தேங்காய் எண்ணையில் இருந்து முள்ளுத்தேங்காய் எண்ணைக்கு - பாகம் - 24)
பெருந்தோட்டக் கைத்தொழிலில் குறிப்பாக தேயிலைக் கைத்தொழிலுடன் தொடர்புடையதாக அண்மையில் வெளிவந்த சில செய்திகள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியவை.
களுத்துறை மாவட்டத்தில் நான்காயிரம் சிறு தேயிலைத் தோட்டங்கள் பாதிப்பு, இதைப்போலவே காலி, இரத்தினபுரி மாவட்டங்களிலும் சிறுதேயிலைத் தோட்டங்கள் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. மறுபுறம் 'தேயிலை செய்கைக்கான 'கிளைபோசைட் ' தடையை நீக்க முயற்சி' என பெருந்தோட்டக் கைத்தொழில் துறை அமைச்சர் விடுத்திருக்கும் செய்தி தேயிலைப் பயிர்ச்செய்கை எதிர்நோக்கும் இன்னுமொரு சவாலை வெளிக்காட்டுகின்றது. இதற்கு பதிலடியாக பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரோ 'தேயிலைக் கைத் தொழிலை மேற்கொள்ள க்ளைபோசைட் அவசியம்தானா'? எனும் பிரசுரமும் செய்தியும் முக்கியத்துவம் பெறகின்றது.
'க்ளைபோசைட்' (Glyphosate) எனப்படுவது ஒருவகை களைநாசினி. தேயிலை மலைகளிடையே வளர்ந்துகிடக்கும் புற்களை கொல்லுவதற்கு காலம் காலமாக பயன்படுத்தப்பட்டு வந்த களைக்கொல்லி மருந்து. வயல் வெளிகளிலும் கூட இந்த மருந்தினை பாவனை இருந்து வந்தது. குறிப்பாக தேயிலைப்பயிர்ச்செய்யும் மலைநாட்டு பகுதிகளில் இந்த மருந்து அதிகளவில் பயன்படுத்தப்படுவதனால் அவை மழைநீரில் கரைந்து சென்று ஆற்றுடன் கலக்கின்றது என்றும், அந்த ஆற்றுநீர் கீழ் மாவட்டங்களில் குடிநீராகப் பயன்படுத்தப்படுவதனால் அதிகளவானோர் சிறுநீரக பாதிப்புக்கு உள்ளாகின்றனர் என்பது தேரரின் வாதம். இது அவரது வாதம் மட்டுமல்ல ஜனாதிபதியின் சொந்த மாவட்டமான பொலநறுவையிலும் அநுராதபுரம் மாவட்டத்திலும் அதிகளவான சிறுநீரக பாதிப்புக்கு நீரில் கலந்திருக்கும் இந்த க்ளைபோசட்டே காரணம் என கண்டறியப்பட்டுள்ளது.
நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளை நோக்கி செயற்படும் சனாதிபதி செயலணியில் மிக முக்கியமான அம்சமாக இந்த சிறுநீரக நோயினைக் கட்டுபடுத்தவதை இலக்காகக் கொண்டுள்ளது. இதன் ஒரு அங்கமாக 'க்ளைபோசைட்' எனப்படும் களைநாசினி இப்போது இலங்கையில் தடை செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில்தான் பெருந்தோட்ட கம்பனிகள் 'க்ளைபோசைட்' பாவனை இல்லாமலாக்கப்பட்டதால் தங்களால் தோட்டங்களை பராமரிக்க முடியாத நிலை எற்பட்டுள்ளதாகவும் எனவே தேயிலைக் கைத்தொழிலுக்கு மாத்திரம் அந்த மருந்தினை பாவிப்பதற்கு அரசு அனுமதி அளிக்கவேண்டும் எனும் கோரிக்கையை பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் நவீன் திசாநாயக்க ஊடாக அரசாங்கத்தை நாடியுள்ளது.
அரசாங்கத்தின் ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரும் சனாதிபதியின் ஆலோசகர்களில் ஒருவருமான அத்துரலியே ரத்தன தேரர் க்ளைபோசைட் பாவனையை அனுமதிக்க முடியாது என திட்டவட்டமாக தெரிவிப்பதோடு 'க்ளைபோசைட்' பாவனையை கண்டிக்கும் தனிப்பட்ட துண்டு பிரசுரங்களையும் செய்திகளையும் வெளியிட்டு வருகிறார்.
செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நடாத்திய அத்துரலியே ரத்தன் தேரர், நெற்செய்கையில் ஈடுபடுவோர் 'க்ளைபோசைட்' பாவனையில்லாமல் அதனை மேற்கொள்ள முடியும் என உறுதிப்படுத்தியிருக்கும்போது, தேயிலைப் பயிர்ச்செய்கையில் ஏன் அதனைத் தவிர்க்க முடியாது என கேள்வி எழுப்பியுள்ளார். அரசியல் லாபங்களுக்காகவும் பல்தேசிய இரசாயன கம்பனிகளின் நிகழ்ச்சி நிரலுக்கும் உட்பட்டே க்ளைபோசைட்டை மீண்டும் பாவனைக்கு கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக குற்றம் சாட்டியுள்ளார்.
பெருந்தோட்ட கம்பனிகள் மாத்திரமே இதனை கோரி நிற்கின்றன. தேயிலை உற்பத்தியில் 40 சதவீதமான பங்களிப்பை மாத்திரமே பெருந்தோட்டக்கம்பனிகள் வழங்குகின்றன. மொத்த தேயிலை எற்றுமதியில் 25 சதவீதம் மர்திரமே பெருந்தோட்டத் தேயிலை கம்பனிகளில் இருந்து பெறப்படுகின்றது. தேயிலை உற்பத்தியின் 60 சதவீதம் சிறுதேயிலைத் தோட்ட உடமையாளர்களிடம் இருந்தே பெறப்படுவதுடன் ஏற்றுமதி வருமானத்தின் பெரும்பங்கு சிறு தேயிலைத் தோட்ட உடமையாளர்களிடம் இருந்தே பெறப்படுகின்றது என்று கூறியுள்ள அத்துரலியே ரத்தன தேரோ பெருந்தோட்ட கம்பனிகளால் தோட்டங்களைக் கொண்டு நடாத்த முடியாது போனால் அவற்றை திரும்பவும் அரசாங்கத்துக்கு ஒப்படைத்துவிட்டுச் செல்லட்டும் எனவும் சாடியுள்ளார்.
'க்ளைபோசைட்' விவாகாரம் மாத்திரமல்லாது இந்த புள்ளிவிபரங்களுக்குள் அடங்கியிருக்கம் இன்னுமொரு பக்கத்தையும் நாம் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டியள்ளது. ஏற்கனவே இந்தத் தொடர் பத்தியில் 'திசை மாறும் தேயிலை' எனும் தலைப்பில் இது பற்றி எழுதப்பட்டது. களுத்துறை மாவட்டத்தில் மாத்திரம் நான்காயிரம் தோட்டங்கள் பாதிப்பு என்கிற செய்தி அங்கு தேயிலைக் கைத்தொழில் எவ்வாறு முன்கொண்டு செல்லப்பட்டுள்ளது என்பதை காட்டுவதாக உள்ளது.
பெருந்தோட்டக் கம்பனிகள் தங்களது தேயிலை மலைகளில் புற்களைக் கொல்வதற்கு (களையகற்ற) க்ளைபோசைட் பாவிக்க கோரினால் சிறுதேயிலைத் தோட்டங்களில் எவ்வாறு இது மேற்கொள்ளப்படுகின்றது என்பது தொடர்பாக சிந்திக்க வேண்டியுள்ளது. பெரிய பரப்பளவில் அல்லாது தேயிலைத் தோட்டங்கள் சிறிது, சிறிதாக பகிரப்பட்டு அவை சிறுதோட்ட உடமையாளர்களுக்கு மாற்றப்பட்டிருக்கும்போது அவர்களது தோட்டத்தில் புற்களை அகற்றி பராமரிப்பது பாரிய சுமையாக தெரியாது. தவிரவும் அவர்கள் தொடர்ச்சியாக ஒரே தேயிலைத் (தமது) தோட்டத்தில் வேலை செய்துவருவதனால் தோட்டங்களை காடாகவும் விடுவதில்லை.
ஆனால், பெருந்தோட்டக் கம்பனிகள் தொழிலாளர்களை சுழற்சி முறையில் பயன்படுத்தி வருவதனாலும் தோட்டங்கள் பரப்பளவில் பெரிதாக இருப்பதனாலும் தேயிலை மலைகளிடையே வளரும் புல் வகைகள் வளர்ந்து அவை காடாகிவிடுகின்றன. சிறிதுகாலம் பராமரிக்காது விடும்போது அந்த பகுதி தேயிலைகள் இயல்பாகவே காடாகிவிடுகின்றன. எனவே தேயிலைப் பயிர் செய்யும் அளவும் குறைந்து வருகின்றது. பெருந்தோட்டக் கம்பனிகள் இப்போது க்ளைபோசைட் பாவனையை காரணம் காட்டினாலும் ஏற்கனவே தொழிலாளர் பற்றாக்குறையினால் பெருமளவில் தேயிலை மலைகளை பராமரிக்காது விட்டு அவை காடுகளாக மாறி வருகின்றன.
ஹங்குராங்கத்தை பிரதேசத்தில் ஒரு தேயிலைத் தோட்டத்தில் கொழுந்து பறிக்கச் சென்ற தொழிலாளர்கள் அங்கு வளர்ந்து நின்ற புற்களுக்கு மத்தியில் கொழுந்து பறிக்க முடியாத நிலையில் தங்களது சம்பளத்தில் ஒரு பகுதியை களையகற்றும் மருந்துகளுக்காக பயன்படுத்த தோட்ட நிர்வாகத்துக்கு விட்டுக்கொடுத்து கொழுந்து பறித்த சம்பவம் ஒன்று ஏற்கனவே நிகழ்ந்துள்ளது.
தோட்டங்கள் உரிய முறையில் பராமரிக்காமை காரணமாகவும் பெருந்தோட்ட தேயிலைப்பிரதேசங்களில் தேயிலை உற்பத்தி வீழ்ச்சிக்கு காரணம் என்பதை மறுப்பதற்கில்லை. தேரர் சொல்வதுபோல 'தோட்டங்களைப் பராமரிக்க முடியாதுபோனால், அரசாங்கத்துக்கு பொறுப்புக்கொடுக்க வேண்டும்' என கோருகின்ற போது அரச பொறுப்பில் நிர்வகிக்கப்படும் ஜனவசம, எஸ்.பி.சி தோட்டங்களிலும் இதே நிலைமை காணப்படுகின்றது. தனியார் பிராந்திய பெருந்தோட்டக் கம்பனிகளை முந்திக்கொண்டு அரச பொறுப்பில் இயங்கும் கூட்டுத்தாபனங்கள் 'அவட்குரோவர்' முறையை அறிமுகம் செய்துவிட்டன. இப்போது அவை குறித்து கேள்வி எழுப்புகையில் எஞ்சியுள்ள தோட்டங்களையும் விரைவில் 'அவுட்குரோவர்' முறைக்கு மாற்றுவதையே அவர்கள் இலக்காகக் கொண்டு செயற்படுகிறார்கள் என்பது தெரிய வருகின்றது.
எனவே, எந்த பக்கம் சுற்றினாலும் அவுட்குராவர் முறை நோக்கியே அடுத்த கட்டம் வந்துநிற்க போகின்றது. இப்போது அவுட்குரோவர் முறை என்பதன் ஊடாக அல்லது அதன் பேரில் சிறு தேயிலைத் தோட்டங்கள் தனியார் கம்பனிகளுக்கு வழங்கப்படுகின்றன. அத்தகைய கம்பனிகள் 'பயோ டீ' எனப்படும் செயற்கை உரங்கள் , மருந்துகள் அற்ற முறையில் இயற்கை உரம் மட்டும் களையகற்றும் முறைகளைக் கையாண்டு வருகின்றன. இந்த தேயிலை உற்பத்திப் பொருட்களுக்கு உலக சந்தையில் அதிக கிராக்கி நிலவுகின்றது. இவர்கள் க்ளைபோசைட் பாவிப்பதில்லை. எனவே, பெருந்தோட்டங்களில் 'க்ளைபோசைட்' பாவனை என்பது கட்டாயம் இல்லை.
தேயிலைக் கைத் தொழிலை எவ்வாறு முன்னெடுக்கப்போகிறோம் என்கிற திட்டவட்மான நடைமுறைகள் பற்றி சிந்திக்க வேண்டியள்ளது. அவுட்குரோவர் முறை நடைமுறைக்கு வந்தால் தொழிலாளர்கள் பக்கத்தில் இருந்து எழும்பக்கூடிய பிரதான கேள்வி 'புல்லுவெட்டுபர்களுக்கு' 'மருந்தடிப்பவர்களுக்கு', 'உரம் போடுபவர்களுக்கு' சம்பளம் இல்லாதுபோகும் என்பதாகும். ஏனெனில் பறிக்கப்படும் கொழுந்தின் நிறைக்கு அமைவாகவே அவர்களுக்கு வருமானம் கிடைக்கும் என்கின்றபோது அதற்குள் தனியாக புல்வெட்டுவோருக்கு சம்பளம் தீர்மானிப்பதில் சிக்கல் உருவாகும். மறுபறத்தில் பெண் தொழிலாளர்கள் கொழுந்து எடுப்பவர்களாகவும், ஆண் தொழிலாளர்கள் பராமரிப்பாளர்களாகவும் இருக்கின்ற பட்சத்தில் தேயிலைக் கைத்தொழில் முழுக்க முழுக்க பெண் தொழிலாளர்கள் மீது சுமத்தப்படும் ஒரு தொழிலாகவும் மாற்றம் பெறும். இப்போதைக்கு கூட ஆண் தொழிலாளர்கள் அதிகம் தோட்டங்களில் இல்லை.
எனவே தோட்டங்களை பராமரிக்க 'க்ளைபோசைட்' போன்ற நாசினிகள் தேவை என்று காரணம் சொல்லப்படுகின்றது. 'க்ளைபோசைட்' தடையின் ஊடாகவும் தேயிலை தேசிய ரீதியில் முக்கியத்துவம் உடைய விடயமாக மாறியிருக்கின்றது...
(உருகும்)
நன்றி - சூரியகாந்தி
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...