Headlines News :
முகப்பு » » தேர்தலுக்கு முன்பு பெருந்தோட்டப்புறங்கள் உள்ளுராட்சிக்குள் உள்வாங்கப்படுமா..? - மு.சிவலிங்கம்

தேர்தலுக்கு முன்பு பெருந்தோட்டப்புறங்கள் உள்ளுராட்சிக்குள் உள்வாங்கப்படுமா..? - மு.சிவலிங்கம்


தமிழ் முற்போக்கு கூட்டணியின் முதல் தேர்தல் மேடையில் ¸ மலையக மக்களின் ஆறு அம்ச அரசியல் கோரிக்கைகளை முன் வைப்பதற்கு கௌரவ அமைச்சர் பழனி திகாம்பரம் எனக்கு வாய்ப்பு வழங்கினார். அக் கோரிக்கைகளில் ஒரேயொரு உள்ளூராட்சி கோரிக்கையை மட்டும் கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜ் சபையில் முன்னெடுத்து உரையாற்றினார். அவ்வுரைக்குப் பின்னர் இன்று வரை ஆட்சியாளரின் நிலைப்பாடு என்னவென்று அறிய முடிய வில்லை. செப்டெம்பரில் தேர்தல் வரலாம்¸ என்ற செய்தி அடிபடுகிறது.

அதற்கு முன்பு பெருந்தோட்டக் குடி மக்களுக்கு எதிரான 1987 ம் ஆண்டு 15 ம் இலக்க உள்ளூராட்சியின் 33 ம் உறுப்புரைச் சட்டம் நீக்கப்பட்டு விடுமா..? 200 ஆண்டுகளாக பெருந் தோட்டப்புறங்கள் உள்ளூராட்சிக்குள் உள்வாங்கப்படாத அரசியல் பாகுபாடு நீக்கப்படுமா..? எமது குடிமக்களுக்கு எதிரான உள்ளூராட்சி சட்டம் நீக்கப்படாமலேயே த.மு.கூ வரப்போகும் தேர்தலில் குதிக்குமா..? இம் முறை நுவரெலியா¸ அம்பகமுவ பிரதேச சபை ஆட்சியைப் பிடிக்கக் கூடிய த.மு.கூ நிறுத்தும் வேட்பாளர்களுக்கு இந்தச் சட்டம் தெரியுமா..? அதுபோல ஏனைய மாகாணங்களில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கும் இந்தச் சட்டம் தெரியுமா? வாக்காள மக்கள் “இச் சட்டத்தை நீக்காமல் வாக்கு கேட்க வரலாமா..?” என்று வினா தொடுத்தால் அவர்கள் என்ன பதில் சொல்வார்கள்..?

கீதோபதேசம் சொல்வது போல் “கடமையைச் செய்.. பலனை எதிர் பாராதே..! “ என்றவாறு “ஓட்டைப் போடு.. உரிமையை எதிர் பார்க்காதே..!" என்பார்களா..? வாக்காளர் வாயை சாத்திய பின்¸ உள்ளூராட்சிப் பணத்தை வழமைப் போல கிராமங்களின் அபிவிருத்திகளுக்கு மட்டுமே செலவு செய்வார்களா..? அவர்களால் தோட்டப்புறங்களுக்கு உள்ளூராட்சிப் பணத்தில் ஒரு குப்பைக் குழியையாவது வெட்டிக் கொடுக்க முடியுமா..? அல்லது டெங்கு நுளம்புகளுக்காவது மருந்து தெளிக்க முடியுமா..? பிரதேச சபை எல்லைகளைப் பார்த்துதானே மருந்து தெளிக்கிறார்கள்? டெங்கு கொசு தோட்டப்புறம்..கிராமப்புறம் என்று வித்தியாசம் பார்த்துதான் கடிக்குமா?

கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த உட பலாத்த பிரதேச சபையில் என்ன நடந்ததென்று உங்கள் வேட்பாளர் சொல்வார்களா..? புசல்லாவை சோகம தோட்டப் பாதையை செப்பனிட்டதற்காக அந்தப் பிரதேச சபையையே கலைத்து விட்ட சட்ட நடவடிக்கை இவர்களுக்கு தெரியுமா..? இப்படி நாட்டின் பொது நிர்வாகப் பணத்தை மத்திய அரசு தோட்டப்புறங்களுக்கு செலவு செய்ய மறுத்து வரும் மனித உரிமை மீறலுக்கு எதிராக இவர்கள் சபைக்குள் நுழைந்து பகிஷ்கரிப்புப் போராட்டம் நடத்துவார்களா? தேர்தலை வென்றெடுக்கும் எம் மக்களுக்கு பயன் படாத பிரதேச சபை தலைவர் பதவி..பிரதேச சபை உறுப்பினர் பதவிகள் தேவை தானா?

200 ஆண்டுகளாக அவமானப்பட்டுக் கிடக்கும் மக்களின் அடிப்படை அரசியல் உரிமைகளில் ஒன்றான உள்ளூராட்சிக்குள் உள் வாங்க மறுக்கப்பட்டிருக்கும் மனித உரிமையை எதிர்வரும் தேர்தலுக்குள் பெற்றுக் கொடுக்க முடியுமா..? என்ற கேள்வியை த.மு.கூ. விடம் மட்டுமல்லாமல்¸ போட்டியிடும் எல்லா கட்சிகளிடமும் முன் வைக்க விரும்புகின்றேன்.. இந்தக் கேள்வி முகநூல் என்னும் சர்வதேச மக்கள் அரங்கத்தின் முன் சமர்ப்பிக்கப்படுவதால் சர்வதேசங்களிலிருந்தும் மக்கள் உங்கள் அறிவார்ந்தப் பதிலை எதிர்பார்ப்பார்கள்…!

ஒரு நாட்டு நிர்வாக ஆட்சிக்குள் 200 வடங்களாக வாழ்ந்து வரும் குடிமக்களை உள்வாங்க மறுக்கும் ஆட்சிக்கு எதிராக ஏன் இன்னும் நீங்கள் குரல் கொடுக்கவில்லையென்று சர்வதேச சமூகம் உங்களிடம் ஆக்ரோஷமாக கேள்வி கணைகளைத் தொடுப்பார்கள்!.. கருத்து பகிர்வார்கள்…! உள்ளூராட்சி… தேர்தலுக்கு முன் உங்கள் நிலைப்பாட்டை தெரிவிப்பீர்களா?
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates