வெறுப்பு பேச்சு / Hate Speech. இந்த பேச்சுக்கள் இந்நாட்டு சிறுபான்மை மக்களிடையே உளவியல் ரீதியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இப்பேச்சுக்கு ஹீரோவாக காலம் காலமாக ஒவ்வொருவர் இருந்து வந்திருந்தாலும் சம காலத்தில் சகலரும் அறிந்த Hate Speech ஹீரோவாக விளங்குகிறார் ஞானசார தேரர்.
2013ஆம் ஆண்டளவில் ஆரம்பிக்கப்பட்ட பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளராக விளங்கும் ஞானசார தேரர் கடந்த காலத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் ஆட்சி காலத்தில் தலைதூக்கி பல வெறுப்பான கருத்துக்களை வெளிப்படுத்தி அதன் மூலம் முஸ்லிம் சமூக மக்கள் மத்தியில் ஒரு வெறுப்பையும் கலக்கத்தையும் தோற்றுவித்ததை அவ்வளவு இலகுவில் மறந்து விடமுடியாது. இதன் நீட்சியே இப்போது சமூக மட்டத்தில் ஒரு நிறுவனமயப்பட்டதாகவும் இருக்கின்றது என்றால் மறுப்பதற்கில்லை. அன்றாடம் இடம்பெறும் சில அசம்பாவிதங்கள் மூலம் இதனை நாம் அவதானிக்கலாம்.
ஒருவர் மீது வெறுப்பைத் தோற்றுவிக்கும் வகையில் பேசுவது, எழுதுவது நடந்துகொள்வது பரவலாகக் காணக்கூடியதாக இருக்கிறது என்பது மட்டுமல்ல அதுவே இன, மத, வர்க்க ரீதியானதாக அமையும் போது பல்வேறு சமூக சிக்கல்களை பிரச்சினைகளை ஏன் ஆயுதங்களை ஏந்துவதற்கு கூட தோற்றுவிக்கின்ற நிலைமைகள் காணப்படுகின்றன. முஸ்லிம்களை இலக்காகக் கொண்டு கடந்த காலங்களில் இடம்பெற்ற பெரும்பாலான சம்பவங்களை உதாரணமாகக் குறிப்பிடலாம்.
இலங்கையில் அண்மைக்காலமாக இந்த 'வெறுப்புமிழும் உரைகள்' தொடர்பிலேயே அதிகமாக பேசப்படுகின்றது. இலங்கையைப் பொறுத்தவரையில் 'வெறுப்புமிழும்' உரைகளுக்கோ நடத்தைகளுக்கோ எழுத்துக்களுக்கோ 'ஞானசாரதேரர்' மாத்திரம் சொந்தக்காரர் அல்ல. அதற்கு பல முன்னோடிகள் உள்ளனர். அத்தகைய நபர்கள் பற்றி பட்டியலாக அல்லாமல் அத்தகைய 'வெறுப்பு உமிழும் உரைகள்' பற்றிய சமூக புரிதல்களை அலசுகிறது இந்தவார 'அலசல்'
தேர்தல் முறைகளுக்கான சர்வதேச மன்றம் (IFES) எனும் அமைப்பு அண்மையில் நீர்கொழும்பில் செயலமர்வொன்றை நடத்தியது. இதில் 'வெறுப்பு பேச்சு' குறித்து பல விடயங்கள் பேசப்பட்டது. எந்தளவில் உள்ளூர், வெளியூர் அரசியலில் இது தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது பற்றி கருத்துக்கள் பகிர்ந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. இதனையடுத்து சில குறிப்புக்களை இங்கு சுட்டிக்காட்ட வேண்டிய தேவையும் ஏற்பட்டது.
தேர்தல் காலத்தை மையப்படுத்தியதாகவே உள்நாடு முதல் உலக நாடுகள் வரை இந்தப் பேச்சுக்களுக்கு முன்னுரிமை இருப்பதை நாம் அவதானிக்கலாம். ஆனால், தெற்காசிய நாடுகளில் குறிப்பாக இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் இதன் தீவிரம் தற்போது அதிகரித்தே காணப்படுகின்றது. இலங்கை அரசியல் சூழலில் இந்த வெறுப்பு உமிழும் உரைகள் தேர்தல் காலத்திற்கு அப்பாலும் அரசியலில் நிலைத்திருப்பதை அவதானிக்கலாம். சிங்கள, தமிழ், முஸ்லிம் என பாகுபாடின்றி இருக்கின்றது. ஒரு இனத்தினை சுட்டிக்காட்டி மோசமான வார்த்தைகளில் ஏசுவது என்பதை குறிப்பிடலாம்.
2014 அளுத்கம சம்பவத்தை இதற்கு சிறந்த உதாரணமாகக் கொள்ளலாம். வெறுப்புப்பேச்சு அந்த பெரும் அழிவுக்கு காரணமாக இருந்தது. அதன் தொடர்ச்சி இன்று எவ்வாறு தலையெடுத்துள்ளது என்று அவதானிக்கலாம்.
இந்த hate speech பற்றி மேற்படி செயலமர்வில், தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினரான பேராசிரியர் ரத்னஜீவன் ஹூல் தெரிவித்த கருத்துக்களை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும்.
அவரது வாழ்க்கையில் நடந்த அனுபவங்களையும், இணைத்து அவர் தனது கருத்துக்களைப் பகிர்ந்தார்.
''வாய்பேச முடியாத ஒருவர் சைக்கிள் திருத்தும் கடை ஒன்றை வைத்திருந்தார். அவருக்கு ஒரு பெயர் இருக்கும். ஆனால், அவரை ஊமையன் என்றே பலரும் அழைத்தனர். அவர் கோபமுற்று பேசமுடியாத நிலையில் அவரது மொழியில் கோபமாக சத்தமிட அதனை பார்த்த ஏனைய இளைஞர்கள் சிரித்தனர். மகிழ்ந்தனர். இந்த சம்பவத்தின் பின்னணியில் உள்ள வெறுக்கத்தக்க விடயங்கள் பற்றி நாம் சமூக பார்வையில் சிந்திக்கிறோமா?
அதேபோல சிறுவயதில் போலியோ நோயினால் பாதிக்கப்பட்ட ஆசிரியர் ஒருவர் நடத்திய பள்ளிக்கூடம் 'சோத்தி பள்ளிக்கூடம்' என்றழைக்கப்பட்டது. ஆனால், அவர் இறந்து பல வருடங்கள் கடந்தும் அதனை அதே பெயரிலேயே அழைக்கும் மனப்பாங்கே நமது சமூகத்தில் காணப்படுகின்றது.
ஊடகங்களில் குறிப்பாக சமூக வலைத்தளங்களில் இன, மத, சாதி ரீதியாக வெறுப்புமிழும் வார்த்தைப் பிரயோகங்களுடன் எழுதுவதை நாம் அவதானிக்கலாம். அரசியல் சூழலில் வெறுப்புமிழும் விதத்தில் பேசப்படுகின்ற விடயங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகின்றது. தற்போதும்கூட வேட்பாளர் தெரிவுகளில் சாதியம் பேணப்படும் நிலையும் இருக்கின்றது என்பதை பேராசிரியர் சுட்டிக்காட்டத் தவறவில்லை.
பெண்கள் அரசியல் ரீதியாக ஈடுபாடு குறைவாக இருப்பதற்கு காரணம் அவர்களை இலகுவில் பால் அடிப்படையில் வெறுப்பேற்படுத்தும் விதமாக திட்டிவிடும் போது அவர்கள் அதற்கு அஞ்சுவதாகும். குறிப்பாக சிறுபான்மை இனத்தை நோக்கிய வெறுப்புமிழும் வார்த்தைகளுக்கு/ எழுத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் தமிழ் ஊடகங்கள் சிறுபான்மையினருக்குள்ளேயே மத, சாதி ரீதியாக உமிழ்படும் வார்த்தைகள் அடங்குவதை கவனத்தில் கொள்வது குறைவாகவே இருக்கின்றது. இதுபோன்ற பல விடயங்களை இங்கு பகிர்ந்து கொண்டார்.
ஞானசார தேரர் பல வெறுப்புமிழும் வார்த்தைகளால் மற்றைய இனத்தையோ மதத்தையோ நிந்திக்கும் உரைகளுக்கும் நடத்தைகளுக்கும் வழங்கப்படுகின்ற முக்கியத்துவம் அதே சம காலத்தில் இன, மத ஒற்றுமைக்காக உழைக்கும் பேசும் மதகுரு இருப்பாராயின் அவருக்கு முக்கியத்துவம் வழங்குகின்றதா?
எது எவ்வாறாயினும் இத்தகைய வெறுப்புமிழும் உரைகளைத் தடுக்கும் தனியான சட்டங்களைக் கொண்டு வருவதனால் மாத்திரம் அதனை நிறுத்தி விட முடியாது. இப்போது இருக்கின்ற சட்டங்களின் அடிப்படையில் கைது செய்வதற்கு போதுமான ஏற்பாடுகள் இருந்தும் அது 'ஞானசார 'விடயத்தில் அசாத்தியமற்று இருப்பதை இன்றைய இலங்கை அரசியல் சூழலில் அவதானிக்கலாம்.
பொலிஸ்மா அதிபர் அவரை எப்படியாவது கைது செய்வோம் என சூளுரைக்கின்ற போதிலும் 'செய்து காட்டுங்கள்' என்ற தொனியில் தேரர் சவால் விடுத்துள்ளார். இந்நிலை இருந்தால் வெறுப்புப்பேச்சுக்கு எப்படி முற்றுப்புள்ளி வைக்க முடியும்?
ஒருபுறம் மதச்சுதந்திரம், பேச்சுச் சுதந்திரம் என்பதனை அரசியலமைப்பு ரீதியாக உறுதிப்படுத்திக்கொண்டு மறுபக்கத்தில் அதே மத ரீதியான வெறுப்புமிழும் உரைகளை மட்டுப்படுத்துவது இலகுவானதல்ல.
எந்தவொரு மதத்திற்கும் முன்னுரிமை அளிக்காத வகையிலான அரசியலமைப்பை உருவாக்குவது எனும் தீர்க்கமான முடிவை எட்டாதவரை இலங்கையில் மதத்தின் பெயரில் சிலர் முந்திக்கொண்டு முண்டியடிப்பு செய்வதை தவிர்க்க இயலாது.
அரசியல் கலாசார மாற்றமும் மனோபாவ மாற்றமும் ஏற்படாதவரை எத்தனை சட்டங்கள் இயற்றினாலும் இன நல்லிணக்கம் எட்டாத கனியே. அதேபோல வெறுப்புமிழும் பேச்சையும் நிறுத்த முடியாததாகவே ஆக்கிவிடும்.
நன்றி - வீரகேசரி
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...