Headlines News :
முகப்பு » , , , , » ஒல்கொட் : "இலங்கைக்கு வந்த இரண்டாவது அசோகன்" - என்.சரவணன்

ஒல்கொட் : "இலங்கைக்கு வந்த இரண்டாவது அசோகன்" - என்.சரவணன்

“அறிந்தவர்களும் அறியாதவையும்” 14


இலங்கையின் பௌத்த மறுமலர்ச்சி, பௌத்த பாடசாலைகளின் உருவாக்கம் போன்றவற்றிற்கு அத்திவாரமிட்ட முக்கிய பிரமுகர் ஒல்கொட் (Henry Steel Olcott - 2.08.1832 – 17.02.1907).

இலங்கையின் பௌத்த புத்துயிர்ப்பின் பிதாமகராக போற்றப்படும் ஒல்கொட் இலங்கையரும் அல்ல, பௌத்த பின்னணி கொண்டவரும் அல்ல என்பது சுவாரஸ்யமான தகவல். அவர் ஒரு அமெரிக்க ப்ரொட்டஸ்தாந்து கிறிஸ்தவர். எனவே தான் இலங்கை வரலாற்றில் ஒல்கொட்டின் பாத்திரத்தை அனைவரும் போற்றும் அதே நேரம் அவரை வெறுக்கும் சிங்கள பௌத்த புத்திஜீவிகளும் இருக்கிறார்கள்.

பிரபல சிங்கள பௌத்த தேசியவாதியாக அறியப்படும் நளின் டி சில்வா “ஒல்கொட் பௌத்தம்” என்றே பல இடங்களில் இந்த வெறுப்பை கொட்டித் தீர்த்திருக்கிறார். சிங்களத்தனம் இல்லாத பௌத்தர்கள், பௌத்தத் தனம் இல்லாத சிங்களவர்கள் என்று அவர் விமர்சிக்கும் போது “சிங்களத்தனம்” இல்லாத பௌத்தர்களை “ஒல்கொட் பௌத்தர்கள்” என்றே கிண்டல் செய்கிறார் பல இடங்களில். ஒல்கொட் சிங்கள பௌத்தர் அல்லாதவர் என்றும் மேற்கத்தேயவர் என்றும் அவரின் பணிகள் அத்தனையும் மேற்கத்தேய சதி என்றும் நளின் வெவ்வேறு கட்டுரைகளில் குறிப்பிட்டு வந்திருக்கிறார்.

19 ஆம் நூற்றாண்டில் பௌத்த மறுமலர்ச்சிக்கு அடித்தளமிட்ட நிகழ்வுகளில் மிகவும் முக்கியமானது “பஞ்ச மகா விவாதங்கள்”. அன்றைய சிலோன் டைம்ஸ் பத்திரிகையின் ஆசிரியர் ஜோன் கெபர் (John Capper) பாணந்துறை விவாதம் பற்றி எழுதிய தொடர் பின்னர் பிரசித்திபெற்ற நூலாக 1878 இல் அமெரிக்காவில் வெளிவந்தது (The great debate – Buddhism and Christianity – face to face). பௌத்த எழுச்சியில் இந்த நூலுக்கு பெரும் பாத்திரம் உண்டு. இந்த நூலை வாசித்த அமெரிக்காவை சேர்ந்த கேணல் ஹென்றி ஸ்டீல் ஒல்கொட் இந்த நூலின் மீதும், அந்த விவாதத்தின் மீதும் அந்த விவாதத்தை நடத்தியவர்களின் மீதும் ஈர்ப்புகொண்டார்.

அதன் பின்னர் அவர் விவாதத்தில் தொடர்புடைய மிகெட்டுவத்தே குணானந்த  தேரர், ஹிக்கடுவே சுமங்கல தேரர் ஆகியோருடன் கடிதத் தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்கிறார். இந்தத் தொடர்பு அவரை இலங்கை வருகைக்கு வித்திட்டது.

ஒல்கொட் ஒரு அமெரிக்க இராணுவ அதிகாரி, பத்திரிகையாளர், வழக்கறிஞர். 1865 இல் ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கனின் படுகொலை விசாரணைகளிலும் பங்கேற்றவர். ஆன்மிகம் குறித்த அவரின் சுய தேடலின் விளைவாக பௌத்தத்தில் நாட்டம் கொண்டார். அமெரிக்காவில் முதலாவதாக பௌத்தத்துக்கு மாறியவராக அறியப்பட்டவர் அவர். இந்த நிலையில் தான் பாணந்துறை விவாதம் குறித்த நூலை அறிகிறார். இலங்கை வர தீர்மானிக்கிறார். 1875 ஆம் ஆண்டு அவர் நியுயோர்க்கில் பிரம்மஞான சங்கத்தை (Theosophical Society) எலேனா ப்லாவட்ஸ்கி என்பவருடன் இணைந்து தொடங்கினார். சங்கத்தின் தலைமையை புத்தர் பிறந்த பூமிக்கு மாற்றுவதற்காக  இந்தியாவில் பல இடங்களைத் தேடியலைந்து இறுதியில் சென்னை அடையாரில் 1882 இல் பிரம்மஞான சங்கம் நிறுவப்பட்டது.

அதன் பின்னர் 1880, மே 17 அன்று காலியில் பெரும் வரவேற்புடன் இலங்கை வந்தடைந்தார். ஜூன் 17 இல் பிரம்மஞான சங்கத்தை காலியில் அமைத்தார்.

பௌத்தத்தில் இணைந்ததாக அமெரிக்காவிலேயே அவர் அறிவித்துக்கொண்டபோதும் காலியில் உள்ள விஜயானந்தா விகாரையில் ஒல்கொட் மற்றும் எலேனா ப்லாவட்ஸ்கி (Helena Blavatsky) ஆகிய இருவருக்கும் பஞ்சசீல தீட்சையளிக்கப்பட்டது. அவர் பௌத்த ஒழுக்க பிரமாணங்களை எடுத்து பௌத்தத்தை தழுவிக்கொண்டார்.

அதன் இணை ஸ்தாபகராக பொன்னம்பலம் இராமநாதன் ஆனார். அது மட்டுமன்றி பௌத்த கல்வி நிதியத்தை ஆரம்பித்தபோது அந் நிதியத்தின் இணைசெயலாளராக ஒல்கொட்டுக்கு நிகராக அதில் பணியாற்றினார் இராமநாதன். ஆனால் தனிப் பௌத்த பாடசாலைகளுக்கே முன்னுரிமை வழங்கப்பட்ட நிலையில் இராமநாதன் இந்துக் கல்லூரிகளை அமைக்கும் பணியில் புறம்பாக ஈடுபட்டது இன்னொரு உபகதை.

சென்னையில் ஆன்னி பெசென்ட் மற்றும் அயோத்திதாசர் ஆகியோருடன் இணைந்து ஒடுக்கப்பட்ட பஞ்சமர்களுக்கான  சிறுவர் பள்ளிகளை அமைப்பதில் ஒல்கொட் ஈடுபட்டார். அயோத்திதாசரை இலங்கைக்கு அழைத்துச் சென்று அங்கு சுமங்கல தேரரின் மூலம் பஞ்சசீல தீட்சையளித்து (1890) இல் பௌத்தராக்கினார். அதுபோல தனது சிஷ்யனான அநகாரிக தர்மபாலவையும் சென்னைக்கு அழைத்துச்சென்று பௌத்த மறுமலர்ச்சிப் பணிகளில் ஈடுபடுத்தினார். 

இலங்கையில் அவர் அறிந்துகொண்ட பௌத்த அனுபவங்களை ஆங்கிலத்தில் நூல்களாக எழுதி மேற்கத்தேய ஆங்கிலேயர்களுக்கு பரப்பினார். அவர் எழுதிய “பௌத்த மறைக்கல்வி“ (The Buddhist Catechism - 1881) நூல் பிரசித்திபெற்றது. பிற்காலத்தில் இலங்கையின் கலாச்சார அமைச்சு இந்த நூலை பல தடவை பதிப்பிட்டது. அம்பேத்கார் தனது பௌத்தம் குறித்த ஆய்வுகளின் போது ஒல்கொட்டின் சிந்தனைகளின் பாதிப்பும் இருந்ததாக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

அநகாரிக்க தர்மபாலாவை உருவாக்கி ஆரம்பத்தில்  வழிநடத்துவதில் பங்கு ஒல்கொட்டைச் சாரும். அநகாரிகர்  சிங்கள பௌத்தர்களுக்கு சிங்கள பௌத்தரல்லாதவர்கள் மீது வெறுப்புணர்ச்சியை போதித்த போதும் அவரை உருவாக்கிய ஞானத்தந்தை ஒரு சிங்கள பௌத்தரல்லாத அந்நியரே என்பது ஒரு முரண்நகை.

ஒல்கொட் இலங்கையில் பௌத்த கல்விமுறையை உருவாக்கி வளர்த்தெடுத்தார். பௌத்த கல்விமுறையின் தந்தையாகவும் பௌத்தர்களால் அழைக்கப்படுகிறார் ஒல்கொட். ஆங்கிலேய காலனித்துவத்தால் உருவாக்கப்பட்ட பல கிறிஸ்தவ பாடசாலைகளுக்கு நிகராக இலங்கை முழுவதும் பௌத்த பாடசாலைகளை நிறுவியதில் ஒல்கொட்டின் பாத்திரம் முக்கியமானது. ஆனால் அந்த பாடசாலைகள் தூய சிங்கள பௌத்த பாடசாலைகளாக ஆகிவிடும் என்று ஒல்கொட் கற்பனையும் செய்திருக்கமாட்டார். அவை ஏனைய இன-மதத்தவர்களுக்கு தீட்டாக அமைந்து விடுமென்று நினைத்தும் பார்த்திருக்க மாட்டார்.

கொழும்பிலுள்ள ஆனந்தா, நாலந்தா உள்ளிட்ட 460 பெரிய பிரபல பாடசாலைகள் இலங்கையின் பல்வேறு பாகங்களில் ஒல்கொட்டின் வழிகாட்டலால் உருவாக்கப்பட்டன. இன்றும் அவை 100 வீத சிங்கள பௌத்த பாடசாலைகளாக இயங்குகின்றன. அதுமட்டுமன்றி ப்லாவட்ஸ்கியும் ஒல்கொட்டும் சேர்ந்து பௌத்த பெண்களின் கல்வியையும் உயர்த்துவதற்காக பெண்கள் கல்லூரிகளும் உருவாக்கப்பட்டன. மருதானை சங்கமித்த பெண்கள் கல்லூரி, மியுசியஸ் கல்லூரி, விசாகா கல்லூரி போன்றவை அவற்றில் குறிப்பிடத்தக்க உதாரணங்கள்.

உலக மதங்களின் கூட்டமைப்பில் பௌத்தத்தையும் இணைத்துக்கொள்ள பாடுபட்டதுடன் அநகாரிக்க தர்மபாலவை சிக்காகோ மாநாட்டுக்கு அனுப்பிவைத்தார். அந்த மாநாட்டில் சுவாமி விவேகானந்தரின் பிரசித்திபெற்ற உரையை போலவே சிங்கள பௌத்தர்களும் தர்மபாலாவின் உரை முக்கியத்துவமுடையது என்று கருதுகின்றனர். அந்த உரை பௌத்த மதம் குறித்தும் தேரவாதம் குறித்தும் பல விளக்கங்கள் முதல் தடவையாக கலந்துகொண்ட பலரையும் சென்றடைந்தது என்றே நூல்கள் பல கூறுகின்றன.

இலங்கையில் தனிப் பௌத்த பாடசாலைகளின் தோற்றம் பௌத்த மறுமலர்ச்சியில் ஒரு பாய்ச்சல் என்றே கூறவேண்டும். கத்தோலிக்க மத மாற்றத்திலிருந்து பௌத்தர்களை மீட்பதற்கும், சிங்கள பௌத்தர்களின் தனித்துவத்தைப் பேணிப் பாதுகாத்து வளர்ப்பதற்கும் இந்த பாடசாலைகளின் உருவாக்கம் பாரிய பாத்திரம் வகித்தது.

இலங்கையில் பௌத்த அறநெறிப் பாடசாலை (தஹாம் பாசல்) முதன் முதலாக 03.08.1895 இல் காலி ஸ்ரீ விஜயானந்தராம விகாரையில் தொடங்கப்பட்டது கேணல் ஒல்கொட்டின் முயற்சியால் தொடங்கப்பட்டது. கிறிஸ்தவ முறையில் “ஞாயிறு கிறிஸ்தவ அறநெறிப் பாடசாலை” வழிமுறையையே ஒல்கொட் இலங்கையின் பௌத்த மரபில் இணைத்துக்கொண்டார்.

1883 கொட்டாஞ்சேனைக் கலவரம் நிகழ்ந்தபோது பௌத்தர்களுக்கு நிகழ்ந்த அநீதிக்கு நீதி கோரி 1884 இல் இங்கிலாந்து சென்ற அவர் 6 கோரிக்கைகளை வென்று திரும்பினார். அதில் ஒன்று தான் வெசாக் பௌர்ணமி நாளை விடுமுறை நாளாக்க வேண்டும் என்பது.

இன்று உலகம் பூராவும் பயன்படுத்தப்படும் பௌத்த கொடி ஒல்கொட்டின் வழிகாட்டலில் சுமங்கல தேரர், குணானந்த தேரர், அநகாரிக தர்மபால ஆகியோர் கொண்ட குழுவால் உருவாக்கப்பட்டதே.

ஒல்கொட் பௌத்தத்தை இறையியல் பார்வையில் தான் பார்த்தார் எனவே தான் புத்தரின் உடற்பாகங்களை கொண்டு புனித இடங்களாக கருதப்படுபவற்றில் உண்மையிருக்க வாய்ப்பில்லை என்றும் புனிதப்பல் என்று கூறப்படுபவை மிருகங்களின் பல்லாகக் கூட இருக்கலாம் என்று ஒல்கொட் கூறியதை பெரிதுபடுத்தி அவரை ஓரங்கட்டத் தொடங்கினர். ஒல்கொட் பௌத்தத்துக்கு மாறியபோதும் பௌத்தராக வாழவில்லை என்கிற குற்றச்சாட்டையும் பகிரங்கமாக அநகாரிக தர்மபால போன்றோர் முன்வைத்தார்கள். 

ஒல்கொட் வெறும் சித்தாந்தவாதியாக இருக்கவில்லை. அவர் ஒரு செயல் வீரராக இருந்தார். ஒல்கொட் பற்றி ஸ்ரீ சுமங்கல தேரர் குறிப்பிடுகையில் அவர் இலங்கை வந்த “இரண்டாவது அசோகன்” என்கிறார்.

இலங்கையில் அவருக்காக இன்றும் நிறுவப்பட்டுள்ள பல சிலைகள், அவரின் பேரில் இருக்கும் வீதிகளின் பெயர்கள் அவரின் முக்கியத்துவத்தை பறை சாட்டுகின்றன.

பிற்காலத்தில் சிங்கள தலைவர்கள் ராமநாதனை எப்படி ஒரு துரோகியாக சித்திரித்தார்களோ அதுபோல ஒல்கொட்டும் அன்றே ஒரு துரோகியாக பிரசாரப்படுத்தப்பட்டார். அவரால் பலனடைந்த சிங்கள பௌத்த சக்திகள் அவர் தந்த ஏணியில் ஏறியபின் அவரையே எட்டியுதைத்தது தான் வரலாறு. சிங்கள பௌத்த மறுமலர்ச்சிக்கு தூணாகவும், ஒரு ஞானத்தந்தையாகவும் (God father) இருந்த ஒல்கொட் இந்த துரோகங்களின் காரணமாக நாட்டை விட்டே சொல்லிக்கொள்ளாமல் வெளியேறினார். அதன் பின்னர் அவர் இலங்கைக்கு வரவேயில்லை.

“உண்மையை விட உயர்ந்த மதமொன்றில்லை” என்கிற சுலோகத்துடன் உண்மையைத்தேடி பயணித்த ஒல்கொட் 17.02.1907 அன்று சென்னை அடையாரில் அவர் மறைந்தார்.

நன்றி - வீரகேசரி / சங்கமம்



Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates