Headlines News :
முகப்பு » » மோடியின் பயணமும் மலையகமும் - சி.அ.யோதிலிங்கம்

மோடியின் பயணமும் மலையகமும் - சி.அ.யோதிலிங்கம்


இந்தியப்பிரதமர் நரேந்திரமோடி இலங்கைப்பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பியிருக்கின்றார். 2015 ஆம் ஆண்டு முதன் முதலாக இலங்கை வந்த மோடி தற்போது 2017 இல் மீண்டும் வந்திருக்கின்றார். அரசதரப்பு, அரசியற்கட்சிகள், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு என்பவற்றுடன் உரையாடியது மட்டுமல்லாமல் எவரும் எதிர்பார்க்காத வகையில் முன்னாள் ஜனாதிபதி மகிந்தராஜபக்ஸவினையும் சந்தித்துப் பேசியிருக்கின்றார். 

ஐ.நா ஒழுங்கு செய்திருந்த வெசாக் பண்டிகையை ஆரம்பித்து வைப்பது பயணத்தின் பிரதான நோக்கம் எனக் கூறப்பட்டாலும் அதற்கப்பால் பயணம் பல அரசியல் நோக்கங்களைக் கொண்டிருந்தது என்பது தற்போது தெளிவாக தெரியத் தொடங்கியுள்ளது. இதில் மிகவும் சர்சைக்குரியதாக இருந்த விடயங்கள் மலையகப் பயணமும், மகிந்தராஜபக்ஸவின் சந்திப்பும்தான். அரசியல் நோக்கங்களை தெளிவாகப் புலப்படுத்தியவை இவை இரண்டும்தான். இவை இரண்டும் இலங்கைத் தீவை மையமாக வைத்து இடம் பெறும் புவிசார் அரசியல் போட்டியின் விளைவுகள். அதுவும் பயணம் செய்த காலம் முக்கியமானது. இந்தியாவும் பின்னால் நின்று உருவாக்கிய மைத்திரி- ரணில் அரசாங்கம் இந்தியாவின் புவிசார் பாதுகாப்பு நலன்களுக்கு முரணாக சீனாவின் அதீத செல்வாக்கிற்கு இடம் கொடுத்த ஒரு காலப்பகுதியில் தான் இப்பயணம் இடம்பெற்றுள்ளது. 

அம்பாந்தோட்டை துறைமுகப்பகுதியையும் அதனைச் சூழ்ந்த இடங்களையும் முழுமையாக சீனாவிற்கு தாரை வார்த்தமையை இந்தியா அறவே ஏற்கவில்லை. இந்தியக் கோபத்தை குறிப்பால் உணர்ந்ததாலோ என்னவோ மோடியின் பயணகாலத்தில் சீனாவின் நீர்மூழ்கிகள் இலங்கை துறைமுகத்தில் தரித்து நிற்க சீனா அனுமதி கேட்ட போதும் இலங்கை சம்மதிக்கவில்லை. கடற்கொள்ளைக்காறரின் அச்சுறுத்தலிருந்து கடற்பிராந்தியத்தைப் பாதுகாக்கவே நீர்மூழ்கிகள் ரோந்து செல்கின்றன. அதற்கு எரிபொருள் நிரப்ப வேண்டும் எனக் காரணம் கூறிய போதும் இலங்கை சம்மதிக்கவில்லை. 

2015 ஆம் ஆண்டு பயணத்தின் போது யாழ்ப்பாணத்திற்கு சென்றவர் இந்தத்தடவை மலையகத்திற்கு சென்றிருக்கின்றார். மக்கள் பெருமளவில் கலந்து கொண்ட பொதுக் கூட்டத்திலும் பங்கு பற்றி உரையாற்றியிருக்கின்றார். இலங்கையில் மிகப்பிரமாண்டமான பொதுக் கூட்டத்தில் பங்குபற்றிய உலகத் தலைவர் மோடி என்றுதான் கூறவேண்டும். இவ்வாறான கூட்டத்தினை யாழ்ப்பாணத்தில் ஒழுங்கு செய்திருக்க முடியாது. ஒழுங்கு செய்திருந்தாலும் மக்கள் ஆர்வத்தோடு பங்குபற்றியிருப்பர் எனவும் கூறமுடியாது. இந்தியா எமது போராட்டத்தை அழித்தது என்ற தார்மீகக் கோபம் வடகிழக்குத் தமிழ் மக்களிடம் ஆழமாக உண்டு.

மலையகத்தில் மக்கள் திரளாகவே பங்கு கொண்டிருந்தனர். அங்கு பிரதான அணிகளான இலங்கைத் தொழிலாளர் காங்கிரசிற்கும் தமிழ் முற்போக்கு கூட்டணிக்கும் இடையிலான போட்டியும் அதிகளவில் மக்கள் கூடுவதற்கும் காரணமாக அமைந்தது. இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ்காரர்கள் மோடியின் கவனத்தைப் பெறுவதற்காகவும், தங்கள் கட்சிக்காறர்களை அடையாளப்படுத்துவதற்காகவும், இந்திய தேசியக் கொடிச்சின்னம் தாங்கிய தொப்பிகளை அணிந்திருந்தார்கள். இந்திய தேசியக் கொடியினையும் கைகளில் ஏந்தியிருந்தார்கள். 


மலையகத்தில் முக்கிய தலைவர்களில் ஒருவராக தொண்டமானை மோடி கூறியபோது இலங்கை தொழிலாளர் காங்கிரசினர் எழும்பி நின்று விசிலடித்து வரவேற்றனர். இது மனோகணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணியினருக்கு சங்கடமாக இருந்தபோதும் ஒருவாறு சகித்துக் கொண்டனர். தொண்டமானை மாத்திரமல்ல முத்தையா முரளிதரணையும் மோடி புகழ்ந்து பேசினார். 'சிறந்த கிறிக்கட் வீரரை உலகிற்கு தந்துள்ளீர்கள்' எனக் குறிப்பிட்டார். அடுத்த நாளே முத்தையா முரளிதரன் அதற்கு நன்றி தெரிவித்தார். அத்துடன் 'புரட்சித் தலைவர் எம்.ஜீ.ஆர் இந்த மண்ணில் பிறந்தவர்' என்றும் குறிப்பிட்டார். தேயிலையின் புகழையும் அதற்கான மலையக மக்களின் உழைப்பையும் மெச்சிப் பேசினார். 'உலகில் மூன்றாவது தேயிலை ஏற்றுமதி செய்யும் நாடாகவும், உலக ஏற்றுமதியில் 17 வீதத்தினைப் பூர்த்தி செய்வதோடு 50 கோடி அமெரிக்க டொலர் வருமானத்தையும் பெறும் நாடாகவும் மிளிர்வதற்கு உங்களது உழைப்பே காரணம்' எனவும் குறிப்பிட்டார். இதன் மூலம் மலையக மக்களின் மனங்களைக் குளிரச் செய்ததோடு இலங்கை அரசாங்கத்திற்கும் இந்த மக்களை அசட்டை செய்ய முடியாது என மறைமுகமாக எச்சரிக்கையையும் விடுத்தார்.

மலையக மக்களையும் மேலும் குளிரச் செய்வதற்கு மலையக முன்னோர்களின் தியாகங்களையும் மெச்சி 'அதற்கு தலைவணங்குகின்றேன்' எனக் குறிப்பிட்டார். 'மலையக மக்கள் சொந்த அடையாளத்திற்காக போராடி வெற்றி பெற்றனர் என்றும் குறிப்பிட்டார். இந்தியாவுடனான பிணைப்பைத் தொடர்ந்தும் தக்க வைத்துக் கொண்டிருக்கின்றீர்கள். இந்தியப் பண்டிகைகளை உங்கள் பண்டிகைகளாக கொண்டாடுகிறீர்கள்' என்றும் குறிப்பிட்டார். எல்லாவற்றிற்கும் மேலாக பத்தாயிரம் வீடுகள் ஏற்கனவே உத்தரவாதமளித்த 4000 வீடுகளுக்கு மேலாக கட்டித்தரப்படும் எனவும் குறிப்பிட்டார். இதனூடாக மறைமுகமாக சொல்லப்பட்ட செய்தி இந்திய மக்கள் கூட்டத்தின் ஒரு பிரிவினரே இங்கு இருக்கின்றார்கள். அவர்கள் தொடர்பாக இந்தியாவிற்கு கடமை பங்கு இருக்கின்றது என்பதே! 

உடனடியாகவே பேரினவாதிகளிடமிருந்து இந்த உரைக்கு எதிர்வினை வந்தது. அதுவும் சாதரணமக்களிடமிருந்தல்ல உயர்கல்விமான்களிடமிருந்து வந்தது. தேசியப்பல்கலைக்கழகங்களின் பேராசிரியர் சங்கச் செயலாளர் பேராசிரியர் ஸன்னஜயசமுன கடும் கண்டனத்தை அறிக்கை மூலம் தெரிவித்தார். அவ்வறிக்கையில் மோடி மலையக மக்களை மட்டும் குறிப்பிட்டு உரையாற்றியுள்ளார். ஏனைய இனக்குழுமங்களை நிராகரித்து விட்டார் எனக் குற்றம் சுமத்தினார். மலையக மக்கள் இந்தியக் கலாச்சாரத்தை பேணுகின்றர் எனக்கூறியமையையும் கண்டித்தார். வேறு சிலர் 'இந்தியாவில் மலசலகூடம் கட்ட முடியாதவர் இங்கு பத்தாயிரம் வீடு கட்ட வெளிக்கிட்டுள்ளார்' எனக் கிண்டலடித்தனர்.

மொத்தத்தில் இலங்கைத் தீவை மையமாக வைத்த புவிசார் அரசியல் போட்டிக்குள் மலையகத்தையும் மோடி இழுத்து வந்துள்ளார். இதன் மூலம் மலையக அரசியலின் அந்தஸ்தினை திடீரென மலையளவு உயர்த்தி விட்டுள்ளார்.

மோடியிடம் மலையக அரசியல் சக்திகள் பல கோரிக்கைகளை முன்வைத்தனர். அவை மிகவும் பலவீனமானவை. குறிப்பாக இலங்கைத் தொழிலாளர் காங்கிரசும் தமிழ் முற்போக்குக் கூட்டணியும் மகஜர்களைக் கையளித்துள்ளனர். இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தனது மகஜரில் மலையகத்தில் கிராமங்களை உருவாக்குதல், மலையகப் பல்கலைக்கழகம் ஒன்றை உருவாக்குதல், பல்கலைக்கழக அனுமதியில் மலையக மாணவர்களுக்கு விசேட கோட்டா முறையினைப் பின்பற்றுதல் என்பவற்றை முன்வைத்திருந்தது.

தமிழ் முற்போக்குக் கூட்டணி தனது மகஜரில் மலையகப் பல்கலைக்கழகம், 25000 வீடுகள், அரசியல் தீர்வில் மலையக மக்களின் உரிமைகளையும் பாதுகாத்தல், பாடசாலை அபிவிருத்தி, ஆசிரியர் பயிற்சிகள், சுகாதார உட்கட்டமைப்பு என்பவற்றை முன்வைத்திருந்தது. 

இரு தரப்பும் மலையக மக்களின் பிரச்சினைகளுக்கான உண்மையான தீர்வை முன்வைக்கவில்லை. மலையக அரசியல் பிரச்சினை என்பதே மலையக மக்கள் ஒருதேசிய இனமாக இருப்பது அழிக்கப்படுவது தான். அதாவது ஒரு தேசிய இனத்தைத் தாங்குகின்ற தூண்களான நிலம், மொழி, பொருளாதாரம், கலாச்சாரம் என்பன அழிக்கப்படுவது தான். இவ்வழிப்பிலிருந்து பாதுகாப்பது பற்றிய கோரிக்கைகளையே முன்வைத்திருக்க வேண்டும். குறிப்பாக தேசிய இன அங்கீகாரம், அதிகாரப்பகிர்வு என்பவற்றை கோரிக்கையாக வைத்திருக்க வேண்டும். இரு அரசியல் சக்திகளும் அதனை முன்வைக்கவில்லை. 

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் நிலப்பறிப்பு தொடர்பாக மலையகக் கிராமங்களை உருவாக்குதல் என்ற கோரிக்கையை முன்வைத்தமை சற்றுமுன்னேற்றகரமானது தான். தமிழ் முற்போக்குக் கூட்டணியிடம் அதுவும் இருக்கவில்லை. வெறுமனவே மொட்டையாக அரசியல் தீர்வின் போது மலையக மக்களின் உரிமைகளும் பாதுகாக்கப்படல் வேண்டும் எனக் கூறியிருந்தது. தனியான அதிகார அலகு கோரிக்கையை எண்பதுகளிலேயே முன்வைத்த மலையகமக்கள்முன்னணியும் வாயைப் பொத்திக் கொண்டிருந்தது. 

இந்தியா இரண்டு காரணங்களுக்காக மலையகத்தை முதன்மைப்படுத்தியிருந்தது. ஒன்று சீனாவின் அதிகரித்த பிரசன்னத்தை தடுத்து இலங்கைத் தீவில் தனது செல்வாக்கினையும் நிலைநிறுத்திக் கொள்ள வடகிழக்கில் மட்டும் தனது செல்வாக்கினை வளர்ப்பது போதுமானதாக இருக்கவில்லை. தெற்கை அசைப்பதற்கு மலையகம் அதிகம் உதவக் கூடும் எனக்கருதியிருந்தது.

இரண்டாவது வடகிழக்கில் தனது செல்வாக்கிணை வளர்க்க முற்பட்டாலும் போதிய வகையில் வளர்ப்பதற்கு தடைகள் இருந்தன. அங்கு வளர்ச்சியடைந்த அரசியல் ஒரு தடையாக இருந்தது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஒரு பொம்மையாக மடக்கிவைத்திருந்தாலும் மக்களை மடக்கி வைக்க இந்தியாவினால் முடியவில்லை. மக்களின் கோரிக்கைகள் அதி உயர்ந்தவையாக இருந்தன. அதில் விட்டுக் கொடுப்புக்களைச் செய்வதற்கு அவர்கள் தயாராக இருக்கவில்லை. புலம் பெயர் மக்கள் பெரும் ஊட்டச் சக்தியாக இருந்தமையினால் சுயாதீன அரசியல் சக்திகள் எழுச்சியடைவதும் சாதியமானதாகவிருந்தது. அபிவிருத்தி நடவடிக்கைகளிலும் இந்தியா நினைத்ததைச் செய்யமுடியவில்லை. மக்கள் எல்லாவற்றையும் கேள்விக்குள்ளாக்கினார்கள். சம்பூர் அனல்மின்நிலைய முயற்சி இந்தியாவிற்கு படுதோல்வியைக் கொடுத்தது. 

இந்த நிலையில் தான் இன்னோர் செல்வாக்குப் பிரதேசம் இந்தியாவிற்கு அவசியமாகவிருந்தது. மலையகம் கண்ணை மூடிக் கொண்டு தனக்குப்பின்னால் வரும் என இந்தியா நினைக்கின்றது. எதிர்காலம் தான் இதன் உண்மையை வெளிப்படுத்தும். 


வரலாற்றில் இந்தியா ஒருபோதும் மலையக மக்களின் நலன்களுக்கு சார்பாக இருக்கவில்லை. மாறாக எதிராகவே இருந்தது. இந்தியா நினைத்திருந்தால் பிரஜாவுரிமைச் சட்டத்தையும் வாக்குரிமைச்சட்டத்தையும் தடுத்து நிறுத்தியிருக்க முடியும். அதனைச் செய்யவில்லை. சுமார் 30 வருடங்கள் மலையக மக்கள் இருட்டில் வைக்கப்பட்டனர். அவர்களது இயல்பான வளர்ச்சி திட்டமிட்டு தடுக்கப்பட்டது. 

போதாக்குறைக்கு 'மரத்தாலை விழுந்தவணை மாடேறி மிதித்தது' போல 1964 இல் பாகிஸ்தான், சீனாபக்கம் இலங்கை போவதைத் தடுக்க வேண்டும் என்பதற்காக சிறிமா- சாஸ்திரி ஒப்பந்தத்தை கைச்சாத்திட்டு மலையக மக்களைப் பலிக்கடாக்கியது. மலையக மக்களை அரசியல் ரீதியாகவும் சமூகரீதியாகவும் மிகவும் பலவீனப்படுத்திய ஒப்பந்தம் இதுதான். இது பற்றி மலையக மக்களிடம் ஒரு வார்த்தைகூட பேசவில்லை. இரு நாடுகளும் தங்கள் இஸ்டப்படி ஒப்பந்தத்தை செய்தன. ஒரு வகையில் இதனை ஒரு இனப்படுகொலை எனலாம். இந்தியா மலையக மக்களை இந்தியாவிற்கு அழைப்பதென்றால் அனைவரையும் அழைத்திருக்க வேண்டும் அல்லது. அனைவரையும் இலங்கையில் விட்டிருக்க வேண்டும். ஒரு பகுதியினரை எடுத்து மறுபகுதியனரை விட்டதனால் இரு நாடுகளும் மலையக மக்கள் பலவீனமாகியுள்ளனர். 

மலையக மக்களின் பிரஜாவுரிமையும், வாக்குரிமையையும் சிறீலங்கா அரசாங்கம் பறித்திருந்தாலும் மலையக மக்கள் போராடிப் பெற்றிருப்பர். நாடற்றவர்களாக இருந்த 95000 பேரினதும் அவர்களது வம்சாவழியினதும் பிரஜாவுரிமையை அவர்கள் போராடிப் பெற்றிருக்கின்றனர். இந்தியா இதற்கு எந்த வகையிலும் உதவவில்லை. 

தற்போது இந்தியா தனது நலன்களுக்காக மீண்டும் மலையக மக்களிடம் வந்துள்ளது. அன்றே மலையக மக்களைப்பலப்படுத்தியிருந்தால் இன்று அவர்கள் மிகவும் பலமான நிலையில் நின்று கொண்டு இந்தியாவிற்கு உதவியிருப்பர். சரி போனது போகட்டும் இனிமேலாவது இந்தியா பலப்படுத்தும் பணியைச் செய்ய வேண்டும். தனித்து இந்திய நலன்களை மட்டும் நோக்கமாகக் கொண்டிராமல் பரஸ்பர நலன்கள் என்பதை நோக்கமாகக் கொண்டிருக்க வேண்டும். 

மோடியின் மலைகப் பயணம் நிச்சயமாக மலையக அரசியலிலும் இலங்கை அரசியலிலும் நிறைய பாதிப்பைச் செலுத்தப்போகின்றது. மலையக அரசியலைப் பொறுத்தவரை அங்கு பிரதானமாக நான்கு வகையான தாக்கங்களை ஏற்படுத்தும். அதில் முதலாவது மலையக அரசியலின் அந்தஸ்து உடனடியாக உயர்ந்திருக்கின்றமையாகும். மோடி மலையக மக்களின் தனி அடையாளத்தை மெச்சியிருக்கின்றார். அவர் அதற்கு இந்தியர் அடையாளத்தைக் கொடுத்தது வேறு கதை. ஆனாலும் தனி அடையாளத்தை வழங்கியமை அடையாள அரசியல் வளர்வதற்கான வாய்ப்பைக் கொடுத்துள்ளது. இந்தியா பின்னால் நிற்பதால் மலையக அரசியல் சக்திகளும் எப்போதும் குனிந்திருக்கின்ற தங்கள் முதுகினை கொஞ்சம் நிமிர்த்த முயற்சிப்பர். எதிர்க்கட்சி அரசியல் வளர்வதற்கான வாய்ப்பும் ஏற்படும்.

இரண்டாவது மலையக அரசியல் பிராந்திய மயப்படுத்துவதும் சர்வதேச மயப்படுத்துவதும் நிகழப்போகின்றமையாகும். இந்தியா மலையகப் பிரச்சினையை இனிவரும் காலத்தில் தென்னாசியப்  பிராந்தியத்திற்கும், சர்வதேசத்திற்கும் கொண்டு செல்லும். சர்வதேசத்தின் தலையீடு இல்லாமல் தேசிய இன நெருக்கடியின் சிறியவற்றைக் கூட தீர்க்க முடியாது. வடக்கு- கிழக்கு தமிழர்களின் விவகாரத்தை முதலில் பிராந்திய மட்டத்திற்கும் சர்வதேச மட்டத்திற்கும் கொண்டு சென்றது இந்தியாதான். 1983 இன அழிப்பிற்கு பின்னர் இந்தியா இச்செயற்பாட்டில் ஈடுபட்டது. ஆனால் 1987 இலங்கை- இந்திய ஒப்பந்தத்தில் தன்னுடைய நலன்கள் பேணப்பட்டதும் போராட்டத்தை முடக்க முற்பட்டது புலிகள் அதை உடைத்துக் கொண்டு முன்னேறி விவகாரத்தை சர்வதேச மட்டத்தில் பேசுபொருளாக்கினர்.

உண்மையில் தற்போதைய தேவை மலையகத்தை உலகத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். உலகத்தை மலையகத்திற்கு கொண்டுவர வேண்டும்.

மூன்றாவது மலையகத்தில் மத்தியதர வர்க்கத்தின் எழுச்சி துரிதப்படக் கூடிய சூழல் தோன்றியுள்ளமையாகும். ஏற்கனவே இலவசக்கல்வி, தாய்மொழிக்கல்வி, மலையகம் தேசியக் கல்விக்குள் உள்வாங்கப்பட்டமை, சிறீபாதாக் கல்விக்கல்லூரியின் உருவாக்கம் போன்றமை மலையக மக்கள் மத்தியில் மத்திய தரவர்க்கம் எழுச்சியடைவதற்கான வாய்ப்புக்களைக் கொடுத்தது. 

இதன் மூலம் மலையக ஆசிரியர்கள் ஒரு சமூக சக்தியாகவே எழுச்சியடைந்தனர். ஆனாலும் பல்கழைக்கழகம் ஒன்று இல்லாமை, கணித விஞ்ஞானக் கல்வியின் பலவீனம், போதிய தொழில் வாய்ப்பபுக்கள் இல்லாமை போக்குவரத்து வசதிகளின் பற்றாக்குறை என்பன மத்தியதர வர்க்கம் தொடர்ச்சியாக வீச்சுடன் வளர்வதைத் தடுத்திருந்தன. எழுச்சியடைந்த பிரிவினரும் மலையகத்தை விட்டு வெளியேறி கொழும்பிலும் மிகச் சொற்பமானவர்கள் வெளிநாடுகளிலும் வாழ்க்கையை அமைக்கத் தலைப்பட்டனர். மலையகத்தின் டயஸ்போராவாக கொழும்பு மாறியது. வத்தளைப்பிரதேசம் மலையகத்திலிருந்து இடம்பெயர்ந்தவர்களை அதிகம் கொண்டிருந்தது. 

இந்தியா மலையகத்தில் மத்தியதரவர்க்கம் எழுச்சியடைவதற்கான செயற்பாடுகளை முன்னெடுக்கப்போகின்றது. கல்வி, போக்குவரத்து, சுகாதார வசதிகளில் மட்டுமல்ல, தொழில்வாய்புக்களைத் தரக்கூடிய அபிவிருத்தி நடவடிக்கைகளிலும் அது கவனம் செலுத்தும். இது மத்தியதரவர்க்கம் எழுச்சியடைவதை துரிதப்படுத்துவதோடு தொழில்வாய்ப்புக்களுக்காகவும் மத்தியதரவர்க்க வாழ்க்கையை பேணுவதற்காகவும் மலையகத்தை விட்டு மலையகமக்கள் வெளியேறுவதையும் வெகுவாகக் குறைக்கும். ஏற்கனவே ஹட்டன், கொட்டகலை, பிரதேசங்கள் மத்தியதர வர்க்கம் வாழ்வதற்கான பிரதேசமாக மாறிவிட்டன. விரைவில் பொகவந்தலாவை, ராகலை, தலவாக்கலை பிரதேசங்களும் அந்நிலைக்கு உயரலாம். 

மத்தியதர வர்க்கத்தின் எழுச்சிதான் அரசியலையும் எழுச்சி நிலைக்குக் கொண்டு வரும். ஏனெனில் அரசியல் விழிப்புணர்வை ஊட்டுபவை மத்தியதர வர்க்கம்தான். 

நான்காவது எதிர்நிலையானது. மலையக மக்கள்மீதான பேரினவாதத்தின் எதிர்ப்பு கூர்மையடையக் கூடிய வாய்ப்பு தோன்றக் கூடிய நிலை இருப்பதே அதுவாகும். மலையக மக்கள் மத்தியில் அடையாள அரசியல் வளர்வதை பேரினவாதம் அனுமதிக்கப் போவதில்லை. இதன் வெளிப்பாடு மோடியின் பயணம் இடம்பெற்று ஒரு சில நாட்களிலேயே தெரியத் தொடங்கியது. மோடியின் உரை குறித்த சிங்கள, ஆங்கிலப் பத்திரிகைகளின் எதிர்ப்பும், சிங்களப்புலமையாளர்களின் எதிர்ப்பும், ஞானசாரதேரரின் மனோகணேசன் அமைச்சு மீதான ஆக்கிரமிப்பும், இதனையே வெளிக்காட்டின. எதிர்காலத்தில் இது மேலும் அதிகரிக்கலாம். ஆனாலும் மலையக மக்கள் மீதான அத்துமீறிய வன்முறைச் செயற்பாடுகளை எதிர்காலத்தில் இந்தியா அனுமதிக்கும் எனக் கூறமுடியாது.  

மலையகத் தரப்பு மோடியின் பயணத்தின் அறுவடைகளை கவனமாகக் கையாண்டால் எதிர்காலத்தில் வலிமையான அரசியல் சமூகத்தை கட்டியெழுப்பலாம்.

இந்கு எழும் கேள்வி இதற்கு மலையகத் தரப்பு என்ன செய்யலாம் என்பதே. மலையக அரசியல் பிரச்சினை என்பது முன்னரே கூறியது போல மலையக மக்கள் ஒரு தேசிய இனமாக இருப்பது அழிக்கப்படுவது தான். எனவே இதற்கான அரசியல் தீர்வு மலையக மக்களை ஒருதேசிய இனமாக அங்கீகரிப்பதும், அதனை நடைமுறைப்படுத்துவதற்கான அதிகாரப் பொறிமுறையை உருவாக்குவதுமே.

மலையக மக்களின் அரசியல் இலக்கு அதை நோக்கியதாகத்தான் இருக்க வேண்டும். இந்த அரசியல் இலக்கிணை தெளிவாக வரையறுப்பதும், அதற்கான அரசியல் நியாயப்பாடுகளை தொகுப்பதும், வழிவரை படத்தை உருவாக்குவதும், மலையகத் தரப்பின் முதலாவது பணியாக இருத்தல் வேண்டும். 

இரண்டாவது மேற்கூறிய இறுதி இலக்கை நோக்கி ஓடுவதற்கு மக்களை தயார்படுத்த வேண்டும். அதற்கு ஒரு மலையக தேசிய அரசியல் இயக்கத்தைக் கட்டியெழுப்ப வேண்டும். அத்தேசிய அரசியல் இயக்கம் மக்கள் அமைப்புக்களையும், அரசியல் கட்சிகளையும் கொண்டதாக அதே வேளை மக்கள் அமைப்புக்களின் மேலாதிக்கம் உள்ளதாக இருத்தல் வேண்டும். வெறுமனவே அரசியல் கட்சிகளின் தேர்தல் அரசியலும், தொழிற்சங்கங்களின் சந்தா அரசியலும் மலையக மக்களுக்கு ஒரு போதும் தீர்வினைப் பெற்றுத்தராது.

ஒரு பிரக்ஞை பூர்வ அரசியல் இயக்கம் தெளிவான இலக்கு, அடிப்படைக் கொள்கைகள், நீண்டகால குறுகிய கால வேலைத்திட்டங்கள், வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கான அமைப்புப் பொறிமுறை, அர்ப்பணமும், செயலூக்கமும் உள் செயற்பாட்டாளர்கள், தியாகமும் திறமையும் உள்ள தலைமை என்பவற்றைக் கொண்டிருத்தல் வேண்டும்.

மூன்றாவது மலையக மக்கள் சிறிய தேசிய இனமாக இருப்பதனால் பலமான சேமிப்புச் சக்திகளையும், நட்புச் சக்திகளையும் தமக்குப்பின்னால் அணி திரட்ட வேண்டும். வட-கிழக்குத் தமிழ் மக்கள், தமிழக மக்கள், உலகம் வாழ் வட-கிழக்கு வம்சாவழி, தமிழக வம்சாவழித் தமிழ் மக்கள் சிறந்த சேமிப்புச் சக்திகளாக இருப்பர். சிங்கள முற்போக்கு ஜனநாயக சக்திகள் உட்பட உலகம் வாழ் முற்போக்கு ஜனநாயக சக்திகள் நல்ல நட்புச் சக்திகளாக இருப்பர். மலையகம் சிங்களப்பிரதேசங்களினால் சூழப்பட்டு இருப்பதனால் சிங்கள முற்போக்கு ஜனநாயக சக்திகளின் ஆதரவு மிகமிக அவசியம்.

நான்காவது வலுவான தேசியம் என்பது உள்ளடக்கத்தில் தேசியத்தையும், சமூகநீதியையும் கொண்டிருத்தல் வேண்டும். எந்த ஒரு சமூகத்திலும் அகமுரண்பாடுகள் இருப்பது தவிர்க்க முடியாததே! சமூக நீதிச் செயற்பாடுகள் மூலம் அகமுரண்பாடுகளைத் தீர்க்கும் வல்லமை கொண்டதாக தேசியம் இருத்தல் வேண்டும். இதனூடாக சாதி, மத, பிரதேச, பால் வேறுபாடுகளை களைந்ததாக தேசியம் வளருதல் வேண்டும். அகமுரண்பாடுகளைக் களையாமல் எந்த ஒரு மக்கள் கூட்டமும் ஒரு தேசிய இனமாக எழுச்சியடைய முடியாது. தமிழகத்தோடும் வடகிழக்கோடும் ஒப்பிடும் போது மலையகத்தில் அகமுரண்பாடுகளின் தாக்கம் குறைவு. ஆனாலும் முரண்பாடுகள் இல்லையென்று கூறிவிடமுடியாது. 

ஐந்தாவது மலையகத் தேசிய இனத்தைத் தாங்குகின்ற தூண்களான நிலம், மொழி, பொருளாதாரம், கலாச்சாரம் என்பவற்றை தொடர் அழிவிலிருந்து பாதுகாப்பதற்கு தற்காலிக சர்வதேசப் பாதுகாப்புப் பொறிமுறை ஒன்றை உருவாக்குதல் வேண்டும். உண்மையில் இந்தியாவின் உதவியை மலையக மக்கள் இவற்றிற்கே பிரதானமாக பெற்றுக் கொள்ளுதல் வேண்டும். பிரித்தானியாவின் உதவியையும் கேட்கலாம். மலையக மக்களைக் கொண்டுவந்து குடியேற்றியவர்கள் பிரித்தானியர்களே. மலையக மக்களின் நலன்காக்கும் பொறுப்பு அதற்கும் உண்டு. அதனை கேட்கும் உரிமையை மலையக மக்களுக்கும் உண்டு. இந்தியாவும், பிரித்தானியாவும் நினைத்தால் இந்தப் பாதுகாப்புப் பொறிமுறையை உருவாக்குவது கடினமானதல்ல. எந்தவொரு தேசிய இனத்திற்ககும் அரசியல் தீர்வு வரும் வரை தமது இருப்பைப் பாதுகாப்பதற்கு இவ்வாறான பொறிமுறை அவசியம்.

வரலாறு சந்தர்ப்பங்களைத் தருவதற்கு தவறுவதில்லை. ஆனால் அதனைப் பயன்படுத்துவதற்குத் தான் அரசியல் சக்திகள் தயாராக இருக்க வேண்டும். மலையக சக்திகளுக்கும் வரலாறு சந்தர்ப்பத்தைக் கொடுத்துள்ளது. 

மலையகம் இதனைச் சரியாகப் பயன்படுத்துமா?

Veerakesari
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates