ஜனாதிபதி தேர்தல் நாட்டில் ஆட்சி மாற்றத்திற்கு வித்திட்டுள்ளது மட்டுமின்றி இலங்கையின் சுதந்திரத்திற்கு பின்னரான அரசியல் வரலாற்றில் புதிய அரசியல் கலாசாரம் உருவாகவும் வழிவகுத்துள்ளது. இதுவரை காலமும் பல்வேறு கூட்டணிகளுடன் நாட்டை மாறி மாறி ஆட்சி செய்த ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியும் தேசிய அரசாங்கம் என்ற ஒரு குடையின் கீழ் வந்துள்ளன.
பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கி வெற்றி கண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் ஐ.தே.கவின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கவும் தேர்தலுக்கு முந்தைய நாட்களில் ஏற்படுத்தி கொண்ட அரசியல் ரீதியிலான உடன்பாடுகள் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.
அமைச்சரவை நியமனம் தொடங்கி அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு வரையான விடயங்களை 100 நாள் வேலைத் திட்டத்திற்கு அமைவாக செயற்படுத்துவதில் புதிய அரசாங்கம் முனைப்பு காட்டி வருகின்றது. கடந்த கால ஆட்சியில் இடம்பெற்ற இலஞ்ச ஊழல் மோசடிகளை நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்தி சமூகங்களின் கனவான்களாக அரசியலில் கோலோச்சி மக்களை ஏமாற்றியவர்களின் முகத்திரைகளை கிழித்தெறியும் பணியும் தீவிரம் கண்டுவருவதை அவதானிக்க முடிகின்றது.
ஜனாதிபதி தேர்தலில் உறுதி வழங்கப்பட்டு 100 நாள் வேலைத்திட்ட வாக்குறுதிகள் நிறைவு பெற்றதும் நாடு பாராளுமன்ற பொதுத் தேர்தலுக்கு முகங்கொடுக்கவுள்ளது. இந்நிலையில் பொது எதிரணியில் இணைந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வெற்றிக்கு தோள் கொடுத்து தேசிய அரசாங்கத்தில் கெபினட் மற்றும் இராஜாங்க அமைச்சு பதவிகளை பெற்றுக் கொண்ட தொழிலாளர் தேசிய சங்கம், மலையக மக்கள் முன்னணி, இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் என்பவை மலையக மக்களுக்கு வழங்கியுள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றி அவர்கள் மத்தியில் நம்பிக்கையை கட்டியெழுப்ப வேண்டிய தார்மீக பொறுப்பை கொண்டுள்ளன.
மீரியபெத்த மண்சரிவுடன் கூடிய பாரிய மனித பேரழிவும் மலையகமெங்கும் ஏற்பட்ட மண்சரிவு அனர்த்த அபாயங்களும் அதனோடு கூடி இடம்பெற்ற தொழிலாளர் இடம்பெயர்வுகளும் பெருந்தோட்ட மக்களுக்கு தனி வீட்டு வாழ்க்கை முறையின் அவசியத்தை உணர்த்தியுள்ளன. கடந்த அரசாங்கத்தில் மலையக மக்களின் ஏக பிரதிநிதியாக இருந்து செயற்பட்ட இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பல்வேறு முக்கிய அமைச்சு பதவிகளை வகித்திருந்தது.
இருப்பினும், இயற்கை அனர்த்தம் காரணமாக தொடர் லயன் குடியிருப்பு முறை ஒழிக்கப்பட வேண்டும் என்ற வாதம் அனைத்து மட்டத்திலும் வலியுறுத்தப்பட்ட வேளையில் தனி வீட்டு காணியுரிமை தொடர்பாக இ.தொ.கா. மந்தகதியிலேயே நகர்வுகளை மேற்கொண்டது. அத்துடன் பொருளாதார சுமை தீர்க்கப்படவும் ஏனைய உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் உரிய தருணத்தில் நடவடிக்கை எடுக்கத் தவறியது. மாறாக வேறு பல அபிவிருத்திகள் மக்கள் மத்தியில் திணிக்கப்பட்டன. இதன் எதிரொலியாக ஜனாதிபதி தேர்தலில் ஒட்டுமொத்த மலையகமும் தகுந்த பாடத்தை புகட்டி மாற்று தலைமைகளுக்கு சந்தர்ப்பத்தை வழங்கியுள்ளன.
புதிய தேசிய அரசாங்கத்தில் 1994 ஆம் ஆண்டின் பின்னர் மீண்டும் அமைச்சரவை அந்தஸ்துடைய பெருந்தோட்டம் உட்கட்டமைப்பு அமைச்சு உருவாக்கப்பட்டு அதற்கு தொ.தே.சங்கத் தலைவர் பீ. திகாம்பரம் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். கல்வி இராஜாங்க அமைச்சராக வீ. இராதாகிருஷ்ணனும் பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சராக கே.வேலாயுதமும் நியமனம் பெற்றுள்ள அதேவேளை, மலையக அபிவிருத்தி பயணத்தில் கொள்கை ரீதியான மாற்றத்தை ஏற்படுத்துவதற்காகவும் புதிய அரசாங்கத்திலும் தேர்தலுக்கு பின்னர் (பாராளுமன்றம்) உருவாகவுள்ள அரசாங்கத்திலும் தமது தற்போதைய நிலையை தக்க வைத்து கொள்வதற்காகவும் இணைந்து செயற்பட தீர்மானித்துள்ளனர். இவ் உடன்பாட்டை ஏற்படுத்துவதில் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் முழுமூச்சாக இறங்கி 3 அமைச்சர்களிடையேயும் புரிந்துணர்வை ஏற்படுத்துவதில் வெற்றி கண்டுள்ளார்.
புதிய அரசாங்கத்திலுள்ள மலையக அமைச்சர்களின் மூலம் நூறுநாள் அபிவிருத்தி திட்டத்தில் மலையக மக்கள் எவ்வகையான பயன்களை பெறப் போகின்றனர் என அறிய பலரும் ஆவலாக உள்ளனர். மலையக அமைச்சர்கள் சவால்மிகு பொறுப்புக்களை சுமந்து கொண்டு பயணிக்கத் தொடங்கியுள்ளனர் என்பது அவர்கள் வெளியிட்டுவரும் கருத்துக்களிலிருந்து புலனாகின்றது.
இந்திய வம்சாவளிகளாக உள்ள பெருந்தோட்ட மக்கள் இலங்கையில் 200 வருடங்களை கடந்து விட்ட போதிலும் அச் சமூகத்திற்கான இந்திய அரசாங்கத்தின் பங்களிப்பு எந்தளவுக்கு போதுமானதாக இருந்ததென்பது சிந்திக்கக் கூடிய விடயமாகும். மலையக மக்கள் சார்பாக இந்திய அரசாங்கத்திடம் அல்லது உயர்ஸ்தானிகரிடம் பிரதிபலிப்புக்களை மேற்கொள்பவர்களாக கடந்த காலங்களில் இ.தொ.கா. வினரே காணப்பட்டனர் என்பதை கடந்த காலங்களில் அறியக் கூடியதாக இருந்தது.
இந்நிலையில் மலையக மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிலாளர் தேசிய சங்கம், மலையக மக்கள் முன்னணி, ஜனநாயக மக்கள் முன்னணி, இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் என்பவை மலையக அபிவிருத்தியில் கொள்கை ரீதியிலான மாற்றத்தை ஏற்படுத்த முன்வந்துள்ளன. இதற்காக பெருந்தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சு பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு கல்வி இராஜாங்க அமைச்சு ஆகியவற்றுக்கிடையில் இடைத்தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டு மலையகத்தின் தனி வீட்டு திட்டம் தொழில் வாய்ப்பு கல்வித் துறைசார் அபிவிருத்தி திட்டங்கள் என்பவற்றை நடைமுறைப்படுத்தவுள்ளன.
இத்தொழிற்சங்கங்கள் 100 நாள் வேலைத் திட்டத்தின்போது மலையகத்தில் தனி வீட்டு திட்டத்தை நடைமுறைப்படுத்தியே தீருவோமென சபதமிட்டுள்ளன. வீடமைப்பிற்கான காணிகளை பெற்றுக் கொள்வது தொடர்பாக தோட்டங்களை நிர்வகிக்கும் கம்பனிகளின் முதலாளிமார் சம்மேளன முகாமைத்துவ குழுவினருடன் பேச்சு வார்த்தைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.
மலையக தனி வீட்டுத் திட்டத்திற்கு நிச்சயமாக இந்திய அரசாங்கத்தின் ஒத்துழைப்பு இருக்க வேண்டியது அவசியமாகும். கடந்த காலத்தில் வடக்கு கிழக்கில் இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் ஆரம்பிக்கப்பட்ட 50 ஆயிரம் வீட்டு திட்டத்தில் ஒரு தொகை மலையகத்திற்கும் வழங்கப்பட்டது. எனினும், பல்வேறு காரணங்களால் அத்திட்டம் முழுமை பெறவில்லை.
இந்நிலையில் புதிதாக நடைமுறைப்படுத்தப்படவுள்ள தனி வீட்டு திட்டத்திற்கு இந்திய அரசாங்கத்தின் உதவியை பெற்றுக்கொள்ள சம்பந்தப்பட்ட மலையக அமைச்சர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புதிய அரசாங்கம் பதவிக்கு வந்து மூன்று வாரங்களே கடந்துள்ள நிலையில் இந்திய இலங்கை நாடுகளுக்கிடையிலான இராஜதந்திர உறவுகள் மிகவும் நெருக்கம் கண்டுள்ளன. இலங்கையில் சீனா கொண்டுள்ள ஆதிக்கத்தை குறைப்பதற்காக இந்தியா பல நலத் திட்டங்களை இலங்கையில் நடைமுறைப்படுத்தவுள்ளது.
இந்திய வம்சாவளி பெருந்தோட்ட மக்கள் கலை கலாசார பாரம்பரிய ரீதியாக இன்றும் இந்தியாவையே அடியொற்றியே வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் மலையக மக்களின் வாழ்வியல் முன்னேற்றத்திற்காக அனைத்து துறைகளிலும் ஒத்துழைப்பை வழங்க வேண்டிய பொறுப்பு இந்திய அரசாங்கத்திற்குள்ளது.
தேசிய அரசாங்கத்தில் மலையக அபிவிருத்தியை ஒருவருக்கொருவர் ஒன்றிணைத்து மேற்கொள்ளும் வகையில் அமைச்சுகள் வழங்கப்பட்டுள்ளன. இம் மூன்று அமைச்சுகளும் எம்மக்களின் உட்கட்டமைப்பு கல்வி மற்றும் தொழில்வாய்ப்பு என்பவற்றின் அபிவிருத்தியில் முன்னுதாரணமான திட்டங்களை வகுத்து செயற்படுவதன் மூலம் மலையகத்திலும் புதிய அரசியல் கலாசாரத்திற்கு வித்திடக் கூடிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் வீடமைப்புத் திட்டங்களை மேற்கொள்வதோடு மட்டும் நின்று விடமால் கல்வித் துறையில் உயர்தர விஞ்ஞானம் மற்றும் கணித பிரிவில் அபிவிருத்தி காண்பதற்கும் புலமைப்பரிசில்களை பெற்று ஆசிரியர்களையும் மாணவர்களையும் இந்தியாவில் பயிற்றுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கைத்தொழில் துறையில் மலையக இளைஞர்களுக்கு சிறந்த பயிற்சிகளை வழங்கும் வகையில் தமிழ் மொழியில் போதிக்கக் கூடிய வளவாளர்களை இந்தியாவிலிருந்து பெற்றுக் கொள்ளவும் கைத்தொழில் பயிற்சி நிலையங்கள் மற்றும் கல்வி கலாசாலைகளை மத்திய மாகாணத்திற்கு வெளியில் மலையக மக்கள் செறிந்து வாழும் ஏனைய மாகாணங்களிலும் ஏற்படுத்தி அனைத்து சமூகங்களும் பயனடையும் வகையில் செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும்.
உயர்கல்வி பட்டப்படிப்பு தொடர்பான இந்திய பல்கலைக்கழகங்களின் கற்கை நெறிகளை மலையக மாணவர்கள் பயின்று வெளிவாரியாக பட்டம் பெறுவதற்குரிய வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட வேண்டும். குறிப்பிட்ட சில மாவட்டங்களை மாத்திரம் ஆய்வு செய்து இந்திய அரசாங்கத்திடம் மலையக மக்கள் சார்பாக உதவியை பெறாமல் முழு மலையகமும் பயனடையும் வகையும் கல்வி, கலாசார மற்றும் பொருளாதார உதவிக்குரிய இந்திய நலத்திட்ட உதவிகள் அடையாளப்படுத்தப்பட வேண்டும்.
இவ்வாறானதொரு நிலைமையை புதிய மலையக தலைமைகள் மேற்கொள்வதன் மூலம் இந்திய அரசாங்கத்தின் உதவிகள் மலையகத்தில் ஆக்கப்பூர்வமான விளைவை ஏற்படுவதற்குரிய சந்தர்ப்பத்தை பெற்று கொடுக்கும்.
தவறும் பட்சத்தில் கடந்தகால நிலைமைகளே மலையகத்தில் நிலைத்திருக்கும். அத்தோடு 'என் மக்கள் போகின்றார்கள். நான் அவர்களை பின் தொடர்கின்றேன்' எனக் கூறும் புதிய தலைவர்கள் மக்களின் அபிலாஷைகளைப் புரிந்து செயற்படுவார்கள் என்ற நம்பிக்கையுண்டு.
நன்றி - வீரகேசரி
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...