தத்தில் மலையக தலைவர்களுடன் மலையக ஆசிரியர் சங்கம், புத்திஜீவிகள், சிவில் அமைப்புகள் சமூக நல அமைப்புகள், மதத்தலைமைகள், என பலரும் தமது ஆதரவினை தெரிவித்த அல்லறுரும் மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களுக்க ஒரு நியாயமான தீர்வினை பெற்றுத்தர முன்வர வேண்டும்.

அத்தோடு கூட்டு ஒப்பந்தத்திற்கு முன்பதாக மலையகத்தில் வாழும் அனைத்து தரப்பினரும் தம் சமூகத்தின் உரிமைகளை வென்றெடுக்கும் வகையில் செயலமர்வுகளை நடாத்துதல் , மக்கள் கருத்த களத்தினை நடாத்துதல், துண்டு பிரசுரங்களின் மூலமாக மக்களுக்கு இக்கூட்டு ஒப்பந்தம் தொடர்பாக விழிப்புணர்வூட்டல் வேண்டும். மேலும் கூட்டு ஒப்பந்தத்தின் போது வெருமனே தொழிற்சங்கங்கள் முதலாளிமார் சம்மேளனம் என்பவற்றிற்கு மாத்திரம் சந்தர்ப்பம் வழங்காமல் மேற்கூறிய சிவில் அமைப்புகள், புத்திஜிவிகள் போன்றோருக்கும் வாய்ப்பு வழங்குதல் சிறப்பாக அமையும்.

கூட்டு ஒப்பந்தத்தை வைத்து அரசியல் நடாத்தும் நிலையை மக்கள் தகர்தெறிய வேண்டும். எங்கள் உரிமைகளை நாங்களே வென்றெடுக்க போராட வேண்டும். ஒப்பந்தத்தின் பின்னர் தொழிற்சங்கங்கள் அதன் உள்ளடக்கம் தொடர்பாக மக்களுக்கு விழிப்புணர்வூட்ட வேண்டும். இதேவேளை ஒப்பந்தத்தை மீறும் தோட்டக்கம்பனிகளின் செயற்பாடுகளை அனைத்து தரப்பினரும் இணைந்து கண்டிக்க வேண்டும்.

அரசாங்கத்தின் தலையீட்டுடன் நியாயமான தீர்வினை மக்கள் எதிர்ப்பார்கின்றனர். அமைச்சு பதவிகளை பெற்றுத்தந்தவர்கள் மலையக மக்கள். இக்கூட்டு ஒப்பத்தத்தில் மலையக பொருந்தோட்ட மக்களுக்கு நிலையான தீர்வு கிடைக்காது போனால் அதற்குறிய பிரதிபலனை எதிர்வரும் பொது தேர்தலில் இச் சமூகம் உங்களுக்கு உணர்த்தும். ஆகவே மலர்ந்திருக்கும் ஆட்சியில் மலையக மக்களுக்கு சுபீட்சமான வாழ்க்கையை பெற்றுத்தர அனைத்து தரப்பினரும் கைகொடுக்க வேண்டும் என அறைகூவல் விடுக்கின்றோம்.

இளம் சமூக விஞ்ஞானிகள் கழகம் – மலையகம்
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates