மலையக மக்களின் வாழ்வியலில் மறக்க முடியாத போராட்டமாக அமைந்து ஐம்பது வருடகாலமாக தொடர்ந்து அவர்களின் வாக்குரிமைக்கான போராட்டம். அது ஒரு ஆயுதம் ஏந்திய போராட்டமாக அமையவில்லை. ஆனாலும், அவர்களது உழைப்பில், தொழிற்சங்க கட்டமைப்பில், எழுத்து, கலை, இலக்கிய இயக்கங்களில் ஒரு தொடர் போராட்டமாக தொடர்ந்து. ஒரு கட்டத்தில் ஆயுதம் ஏந்தி தங்களது தனி நாட்டுக் கோரிக்கைக்காக போராடிய இலங்கைத் தமிழர்களிடையே இயக்கிய இயக்கங்களில் சில மலையகத்தையும் மலையகத் தமிழர்களையும் கூட இணைத்துக்கொண்டது. அவற்றுள் ஈரோஸ் இயக்கம் முதன்மையானது.
ஈரோஸ் இயக்கத்தின் செயற்பாடுகளில் மலையகம் கோட்பாட்டு ரீதியாக இணைத்துக்கொள்ளப்பட்டது போலவே மலையக இளைஞர்களும் இணைத்துக் கொள்ளப்பட்டார்கள். வடகிழக்கில் இயக்கங்கள் வேர்விடத் தொடங்கிய 70 களின் பின் கூறுகளில் இருந்து அவை வளர்ந்து கிளைகளாக பிரிந்து சென்ற 80களின் ஆரம்பத்தில் ஈரோஸ் இயக்கமும் அவற்றுள் ஒன்றாக அமைந்தது.
1983 இனக்கலவரம் வடக்கில் இடம்பெற்ற இராணுவத் தாக்குதலோடு மையப்படுத்தியதாக ஆரம்பித்தாலும் அது கொழும்பையும் மலையகத்தையும் விட்டு வைக்கவில்லை. பலநூறு இழப்புக்களை மலையகமும் சந்திக்க நேர்ந்தது. இயக்கச் செயற்பாடுகளில் பங்கேற்ற இளைஞர்களும் கைதானர்கள். ஈழப்போராட்டத்தின் பெயரில் இன்று வரை சிறையில் வாழும் இளைஞர்களும் உள்ளனர்.
இந்த பின்விளைவுகளுக்கு அப்பால் அன்றைய நாட்களில் இனப்பிரச்சினைக்கு முயற்சிகளாக சர்வகட்சி மாநாடுகள் எண்பதுகளில் இடம்பெற்றன. 83 கலவரத்தின் விளைவால் தமிழ்நாட்டில் எழுந்த எதிர்ப்பு அலை இந்தியா இனப்பிரச்சினை தீர்வில் தலையிடும் நிலை உருவானது. இந்திய தலையீட்டின் விளைவாக இனப்பிரச்சினைக்கான தீர்வு முயற்சி இலங்கைக்கு வெளியேயும் இடம்பெறலாயின.
அந்த வகையில் 1985இல் இந்தியாவின் அனுசரணையுடன் மத்தியஸ்த்த நாடாக பூட்டான் தெரிவு செய்யப்பட்டு அந்நாட்டின் தலைநகர் 'திம்பு' வில் தமிழர் தரப்புக்கும் - இலங்கை அரசாங்கத்துக்கும் இடையே பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன.
இந்தப் பேச்சுவார்த்தையின்போது தமிழர் தரப்பு என்பது 'ஈழத்தேசிய விடுதலை முன்னணி' என நான்கு இயக்கங்களின் சேர்க்கையாக அமைந்திருந்தன. தமிழீழ விடுதலைப்புலிகள் (LTTE), ஈழ புரட்சிகர அமைப்பு - ஈரோஸ் இயக்கம் (EROS) தமிழீழ விடுதலைக் இயக்கம் (TELO) ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (EPRLF) ஆகியனவே தமிழ் தரப்பானது. எனினும் திம்பு பேச்சுவார்த்தை மேடைக்குச் செல்லும் போது தமிழர் விடுதலைக் கூட்டணி (TULF), தமிழீழ மக்கள் விடுதலை கழகம் (புளோட்- PLOTE) ஆகியனவும் இணைந்தாக ஆறு அமைப்புகள் 'தமிழர் தரப்பு' ஆயின.
இந்த 'தமிழர் தரப்பு' நான்கு அம்ச கோரிக்கையை முன்வைத்து 'திம்பு' பேச்சுவார்த்தையிலே கலந்துகொண்டது. அவற்றுள் முதல் மூன்றும் வடக்கு, கிழக்கு தமிழர்களின் பிரச்சினைகளை மையப்படுத்தியதாக தமிழர் தாயகம், சுயநிர்ணய உரிமை என அமைந்திருந்த வேளை நான்காவது கோரிக்கை சற்று மாறுபட்டதாக அமைந்திருந்தது.
அது 'இலங்கைத் தீவில் நமது நாடாக நோக்கும் அனைத்து தமிழர்களினதும் அடிப்படை உரிமைகளும் குடியுரிமையும் உறுதிப்படுத்தப்படல் வேண்டும்' எனும் பொருள்பட அமைந்திருந்தது.
இந்தக் கோரிக்கையில் அனைத்து தமிழர்களும் என சொல்லப்பட்டாலும் குடியுரிமை உறுதிப்படுத்தப்படல் வேண்டும் எனும் கோரிக்கை 'மலையக' மக்களை குறிப்பாக சுட்டிக்காட்டியது. இந்த நான்காம் கோரிக்கைக்கான காரணமே, அன்றைய பேச்சுவார்த்தையில் கலந்துகொண்ட தமிழர் தரப்பில் 'ஈரோஸ்' இயக்கம் அங்கம் வகித்தமையே என்பது மலையகத் தமிழர்களின் நம்பிக்கை. அதற்கு காரணம் அவர்களது இயக்கக் கோட்பாடுகளில் மலையகமும் உள்ளீர்க்கப்பட்டிருந்தமையே.
எல்லாப் பேச்சுவாரத்தைகளும் போலவே 'திம்பு பேச்சுவார்த்தையும்' தோல்வியிலேயே முடிவடைந்தபோதும், இலங்கையில் வாழும் தமிழர் பிரச்சினைகள் பற்றி பேசப்பட்டபோது இலங்கைக்கு வெளியே இடம்பெற்ற பேச்சுவார்ததைகளில் 'மலையகத் தமிழர்களின்' கோரிக்கையும் உள்வாங்கப்பட்ட முதலாவதும் இறுதியானதுமான சந்தர்ப்பமாக 'திம்பு பேச்சவார்த்தையை' சுட்டிக்காட்ட முடியும்.
திம்பு பேச்சவார்த்தை 1985 ஜுலை மாதம் 8ஆம் திகதி முதல் 13ஆம் திகதி வரை முதல் சுற்று பேச்சுவார்த்தையும் 12ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரை இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையும் இடம்பெற்றிருந்தன. இற்றைக்கு சரியாக 32 ஆண்டுகளுக்கு முன்னர் பேச்சுவார்த்தை மேசையில் முன்வைக்கப்பட்ட 'மலையக மக்களின் குடியுரிமை' விடயத்தை மீளவும் நினைவுறுத்தி இந்த கட்டுரை எழுந்த நேர்ந்ததன் பின்னணி யாதெனில், எந்த மக்கள் அன்று குடியுரிமை அற்றவர்களாக வாக்குரிமை பறிக்கப்பட்டவர்களாக இருந்த நிலையில், அதற்கான கோரிக்கை வெளிநாடு ஒன்றில் முன்வைக்கப்பட்டதோ அதே நாட்டில் அதன் தலைநகரமான 'திம்புவில்'வாக்குரிமை பெற்ற சமூகமாக, அவர்களின் நாடாளுமன்ற பிரதிநிதியாக 'அபிவிருத்தி மதிப்பீடு சார்' மாநாடு ஒன்றில் பங்கேற்பற்காக வருகைத்தரக்கிடைத்தது வாய்ப்பாகும்.
இந்தப் பயணத்தில் 'மலையகத்தவனாக' எந்த வாய்ப்பும் வழங்கப்படவில்லை. இலங்கை நாடாளுமன்றத்தின் பிரதிநிதியாக 'அபிவிருத்தி மதிப்பீட்டு குழுவாக இயங்கும் நாடாளுமன்ற உறுப்பினராக' இந்த வாய்ப்பு அமைந்தது. அபிவிருத்தி மதிப்பீடுகளுக்கான பாராளுமன்ற உறுப்பினர்களின் சர்வதேச பேரவையின் தலைவராக இயங்கும் அமைச்சர் கபீர் ஹாசிம் அவர்களுடன் இந்தப் பயணம் எனக்கு வாய்த்திருந்தது.
அமைச்சர் கபீர் ஹாசிம் தலைமையில் 'நாடாளுமன்ற உறுப்பினர்களால் அபிவிருத்தி மதிப்பீட்டாளர்களாகவும் இயங்க முடியுமா?' என்கின்ற தலைப்பில் இடம்பெற்ற கலந்தாய்வு கூட்டத்தில் ' அபிவிருத்தி மதிப்பீட்டு செயன்முறையில் இலங்கை பாராளுமன்ற உறுப்பினர்களின் பேரவை வகிக்கும் பங்கு' எனும் தலைப்பில் இருபது நிமிட உரை (அளிக்கை) ஒன்றை ஆற்றியிருந்தேன். அந்த உரையின் உள்ளடக்கம் பற்றி பிறிதொரு கட்டுரையில் பார்க்கலாம்.
இரண்டாவது சந்தர்ப்பமாக ஒரு அமர்வுக்கு தலைமை தாங்கும் பொறுப்பு எனக்கு வழங்கப்பட்டது. பங்களாதேஷ், நேபாளம், பூட்டான், இலங்கை ஆகிய நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்திய அளிக்கையாளர்களின் அமர்வுக்கு தலைமைத் தாங்ககிடைத்தமை மட்டுமல்லாது அங்கு பேசப்பட்ட தலைப்பு மீண்டும் 'திம்பு கோட்பாட்டினை' நினைவுபடுத்தியமையை வாய்ப்பாகக் கொண்டு 'மலையகத்தவனாக' பிரதிநிதித்துவம் செய்யும், பேசும் வாய்பை ஏற்படுத்திக் கொண்டேன்.
ஐக்கிய நாடுகள் சபை முன்வைத்திருக்கும் 'நிலைபேறான அபிவிருத்தி இலக்கு 2030' என்கின்ற இலக்கின் அடிநாதமாக அமைவது 'ஒருவரையும் பின்நிற்க விடுவதில்லை (Left no one behind) அதாவது எல்லோரையும் அபிவிருத்தியின் பாதையில் ஒன்றாக அழைத்துச் செல்வது என்பதே தொனிப்பொ ருளாகும.
2030 இல் அப்படி ஒரு இலக்கினை அடைய வேண்டும் என்பது ஐக்கிய நாடுகளில் அங்கம் வகிக்கும் நாடுகளின் இலக்காக உள்ளது. அதனை அடைவது தொடர்பான இலங்கையின் முயற்சிகளையும் பிறிதொரு கட்டுரையில் பார்க்கலாம்.
என்னை தலைமை தாங்குமாறு அழைக்கப்பட்ட குறித்த அமர்வில் 'யாரையும் பின்நிற்க விடாது முன்னோக்கி அழைத்துச் செல்ல நிலைபேறான அபிவிருத்தி இலக்குகள் கோட்பாட்டை எவ்வாறு கையாள்வது' என்பதாக தலைப்பு வழங்கப்பட்டது.
எனது உரையின் சுருக்கத்தை இங்கே தருகின்றேன்.
" 'யாரையும் பின் நிற்கவிடுவதில்லை எல்லோரையும் முன்னோக்கி அழைத்துச் செல்வோம்' என்pathu எமக்கான தலைப்பாக உள்ளது. எனது நாட்டு அனுபவங்களின் அடிப்படையில் பின்நோக்கிச் சென்று ஒரு நினைவு பகிர்தலை எனது உரையில் வழங்கலாம் என நினைக்கின்றேன்.
இலங்கை சுதந்திரமடைவதற்கு முன்பதாகவே காலனித்துவ ஆட்சிக் காலத்திலேயே ஆங்கிலேயர்களால் சர்வஜன வாக்குரிமை சட்டத்தின் கீழ் வாக்குரிமைப் பெற்றவர்களாக இலங்கை வாழ் இந்திய வம்சாவளி தமிழ் மக்களாகிய நாங்கள் இருந்தோம். எனினும் 1948இல் சுதந்திரமடைந்து 1948ஆம் ஆண்டே முன்வைக்கப்பட்ட 'தேசியவாத' சிந்தனையால் 'இந்தியர்கள்' எனும் பெயரில் எங்களுக்கான குடியுரிமை இலங்கையில் மறுக்கப்பட்ட நிலையில் நாங்கள் வாக்குரிமை அற்றவர்களாக ஆனோம்.
இன்றைய எமது தலைப்பை ஒப்பிட்டால் அன்று நாங்கள் 'பின்நிறுத்தப்பட்டோம்' (We had left behind) எங்கள் அரசாங்கme எங்களை பின்நிறுத்தியது. வாக்குரிமையை எங்களுக்கு மாத்திரம் வழங்க மறுத்திருந்தது. நாங்கள் போராடினோம். முடியுமான வழிகளில் எல்லாம் போராடினோம். ஐம்பதாண்டுகால போராட்டத்தில் பல்வேறு கட்டங்களில் சிறுக, சிறுக எங்களுக்கு வாக்குரிமை கிடைத்ததோடு, 2003ஆம் ஆண்டு எங்கள் சமூகத்தவர் அனைவருக்கும் குடியுரிமை, வாக்குரிமை வழங்கும் தீர்மானத்தை எங்கள் பாராளுமன்றம் நிறைவேற்றியது. இந்தப் போராட்டங்களின் பின்னணியில் எதிர்பாராத விதமாக இப்போது நான் நின்று கொண்டிருக்கும்'திம்பு' மண்ணும் சம்பந்தப்பட்டது.
திம்பு பேச்சுவார்த்தை - 1985 ( Thimphu Talk 1985) என இணையத்தில் நீங்கள் அதனைப் பார்க்கலாம். அன்று அந்த மக்களுக்கு வாக்குரிமைக்காக இந்த மண்ணில் இடம்பெற்ற பேச்சுவார்த்தை மேசையில் கோரிக்கை முன்வைக்கப்பட்டதோ அதே மண்ணில் இன்று ஒரு இலங்கை பிரஜையாக, வாக்குரிமை பெற்றவனாக மட்டுமல்ல அந்த மக்களின் பிரதிநிதியாக, நாடாளுமன்ற உறுப்பினராக நிற்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தமையை ஒரு உணர்வு பூர்வமான நிகழ்வாகப் பார்க்கின்றேன். இந்தக் கோரிக்கையின் பின்னால் இருந்தவர்களுக்கும் எங்களது போராட்டத்தில் இணைந்த எனது முன்னோர்களுக்கும் நான் இந்தசந்தர்ப்பத்தில் நன்றியுடையவனாக உள்ளேன்.
இப்போது, நாங்கள் இலங்கையின் பிரஜை என்கின்ற அடிப்படையில் 'பின்நிறுத்தப்படவில்லை' எங்கள் அரசாங்கம் வாக்குரிமையை வழங்கி எங்களை ஏனைய இனத்தவர்களுடன் முன்நிறுத்தியிருக்கின்றது. எங்களது அடுத்த இலக்கு எங்கள் நாட்டு மக்கள் அனைவருடனும் இணைந்து 2030 இல் யாவரும் அடைய வேண்டிய அபிவிருத்தி இலக்கினை அடைவதுதான்.
இங்கு வருகைதந்திருக்கும் அனைத்து நாட்டவருக்கும் உள்ள பொறுப்பும் கூட அவரவர் நாடுகளில் இந்த இலக்கினை அடைய பாடுபடுவதுதான். 'யாரையும் பின்நிறுத்த வேண்டாம், எல்லோரையும் முன்னோக்கி அழைத்துச் செல்வோம்' எனும் பொருளில் நாம் பேசுவோம்.
இங்கு நான் பகிர்ந்துகொண்ட அனுபவம் 'பிரஜை' என்கிற விடயத்தில் பின்நிறுத்தப்பட்டிருந்த நாங்கள் எவ்வாறு ஐம்பது வருட கால முயற்சியில் இன்று முன்நிறுத்தப் பட்டிருக்கின்றோம் எனும் புரிதலைப் பெறுவதற்காகவே. நாங்கள் நாடுகளிடையே இத்தகைய அனுபவங்களைப் பகிர்ந்துக்கொள்கிறோம்.
இப்போதைய எங்களது அரசியல் சொற்பிரயோகங்களில் ஒன்றாக 'திம்புக்கோட்பாடு' தவிர்க்க முடியாத இடத்தினைப் பெற்றுக்கொண்டுவிட்டது. அது இடம்பெற்று 32 வருடங்கள் ஆகிவிட்டன. இன்று 2017இல் இங்கிருந்து கொண்டு செல்வதற்கும் எனக்கு சொற்பதங்கள் கிடைத்திருக்கின்றன. அதற்காக பூட்டான் அரசாங்கத்துக்கும் இந்த மாநாட்டு ஏற்பாட்டாளர்களுக்கும் நான் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.
நான் எங்கள் நாட்டுக்கு பூட்டானில் இருந்து எடுத்துச் செல்லும் வாசகம் இதுதான் 'மொத்த தேசிய மகிழ்ச்சி'. ஆம். அபிவிருத்தயின் பேரில் மொத்த தேசிய உற்பத்தியை /வருமானத்தை கணக்கிடும் உலக செல்நெறியில் இருந்து மாறாக யோசித்து நாட்டில் 'மொத்ததேசிய மகிழ்ச்சியை' மதிப்பிடும் முறையை நீங்கள் பின்பற்றுவதோடு எங்களுக்கும் கற்றுத்தந்துள்ளீர்கள். மகிழ்ச்சியின் தேசமான பூட்டானுக்கும் அதன் மக்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்."
ஒரு தலைமுறைக்கு முன் நிழ்ந்த வரலாற்று நினைவுகளோடு சமகால அரசியல் செல் நெறிகளையும் இணைத்துப்பார்க்கும் வாய்ப்பினை வழங்கிய இந்த மாநாட்டில் இருந்து விடைபெற்று இலங்கை நோக்கி பயணிக்கிறேன்.
பயணப்பொதிக்கு மேலதிகமாக 'மொத்த தேசிய மகிழ்ச்சி' எனும் புதிய திம்புக் கோட்பாட்டையும் சுமந்தவனாக...
திலகர் - பா.உ - (திம்புவிலிருந்து)
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...