மலையத்தில் கணித, விஞ்ஞான பாடநெறிகள் தொடர்பில் பல்வேறு சிக்கல்நிலை தோன்றியுள்ளதுடன், அதுபற்றி பரவலாக பேசப்பட்டும், எழுதப்பட்டும் வருகிறது. க.பொ.த. உயர்தரத்தில் இப்பாடங்களை கற்பிப்பதில் ஏற்பட்டுள்ள ஆசிரியர் பற்றாக்குறை தற்போது பூதாகரமாகியுள்ளது. சகல மட்டங்களிலிருந்தும் பல்வேறு ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டிருந்தாலும் அவை யாவுமே நடைமுறையில் வெற்றிபெறவில்லை என்பதை ஏற்றுக்கொள்ளவேண்டும்.
மலையகத்திலுள்ள பாடசாலைகளில் விஞ்ஞான பாடங்களை உயர்தரத்தில் கற்பிப்பதற்கான ஆசிரியர் பற்றாக்குறை நீண்டகால பிரச்சினையாகும். எனவே, வடக்கு, கிழக்கு பிரதேசங்களிலிருந்து விஞ்ஞான பட்டதாரி ஆசிரியர்களை பெற்றுக்கொள்வதிலும் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. சில ஆசிரிய தொழிற்சங்கங்கள் இதற்கு எதிர்ப்புக்களையும் வெளியிட்டு வருகின்றன. இவ்விடயத்தில் ஆசிரியர் சங்கங்கள் எழுந்தமானமாக எதிர்ப்பு தெரிவிப்பதில் ஏதும் பயன் இருப்பதாக தெரியவில்லை.
மலையகத்தில் குறித்த பாடங்களுக்கு ஆசிரியர்கள் இன்மையாலேயே இதனை செய்ய வேண்டிய தேவையுள்ளது. மறுபுறம் வட, கிழக்கில் கணித, விஞ்ஞான ஆசிரியர்கள் உள்ளனரா என்பது வினாவாக உள்ளது.
ஓய்வுபெற்ற கணித, விஞ்ஞான ஆசிரியர்களை மீள சேவையில் ஒப்பந்த அடிப்படையில் இணைத்துக் கொள்வது என்ற தீர்மானமும் சாத்தியப்பட்டதாக தெரியவில்லை.
ஒரு நச்சு வட்டம் போல இப்பிரச்சினை உள்ளது. விஞ்ஞான மாணவர்கள் பெருமளவில் உயர்தரத்தில் பயிலவில்லை. அதன் பின்னர் அவர்கள் விஞ்ஞான பட்டதாரி ஆனாலும் கூட வேறு தொழில்களை நாடிச் செல்கின்றனர். இதனால் மீண்டும் க.பொ.த. உயர்தரத்திற்கு இவ்வாசிரியர்கள் இன்மை என்ற இந்த நச்சு வட்டம் சுழல்கின்றது.
இந்தப் பின்னணியிலேயே இந்தியாவிலிருந்து ஆசிரியர்களை கொண்டு வரலாம் என்ற யோசனை ஆராயப்படுகின்றது.
இந்த நாட்டிற்குள் வேறொரு நாட்டிலிருந்து “ஆசிரியர்கள்” வருவதா? என ஒரு கொள்கை ரீதியாக மாத்திரம் சில ஆசிரியர் தொழிற்சங்கங்கள் சிந்திப்பது யதார்த்த ரீதியாக பிரச்சினைகளை அணுகாமையையே காட்டி நிற்கின்றது. சில தொழில்நுட்ப சேவைகளை (ஆலோசனைகளை) எமது நாட்டிலே இல்லாத போது வெளியில் பெற வேண்டி உள்ளது. இது ஒரு பொதுவான நடைமுறையாகும்.
பல விடயங்கள் இவ்வாறு இடம்பெற்று வருகின்றன. உதாரணமாக தொலைக்காட்சி இலங்கைக்கு அறிமுகமானபோது ஜப்பான் முழுமையாக இதனை இலங்கைக்கு வழங்கியது. இதேபோல் இந்தியாவும் செய்துள்ளது.
இந்தப் பின்னணியில் கணித, விஞ்ஞான ஆசிரியர்களை பெறுவதில் தவறேதும் இருப்பதாக தெரியவில்லை. மேலும் அவர்கள் கற்பித்தல் தொடர்பாக சில ஒழுங்குகளை மேற்கொள்ளலாம். இலங்கையின் பாடவிதான பாடத்திட்ட விடயங்களையும், கற்பித்தல் முறைகளையும் நோக்கங்களையும் விளக்கும் ஒரு செயற்திட்ட செயல் அமர்வினை அவர்களுக்கு செய்யலாம். அதன் பின்னர் அவர்கள் அதனை உள் வாங்கிய நிலையில் வகுப்பறைகளுக்கு அனுமதிக்கலாம்.
மலையகத்தின் கணித, விஞ்ஞான கற்பித்தல் பிரச்சினைக்கு எங்கோ ஓர் இடத்திலிருந்து அதனைத் தீர்த்திட முதல் அடியை எடுத்து வைத்திட வேண்டிய நிலை உள்ளது. இந்நோக்கில் எமது ஆசிரியர்களை இந்தியாவுக்கு அனுப்பி கணித, விஞ்ஞான பட்டதாரிகளாக்கிட ஒரு செயற்திட்டம் மீண்டும் ஆரம்பிக்கப்படல் வேண்டும். இவ்வாறான புலமைப்பரிசில் மூலமான செயற்திட்டம் மற்றொரு புறத்தில் இவ்வாசிரியர்களை உருவாக்க உதவும்.
கடந்த பல வருடங்களுக்கு முன்னர் மத்திய மாகாணத்தில் இந்திய புலமைப்பரிசில் தொடர்பான வேலைத்திட்டம் மிக முனைப்பாக செயற்படுத்தப் பட்டதை மறுத்தல் இயலாது. குறிப்பாக இந்திய தூதுவராகவிருந்த இராஜன்பிள்ளை மிக ஆர்வம் காட்டி உதவினார். சில பல காரணங்களினாலும் இவ்விடயம் முனைப்பினை இழந்து ஒரு பின்னடைவை அடைந்தமை எமக்கு பாதிப்பாகும். இவ்வகையான முயற்சிகளில் பல மாகாண கல்வி அமைச்சர்கள் தமது பங்களிப்பை செய்துள்ளமை குறிப்பிட வேண்டியதே. இவ்வாறு இதனை கையாளக் கூடிய வகையில் கல்வி இராஜாங்க அமைச்சர் உள்ளமை ஒரு சாதகமான நிலையாகும்.
நீண்ட காலத்தில் இக் கணித, விஞ்ஞான பட்டதாரி பிரச்சினைக்கு தீர்வு தேடும் அதேவேளையில் குறுகிய கால வேலைத்திட்டம், செயற்திட்டம் உடன் தேவையாக உள்ளது. இந்நிலையில் எல்லாவகையான முயற்சிகளையும் மேற்கொள்வது நல்லது.
ஆசிரியர்களை இந்தியாவுக்கு அனுப்பி பட்டதாரிகளாக்குவது வட, கிழக்கு மேலும் ஏனைய பிரதேச ஆசிரியர்களை இணைத்துக் கொள்வது, ஓய்வு பெற்றவர்களை மீள எடுப்பது இந்தியாவிலிருந்து ஆசிரியர்களை வரவழைப்பது என பன்முக ரீதியாக நடவடிக்கை எடுப்பது நல்லது.
பல்கலைக்கழக மாணவர்களை (under graduate) கொண்டு உயர்தரத்திற்கு கணித, விஞ்ஞான பாடங்களை கற்பிக்கும் ஒரு நடைமுறை உள்ளது. இதனை ஓர் அமைப்பு ரீதியாக செய்ய முடியும். மலையகத்தில் கடந்த காலங்களில் இவ்வகையான கற்பித்தல், கலந்துரையாடல் முறைகள் இடம்பெற்றுள்ளமையை குறிப்பிடல் வேண்டும். இவ்விடயத்திற்கான பொருளாதார, நிதி உதவிகளை மலையகம் சார் தொண்டர் நிறுவனங்கள், சமய நிறுவனங்கள் வழங்கிட முடியும்.
சகோதர இனமான முஸ்லிம் சமூகத்தில் இவ்வாறான ஏற்பாடுகள் உள்ளன. இஸ்லாமிய அமைப்புக்கள், தனவந்தர்கள் செய்வதுடன் பள்ளிவாசல்களினூடாகவும் ஏற்பாடுகள் உள்ளன.
இந்திய வம்சாவளியினரின் வழியில் சில அமைப்புக்கள் மலையக கல்வி தொடர்பாக கரிசினை காட்டி உதவி வருகின்றன. இது மேலும் விரிவுபடுத்தப்படவும் ஊக்கப்படுத்தப்படவும் ஒழுங்கமைக்கப்படவும் வேண்டும்.
தனிமனிதர்களாலும் விஞ்ஞான, கணித துறை மலையத்தில் வளர்த்தெடுக்கப்பட்டுள்ளதை காணலாம். அவர்கள் Tuition போன்ற வகுப்புகளினூடாக இதனை செய்தாலும் மனிதாபிமான ரீதியில் மிக நியாயமான கட்டணங்களை அறவிட்டு அதனை செய்தனர். மிக வறிய மாணவர்களுக்கு இலவசமாகவே கற்பித்தும் உள்ளனர். இதேவேளை உழைப்பையும், சுரண்டலையும் இலக்காகக் கொண்டு செயற்படும் சில ஆசிரியர்கள் மிக அதிகமாக கட்டணங்களை அறவிடுகின்றனர் என்ற புகார்கள் உள்ளன.
குறிப்பாக கணித, விஞ்ஞான பாடத்துறை சவாலுக்கு உட்பட்ட ஒன்றாகவே உள்ளமையை மறுத்தல் இயலாது.
நன்றி - வீரகேசரி
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...