Headlines News :
முகப்பு » , , , , , » பிளாவ்ட்ஸ்கி : இலங்கைக்கு வந்த இன்னொரு சங்கமித்தை? - என்.சரவணன்

பிளாவ்ட்ஸ்கி : இலங்கைக்கு வந்த இன்னொரு சங்கமித்தை? - என்.சரவணன்

“அறிந்தவர்களும் அறியாதவையும்” 15

இலங்கையின் பௌத்த மறுமலர்ச்சி பற்றிய வரலாற்றைப் பற்றி ஆராய்பவர்கள் எப்படி ஒல்கொட்டை தவிர்த்துவிட முடியாதோ அதுபோலத் தான் எலனா பிளாவ்ட்ஸ்கி அம்மையாரையும் (Helena Petrovna Blavatsky 12.08.1831 – 08.05.1891) தவிர்த்துவிடமுடியாது.

ரஷ்யாவில் பிறந்த பிளாவ்ட்ஸ்கி சிறு வயதிலிருந்து தேடல் மிக்க ஒரு பெண்ணாக வளர்ந்து வந்தவர். பிளாவ்ட்ஸ்கிவின் தந்தை ஜெர்மனிய வம்சத்தைச் சேர்ந்த பீட்டர் கான், தாய் எலனா பாதயேவா. தாயார் பல புதினக் கதைகளை எழுதியவர். எலனாவின் பதினொராவது வயதில் தாயார் இறந்து விட்டார்.

தனது 17வது வயதில் வயதில் யெரெவான் நகர ஆளுநர் 41-வயது நிக்கிபோர் பிளவாத்ஸ்கி என்பவரை மணந்துகொண்ட போதும் ஒரு சில மாதங்களிலேயே அந்த உறவு முறிவடைந்தது. அதன் பின்னர் அவர்  மறுமணம் செய்துகொண்டதில்லை.

அதன் பின்னர் அவர் பல நாடுகளுக்கு தனது விஜயத்தை தொடக்கினார். அதற்கூடாக பன்மொழித் திறமையையும் பெற்றுக் கொண்டார். லண்டன் பின்னர் கனடா, அமெரிக்கா, மத்திய - தென் அமெரிக்க நாடுகள் என பயணம் செய்து அங்கிருந்து இந்தியாவுக்கு சென்று அங்கு இரண்டு ஆண்டுகள் கழித்திருக்கிறார். லண்டனில் அவரது மானசீக குருவை சந்தித்து விட்டு மீண்டும் அமெரிக்கா சென்று அங்கு இரண்டு ஆண்டுகள் தங்கியிருந்துவிட்டு மீண்டும் இந்தியா, பின்னர் ரஷ்யா, சிரியா, லெபனான், எகிப்து, கிரேக்கம், இத்தாலி என உண்மையைத் தேடி உலகெல்லாம் அலைந்தவர் அவர்.

1867 ரோமின் வட பகுதியில் பிரான்ஸ், ஸ்பெயின் நாட்டுப் படைகளுக்கு எதிரான போரில் தானும் பங்குபற்றி உடலில் ஐந்து இடங்களில் கடும் காயத்துக்கு உள்ளானதாக ஒரு முறை ஒல்கொட்டிடம் தெரிவித்திருக்கிறார் பிளாவ்ட்ஸ்கி. 1873 இல் அவர் அமெரிக்கா சென்று அங்கு சமூக சேவையில் ஈடுபடத் தொடங்கினார். அங்கு அவர் அதிகமாக இறையியல், ஆன்மிகம் சார்ந்த விடயங்களில் ஆர்வம் கொண்டு தேடல்களை மேற்கொண்டார். 14.10.1874 இல் அவர் முதற் தடவையாக சிவில் யுத்தத்தில் பங்காற்றிய வழக்கறிஞரும் கேர்ணலுமான ஹென்றி ஒல்கொட்டுடன் முதல் சந்திப்பு நிகழ்ந்தது. அதன் பின்னர் 1875 இல் ஒல்கொட்வெளியிட்ட “இன்னோர் உலகத்துக் மக்கள்” (People from the Other World,) என்கிற நூலின் வாசிப்பு நிகழ்வில் கலந்து கொண்டது தான் அவருக்கு புதிய வெளிச்சத்தை ஏற்படுத்திய நிகழ்வு.

7.09.1875 அன்று 17 பேர் பிளாவ்ட்ஸ்கி தங்கியிருந்த வீட்டில் ஒரு கூட்டத்தை நடத்தி அங்கு தான் பிரம்மஞான சங்கத்தை (Theosophical Society) ஆரம்பித்தார்கள். “Theosophical” என்கிற பெயரானது இரண்டு பொருள்களை உள்ளடக்கியது. கிரேக்க மொழியில் Theos என்பது “கடவுள்”, “sohpia” என்பது “ஞானம்” ஆகிய அர்த்தங்களை இணைத்தே “Theosophical” என்று அர்த்தம் கொடுக்கப்பட்டது. தமிழில் “பிரம்மஞான சங்கம்” என்று முதலில் மொழிபெயர்த்தது யார் என்று தெரியவில்லை. இதன் தலைவராக ஒல்கொட்டும் செயலாளராக பிளாவ்ட்ஸ்கியும் தெரிவானார்கள். இந்த அமைப்பின் உத்தியோகபூர்வமான தொடக்க நாளாக கொள்ளப்படுவது 17.11.1875. இனம், வர்க்கம், பால், சாதி, நிறம் போன்ற அசமத்துவமற்ற உலகளாவிய மனிதத்துவத்துக்கான சகோதரத்துவத்தைக் கட்டியெழுப்புதலே அதன் தலையாய பணியென அறிவித்துக் கொண்டார்கள்.

08.07.1878 ஆம் ஆண்டு பிளாவ்ட்ஸ்கி அமெரிக்க குடியுரிமை பெற்ற முதல் ரஷ்யர் ஆனார். ஆன்மீக விஞ்ஞானி (spiritual scientist) என்கிற அமெரிக்க சஞ்சிகைக்கு இருவரும் இறையியல் குறித்த கட்டுரைகளை புதிய நோக்கில் எழுதினர்.

1879 இல் ஒல்கொட்டும் பிளாவ்ட்ஸ்கியும் இந்தியா வந்து சேர்ந்தார்கள். பல மதங்களைப் பற்றிய அறிவைப் பெறுமாறு ஒல்கொட்டின் ஆலோசனையின்படி மதங்கள், வேதங்கள் பற்றி நிறைய கற்றார். கிறிஸ்தவ மதத்தை சுதேசிய சமூக பண்பாட்டுக்கு எதிராக பயன்படுத்தி வந்ததை அவர்கள் இருவரும் எதிர்த்தார்கள். அந்த வகையில் இந்தியாவில் இந்து மதத்தை ஆதரித்து நிற்பதே கிறிஸ்தவ நவ காலனித்துவத்துக்கு எதிரான செயல் வடிவம் என்று நம்பினார்கள். அந்த வகையில் தான் இந்தியாவில் இந்துமதத்தை ஆதரித்து செயல்படுகையில் அவர்கள்; அடிமட்ட இந்து மக்களிடம் செல்வதற்குப் பதிலாக பார்ப்பன இந்துக்களின் நட்புகளால் வழிநடத்தப்பட்டார்கள்.

அவர்கள் ‘இந்து’, ‘இந்திய தேசியம்’, ‘இந்தியப் பண்பாடு’ என்ற கருத்தாக்கத்தை முன்வைத்தார்கள். அதன் விளைவாக சமஸ்கிருதத்தை’ தேசியப் பொது மொழியாக்கி, ‘இந்திய தேசிய உணர்வை’ வளர்த்தெடுக்க வேண்டும் என்றார்கள். பிளாவ்ட்ஸ்கி சமஸ்கிருதத்தை “தெய்வீக மொழி” (“Speech of the Gods” and Sanskrit the divine language)  என்றார்.  சமஸ்கிருத பள்ளிக்கூடங்களையும் பல இடங்களில் அமைத்தார்கள். பிரம்மஞான சங்கத்தின் தலைமையகத்தை 1879 இல் பம்பாய்க்கு மாற்றினார்கள். பின்னர் நிரந்தரமாக சென்னை அடையாரில் பெரிய நிலமொன்றை வாங்கி அங்கேயே அதன் தலைமையகத்தை அமைத்துக் கொண்டார்கள். அப்போது ஆசியாவிலேயே மிகப்பெரிய ஆலமரமாக கருதப்பட்ட,அடையாறு ஆலமரத்தின் கீழ் அமர்ந்து பிரம்மஞான சங்கத்தின் முக்கிய முடிவுகள் பல எடுக்கப்பட்டன. ஒல்கொட் பிரச்சாரங்களில் ஈடுபட்டிருந்த வேளைகளில் பிளாவ்ட்ஸ்கி “பிரம்மஞானி” (The Theosophist) என்கிற சஞ்சிகையை வெளியிடுவதில் தீவிரம் காட்டினார். 

இந்து, இந்துத்துவம், இந்திய தேசியம், இந்திய நாகரிகம் போன்ற கருத்தாக்கங்களின் மூலவர்கள் இந்த இருவரும் தான் என்கிறார் பிரபல மார்க்சிய அறிஞர் எஸ்.வீ.ராஜதுரை.  

இந்தியாவில் ‘ஆரிய வர்க்கத்தைச் சார்ந்தவர்கள்’ என்ற பெருமிதத்தை உருவாக்குவதே தமது பிரதான நோக்கம் என்று புறப்பட்டு இயங்கத் தொடங்கியவர்களுடன் அயர்லாந்து நாட்டிலிருந்து இந்தியா வந்த அன்னிபெசன்ட்டும் இணைந்து கொண்டார். பார்ப்பனர்கள் இதனால் பூரித்து மகிழ்ந்தார்கள்.

ஆனால் இந்துத்துவத்தின் மீதான இறையியல் பார்வையை விட அவர்களை பின்னர் கவர்ந்தது பௌத்தமே. அதன் விளைவாக அவர்கள் தென்னிந்தியாவில் அயோத்திதாசர் போன்றோருடன் சேர்ந்து தலித் மக்கள் மத்தியில் பௌத்தமதப் பணிகளில் ஈடுபட்டார்கள்.

இந்தியாவில் எப்படி இந்துத்துவ பார்ப்பன குழாமினரின் செல்வாக்குக்கு ஆரம்பத்தில் உட்பட்டு தமது செயல் திட்டங்களை வகுத்தார்களோ அது போலத் தான் இலங்கையிலும் நிகழ்ந்தது. சிங்கள-பௌத்த மேட்டுக்குடியினரின் செல்வாக்கு தான் இவர்களுக்கு மூலாதார வழிகாட்டியாக இருந்திருக்கிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது.


இலங்கையின் நிகழ்ந்த “பாணந்துறை விவாதத்தைத்” தொடர்ந்து இலங்கை வரத் தீர்மானித்த ஒல்கொட்டும், பிளாவ்ட்ஸ்கியும் குணானந்த தேரோவுக்கு பிரம்மஞான சங்கத்தைப் பற்றி விளக்கப்பட்ட கடித்தத்துடன் பிளாவ்ட்ஸ்கி எழுதிய “Isis Unveiled” என்கிற இரு தொகுதிகளைக் கொண்ட பெரிய நூல்களையும் அனுப்பினார்கள்.  கடிதத்தையும் நூலின் சாராம்சத்தையும் சிங்களத்துக்கு மொழிபெயர்த்த குனானந்த தேரர் அதனை நாட்டின் பல பாகங்களுக்கும் விநியோகித்தார்.  இந்த இருவரும் 1880, மே 17 அன்று காலியில் பெருமளவு மக்களின் மேளதாள வரவேற்புடன் இலங்கை வந்தடைந்தனர். ஜூன் 17 இல் பிரம்மஞான சங்கத்தை காலியில் அமைத்தனர். 

அயோத்திதாசரை இலங்கைக்கு அழைத்து வந்து அவருக்கும் சுமங்கல தேரரின் மூலம் பஞ்சசீல தீட்சையளித்து (1890) இல் பௌத்தராக்கினார் ஒல்கொட்.

பௌத்தத்தில் இணைந்ததாக அமெரிக்காவிலேயே அவர் அறிவித்துக்கொண்டபோதும் காலியில் உள்ள விஜயானந்தா விகாரையில் 19.05.1880 அன்று ஒல்கொட் மற்றும் எலேனா பிளாவ்ட்ஸ்கி ஆகிய இருவருக்கும் பஞ்சசீல தீட்சையளிக்கப்பட்டது. அவர்கள் பௌத்த ஒழுக்க பிரமாணங்களை எடுத்து தேரவாத பௌத்தத்தை தழுவிக்கொண்டனர். அவர்கள் இருவரும் பஞ்சசீலத்தை ஏற்றுக்கொண்டு பிரமாணம் செய்வதாக ஒல்கொட் எழுதிக் கொடுத்த கடிதம் இன்றும் அங்கு காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கிறது.  பிளாவ்ட்ஸ்கி பௌத்த மதத்தைத் தழுவியபோதும் அவர் தனது முன்னைய மதமான ரஷ்ய ஓர்த்தொடொக்ஸ் மதத்திலிருந்து முற்றாக வெளியேறவில்லை என்கிற ஒரு விமர்சனத்தை வைப்பவர்களும் உளர்.
பிளாவ்ட்ஸ்கியும், ஒல்கொட்டும் பௌத்தத்துக்கு மாறியதை தனது கைப்பட எழுதிக்கொடுத்த ஒல்கொட்டின் கடிதம்

அநகாரிக தர்மபாலவின் பெயர் மாற்றத்திலும். பௌத்த செயற்பாடுகளில் ஈடுபட புறப்பட்டதன் பின்னணியிலும் பிளாவ்ட்ஸ்கியின் வழிகாட்டல் பற்றி அநகாரிகர் பற்றிய பல நூல்களில் காணக்கிடைக்கின்றன. தனது 14வது வயதில் பிளாவ்ட்ஸ்கியை சந்தித்தது பற்றியும் பின்னர் அவரின் வழிகாட்டலால் குடும்பத்தையும் எதிர்த்துக்கொண்டு அரசாங்க லிகிதர் உத்தியோகத்தையும் உதறித் தள்ளிவிட்டு சென்னை அடையாறுக்கு பௌத்த பணிகளுக்காக பயணித்ததைப் பற்றியும் கூட பிற்காலத்தில் அநகாரிகர் தனது சுயசரிதத்தில் விரிவாக எழுதியிருக்கிறார்.

பிரம்மஞான சங்கம் கிருஷ்ண வழிபாட்டை வலியுறுத்தியதாக அநகாரிக தர்மபால விமர்சித்திருந்தார். இது பற்றிய விபரங்களைத் தருகிறார் “வெள்ளை பௌத்தன்” (The White Buddhist: The Asian Odyssey of Henry Steel Olcott - Prothero, Stephen) என்கிற நூலை எழுதிய ப்ரோதேரோ ஸ்டீபன். பௌத்த மதத்தைத் தழுவிய முதல் அமெரிக்கர் ஒல்கொட் என்று இதற்கு முன்னர் பார்த்தோம்.

பிளாவ்ட்ஸ்கியின் எழுத்துக்களில் ஆரியர்கள் பற்றிய அவரது அபிப்பிராயங்கள் கவனிக்கத்தக்கது.

இந்துத்துவத்தின் குறியீடாகவும், இந்தியாவின் தீவிர இந்த்துத்துவ சக்திகள் பயன்படுத்தும் சின்னமாகவும் கொள்ளப்படும் சுவஸ்திகா சின்னத்துக்கு இந்தியாவில் புத்துயிர்ப்பைக் கொடுத்தவரும் பிளாவ்ட்ஸ்கி தான். அவர் அதற்கு கொடுத்த விளக்கம்; அது இரண்டு S கள் ஒன்றையொன்று குறுக்காக நடுவில் சந்தித்துக் கொள்ளும்போது உருவாகும் சமநிலையைக் குறிக்கிறது என்றும், சகலவற்றுக்கும் ஒரு நேரெதிர் இருக்கிறது என்கிற அர்த்தத்தை அது தருகிறது என்றும் ஒன்றை ஒன்று சந்தித்து “தன்னை உணர்தல்” என்றும் விளக்கம் கொள்ளலாம் என்கிறார். அதனை அவர் ஆரியத்தின் சின்னமாக கட்டுரைகளில் நிறுவுகிறார். இதே குறியீட்டு அடையாளத்தைத் தான் ஹிட்லர் தனது “ஆரிய” நாசிசத்தின் சின்னமாகவும் பின்னர் ஆக்கிக்கொண்டார். 

பிரம்மஞான சங்கத்தின் உத்தியோகபூர்வ சின்னத்தில் சுவஸ்திகாவையும் ஆரம்பத்திலேயே சேர்த்துக்கொண்டார் பிளாவ்ட்ஸ்கி அந்த சின்னத்தைச் சுற்றி “உண்மையை விட உயர்ந்த மதமொன்றில்லை” (There is no religion higher than truth) என்கிற வாசகம் பொறிக்கப்பட்டிருக்கும்.

இத்தகைய அவரின் வியாக்கியானங்களை விமர்சிக்கும் “ஆரிய இந்து கட்சி” (Arya Hindu Party) பிளாவ்ட்ஸ்கியை “நாசிகளையும் இந்துக்களையும் கோர்த்து விட்ட சூனியக்காரி என்று விமர்சித்தது”. 

இந்த போக்கைக் காணும் போது பிளாவ்ட்ஸ்கி இந்துத்துவத்துக்கு நெருக்கமாகவும், ஒல்கொட் பௌத்தத்துக்கு நெருக்கமாகவும் இருந்திருக்கிறார்கள் என்றே தோன்றுகிறது.

ஒரு புறம் இந்துத்துவத்தை பலப்படுத்தவும், மறுபுறம் சாதிய ஒழிப்பையும் ஒரு சேர மேற்கொள்ள முடியும் என்கிற அவர்களது முரண்நகையை இன்றும் பலர் விமர்சிக்கவே செய்கின்றனர். ஆனாலும் அவர்களால் உருவாக்கப்பட்ட சாதியத்துக்கு எதிரான சக்திகளின் வகிபாகத்தை தலித் மக்கள் அனுபவிக்கவே செய்தார்கள்.

தந்தை பெரியார் பிரம்மஞான சங்கத்தின் போக்கை விமர்சித்தார். 23.6.1929, குடி அரசு பத்திரிகையில் அவர் இப்படி எழுதினார்.

“தியசாபிகல் சொசைட்டி என்பதாகவும் பிரம்ம ஞான சங்கம் என்பதாக ஒரு சங்கம் நமது நாட்டில் பார்ப்பனிய மதத்தையும் ஆதாரங்களையும் அத்திரவாரமாகக் கொண்டு 30-40 வருஷ காலமாக இந்தியாவில் செல்வாக்குப் பெற்றுவரும் விஷயம் யாவருக்கும் தெரிந்ததாகும்.
பார்ப்பன மதத்தையும் ஆதாரங்களையும் அஸ்திவாரமாகக் கொண்டு வேறு எவ்விதக் கொள்கையுடன் ஏற்படுத்தும் சங்கமோ, இயக்கமோ ஆனாலும் பார்ப்பனர்கள் அதை எவ்விதத்திலும் ஆதரித்தே தீருவார்கள். ஏனெனில் பார்ப்பன மதத்திற்கு மற்றொரு ஆதரவும் உபகரணமும் கிடைத்தது என்கின்ற எண்ணத்தோடு அதை வரவேற்பார்கள். பார்ப்பனர்கள் தமது மதத்திற்கும் ஆதாரத்திற்கும் ஆட்சேபனையோ மறுப்போ கொண்டதான ஏதாவதொன்றைச் சொல்லி விட்டோமேயானால், அது எவ்வளவு நன்மையும் உயர்ந்த தத்துவத்தையும் கொண்ட தானாலும் அவற்றை எப்பாடுபட்டாவது ஒழித்துவிட முயற்சி செய்ய வேண்டியது பார்ப்பனர்கள் கடமையும் வழிவழிச் செய்கையுமாகும்.
உதாரணமாக, புத்தமதம், சமணமதம் போன்ற ஒழுக்கமும் ஜீவகாருண்யமும் முதன்மையாகக் கொண்ட அறிவார்ந்த மதங்கள் எல்லாம் நமது நாட்டில் இருக்கின்ற, இடம் தெரியாமல் போனதும்; கொலையும், கள்ளும், பொய்யும், புரளியும், ஜீவ இம்சையும், மூடநம்பிக்கையும், முட்டாள்தனமும் கொண்ட மதங்கள் எல்லாம் தலைவிரித்து ஆடுவதுமே போதுமான உதாரணமாகும். இவற்றுள் மேற்கண்ட பிரம்மஞான சங்கம் என்னும் மதமும் ஒன்றாகும்.” என்றார்.

ஒல்கொட்டும் பிளாவ்ட்ஸ்கியும் இலங்கையிலும் கிறிஸ்தவ மிஷனரிமாரின் மத மாற்றத்துக்கும் கிறிஸ்தவ மதத்தின் ஏகபோக முயற்சிகளுக்கும் எதிராக செயற்பட்டார்கள். அதை எதிர்கொள்ள இந்தியாவில் எப்படி இந்துத்துவத்தை ஆதரித்தார்களோ அதுபோல இலங்கையிலும் பௌத்தத்தை சற்று கண்மூடித்தனமாக ஆதரித்தார்கள் என்றும் கூறலாம். அதனால் தானோ என்னவோ இலங்கையில் இருந்த ஏனைய மதங்களின் நலன்களில் அவர்கள் அவ்வளவு அக்கறை காட்டவில்லை. மிஷனரி பாடசாலைகளுக்கு எதிராக பௌத்த பாடசாலைகளை நிறுவுவதற்கான “கல்வி நிதியத்தை” ஆரம்பித்த போது கூட அவர்கள் கிறிஸ்தவத்துக்கு மாற்றாக பௌத்தத்தை முன்னிறுத்தினார்களே தவிர இந்து, முஸ்லிம் சுதேச மதத்தவர்கள் குறித்து அசட்டயாகவே இருந்திருக்கிறார்கள்.

இந்தியாவில் இந்து மதத்தின் அழுக்குகளை நீக்கி சீர்திருத்தும் இலக்கில் பயணித்த இவர்கள் இலங்கையில் பௌத்தத்தை சீர்திருத்தும் இலக்கில் இருக்கவில்லை. மாறாக இவர்களால் உருவாக்கப்பட்டவர்கள் பௌத்தர்கள் அல்லாதவர்கள் மீது வெறுப்புணர்ச்சிக்கு பழக்கப்பட்டார்கள். அதன் நீட்சியே பௌத்தர்கள் பின்னர் சிங்கள பௌத்தர்களாகக் குறுகி “சிங்களம்” அல்லாதவர்கள், “பௌத்தர்” அல்லாதவர், “சிங்கள - பௌத்தர்” அல்லாதவர்கள் மீது பிற்காலத்தில் பாய்ந்து இலங்கையின் இனப்பிரச்சினையை கூர்மையடையும் வரை கொண்டு சென்றது.

மகாத்மா காந்தியின் தத்துவார்த்த வளர்ச்சியிலும் பிரம்மஞான சங்கத்தின் பாதிப்பு நிறையவே இருந்திருக்கிறது. அவர் லண்டனில் கற்றுக்கொண்டிருந்த போது பிளாவ்ட்ஸ்கி, அன்னி பெசன்ட், ஒல்கொட், ஆகியோரின் தொடர்பைப் பெற்றதன் பின்னர் 26.03.1891 அன்று லண்டனில் இயங்கிய பிரம்மஞான சபையின் உறுப்பினராகச் சேர்ந்தார்.

பௌத்த பாடசாலைகள் உருவாக்கப்பட்டிருந்த போது பிளாவ்ட்ஸ்கியின் முயற்சியால் பௌத்த பெண்கள் பாடசாலைகள் அமைக்கப்பட்டன. இலங்கையில் தரம் மிக்க மூன்று பௌத்த கல்லூரிகளையும் 200க்கும் குறையாத பௌத்த பாடசாலைகளை அமைத்த பெருமை பிரம்மஞான சங்கத்தைச் சேரும்.

ஒல்கொட்டின் கிறிஸ்தவ எதிர்ப்புப் போக்குக்கு பிளாவ்ட்ஸ்கியின் வகிபாகம் உண்டு. அதேவேளை கிறிஸ்தவ பாணியில் பௌத்த மறுமலர்ச்சியை முன்னெடுத்தார் என்கிற குற்றச்சாட்டு உண்டு. கிறிஸ்தவ ராஜரீக (ரோயல்) கல்லூரிக்கு நிகராக ஆனந்தா, நாலந்தா போன்ற பௌத்த ராஜரீக கல்லூரியை நிறுவியது, கிறிஸ்தவ ஞாயிறு பாடசாலைக்குப் நிகராக பௌத்த மறைகல்வி (தஹாம் பாசல்) போன்றவற்றை நிறுவியது, கிறிஸ்மஸ் தபால் அட்டைகளைப் போல வெசாக் தபால் அட்டைகளை அறிமுகப்படுத்தியது, கிறிஸ்தவ கெரோல் ஊர்வலத்தின் உள்ளடக்கத்தைப் போல பௌத்த பெரஹர ஊர்வலத்தை ஆக்கியமை விமர்சிக்கப்படவும் செய்தது. இத்தகைய போக்கு ஒல்கொட்டுடன் கணிசமான முரண்பாடுகளையும் தோற்றுவித்திருக்கிறது. இந்தப் போக்கைத் தான் ஒல்கொட்டை எதிர்க்கும் நளின் டீ சில்வா போன்ற சிங்கள பௌத்த கடும் தேசியவாதிகள் “ஒல்கொட் பௌத்தம்” என்றும் “புரட்டஸ்தாந்து பௌத்தம்” என்றும் விமர்சிக்கிறார்கள்.

ஆனந்தா கல்லூரி 1885 இல் உருவாகுமுன்னரே பிளாவ்ட்ஸ்கி இந்தியாவிலிருந்து ரஷ்யாவுக்குத் திரும்பி அங்கு இறையியல் சார்ந்த ஏராளமான கட்டுரைகளையும் நூல்களையும் எழுதினார். அவரது “15 தொகுப்பு” நூல்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை. இறையியல் கற்கைகளிலும் அவை அதிகம் பயன்படுத்தப்படுபவை. அவரின் பெயரில் உலகெங்கும் பல அமைப்புகள் இயங்குகின்றன. அவரது பணிகள் இலங்கையை விட இந்தியாவிலேயே அதிகம் மேற்கொள்ளப்பட்டிருந்ததால் இந்தியாவில் பௌத்தம், தலித்தியம், இறையியல் போன்றவற்றை ஆராய்பவர்கள் பிளாவ்ட்ஸ்கியை தவிர்த்துவிட முடிவதில்லை.


பிளாவ்ட்ஸ்கி இந்தியாவிலிருந்து முதலில் இத்தாலி வந்து சேர்ந்தார். பின்னர் அங்கிருந்து ஜேர்மனில் இருந்தபடி பிரசித்திபெற்ற நூலான “இரகசிய மதக் கோட்பாடு” (The Secret Doctrine) என்கிற நூலை எழுதினார். 1886 ஜூலையில் அவர் பெல்ஜியத்துக்கு குடிபெயர்ந்தார். 1887 மே மாதம் லண்டனுக்கு இடம்பெயர்ந்து அங்கிருந்த பிரம்மஞான சங்கத்தை காத்திரமாக இயக்கினார். பிரம்மஞான சங்கத்தின் ஐரோப்பிய தலைமையகமாக லண்டனை ஆக்கிக்கொண்டார்.  08.05.1891 அன்று லண்டனில் கடும் காய்ச்சலினால் மரணமானார். அவரது உடல் லண்டனிலேயே தகனம் செய்யப்பட்டது. 

“உண்மையை விட உயர்ந்த மதமொன்றில்லை” என்று புறப்பட்ட  பிளாவ்ட்ஸ்கியும், ஒல்கொட்டும் முன்வைத்த “பிரம்மஞான” கோட்பாட்டை இன்னொரு மதத்தைப் போல பலர் பின்பற்றத் தொடங்கினர். 20ஆம் நூற்றாண்டில் உலகம் முழுவதும் பரவலாக செல்வாக்கு பெற்ற அந்த சிந்தனை இறையியல் பற்றிய ஆய்வுகளுக்கு ஒரு முன்னோடி என்றே கூறவேண்டும். ஆன்மீகத்துடன், விஞ்ஞானத்தையும் கலந்து தேடிய அவரின் போக்கை ஒரு மர்மமாகவே ஆங்கில ஆய்வாளர்கள் பலர் காண்கின்றனர்.

பிளாவ்ட்ஸ்கியும், ஒல்கொட்டும் இலங்கையின் மதத்துவத்தின் வாயிலாக இனத்துவத்தின் திசைவழியில் திருப்புமுனையை ஏற்படுத்தியதில் அவர்கள் அறியாமலேயே பங்களித்திருப்பவர்கள். அவர்கள் ஆரியம், இந்துத்துவம், சமஸ்கிருதம், சுவஸ்திகா போன்றவற்றை இந்தியாவில் பலப்படுத்தினார்கள். இலங்கைக்கு வந்து சிங்கள பௌத்த தேசியத்தின் உருவாக்கத்துக்கு வழிகோலினார்கள். அவர்களின் பங்களிப்பால் எதிர்கால இந்தியாவில் இந்துத்துவமும் / பார்ப்பணியமும் இலங்கையில் சிங்களமும் பௌத்தமும் உச்ச மேலாதிக்கங்களாக வடிவமெடுக்கும் என்று நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள். சிங்கள - பௌத்த மேலாதிக்கப் போக்குக்கு தாமும் எதிர்காலத்தில் பங்காளிகளாகப் போகிறோம் என்பதை அறிந்திருக்க மாட்டார்கள். 

நன்றி - வீரகேசரி - சங்கமம்

Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates