2007இல் (யூலை 20,21,22) மலேசியாவில் நடந்த உலகத் தமிழ் பண்பாட்டுப் பேரவை மாநாட்டில் ஆற்றப்பட்ட உரையின் சாராம்சம் – மாநாட்டு மலரிலும் இடம்பெற்ற கட்டுரை
என்.சரவணன்
90களின் ஆரம்பத்தில் விடிவு சஞ்சிகையின் ஆசிரியர் குழுவில் இணைந்து தனது எழுத்துப் பணிகளை ஆரம்பித்த சரவணன் 90களில் சரிநிகர் ஆசிரியர் பீடத்தில் பணியாற்றிவிட்டு தற்போது சுதந்திரப் பத்திரிகையாளராகவும், ஆய்வாளராகவும், விமர்சகராகவும் இருந்து வருகிறார். மார்க்சியம், பெண்ணியம், தலித்தியம் மற்றும் தமிழ்த்தேசியம் சார்ந்த விடயங்களில் அதிகளவு படைப்புகளை தமிழிலும் சிங்களத்திலும் செய்து வந்த இவர் நடைமுறைச் செயற்பாட்டாளரும் கூட. தற்போது புலம்பெயர்ந்து நோர்வேயில் வசித்துவரும் இவர் நோர்வேயிலிருந்து வெளிவந்த பறை என்கின்ற சஞ்சிகையின் ஆசிரியராக இருந்தவர். இவரது நூல்களில், "பெண்களின் அரசியலும் அரசியலில் பெண்களும்" என்கிற நூல், இலங்கையின் பெண்களின் அரசியல் வரலாறு குறித்து தமிழில் பேசப்படுகின்ற ஒரேயொரு விரிவான நூலாக உள்ளது. இலங்கையில் ஒட்டுமொத்த அரசியல் நீரோட்டம் பாசிசத்தை நோக்கி எவ்வாறு நகர்ந்து கொண்டிருக்கிறது என்பது குறித்த கருத்தாக்கங்களில் சமீப காலமாக அதிகளவு தேடல்களை செய்துவருபவர்.
இலங்கையில் ஐந்து வருடங்களுக்கு முன் செய்து கொள்ளப்பட்ட யுத்த நிறுத்த ஒப்பந்தம் உத்தியோகபூர்வமற்ற முறையில் முடிவுக்கு வந்ததாகவே கொள்ளப்படுகிறது. அறிவிக்கப்படாத யுத்தம் இவ்வாறு இடம்பெற்றுக்கொண்டு இருக்கும் நிலையில் முன்னைய காலங்களை விட மோசமான மனித உரிமை மீறல்கள் இடம்பெற்று வருவது அனைத்துலகத்தின் கவனத்தையும் அதன்மீது திருப்பியுள்ளது.
புலம்பெயர்ந்த நாடுகளிலிருந்து தமது ஆத்ம தொடர்பை பேணுவதற்காக சென்றோர் கூட காணாமல் போவதும், கடத்தப்படுவதும், வன்முறைகளுக்கு உள்ளாவதுமாக நிலைமைகள் தொடர்ந்த வண்ணமுள்ளது. இந்நிலையில் வருடாவருடம் கோடைகால விடுமுறைக்கு தாய்நாட்டை காணச் செல்லும் புலம்பெயர்ந்த தமிழர்களின் எண்ணிக்கை கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அதனை கண்கூட காணக்கூடியதாகவும் உள்ளது. தமது கோடைகால விடுமுறைப் பயணத்தை இரத்து செய்தவர்கள் அதிகம். பயணத்துக்காக இவ்வருடம் வேறு நாடுகளை தெரிவு செய்தவர்களின் வீதம் மிகவும் அதிகம்.
என்றாவது ஒரு நாள் நாட்டுக்கு மீளத் திரும்பி வாழலாம் என்கிற கனவு ஏற்கெனவே பொய்த்துவிட்டது என்பதை படிப்படியாக நம்பத்தொடங்கியவர்கள், அவ்வப்போது நாட்டுக்கு விடுமுறை காலங்களில் திரும்பி ஊரையும், உறவினர்களையும் சந்தித்துவிட்டு வருவதில் திருப்தி காண்பவர்களாகவே இருந்து வந்தனர். இந்த நிலையில் அதுவும் எதிர்காலங்களில் வெறுங்கனவாகிப் போவிடுமோ என்கிற ஏக்கமம் பிதியும் இப்போது ஏற்படத் தொடங்கியுள்ளது.
இந்த பின்புலத்தை அடியொற்றியே புலம்பெயர் பண்பாட்டுச் சூழல் பற்றிய ஆய்வுகளை இந்றைய நிலையில் மேற்கொள்ள முடியும்.
இக்கட்டுரையானது இந்த பின்புலத்தின் அடியொற்றிய புலம்பெயர் தமிழ்வழிக்கல்வி குறித்த குறிப்புகள் முன்வைக்கப்படுகின்றன.
-------
பின்புலம் அறுகின்ற காலம்?
1. 80களிலிலேயே அரசியல் நிலைமைகள் காரஃணமாக அதிக புலப்பெயர்வு நிகழ்ந்தன. பாதுகாப்பு உழைப்புமே பிரதான குறிக்கோளாக அப்போது இருந்தது. ஆனால் போகப்போக
சொத்துக்கள். பிரஜை அந்தஸ்து, மனைவி பிள்ளைகள் என குடும்பமாதல், நாட்டின் சூழலிருந்து அந்நியப்பாடு, அந்தந்த நாட்டு வழக்கங்களுடன் ஒன்றிப்பு என்பன போன்ற காரணங்களால் மீண்டும் நாடு திரும்புகை கேள்விக்குள்ளாகியுள்ளது.
2. புதிய தலைமுறையினர் அந்தந்த நாடுகளில் ஒன்றித்துப்போயுள்ளனர். இன்னும் சொல்லப்போனால், தம்மை உறுதியாக நிலைநிறுத்திவிட்டனர் என்கிற நிலை இன்று ஸ்தூலமாக தெரிகிறது. (அதாவது அவர்களை மீண்டும் நாட்டுக்குப் பெயர்ப்பது என்பதானது தாம் தமது மண்ணிலிருந்து பிடுங்கப்பட்ட வேதனைக்கும் இடர்பாடுகளுக்கும் ஒப்பானது)
தமது நெருங்கிய உறவினர்களை சந்திப்பதற்கும், மண்ணை பார்ப்பதற்காகவும் நாடு திரும்பியவர்கள் இன்று பல உறவினர்களையும் வெளிநாடுகளுக்கு கொண்டு வந்து சேர்த்த நிலையில் ஊருக்கு போகத் தேவையில்லை. ”எல்லாரும் இஞ்சையெல்லே இருக்கினம்” என்ற குரல்களைக் கேட்கக்கூடியதாக இருக்கிறது.
முதலாம் தலைமுறையினருக்கு தமது ”மண்ணையும் மக்களையும்” பார்க்கக் கிடைக்கிற சந்தர்ப்பத்தில் பார்த்துவிட்டு வந்தால் அது பெரும் உளப்பலமாக இருக்குமென்கிறார்கள்.
யுத்த நிலைமை தொடர்ந்தாலும் வடக்கு கிழக்குக்கு வெளியில் எங்காவது வீடு வாங்கி வைத்தால் விரும்பிய போது வந்து போகலாம். என்கிற குரல்களும். எப்படியாவது பணத்தை கொண்டுபோய் ஏதாவது துறையில் முதலிட்டால் நாளை பிரயோசனமாக இருக்கும் என்ன செய்யலாம் என்கிற விசாரிப்புகள் என எத்தனையோ குரல்கள்.
(இதில் ஒரு வேடிக்கை) எதிர்காலத்தில் இப்படிப் புலம்பெயர்ந்தவர்கள் நாடு திரும்பப்போவதில்லை என்பதை போராட்டத்தின் தரப்பில் விளங்கிக்கொண்டாலும் அதேவேளை இவர்களின் முதலீடு தேசத்தை கட்டியெழுப்ப பெரும் துணையாக இருக்கும் என்கிற நம்பிக்கை உறுதியாக உண்டு.
நான் சமீபத்தில் இலங்கை சென்றிருந்த போது இந்த நிலைமை நேரில் காண கிடைத்தது. பலரும் பல துறைகளில் முதலிடுவதானது நாளுக்கு நாள் பெருகத் தான் செய்கிறது. ஆனால் முக்கியமாக கவனிக்கத்தக்க வேண்டிய விடயம், அத்தனையும் வடக்கு கிழக்குக்கு வெளியில்... அதாவது ஸ்ரீலங்காவில்தான் முதலிடப்படுகிறது. இந்த நிலைமையில் எதிர்காலத்தில் ஓர் நிரந்தர அமைதிச் சூழலில் மாற்றங்கள் வரலாம். ஆனால் இடம்பெயர்ந்து கொழும்பிலேயே வாழ்ந்த எத்தனையோ பேரைக் கண்டபோது ”எங்களுக்கு அங்கு வீடு காணி எல்லாம் இருக்கிறது தான். ஆனால் இனி பழைய நிலைமை திரும்பினாலும், ஏன் பழைய அதே நண்பர்கஓம், ஏன் அதே சூழலும் கிடைத்தால் கூட, போய் வாழும் நிலையில் நாங்கள் இல்லை. இங்கேயே இருக்கப்போகிறோம். அது தான் இன்றைய யதார்த்தம்” என்கிறார்கள். இது தான் நிலைமை என்றால் ”முதலீடுகள்” கொழும்பில் கணிசமான அளவு நிலைபெற்றுவிடக்கூடிய சாத்தியங்கள் நிறையவே உண்டு.
இந்த நிலைமைகளை இனங்கண்டு கொள்வதானது புலம்பெயர்ந்தவர்களின் எதிர்காலம் குறித்த முன்னைய இன்றைய கனவுகளுக்கும் - யதார்த்தத்துக்கும் உள்ள இடைவெளியை உணர்ந்துகொள்ள வாய்ப்பு கிடைக்கும்.
தமது எதிர்கால வாழ்வு இனி இலங்கையில் இல்லை அது தாம் புலம்பெயர்ந்த இடங்களில் தான் எனும் கருதுகோளிலிருந்து, அடுத்த சந்ததியினரின் எதிர்காலம், தமது எதிர்காலம் இதில் தமது பண்பாட்டு பாரம்பரிய, மரபுகள், வழக்கங்கள் என்பனவற்றின் பேணுகை எந்த மட்டத்திலானது என்கிற விடயத்துக்கு வரவேண்டியுள்ளது.
அடையாளங்கள்
இவ்வாறு புலம்பெயர்ந்தவர்களின் (அதாவது முதலாம் தலைமுறையினர்) புதிய அடையாளம்/அடையாளங்கள் என்ன? தமது முந்திய அடையாளத்தை தக்கவைத்துக்கொள்ளத்தான் முடியுமா? அல்லது புலம்பெயர்ந்த அந்தந்த நாடுகளின் அடையாளங்களைத்தான சுவீகரித்துக்கொள்ள முடியுமா? அல்லது இரண்டும் கலந்த ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக்கொள்ளப்போகிறார்களா? அல்லது புதிய நிலைமைகளுக்கு ஏற்றவாறு இன்னுமொரு அடையாளத்தை கண்டுபிடிக்கப்போகிறார்களா? இவ்வாறு மேற்கொள்ளும் போது பழைய அடையாளங்களை முற்றும் முழுதும் தான் துறந்துவிடமுடியுமா?
இப்புதிய அடையாளங்கள் முன்னைய ஆதிக்க சித்தாங்களைகளையும், ஆதிக்க குணாம்சங்களையும் துறந்ததாக இருக்குமா? அல்லது புதிய அடையாளங்கள் இம்மாற்றத்தில் செலுத்தும் செல்வாக்கு என்ன? புதிய இடத்தின் பல்கலாசார சூழலில் உள்ள அனுசரிப்பும், அனுபவமும் இதில் ஏற்படுத்தும் செலுத்தும் தாக்கம் என்ன? இறுதியில் இரண்டாம் தலைமுறையினருக்கு கடத்தப்போகும் அடையாளங்கள் தான் என்ன?
இவை அன்றாடம் புலப்பெயர்வின் எதிர்காலம் குறித்து பிரக்ஞையோடு சிந்தித்துக்கொண்டிருப்போரின் தலைகளில் கனத்து நிற்கின்ற கேள்விகள் என்று கூறலாம்.
அனைத்து நாடுகளிலும், இது தான் அடையாளம் என்கிற நேர்கோட்டு வரைவிலக்கிணமொன்றை கட்டமைத்து பொதுமைப்படுத்திவிட முடியாதென்பதே எனது கருத்து,
இனி விடயத்துக்கு சற்று விரிவாக வருவோம்...
மொழியின் அவசியம்.
மனித நடவடிக்கைகளில் மொழியின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது. மனிதராக இருத்தல் என்பது, மற்றவர்களுடனும் உலகுடனும் உறவினை ஏற்படுத்திக்கொள்வதே. எனவே தன்னில் இருந்து வேறுபட்ட புறவயமான எதார்த்தமாக உலகை மனிதனால் காண முடிகிறது. ”தான்”, ”தானல்லாதது” என்று பிரித்துப் பார்க்கும்போது தானல்லாத எதார்த்தம் அவனது அறிதலுக்கான பொருளாகிவிடுகிறது. ஆனால் மிருகங்கள் அப்படியல்ல அவை எதார்த்தத்தில் முழ்கி விடுகின்றன. எதார்த்தத்தை புறவயமாக பார்க்க அவற்றால் முடியாது. மிருகங்கள் வெறும் தொடுகையோடு புலனுணர்வு சார்ந்த அகவய வினையைக் (subjective reflex) கைகொள்கின்றன. மனிதன் புறவயத் தரவுகளோடு புறவய (objective) எதார்த்தத்தை தேடுகிறான். மேலும் மேலும் தன்னை அதிகரித்துக் கொள்வதே மனிதனின் அறிவுத்துறை இயல் திறனாகும் (ontological vocation).
மனிதன் மட்டுமே பேசுகிறவன். (கவனிக்க அனைத்து ஒலிக்குறிப்புகளும் ”பேச்சு”, அல்லது ”சொல்” ஆகிவிடுவதில்லை.) ஆக மனிதப் பேச்சு தான் உலகை மாற்றியமைக்கின்றன. இதனைச் சாதிப்பவற்றையே நாம் ”சொற்கள்” என்கிறோம். இந்த உண்மையான சொல்லுக்கு இரு பரிமாணங்கள் உண்டு.
- எதிரொளிப்பு (Reflection)
- நடவடிக்கை (Action)
இவ்விரண்டினதும் இணைவையே நாம் செயல் என்கிறோம் (Praxis)
நடவடிக்கையுடன் இணையாத சொல் வெறும் வாய்ச்சொல்லாக (Verbalism) ஆகிவிடுகிறது. எதிரொளிப்பு இல்லாத சொல் வெறும் செயல்வாதமாகவும் (Activism) குறுகிவிடுகின்றன.
ஆக, இந்த மனித நடவடிக்கையில் மொழிக்கு எழுத்துவடிவம் கிடைக்கிற போதும் அது செழுமையடைகிற போதும் அது தன்னை புதுப்பித்துக்கொள்ளும் போதும் அது வளமடைகிறது. பலமடைகிறது. இருப்புகொள்கிறது. உறுதிபெறுகிறது.
மொழியானது இனத்துவம், மதத்துவம், கலந்தது. எல்லா மொழிகளுக்குமான இந்த பொதுமையானது அதற்கேயுரிய மரபுகளையும், வழக்குகளையும், கூடவே புனைவுகளையும் கொண்டிருப்பதும் அதன் பண்பாகும்.
மொழியின் இருப்பு கேள்விக்குள்ளாகிற இடங்களில் அந்த மொழியோடு சேர்த்து 'அக்கம்பக்கமான' இந்த மதங்களையும் இனத்துவத்தையும் தூக்கி நிறுத்துவதையும், அதன்வாயிலாக மரபான புனைவு, ஐதீகங்கள், மாயைகள் போன்ற மூடநம்பிக்கைகளையும் அப்படியே பாதுகாப்பதையும் கூட நாங்கள் காணலாம்.
புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு ஏன் தமிழ் வேண்டும்?
இந்தக் கேள்வியை நான் பலரிடம் எழுப்பி விட்டேன். அதற்கான சரியான வரைவிலக்கணமளிக்க முடியாத பலரை கண்டிருக்கிறேன். இதில் பலர் அப்போது தான் இதற்கான சுய வரைவிலக்கணத்தைத் தேட தலைப்பட்டதையும் அவதானித்திருக்கிறேன்.
”நாங்கள் நாளைக்கு நாட்டுக்கு உறவினர்களை சந்திக்கப்போனால் பிள்ளைகள் தமிழில் உரையாட வேண்டும்!” இது பெருமளவானோர் கூறும் சராசரி பதில். ஆனால் இது மட்டுமாக இருக்கமுடியாது. இந்த நாடுகளில் கல்வி அதிகம் திட்டமிடப்பட்டது. குழந்தைகள் மேலதிக கல்விச்சுமையற்று கல்விச்சூழலை அனுபவிப்பதற்கான திட்டமிடப்பட்ட உட்கட்டமைப்பு இங்கு உண்டு. அதன்படி மேலதிகமான தமிழ்க் கல்வி சில வயதினருக்கு அளிப்பது இந் நாடுகளின் கல்வித்திட்ட விதிகளின் கீழ் விமர்சனத்துக்குரிய ஒன்றாகவே கொள்ளப்பட்டாலும். தமது கல்வித்திட்டத்தின் அடிப்படையில் தாழ்மொழிக்கல்வி பாடசாலைகளில் புகட்டப்பட்டும் வருகிறது.
புகலிடத்தில் தமிழ்மொழியானது அவர்களின் அந்தந்த நாட்டு அன்றாட நடவடிக்கைகளுக்கு தேவையில்லாதது. ஆனாலும் அனைத்து நாடுகளிலும் தமிழ்ப் பள்ளிக்கூடங்கள் இயங்குகின்றன. நோர்வேயில் ஒஸ்லோவைச் சூழ ஏறத்தாழ வாரஇறுதி தமிழ்ப் பள்ளிக்கூடங்கள் ஐந்து இயங்குகின்றன. (ஏறத்தாழ அரை மணித்தியால கார் ஓட்டச் சுற்றுக்குள் இவை அமைத்திருக்கின்றன)
எனது பார்வைக்கு எட்டிய வரை, தமிழ்மொழியை இங்குள்ள குழந்தைகளுக்கு (அடுத்த தலைமுறையினருக்கு) அளிப்பதென்பது "வசப்படுத்தலுக்கானதா"? என்கிற கேள்வியே ஆழமாக எழுகின்றது.
முதலாவது தலைமுறையினர் எதிர்கொள்ளும் கலாசார நெருக்குவாரங்கள் இதில் கவனிக்கவேண்டிய முக்கியப்புள்ளி. ”குடும்ப உறவுகளுடன்”, ”உறவுகளின் உறவுகளுடன்” அதிக நெருக்கத்தை கொண்ட ஒரு பாரம்பரியம் நமக்கு. அத்தோடு உணர்ச்சி நிலையுடன் கூடிய பற்று, கடமை மற்றும் உரிமையெடுத்துக் கொள்வது, பொறுப்பெடுத்துக்கொள்வது, அந்த தார்மீகத்துடன் அதிகாரம் செய்வது என்பவை இணைந்த வழக்கங்களைக் கொண்ட ஒரு ஒரு மரபிலிருந்து வந்தவர்கள் நாங்கள்.
குழந்தைகள் பிறந்து வளரும் போதே ”நாளை எங்களைப் பார்ப்பார்கள்” என்கிற முழக்கங்களும், நம்பிக்கைகளையும் கொண்ட மரபினர் நாம்.
புலம்பெயர்ந்த நாடுகளில் நிலைமை அதுவல்ல. குழந்தைகள் விபரம்தெரிய வளரும் வரை பெற்றோர் பொறுப்பிலும் அதன் பின்னர் அவர்கள் சொந்தப் பொறுப்பிலேயே வளர்கின்றனர். அதற்கேற்றபடி சிறுவயதிலிருந்தே குழந்தைகள் பழக்கப்படுத்தப்படுகிறார்கள். தயார்படுத்தப்படுகிறார்கள். பெற்றோர்கள் உரிமையெடுத்துக்கொள்வதும் அதிக மட்டுப்பாட்டுடனேயே. அது போல அதிகாரம் செலுத்துவதும் அதிக மட்டுப்பாடுகளுடனேயே.
அதுபோல நமது குழந்தைகளும் குழந்தைகள் சிறுவயதிலிருந்தே அந்தந்த நாட்டு மரபுகள், கலாசாரங்கள் பழக்கவழக்கங்கள் என்பனவற்றோடு சேர்த்தே வளர்க்கப்படுகிறார்கள். பிள்ளைகள் நாளாந்தம் வீட்டுச் சூழலில் இருப்பதை விட அதிக நேரம் அந்நாட்டுச் சூழலுடன் கழிப்பவர்கள்.
எனவே, இன்னமும் மண்ணின் நினைவுகளோடும், அந்த மண்வாசனையின் வடிவங்களாக இருந்த அந்த மரபுகளோடும் எஞ்சிய காலத்தை வாழ ஆர்வம் கொண்டிருப்பவர்கள் நமது முதலாவது தலைமுறையினர். எனவே தமது வாழ்வை அந்தந்த நாடுகளிலேயே தக்கவைப்பதென்கிற முடிவுகளுக்கு அடிப்படை காரணமே ”பிள்ளைகளின் எதிர்காலத்துக்காக” என்றிருக்கும் போது (பிள்ளைகளுக்காக செய்ய வேண்டிய கடமைக்காக இங்குள்ள சராசரியை விட அதிக விலைகளை கொடுப்பதாக நம்புகின்ற முதலாவது தலைமுறையினர்) பிள்ளைகள் நாளை தம்மையும் கவனித்துக்கொள்ள வேண்டும். தமக்கும் ”கட்டுப்பட்டு” இருக்க வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு. இந்த எதிர்பார்ப்புகளை எப்படி நிறைவேற்றலாம்...?
அதற்கு மருந்தாக தமது கலாசாரத்தையும் குழந்தைப் பருவத்திலிருந்தே ஊட்டுதல் ஒரு முக்கிய வழிமுறை. படிப்படியாக அந்த மரபுகளையும் பண்பாட்டு கலை அம்சங்களையும் போதிப்பதனூடாக கூடவே தமது மரபுசார் அதிகாரத்தை ஏற்படுத்துவது. எனவே தான் புலம்பெயர்ந்த இடங்களில் மொழி மட்டுமல்ல இசை, நடனம், என்பன போதிக்கப்படுவதும், அனைத்து பண்பாட்டு விழாக்களையும் (வருடப்பிறப்பு, பொங்கல், தீபாவளி) நடத்துவது, கோயில் கட்டுவது, பஜனைக்காக கூடுவது. திருவிழா நடத்துவது, கலியாணத்தை ஊரில் நடத்தப்படுவதை விட கறாரான அதிக சடங்குளை சேர்த்துக்கொள்வது. பு+ப்புனித நீராட்டுவிழா நடத்துவது.. என்பன நிகழ்த்தப்படுகின்றன.
(சில இடங்களில் மொழி, பண்பாடு, உடை போன்றவற்றை மறந்து அல்லது இழந்து போனாலும் சடங்குகள் நிலைபெற்றிருப்பதை இங்கு கவனத்திற்கொள்க. எதிர்காலத்திலும் இந்த நிலைமை நீட்சிபெறலாம்)
இதன் மறு அர்த்தம் இந்த பண்பாட்டு மரபுகளை உணர்வு ரிதியில் செய்வதில்லை என்பதல்ல. மாறாக அடுத்த தலைமுறையினருக்கு மரபுகளை கடத்துவதன் பின்னணியில் ”தம்வசப்படுத்தல்” என்பது முக்கிய பங்காற்றுகின்றன என்பதனை ஒப்புக்கொள்ளவேண்டும். இது கசப்பான ஒரு உண்மையென்பதை ஒரு சுயதேடலின்மூலமே உணரலாம்.
தங்களின் வழிகாட்டல்களை புகட்டுவதற்கும், அறநெறிகளை போதிப்பதற்கும் இந்த கற்பித்தல் உதவுகிறது. அறநெறிகளின்பால் இருக்கின்ற விதிகள், கட்டுப்பாடுகள், எச்சரிக்கைகள் என்பனவற்றுக்கூடாகவும் அதிகாரபு+ர்வமான உரிமை நிலைநாட்டப்படுகிறது.
பிள்ளைகள் தமது எதிர்காலத்துக்காக அந்தந்த நாட்டுச் சூழக்குள் ஒன்றவும் வேண்டும். அதே வேளை தமக்கு அடங்கியவர்களாக இருக்கவேண்டும். தாமும் விரும்புகிற ஒருவரிடம் ”தாரைவார்க்கும்வரை” இது தொடர வேண்டும் என்கிற எதிர்பார்ப்பே இதன்பின்னணியில் உள்ள தாற்பரியம்.
பெற்றேர்கள் சடங்குகளை, தமிழ்ப் பண்பாட்டை கொண்டவர்களாகவும், பிள்ளைகள் அதை விரும்பாதவர்களாகவும் வளர்க்கப்படுகிறார்கள். பெற்றோர்கள் இச்சடங்குகளை விரும்பக் காரணம் இந்தச் சடங்குகள் அவர்களின் சமூக ஒருமைப்பாட்டிற்கான தளமாகக் கருதுவதும், அதனை தமது அடையாளமாக உணர்வதும் தான்.
மேலும், தமிழ்மொழிப்போதனைக்கு காரணமாகிற இன்னுமொரு அம்சம்; தமது குழுமத்துக்குள் மேநிலை அந்தஸ்தை நிறுவதற்கான ஒரு கருவி என்கிற நம்பிக்கையாகும்.
(ஆங்கில மரபு அல்லாத நாடுகளில் -நோர்வே உட்பட) பெற்றோர்கள் இங்கிலாந்து, கனடா போன்ற நாடுகளுக்கு படிக்க அனுப்புகிறார்கள். அல்லது இந்தியாவுக்கு அனுப்புகிறார்கள். இது ஏன் என்பதன் உள்ளர்த்தத்தையும் இங்கு விளங்கிக்கொள்வோம்.)
புலம்பெயர்ந்த இடங்களில் அந்நியப்பாடு காரணமாக தாம் ”தமிழர் குழுமமாக” அணிதிரண்டு, நிறுவனமயப்பட்டு தங்கள் பாரம்பரியங்களை நினைவுறுத்தி மனமகிழ்வு கொள்கின்றனர். இவ்வாறு நிறுவனமயப்படுகிற போது தமிழ் குடும்பங்கள் தமது மரபார்ந்த குணங்கள் காரணமாக தமது அந்தஸ்தை நிலைநாட்ட முயல்கின்றனர். ஊரில் வர்க்கநிலையும், சாதியும், சாதி சார்ந்த ஊரும், தொழிலும் அந்தஸ்தை அளவிட்டன. புலம்பெயர்ந்த இடங்களில் இவை அதிக முக்கியத்துவமிழந்து போகின்றன. இங்கு வர்க்க நிலைiயை அளவிடக்கூடிய வீடுகள், (தொடர்மாடிவீடா?, தனிவீடா? அடுக்குமாடிவீடா) வைத்திருக்கும் வாகனத்தின் பெறுமதி, போடப்படும் நகைகள், நடத்தப்படும் சடங்குகள், விழாக்களில் செய்யப்படும் செலவுகள் என்பனவற்றுக்கூடாக இந்த அந்தஸ்து அளவிடப்படுகின்றன. (தாயகத்தில் ஊர், சாதி என்பனவற்றின் அடிப்படையிலான தரம்பிரித்தல் இங்கு முக்கியத்துவம் பெறாவிட்டாலும் தாழ்த்தப்பட்ட சாதியினர் உயர்த்தப்பட்ட சாதியினரிலும் பார்க்க உழைப்பால் வர்க்க மேநிலை அடைகையில் மட்டந்தட்டுவதற்கான காரணியாக ”என்னதான் இருந்தாலும் அவர்கள் இன்ன சாதி” என்கிற குத்திக்காட்டல் இல்லாமலில்லை. (இந்த இடங்களில் சாதியம் கவனமாக கையாளப்படுகிறது.)
இவ்வாறான இடங்களில் தமது பிள்ளைகளின் கல்வி நிலையும் அந்தஸ்தின் ஒரு அங்கமாக பார்க்கப்படுகிறது. தாயகத்தின் கற்பித்தல் முறை, மற்றும் கல்விமுறை என்பன போட்டிக்கல்விமுறையை அடிப்படையாகக் கொண்டவை. அந்த பழக்கங்களின் வழிவந்த நமது தலைமுறையினர் அதே நிலைமைகளை இங்கு கைகொள்ள முற்படுவதை காணக்கூடியதாக இருக்கிறது. இன்னுமொருவகையில் ”ஒழுக்கவலிமையை உடையவர்கள்” என்பதனை உறுதிபடுத்த ”இந்த சூழலோடுதான் எங்கள் பிள்ளைகள் இருக்கிறார்கள்” என்பதனையும் சூழலுக்குள் நிறுவ முற்படல்..?
பிள்ளைகளுக்கு தாய் மொழி எது?
தமது மொழி என்ன என்பது குறித்து நமக்குத் தாயகத்தில் எழுவதில்லை. ஆனால் புகலிடத்தில் தமது அல்லது தமது சந்தியினரின் தாய் மொழி என்ன என்பது குறித்த விவாதங்கள், சர்ச்சைகள், குழப்பங்கள் இன்னமும் நீடிக்கத்தான் செய்கின்றன.
தாய் மொழி என்பதன் அளவுகோல் என்ன? அதற்கான வரைவிலக்கணம் என்ன? தன்னைப் பெற்றடுத்தவரின் மொழியே தனதும் தாய்மொழி என்பதா இதன் வரைவிலக்கணம்? புலம்பெயர்ந்த இடங்களில் பிறந்த குழந்தைகள் தாம் வாழும் சூழலில் தமக்கு பரிச்சயப்பட்ட, தமது எண்ணங்கள், உணர்வுகள் என்பனவற்றை வெளிப்படுத்தவும் பரிமாறுவதற்குமான மொழி தாயின்மொழியாகத்தான் இருக்க வேண்டுமா?
ஒருவரின் தாய்மொழி என்பதானது அவரின் பெற்றோரின் தாய்மொழியாக எப்போது அமையுமெனில் அவரின் பெற்றோரின் தாய்நாட்டில் அவர் வாழும்போதோ அல்லது அவரின் தாய்நாட்டு மொழி தாம் வாழும் மற்றுமொரு நாட்டுமொழியாக இருக்கும் போதுமட்டும்தான்.” என்கிற வாதமும் முன்வைக்கப்படுகிறது.
"தாய்மொழி", ”சிந்தனா மொழி”, ”முதல்மொழி”, ”பரிச்சயமான மொழி” போன்ற சொல்லர்த்தங்களைக் கொண்ட வேறுபட்ட விளக்கங்கள் சமகால கருத்தாடலில் மாத்திரமல்ல நீண்டகாலமாகவே இருந்து வருகிறது.
"பெற்றோர்களின் தாய்மொழியும், பிள்ளைகளின் தாய்மொழியும் ஒன்றாக இருக்கத்தேவையில்லை, தாய் மொழி மாறிக்கொண்டே போகலாம்..., ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மொழிகள் ஒருவருக்கு தாய் மொழியாக இருக்கலாம்" என்றும் யுனெஸ்கோ விளக்கம் கொடுத்திருப்பதையும் கவனிக்க.
”தமிழ்த் திணிப்பு” எனுமளவுக்கு சில இடங்களில் அதிக குழந்தைகளின் வயதுக்கு மேலான மூளைச்சுமையையும், களைப்பையும் ஏற்படுத்துகிற போக்கையும் காணமுடிகிறது.
அந்தந்த நாட்டின் நியமங்களுக்கு ஏற்ப பிள்ளைகள் வளர்க்கப்படவேண்டும் என்றே பெற்றோர்கள் விரும்புவார்களே தவிர "தமிழுக்கேற்ப மாற்றம் என்று விரும்பமாட்டார்கள்."
புலம்பெயர்ந்த நாடுகளில் குழந்தைகள் தமிழ்ப் பள்ளிக்கூடங்களில் அந்தந்த மொழிகளினூடாகவே தமிழை சிரமப்பட்டு தலைக்குள் மொழிபெயர்த்து உரையாடுவதை யார் இன்று மறுக்கமுடியும். தமிழ் சொற்களையே கண்டுபிடிக்கத் தவிக்கும் பிள்ளைகளிடம் என்னவென்று சரியான தமிழ் உச்சரிப்பை எதிர்பார்க்கமுடியும்? முதலில் தமிழிலுள்ள எழுத்துக்களின் எண்ணிக்கையை கண்டு பயப்படும் சிறார்களிடம் இலக்கணச்சரியை எப்படி எதிர்பார்த்துவிட
முடியும்? ”ஊரில் நாங்கள் தமிழை படித்த மாதிரி எங்கள் பிள்ளைகளுக்கும் படிப்பிக்க வேணும்” என்பது எத்தனை தூரம் சரியானது.
மொழியானது பேசுவதற்கான தேவையேற்படாதவிடத்து எக்காலத்திலும் அம்மொழி பேசப்படாது.அப்போது தமிழ் மொழி ஏன் இப்பிள்ளைகளுக்கு தேவை என்பதை முதலில் தீர்மானிக்க வேண்டும்.
பல இடங்களில் தமிழ் மொழி எத்தனையாவது மொழி என்று பார்த்தால் இரண்டாவது மொழியும் இல்லை. மூன்றாவது மொழியாகவும் இல்லை. நோர்வேயில் கற்கும் பிள்ளைகளுக்கு பிரெஞ்ச், லத்தீன், அல்லது ஆங்கிலம், இரண்டாவது மொழியாக இருக்குமே தவிர, ஏன் மூன்றாவது மொழியாகவும் இருக்குமே தவிர தமிழாக இருக்காது என்பதனை விளங்கிக்கொள்ளவேண்டும்.
உலகிலுள்ள அத்தனை இனங்களுக்கும், அவ்வினங்களின் மொழிகுறித்தும் தத்தமக்குள் பழமை பேசும் வழக்கம் பொதுமையானது. நமக்கும் அது போன்ற ஐதீகங்களும் நம்பிக்கைகளும், பெருமிதமும் உண்டுதான். முக்கியமாக நாம் கவனத்திற்கொள் வேண்டிய விடயம் மொழி குறித்த தெரிவு எந்தசூழலில் எத்தனை தூரநோக்கிலானது என்பது தான்.
ஒருவர் பல மொழிகளை தெரிந்து வைத்திருப்பதனுடாக பல உலகங்களை அவரால் தரிசிக்க முடிகிறது. இவ்வாறு பல மொழிப் பரிச்சயம் என்பதானது அவரின் ஆற்றல் திறன்களை மேலும் மேலும் வளர்க்கிறது. நாம் தெளிவு கொள்ள வேண்டிய விடயம். இவற்றில் எது தாய் மொழி, எது முதல் மொழி மற்றும் தெரிந்திருக்கும் மொழிகளின் நிரல்படுத்தல் என்ன என்பது குறித்த தெளிவு நமக்கு மிகவும் அவசியம். அவ்வாறான நிலையில் தமிழ் மொழியின் இடம் என்ன? அதனை போதிப்பதன் முறையியல் என்ன? திணிப்பற்ற கல்வியாக தமிழ்மொழியை எப்படி ஊட்டுவது? என்கிற வகையில் அவற்றை திட்டமிடுவது அவசியம். தமிழ் மொழி ஊட்டப்படுவதன் அவசியம் என்ன என்பது குறித்த வரைவிலக்கணத்தை முதலில் புலம்பெயர்ந்த நாடுகளில் தெட்டத்தெளிவாக கொடுக்கப்பட வேண்டும். அது செய்யப்படாத வரை பிள்ளைகளை ஒழுங்காக தயார்படுத்துவது என்பது இயலாத காரியமாகவே இருக்கும் என்பது மட்டும் நிச்சயம்.
தாயகத்துக்கு திரும்புவது என்பது இன்றைய நிலையில் பெருமளவானோருக்கு சாத்தியமில்லாததென்பதை உணர்ந்திருக்கிற நிலை. அது போல பிள்ளகைளின் எதிர்காலம் புலம்பெயர்ந்த இடங்களில் தான் எனபது குறித்த முடிவுகளை எடுத்திருக்கிற காலம் இது. இப்படியான நிலையில் இங்கு தமிழின் இருப்பு கேள்விக்குரியது என்பதையும் கவனத்திற்கொள்ள வேண்டும். யதார்த்தம் கூறும் சமிக்ஞைகள் என்னவென்றால், புகலிடத்தில் தமிழ் இலக்கியம், தமிழ் ஊடகம், தமிழ் வழிக்கல்வி என்பனவெனல்லாம் இன்னும் ஓரிரு தலை முறைகளுக்குத்தான். இப்போதைய தமிழ் வழிக்கல்வியானது தாயகத்திலிருந்து புலம்பெயர்ந்த முதலாவது தலைமுறையினரின் ஆசாபாசங்களுக்கு கட்டுப்பட்டது என்பது பொய்யாகுமா?
புலப்பெயர்வும் இன்றைய நிலையும்
தமிழர் பார்வையில் புலம்பெயர்ந்து வாழ்வது பெரிய வரவேற்கப்பட்ட விடயமாக இல்லை. இலக்கியத்திலும் கூட வரவேற்கப்பட்ட ஒன்றாக இது வரை காட்டப்படவில்லை. என பேராசிரியர் சிவத்தம்பி கூறுவார். ”திரைகடல் ஓடியும் திரவியம் தேடு” என்று தான் கருத்து உண்டே தவிர இந்த மண்ணை உதறிவிட்டு ஓடு என்பது தமிழ் பண்பாட்டில் மிகக்குறைவு. ”திரவியம் தேடிவா” என்பது தான் கருத்து.
தமிழ்த் தேசப்போராட்டம் ஆரம்பமானதன் பின் நிகழ்ந்த புலப்பெயர்வு குறித்தும் ”விட்டுவிட்டு ஓடியவர்கள்” என்கிற ஏளனம் சமீப காலம் வரை இருந்தது என்பது நமக்கு தெரியுமல்லவா?
இன்று புகலிடம் குறித்து பேசும் போது வளர்ந்த நாடுகளுக்கு புலம்பெயர்ந்தமையைத் தான் உடனடியாக கவனத்திற்கு வருகிறது. புலம்பெயர்ந்திருக்கிற 13 லட்சம் பேரில் கனடா பெரிய அளவிலான தமிழர்களைக் கொண்டிருக்கிறது. இரண்டாவது இடம் எது என்று கேட்கப்படுகின்ற கேள்விக்கு பலருக்கும் சட்டென்று வருவது பிரான்ஸ் என்பது தான். உண்மையில் அது உண்மையல்ல. இரண்டாவது இந்தியா.
இந்தியாவுக்கு புலம்பெயர்ந்தவர்கள் வசதிகளுக்காக புலம்பெயர்ந்தவர்கள் அல்ல. அங்கு புலம்பெயர்ந்தவர்களைத் தான் உண்மையில் புகலிடம் தேடியோர் என்று கூறத்தகுந்தவர்கள் என்றால் அது மிகையாகாது.
இது வரை புகலிட இலக்கியம், புகலிட அறவியல் என்பன குறித்த பல்வேறு எழுத்துக்கள் வந்திருக்கிற போதும் அவற்றில் இந்தியாவுக்கு புலம்பெயர்ந்தோர் குறித்த ஆய்வுகளும், இலக்கியங்களும் குறைவென்றே கூறலாம்.
இதனை புலப்பெயர்வு அல்ல அது ஒரு இடப்பெயர்வு என்று கூறுவோரும் உளர். ஆனால் உள்நாட்டில் பிரதேசத்துக்கு பிரதேசம் இடம்பெயர்வதென்பதன் உள்ளடக்கத்திற்கும், சிரமப்பட்டு நாட்டை விட்டே ”பெயர்ந்து” இன்னல்களை அனுபவிப்பதன் உள்ளடக்கத்திற்கும் நிறையவே வித்தியாசம் உண்டு.
புலப்பெயர்வின் ஆரம்பத்தில் புலப்பெயர்வுக்கு தயாரில்லாத தற்காலிகமான ஒரு நிகழ்வென நம்பியபடியும், மீண்டும் நாட்டுக்கு சில வருடங்களில் திரும்பிவிடலாம் என்கிற எதிர்பார்ப்புகளுடன் வந்தவர்கள். தங்களின் கிராமத்திலிருந்து அயற்கிராமத்தில் வாழ்வதற்கு கூட தயார் செய்து கொள்-ளாதவர்கள். அங்கிருந்து இலங்கைக்குள்ளேயே ஒரு நகர்ப்பகுதியில் கூட வாழத்தயார் செய்யாதவர்கள்.
புலப்பெயர்வை மட்டும் விரும்பியா செய்திருப்பார்கள்? ஆனால் யுத்தத்தின் தொடர்ச்சி, புலம்பெயர்ந்தவர்களின் வயதுத்துவம், மனைவி, பிள்ளைகள், குடும்பத்தினர் என்று விரிந்ததும் உறுதியான இருப்பாகிவிட்டது பலருக்கு. முதலில் ஒருவர் வெளிநாட்டுக்குப் போவார் அதன்பின் சகோதர, சகோதரிகளை அழைப்பார். பின்னர் தன் குடும்பத்தினரை அழைப்பார். பின்னர் ஊரவர்களை அழைப்பார் இவர்கள் அனைவரும் வெளிநாடுகளில் வாழத்தயார் செய்து கொள்ளாதவர்கள் தான். இன்றைய அதன் நீட்சி அப்படியல்ல.
மேலும் ஆங்கில மரபுள்ள நாடுகளுக்கு புலம்பெயர்ந்தவர்களுக்கும், ஆங்கிலம் அல்லாத நாடுகளுக்கு செல்வது இன்னொரு தன்மையையும் வாழ்வியலையும் கொண்டிருக்கிறது என்பது உண்மை.
வந்தேறுகுடிகளாகவே கொள்ளப்படுகிற இந்த சூழலில் இந்த நாடுகளின் மேலாதிக்கப் பண்பாட்டை ஏற்றுக்கொண்டு வாழ பழக்கப்படுத்துதல் முக்கியமானது. இதன் உள்ளடக்கம் அந்த நாட்டின் பண்பாடு, உணவு, உடை, மொழி, வாழ்க்கைமுறை, தொழில் என இன்னோரன்னவற்றைக் கூறலாம். விரும்பியோ விரும்பாமலோ இதனை உள்வாங்கியே ஆக வேண்டுமென்கிற நிலை. தமது பண்பாட்டை பேணுவதற்கு எந்தத் தடையும் கிடையாது. ஆனால் அந்த நாட்டுடன் இணைய வேண்டும். மேநாட்டு முதலாளித்துவ ஜனநாயகம் இதனை மிகக் கவனமாக கையாள்கிறது.
”அந்த நாடுகளில் நமது அந்நியத்தன்மை புலனாக, புலனாக எங்களுடைய கோயில் குளங்களும், வயல்வெளிகளும், கேணிகளும் மரங்களும், ஊர்களும் சுவர்க்கங்களாக மாறத் தொடங்குகின்றன.”
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...