Headlines News :
முகப்பு » , , » ஞானசாரருக்கு இந்தியா உதவி!? – என்.சரவணன்

ஞானசாரருக்கு இந்தியா உதவி!? – என்.சரவணன்


தனக்கு உயிரச்சுறுத்தல் இருப்பதால் தான் தான் நீதிமன்றத்துக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருப்பதாக கூறிவந்த ஞானசார தேரர் இப்போது நீதிமன்றத்துக்கு மிடுக்குடன் வந்து பிணையும் பெற்று நீதித்துறையையும், நீதிகோரியவர்களையும் கேலி செய்யும் வகையில் சிரித்துக் கொண்டு வெளியேறியக் காட்சியைக் கண்டோம்.

ஞானசார தேரோ பௌத்த மத போதனைகளையும், பௌத்தத் மத உயர்பீடங்களையும் சங்கடப்படுத்தும் வகையில் அவரின் நடவடிக்கைகள் கட்டுமீறி செல்வதாக பல பௌத்தத் தலைவர்களே எச்சரித்திருந்தாலும் பௌத்த உயர் பீடங்களின் ஆசீர்வாதமும், பல இடங்களில் ஆதரவும், அனுசரணையும் கூட இருந்தே வந்தது. அதனை நிரூபிக்கும் வகையில் அவர்கள் கடந்த 20ஆம் திகதி ஊடக மாநாட்டில் வெளியிட்ட அறிக்கையின் மூலம் அரசாங்கத்துக்கு விடுத்த எச்சரிக்கை இருக்கிறது.


சியம் நிக்காயவின் அஸ்கிரித் தலைமையின் நிறைவேற்றுக்குழு எடுத்த அந்த தீர்மானத்தில்
  • தாய் நாட்டுக்கும், சிங்கள இனத்துக்கும், பௌத்த சாசனத்துக்கும் சிக்கல் நேரிடும்போதெல்லாம் பௌத்த பிக்குகள் உயிரைக் கொடுத்து சரிசெய்ய முற்பட்டு வந்திருக்கிறார்கள். அந்த வகையில் இப்போது நேர்ந்துகொண்டிருப்பவற்றை பார்த்துக்கொண்டு அமைதியாக எங்களால் இருக்க முடியாது. அசட்டை செய்ய முடியாது.
  • ஞானசார தேரரின் வெளிப்பாடுகளில் குறைகள் இருந்தபோதும் அவர் முன்வைக்கும் கருத்துக்களை ஆராய்ந்து தீர்ப்பதற்குப் பதிலாக அந்த சம்பவங்களைக் காரணம் காட்டி இடதுசாரிகளாக தங்களைக் காட்டிக்கொள்வோரம், பௌத்த சூழலில் வளர்ந்து ஆளான அரசியல்வாதிகளும், அமைப்புகளும் பிக்குமாரை மோசமான வார்த்தைகளாய் விமர்சித்து தூற்றி, பிக்குமாரின் பெயர்களைக் குறிப்பிட்டு பேசுகிறார்கள். பிக்குமார்களின் பெயரைச் சொல்லி அழைக்கும் உரிமை வயதில் மூத்த பிக்குமாருக்கு மட்டும்தான் உண்டு.
  • இனவாதத் தொனியில் கருத்துவெளியிடும் சில அரசியல்வாதிகளின் மீது நடவடிக்கை எடுப்பதை விட்டு அவர்களுக்கு பதிலளிக்க முயலும் பிக்குமார்களை நிறுத்துவதற்கு முனையும் அரசாங்கத்துக்கு எமது அதிருப்தியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
  • இதனால் எதிர்காலத்தில் நேரவிருக்கும் விபரீதங்களுக்கு அரசாங்கமே பொறுபேற்க நேரிடும்.
  • பிக்குகளின் பிரச்சினையை பேசித் தீர்க்காமல் சட்டத்தைக் கொண்டு ஒடுக்க முயல்வது வருந்தத்தக்கது.

சங்க சபை மகாநாயக்கவின் அறிக்கையும் இதற்கு நிகராகவே இருக்கிறது. கடந்த காலங்களில் வட்டறக்க விஜித போன்ற வயதில் மூத்த பிக்குவை பெயர் கூறியும், பற நாய், பேய் என்றெல்லாம் மோசமான வார்த்தைகளாலும் பகிரங்கமாக ஞானசாரர் திட்டும் போது இந்த பௌத்த சங்க சபைகள் வெறுமனே கைகட்டி பார்த்துக் கொண்டிருந்ததை பார்த்தோம்.

வாரியபொல சுமங்கல ஹிமி போன்ற வரலாற்றுப பாத்திரங்களைப் போன்றே ஞானசார தேரரும் இயங்கி வருவதாகவும் அரசாங்கத்தைக் கண்டித்தும் பொலன்னறுவ பிரதான பௌத்த சங்க தலைவர் உடுகம தம்மானந்த ஹிமி 20ஆம் திகதி ஊடக மாநாடு நடத்தி தெரிவித்தார்.

ஞானசாரரின் கருத்துக்களுடன் உடன்பாடு இருப்பதையும் அவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளமை அப்பட்டமாக இவர்கள் யார் பக்கம் என்பதும் தெளிவாகத் தெரிகிறது.

பிக்குமாரை வெறுப்புமிழும் பேச்சுக்களுக்கு எதிராக ஐ.தே.க கடந்த 17ஆம் திகதி வெளியிட்ட அறிக்கையைத் தொடர்ந்து தான் மேற்படி பௌத்த தலைவர்களின் ஊடக மாநாடுகள் நடத்தப்பட்டன. அந்த அறிக்கையில் ஐ.தே.க ஆரம்பத்திலிருந்தே ஒரு மதச்சார்பற்ற கட்சியாகவே இயங்கி வருவதாக குறிப்பிட்டிருந்தது கவனிக்கத்தக்கது. இதற்கு முன்னர் அப்படி ஒரு “மதச்சார்பற்ற” பிரகடனத்தை எங்கும் கண்டதாகத் தெரியவில்லை.

பௌத்த பிக்குமார் பௌத்த மதத்துக்கு சார்பாக பேசுவதைக் கூட ஓரளவு விளங்கிக்கொள்ள முடியும். ஆனால் கூடவே சிங்கள இனத்தையும் சேர்த்துக்கொண்டு “சிங்கள பௌத்த” சார்  நிலை எடுக்கும் போது இவர்கள் பௌத்தர்களாக எப்படி இருக்க முடியும் என்கிற கேள்வி எலவே செய்கிறது. எஞ்சிய 2500 ஆண்டுகளுக்கு பௌத்தத்தை பாதுகாக்கும் கடமையும் பொறுப்பும் இலங்கையிலுள்ள சிங்கள பௌத்தர்களுக்கே உரியது என்கிற ஐதீகம் நிலைபெற்றுவிட்டது. 

தென்னாசியாவிலும், தென் கிழக்காசியாவிலும் பௌத்தர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையிலான சண்டையும், முறுகலும் மேலும் மேலும் வலுத்தவண்ணமே இருகின்றன. அதன் வேளை இந்த பிராந்தியத்தில் முஸ்லிம்களுக்கெதிராக பௌத்தர்களுடன் இந்து அமைப்புகள் பலவும் கைகோர்ப்பதையும் அவதானிக்க முடிகிறது. இலங்கையில் ஞானசார தேரருடன் கைகோர்த்துள்ள இந்து அமைப்பைப் பற்றி நாம் அறிந்திருக்கிறோம். தற்போதைய பி.ஜே.பி அரசாங்கத்தின் பிரதமர் மோடியின் கடந்த மாத வெசாக் நிகழ்வுக்கான இலங்கை விஜயம் வெறும் தற்செயல் அல்ல.

ஞானசார தேரரின் நடவடிக்கைகளின் பின்னால் இந்திய உளவுச் சேவையின் பாத்திரமும் இருப்பதாக பல்வேறு ஐயங்கள் நிலவுகிற இந்த வேளை. இந்து மகா சபை (Hindu Mahasabha Loktantrik) – லோக்தந்றிக் என்கிற ஒரு இந்துத்துவ தீவிரவாத அமைப்பு கடந்தவாரம் இந்திய மத்திய அரசாங்கம்  தலையிட்டு “ஞானசார தேரரை காப்பாற்ற வேண்டும்" என்று உள்துறை அமைச்சுக்கு ஒரு கடிதத்தை அனுப்பியிருந்தது. இலங்கை அரசாங்கத்தில் இருக்கும் முஸ்லிம் அமைச்சர்களின் நிர்பந்தத்தினால் ஞானசார தேரரை கைது செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.


மகாத்மா காந்தி கொலையை நியாயப்படுத்தி சர்ச்சைக்குரிய “கோட்சே” என்கிற பெயரில் ஒரு திரைப்படத்தை உருவாக்கியவரே இந்து மகா சபையின் தலைவர் டொக்டர் ராய். அந்த அமைப்பு பாரதீய ஜனதா கட்சியின் ஒரு திரைமறைவு முன்னணி அமைப்பு என்கிற குற்றச்சாட்டுக்கள் பலமாக இருக்கின்றன.

அசின் விறாத்துவை போதுபல சேனாவின் மாநாட்டுக்கு பிரதம விருந்தினராக அழைத்து வந்த போது வரவேற்கும் ஞானசாரர்
இதே வேளை மியன்மாரிலுள்ள பௌத்த தீவிரவாத அமைப்பான 969இன் தலைவர் அசின் விறாத்து பேச்சுகளின் மூலம் பிரச்சாரங்களில் ஈடுபடுவதை ஒரு வருடகாலத்துக்கு தடை செய்த்திருக்கிறது அந்த அரசு. அங்கிருக்கும் வேறு பல பௌத்த பீடங்கள் அரசின் அந்த நடவடிக்கையை வரவேற்றுள்ளன.

10.02.2010 அன்று அஸ்கிரி பிரிவு மாத்திரமல்ல மல்வத்த, ராமக்ஞ, அமரபுர போன்ற நிக்காயக்கள் ஒன்று சேர்ந்து சரத் பொன்சேகாவை கைது செய்தது தவறு என்றும், கண்டித்தும் ஒரு அறிக்கையை வெளியிட்டது. அடுத்த கட்ட முக்கிய நடவடிக்கையை பெப்ரவரி 18  சங்க சபை கூடி எடுப்பதாகவும் அறிக்கை விட்டார்கள். வரலாற்றில் இப்படி அனைத்து சங்க பீடங்களும் ஒரு சேர கூடி முடிவெடுத்த சந்தர்ப்பங்கள் குறைவு. குறிப்பாக மன்னர் வரம்புமீறி செயல்படுகின்ற வேளைகளில் அப்படி கூட்டப்பட்டிருக்கிறது.

ஆனால் ராஜபக்ச தரப்பில் இருந்து உடனடியாகவே மிரட்டல்கள் பறந்தன. தொலைபேசி எச்சரிக்கைகள் செய்து, தமது பினாமி ஊடகங்களை வைத்து அந்த நிக்காயக்களின் உட்பிரச்சினைகளை கிளப்பினர். அதுமட்டுமன்றி மல்வத்த பட்டத்தின் கீழ் இருந்த 500 பன்சலைகளை அகற்றினர். இறுதியில் இந்த சங்கங்கள் சரணடைந்தன. பெப்ரவரி 16 அன்று “பாதுகாப்பு காரணங்களுக்காக” சங்க சபை கூடுவதை காலவரையறையின்றி ஒத்திவைப்பதாக அறிவித்தது. இன்று வரை அப்படி ஒன்றும் கூட்டப்படவில்லை. மகிந்த காலத்தில் பௌத்த பீடங்கள் தமக்கு எதிராக செயல்படாத வண்ணம் அப்படித்தான் கோலோச்சினார்கள்.

ஞானசார தேரருக்கு பிணையில் அனுப்பப்பட்டது முந்திய வழக்குக்கே. வட்டரக்க விஜித தேரருடனான மோதல் பற்றியதும், அதற்கு நிகரான இன்னொரு வழக்குக்கும் தான் அவர் ஆஜராகினார். உயிர் அச்சுறுத்தல் காரணமாக அந்த வழக்குகளுக்கு சமூகமளிக்க முடியாது என்று வழக்கறிஞர்கள் முன்னர் நீதிமன்றத்தில் அனுமதி கோரியபோது அதனை மறுத்து நீதவான் பிறப்பித்த பிடிவிராந்துக்குத் தான் ஞானசாரர் ஆஜரானார். ஞானசாரருக்கு பிணை வழங்குவதை எதிர்த்தரப்பு மறுக்காததால் அவருக்கு பிணை வழங்கப்பட்டது.


ஆனால் இம்முறை அவர் தேடப்பட்டு வந்தது அல்லாஹ்வை இம்சித்து பேசிய பேச்சுக்களின் மீது தொடரப்பட்ட வழக்குக்கே. தலைமறைவாக இருந்த அவரை தேடுவதற்கென்று நான்கு சிறப்புக் குழுக்களும் இயங்கிவந்தன. ஆனால் இன்னொரு வழக்கில் பிணையில் வெளிவந்த போது மற்ற வழக்குக்கு “தேடப்பட்டு வந்த” ஞானசாரரை ஏன் பொலிசார் கைது செய்யவில்லை என்கிற கேள்வி எழுகிறது. இலகுவாக நமட்டுச் சிரிப்புடன் போலீசாரைத் தாண்டி சென்ற ஞானசாரரை ஒன்று செய்யவில்லை பொலிசார். இந்த கேள்வியை இன்று பலரும் எழுப்பி வருகிறார்கள். நீதித்துறையின் “நீதி” யின் மீது நம்பகத்தன்மையை கேள்வி எழுப்புகிறார்கள்.

இதைத்தான் அசாத் சாலி “இந்த வருடத்தின் மிகப்பெரிய நகைச்சுவை” என்கிறார். நல்லாட்சியின் கண்கட்டிவித்தை இனவாதத்தை திரைமறைவில் நன்றாகத் தான் பாதுகாக்கிறது. ஞானசாரரை பாதுகாப்பதில் சுதேச சக்திகளுடன் விதேச சக்திகளும் கூட்டுச் சேர்ந்துள்ளனவா என்கிற சந்தகம் எழாமல் இல்லை.

நன்றி - தினக்குரல்

ஞானசார தேரர் வாரியபொல தேரரின் பாதையிலேயே செல்கிறார் என்று கூறுகிறார் சங்க நாயக்கர்
"ஞானசார தேரரரின் கன்னித்தன்மையை சோதிக்கவேண்டாம்" என்கிற தலைப்பில் அவரின் பெட்டியை வெளியிட்ட "மவ்பிம" பத்திரிகை
ஞானசாரருக்காக கூடிய மகாசங்கத்தினர்

Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates