தேங்காய் எண்ணையில் இருந்து முள்ளுத்தேங்காய் எண்ணைக்கு - பாகம் - 23)
பெருந்தோட்டக் கைத்தொழில் நிலைமைகள் நாளுக்கு நாள் பல நெருக்கடிகளையும் அதேநேரம் புதிய முறைகளை கண்டறிய வேண்டிய அழுத்தங்களையும் தொடர்ந்தும் மலையக அரசியல், தொழிற்சங்க,சட்டத்துறை, ஆய்வுத்துறைசார்ந்தவர்கள், சமூக ஆர்வலர்கள் மீது ஏற்படுத்தி வருகின்றது.
2016செய்து கொள்ளப்பட்ட கூட்டு ஒப்பந்தம் சம்பந்தமாக இடைக்கால பேச்சவார்த்தை ஒன்றும் இடம்பெற்றள்ளதாகவும் அது தோல்வி கண்டிருப்பதாகவும் அறிய முடிகின்றது. இத்தகைய இடைக்கால பேச்சுவார்த்தைகளின் தேவை என் எழுகின்றது என்பதையும் நாம் ஆராய வேண்டியிருக்கின்றது.
2013ஆம் எப்பிரல் நான்காம் திகதி செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம் 2015இல் மீள் பேச்சுவார்த்தை செய்யப்பட்டு வந்திருக்க வேண்டிய நிலையில் அது நீண்ட இழுத்தடிப்புகளுக்கு உள்ளானது. இந்த சந்தர்ப்பத்தில் இந்த கூட்டு ஒப்பந்த முறை குறித்து ஆய்வு ஒன்றினை வெரிட்டே ரிசேர்ச் (Varite Research) எனப்படும் ஆய்வு நிறுவனம் ஒரு ஆய்வு அறிக்கையை வெளியிட்டிருந்தது.
அதில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.,
'ஒவ்வொரு புதுக் கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதன் பின்னர் தோட்டத் தொழிலாளரின் வருமானம் ஒரு கணிசமான அளவினால் அதிகரித்துள்ளது என்று செய்திகள் தெரிவிக்கும். எனினும் உண்மை நிலை தெளிவற்றதாகவே இருக்கும். தோட்டத் தொழிலாளர்களுக்கு இரண்டு வேதனங்கள் உண்டு ஒன்று தத்துவார்த்த வேதனம் அதுவே செய்தித் தலைப்புகளில் இடம்பிடிக்கும். மற்றையது அடிப்படைச் சம்பளம். பெரும்பாலானவர்களுக்கு கையில் கிடைப்பது இதுதான்'
'முதல் நோக்கில் தத்துவார்த்த வேதனத்தைப் பெற்றுக்கொ ள்வதற்கான நிபந்தனை நியாயமானதாகவே தோன்றுகிறது. மாதத்தில் குறைந்த பட்சம் 75% வேலை நாட்கள் வேலைக்குச் சமூகமளித்தல். எனினும் அது உண்மையாக வழங்கப்படும் வேதனமானது வேலை நாட்களுள் 75 மாத்திரமே என்று சிறிய அச்செழுத்து கூறுகின்றது. எனவே 75% வேலை நாட்களில் வேலை செய்ய வேண்டும் என்ற நிபந்தனையானது சம்பளம் வழங்கப்படாத விடுமுறை நாட்களையும் சேர்த்து மாதத்திற்கு குறைந்தது 19 நாட்கள் வேலை செய்ய வேண்டிய நிலைக்குட்படுத்துகின்றது.
தோட்டத் தொழில் சாராத பெரும்பாலான தொழிலாளர்களுக்கு மாதமொன்றுக்கு சராசரி 20 நாட்கள் வேலை வழங்கப்படுகின்றது. பொதுவான தொழிற்படைக்கு வருடத்தில் குறைந்தது 21 நாட்கள் நாள் சம்பளத்துடனான விடுமுறை பெறுவதற்கான உரிமை உண்டு. எனவே அவர்கள் சராசரியாக வேலை செய்யும் நாட்கள் 18 ஆகும். எனவே, 75 வீதமான நாட்கள் வேலைக்கு சமூகமளிததல் என்பது , உண்மையில் பெரும்பாலானோர் (ஏனைய) பொதுவான வேலைப்படையை 100% நாட்கள் வேலை செய்ய வேண்டுமென கோருவதைவிட கூடுதலானதாகும்.
ஏதாவது ஒரு மாதத்தில் 19 நாட்களைவிட ஒரு நாள் குறைந்தாலும் அதன் விளைவு முழு மாதத்தினதும் சம்பளத்தில் கிட்டத்தட்ட 25% வெட்டப்படும் என்பதாகும். இது கொடுமையானது மட்டுமின்றி மடமையானதுமாகும். ஊக்குவிப்பு கொடுப்பனவுக் கட்டமைப்பு மோசமான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளதோடு, அது தொழிலாளர்களுக்கு பாதகமானதாகவிருப்பது மட்டுமின்றி பெருந்தோட்டக் கம்பனிகளுக்கும் எதிரானதாகவே அமைந்துள்ளது.
கடும் தொழிலாளர் பற்றாக்குறை நிலவுவதும் வேலைக்குச் சமூகமளிக்காமை ஒரு பாரதூரமான பிரச்சினையாக உருவெடுத்துள்ளது என்பதுமே பெருந்தோட்டக் கம்பனிகளிடம் இருந்து வரும் பின்னூட்டலாகும். இந்த ஊக்குவிப்பு கொடுப்பனவுக் கட்டமைப்பு தொழிலாளர்கள் வேலைக்குச் செல்லும் நாட்களின் எண்ணிக்கையை கூட்டுமென்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நடப்பது அதற்கு எதிர்மாறனதாகவே தோன்றுகிறது.
அடிப்படைச் சம்பளத்தை மட்டும் எதிர்ப்பார்க்கும் தொழிலாளி அற்ப காரணங்களுக்காக குறிப்பாக தொட்டங்களுக்கு வெளியே அதைவிட கூடிய நாட்சம்பளம் வழங்கும் வாய்ப்புகள் கிடைக்கும்போது தோட்டத்தில் வேலை செய்வதை தவிர்க்க கூடிய அளவுக்கு உள்ளது இந்த வரவு ஊக்குவிப்பு கட்டமைப்பானது, வேலை செய்வதற்கான ஊக்குவிப்பாக அமைவதை விட வேலை செய்வதை அதைரியப்படுத்துவதாகவே அமைந்துள்ளது.
பெரும்பாலான பெருந்தோட்டத்துறை தொழிலாளர்கள் குறைந்த மட்டத்திலான எழுத்தறிவும் கல்வியறிவும் கொண்டவர்களாகவே உள்ளனர். ஒவ்வொரு மாதமும் தாம் வேலைக்குச் சமூமளித்தல் தொடர்பான நிபந்தனையை பூர்த்தி செய்யக்கூடியதாகவிருப்பதை நாளாந்த அடிப்படையில் அவர்களாகவே மதிநுட்பத்துடன் கணிப்பிட்டுக்கொள்வார்கள் என்பது சாத்தியமானதல்ல. கடந்த கால அனுபவத்தின் அடிப்படையில் தமது சம்பளம் பற்றியதொரு எதிர்பார்ப்பை அவர்கள் உருவாக்கிக் கொள்வார்கள்.
ஒரு சில மாதங்களுக்கு நிபந்தனையைப் பூர்த்தி செய்யத் தவறியதும், தோட்டத்தில் வேலை செய்து போதிய வருமானத்தை ஈட்டிக்கொள்ள முடியாது (அல்லது மாதாந்த சம்பளத்தில் நிச்சயமற்ற தன்மை மிக அதிகம்) என எண்ணத் தொடங்கி விடுவார்கள். இதன் விளைவாக தோட்டத்திற்கு வெளியில் கிடைக்கும் ஒரு தொழில், தோட்டத்துறையின் தத்துவார்த்த சம்பளத்தைவிட குறைவான சம்பளத்தை வழங்கிய போதும் அது கூடிய வருமான பாதுகாப்பு உணர்வைத் தரக்கூடும்.'' (வீரசேகரி 2016 பெப்ரவரி 26).
மேற்காட்டப்பட்டவை ஆய்வறிக்கையின் சில பகுதிகள் மாத்திரமே. இந்த ஆய்வு 2016 ஆண்டு கூட்டு ஒப்பந்தம் செய்யப்படுதற்கு முன்பதாகவே செய்யப்பட்டதாயினும் தற்போதைய கூட்டு ஒப்பந்த நிலைமைகளையும் பிரதிபலிப்பனவாகவே உள்ளது. தவிரவும் 1992ஆம் ஆண்டு பெருந்தோட்டங்கள் தனியார் மயப்பட்டதன் பின்னர், 1996ஆம் ஆண்டு முதல் கூட்டு ஒப்பந்த அடிப்படையில் சம்பளம் தீர்மானிக்கப்பட்டபின்னர் பெருந்தோட்டத் துறையில் மிகவேகமாக தொழிலாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்து கொண்டு சென்றமையை மேற்படி ஆய்வு காரண காரியங்களுடன் விபரித்திருக்கின்றது.
இவ்வாறு வெளியேறிச் செல்லும்போது வேறு துறைகள் குறைவான சம்பளத்தை வழங்கியபோதும் அது கூடிய வருமானம் தரும் பாதுகாப்பு உணர்வைத் தரக்கூடும் எனவும் மேற்படி ஆய்வு சுட்டிக்காட்டுகின்றது. ஆனால், உண்மையில் நடப்பது என்னவெனில் வேறு தொழில்களுக்கு செல்வோர் குறைந்த பட்சம் ஊழியர் சேமலாபநிதி, ஊழியர் நம்பிக்கை நிதி, சேவைக்காலப் பணம் போன்ற எதிர்கால சேமிப்பினைத் தானும் கொண்டிருந்தார்கள்.
தோட்டத் தொழிலை கைவிட்டு வேறு உபரித்தொழிலுக்கு செல்லும் போது நாளாந்த சம்பளம் சிலவேளை அதிகமாக கிடைக்கின்றபோதும் மேற்படி பாதுகாப்புகள் இல்லை என்பதை சமகாலத்தில் தொழிலாளர்கள் உணர வாய்ப்பில்லை. மறுபுறத்தில் தோட்டத் தொழிலை விட்டுச்செல்வோர் தொகை குறைந்து செல்வது மட்டுமில்லாமல் தோட்டத் தொழிலுக்குள் உள்வருவோர் தொகையும் உள்வாங்கப்படுவோர் தொகையும் குறைந்தே செல்கின்றது. இதற்கு மாற்றுத்தொழிலாக பிரதானமாக அடையாளம் காணப்பட்டதாக 'ஆட்டோ ஓட்டுதல்' பரவலாக இடம்பெற்று வருகின்றது. இதற்கான முதலீடுகளையும் கூட பெற்றோரின் ஊழியர் சேமலாப நிதி அல்லது நம்பிக்கை நிதி பயன்படுத்தப்படுவதையும் அவதானிக்க முடிகின்றது.
இந்த பின்புலங்களையும் முன்னிறுத்தியே தோட்டத் தொழிலாளர்களுக்கான மாற்றுத்திட்டம் ஒன்றை முன்வைப்பது தொடர்பில் ஆலோசிக்க வேண்டியுள்ளது.
நன்றி - சூரியகாந்தி
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...