இலங்கையின் மொத்த தேசிய உற்பத்தி வருமானத்தை ஈட்டித் தருவதில் பெருந்தோட்ட தேயிலை செய்கை முக்கிய இடத்தை வகித்து வருகின்றது. அந்நிய செலாவணியை ஈட்டித் தருவதில் தேயிலை, இறப்பர் தோட்டங்களில் வேலை செய்யும் ஆண், பெண் தொழிலாளர்கள் முக்கிய பங்காற்றி வருகின்றனர்.
பெருந்தோட்டங்களில் தொழில் புரியும் பெண்கள் ஆண்களை போலவே கடின உழைப்பாளிகளாக காணப்படுகின்றனர். காடு, மலையுச்சி என்று ஏறி இறங்கி தேயிலை கொழுந்து பறிப்பது தொடங்கி தேயிலை மலைகளை துப்புரவு செய்தல், பாரம் சுமத்தல் என்ற பல இன்னோரன்ன கடின வேலைகளையும் செய்து வருகின்றனர்.
150 சதுர அடிக்குள் அமைந்த லயன் அறைகளுக்குள் தங்களது வாழ்நாளை கழித்து வரும் மலையக பெண் தொழிலாளர்கள், அதிகாலையில் எழுந்து குடும்ப தேவைகளை பூர்த்தி செய்வதில் தொடங்கி வேலைத்தளம் சென்று பணிகளை முடித்து விட்டு மீண்டும் மாலையில் வீடு வந்தும் இயந்திரமாகவே செயற்பட்டு தங்களது வாழ்நாளை கழித்து வருகின்றனர்.
கடந்த காலங்களை போலன்றி மலையக பெண்கள் கல்வி கற்று அரச துறையில் ஆசிரியர்களாகவும் எழுது வினைஞர்களாகவும் கிராம சேவை உத்தியோகத்தர்களாகவும் உள்ளனர். அதேபோன்று தனியார் துறையிலும் பல்வேறு வகையிலான தொழிற்துறைகளில் கால் பதித்துள்ள இவர்கள் ஆளுமை மிக்கவர்களாக சமூகத்தில் மிளிர்ந்துள்ளனர். எனினும் ஆணாதிக்கம் மிக்க சமூகத்தில் அவர்கள் பல்வேறு சமூக அடக்கு முறைகளுக்கு உட்பட்டே வாழ்ந்து வருகின்றனர்.
பெருந்தோட்டத்துறையில் தொழில் புரியும் பெண்கள் குடும்பத்திலும் சமூகத்திலும் புறக்கணிக்கப்பட்டவர்களாகவே கடந்த இரு நூற்றாண்டுகளாக வாழ்ந்து வருகின்றனர். விதிவிலக்காக ஒருசில இடங்களில் பெண்களின் குரல் ஓங்கி ஒலித்தாலும் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் அவர்கள் கருத்து சுதந்திரம் அற்றவர்களாகவே காணப்படுகின்றனர்.
பாடசாலை கல்வியை க.பொ.த. சாதாரண தரம், உயர்தரத்துடன் நிறைவு செய்து கொள்ளும் அதிகமான மலையக யுவதிகள் கூடுதலாக நகரங்களிலேயே தொழில் வாய்ப்பை தேடிக்கொள்கின்றனர்.
ஆடைத் தொழிற்சாலைகளிலும் புடவை விற்பனை நிலையங்களிலும் ஏனைய வர்த்தக நிலையங்களிலுமே தொழில் புரிகின்றனர்.
அதிகமான யுவதிகள் தலைநகரிலும் ஏனைய பிரதான நகரங்களிலும் இவ்வாறு தொழில் புரிவதன் மூலமாக தோட்டப் புறங்களிலும் ஒரு வகையான புதிய கலாசாரம் உருவாகியுள்ளது. இள வயது திருமணங்கள் அதிகரித்துள்ளதோடு குறுகிய காலத்தில் விவாகரத்து கோரி நிற்கும் சந்தர்ப்பங்களும் அதிகரித்துள்ளன.
ஆடைத் தொழிற்சாலைகளிலும் வர்த்தக நிலையங்களிலும் அதிகளவில் தொழில் புரியும் யுவதிகள் பல்வேறு வகையில் இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். பாலியல் மற்றும் உளவியல் ரீதியான துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாகி வருகின்றனர். முறையான குடும்ப திட்டமிடல்கள் இன்றி நடைபெறும் இளவயது திருமணங்கள் காரணமாக பிறக்கின்ற குழந்தைகளும் உடலியல் குறைபாடுகளுடன் இருப்பதை அவதானிக்க முடிகின்றது.
காலங்காலமாக தலைநகரிலும் ஏனைய செல்வந்தர் வீடுகளிலும் பணியாளர்களாகவும் மலையக சிறுமிகளே அமர்த்தப்பட்டு வருகின்றனர். மலையகத்திலுள்ள இடைத்தரகர்கள் கொள்ளை இலாபம் பெற்றுக்கொண்டு பொது விடயங்களை அறிந்திராக பெற்றோரை கபடத் தனமாக ஏமாற்றுகின்றனர்.
இதன் காரணமாக இளவயது சிறுமிகளின் எதிர்காலம் பாழ்படுத்தப்பட்டு வருகின்றது.
கடந்த காலங்களில் வீட்டு பணிப்பெண்களாக தலைநகரில் கடமை புரிந்த இளவயது பெண்கள் சடலங்களாக மீட்கப்பட்டிருந்தனர். அவர்களின் இறப்பிற்கான உண்மையான காரணங்கள் மறைக்கப்பட்டு வேறு காரணங்களை கூறி சடலங்கள் பெற்றோரிடம் கையளிக்கப்பட்டிருந்தன. இவ்வாறான துன்பியல் சம்பவங்கள் நிகழ்ந்த பின்னரும் இன்றும் கூட தலைநகரிலும் ஏனைய பிரதேசங்களிலும் உள்ள செல்வந்தர்களின் வீடுகளில் மலையகத்தை சார்ந்த இளம்பெண்கள் பணிப்பெண்களாக கடமையாற்றி வருவது கவலைக்குரிய விடயமாகும்.
2000ஆம் ஆண்டிற்கு பிற்பட்ட காலப்பகுதியில் மலையக குடும்ப பெண்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனங்கள் மற்றும் இடைத்தரகர்கள் மூலமாக மத்திய கிழக்கு நாடுகளுக்கு வீட்டு பணிப்பெண்களாக தொழிலுக்கு செல்லும் தொகை அதிகரித்து வருகின்றது. வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்து கொள்ளாது தவறான தகவல்களுடன் கடவுச்சீட்டுக்களை பெற்றுச் செல்லும் இவர்கள் தாம் பணி புரியும் வீடுகளில் பல்வேறு துன்புறுத்தல்களுக்கு உட்பட்டு இடைநடுவே நாடு திரும்புகின்றனர். எவ்வித முன்பதிவையும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் மேற்கொண்டு செல்லாமையால் இவர்களுக்கான இழப்பீடுகளும் கிடைக்காமல் நிர்க்கதி நிலையை அடைகின்றனர்.
தொடர்ந்தும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிலையத்தில் பதிவினை மேற்கொள்ளாது தங்களது சேவைக்காலத்தை நிறைவு செய்யும் வேளையில் முறையான கொடுப்பனவுகளை பெறுவதில் சிக்கலை எதிர்நோக்குகின்றனர். இள வயதுடைய குடும்ப பெண்களே அதிகளவில் வெளிநாடு செல்வதால் அவர்களுடைய பிள்ளைகளை பராமரிப்பதிலும் பிரச்சினைகள் எதிர்நோக்கப்படுகின்றன. வெளிநாடு சென்றவர்களின் பிள்ளைகள் முறையாக பாடசாலை கல்வியை தொடராது இடைவிலகலில் ஆர்வங் காட்டுவதையும் அவதானிக்க முடிகின்றது.
மலையக பெண்களை மையமாகக் கொண்ட அமைப்பு ரீதியான செயற்பாடுகள் மந்த நிலையை அடைந்துள்ளன. தொழிற்சங்கங்கள் ரீதியான மகளிர் அணிகளே தற்போது தேர்தல் கால செயற்பாடுகளை மையமாக கொண்டு தோட்டங்களில் இயங்கி வருகின்றன. நாட்டின் ஏனைய மாகாணங்களில் பெண்களை மையப்படுத்தி மேற்கொள்ளப்பட்டு வரும் சுயதொழில் பயிற்சி நெறிகள், பெண்கள் ஊக்குவிப்பு வேலைத்திட்டங்கள் தலைமைத்துவ மற்றும் குடும்ப திட்டமிடல் செயற்பாடுகள் என்பன மலையகத்தில் மிகவும் பின்னடைவை கண்டுள்ளன.
இதன் காரணமாக மலையகத்தில் அமைப்பு ரீதியான பெண்களின் செயற்பாடு பின்னடைவை கண்டுள்ளது. ஏனைய சமூகங்களுடன் ஒப்பிடுகையில் பெண்களின் அரசியல் பங்குபற்றலும் சமூக அபிவிருத்தி தொடர்பான அமைப்பு ரீதியான பங்குபற்றலும் பூஜ்ஜியமாக உள்ளது. இந்நிலைமை தொடர்ந்து நீடித்தால் மலையக பெண்களின் உரிமைகளுடன் கூடிய எதிர்கால பயணம் கேள்விக்குறியாகி விடக்கூடிய நிலை உருவாகி விடும்.
புதிய அரசாங்கம் பதவியேற்றுள்ள நிலையில் மகளிர் விவகார பிரதி அமைச்சராக திருமதி விஜயகலா மகேஸ்வரன் பதவியேற்றுள்ளார். தான் அமைச்சு பொறுப்பை ஏற்றுக்கொண்ட முதல் நாளிலேயே பெண்கள் அபிவிருத்தி தொடர்பான பல ஆரோக்கியமான விடயங்களில் அக்கறை செலுத்தி நகர்வுகளை மேற்கொண்டிருந்ததை அவதானிக்க முடிந்தது.
வடக்கு கிழக்கு வாழும் சிறுபான்மை தமிழ் பேசும் பெண்களை போலவே மலையக பெண்களும் பெண்ணியம் சார்ந்த பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங் கொடுத்து வாழ்ந்து வருகின்றனர் என்ற உண்மை நிலைவரத்தை மலையகத்தை மையப்படுத்தி இயங்கி வரும் சிவில் சமூக அமைப்புக்களும் அரசியல் தொழிற் சங்கங்களும் பிரதியமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் முன் கொண்டு செல்ல வேண்டும்.
மலையக பெண்கள் எதிர்நோக்கும் பல்வேறு வகையான பிரச்சினைகளை வகை பிரித்து ஆய்வு ரீதியாக புள்ளிவிபரங்களுடன் பிரதியமைச்சுகளுக்கு சமர்ப்பிப்பதன் மூலம் மலையக பெண்கள் நலன் பேணல் தொடர்பாக நல்ல பல ஆரோக்கியமான தீர்மானங்களை அமைச்சின் மூலம் நடைமுறைப்படுத்துவதற்கு இலகுவாக இருக்கும்.
தமிழ் பேசும் சமூகத்தை சார்ந்த ஒருவர் மகளிர் விவகார அமைச்சராக இருப்பதால் சமூக அக்கறையுடன் மலையக பெண்களை அமைப்பு ரீதியாக தலைமைத்துவம் ஏற்று செயற்பட வைக்கும் பணிகளில் அவர் முன்னின்று ஆதரவு வழங்குவார். ஜனாதிபதியின் 100 நாள் வேலைத்திட்டத்திலும் மலையக பெண்களின் அபிவிருத்தி தொடர்பாக புதிய வேலைத்திட்டங்களை முன்னெடுக்க இதன் மூலம் வாய்ப்பு ஏற்படும்.
நன்றி - வீரகேசரி 08.02.2015
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...