Headlines News :
முகப்பு » , , » யாழ் சாதி: இரத்தம் கேட்கிறதா? தர மறுக்கிறதா? - என்.சரவணன்

யாழ் சாதி: இரத்தம் கேட்கிறதா? தர மறுக்கிறதா? - என்.சரவணன்


ஒடுக்கப்பட்ட சாதியினருக்கு தாம் வழங்கும் இரத்தம் போய் சேர்ந்துவிடும் என்று உயர் சாதியினர் அச்சம் தெரிவித்து வருவதாக யாழ். போதனா வைத்தியசாலையின் இயக்குனர் டீ.சத்தியமூர்த்தி தெரிவித்திருந்ததாக நேற்றைய 13 ஆம் திகதி “டெயிலி மிரர்” (Daily Mirror) பத்திரிகையில் ஒரு செய்தி வெளியாகி இருந்தது.

இரத்த தான முகாம்களை தொடர்ந்து நடத்தியே இந்த யாழ்ப்பாணத்தில் இரத்தத்தை சேர்க்க வேண்டியிருக்கிறது என்று அவர் தெரிவித்ததாக அந்த செய்தியில் காண முடிந்தது.

இந்த செய்தி வெளியாகி சில மணிநேரத்துக்குள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியிருந்தது. இந்த நிலைமையை கண்டித்து பலரும் தமது கண்டனத்தையும் விமர்சனங்களையும் செய்தார்கள். சில மணி நேரத்துக்குள் பல்லாயிரக்கணக்கானோரின் கண்டத்தை  கடந்த இந்த செய்தியைத் தொடர்ந்து டொக்டர் சத்தியமூர்த்திக்கு நிறையவே அழுத்தம் கொடுக்கப்பட்டிருந்ததாக அறிய முடிகிறது. அதனைத் தொடர்ந்து அவர் 'டெயிலி மிரர்' பத்திரிகையுடன் தொடர்பு கொண்டு தனது மறுப்பை வெளியிடும்படி கேட்டிருந்தார். டெயிலி மிரரும் அந்த செய்தியை  தனது இணையத்தளத்திலிருந்து நேற்றே (13.07.2017) நீக்கியிருந்தது.

இதை அறிந்த நம் சாதிமான்கள் உடனேயே துள்ளிக்குதித்து அது தானே பார் யாழ்ப்பாணத்தில் இப்போதெல்லாம் அப்படி நடப்பதில்லை வதந்திகளை கிளப்பி விட்டார்கள் என்கிற தொனியில் இந்தச் செய்தியை பகிர்ந்தவர்கள் மீது பாய்ந்ததை காண முடிந்தது.

இந்த செய்தியைப் பகிர்ந்த பலரும் அந்த செய்தி குறித்து அதிர்ச்சியடைந்திருப்பார்களேயொழிய ஆச்சரியமடைந்திருக்க மாட்டார்கள். இதற்கான சாத்தியம் இல்லாமலில்லை என்பது அவர்களில் பலருக்கும் தெரிந்தே இருந்தது. அது தான் இந்த செய்தி வெளியான போது தயக்கமின்றி அதனை பகிர்ந்தார்கள்.

மேலும் டெயிலி மிரர் பத்திரிகை  ஒப்பீட்டு ரீதியில் பரவலான நம்பகத்தன்மையை  பெற்ற ஊடகம்.

யுத்தம் முடிவுற்றதன் பின்னர் வடக்கு, கிழக்கு பகுதிகளில் புத்துயிர்ப்பு பெற்றிருக்கும் சாதியம் பற்றிய பெருமளவு சம்பவங்களை நாளாந்தம் அறிந்து கொண்டுதான் இருக்கின்றோம். இத்தனை நாள் இனப்பிரச்சினையால் மூடி மறைக்கப்பட்டு வந்த சாதியம்; யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் நேரடியாக  வெளிப்படுத்தி வருவதை எவரும் மறுத்துவிட முடியாது.

அகமண முறையும், பிறப்பின் அடிப்படையிலும் சாதியம் தனது இருப்பை ஊன்றி நிலைநிறுத்தியே வருகிறது. பிறப்பின் அடிப்படையில் அந்த சாதியின் இரத்தம் அப்படியே பேணப்பட வேண்டுமாம். அதுபோல கலப்பு திருமணங்களுக்கு ஊடாக அந்த சாதியம் தீட்டுக்கு உள்ளாகி விடுமாம். கலந்து விட்டால் அந்த உயர்சாதியின் புனிதம் கெட்டுவிடுமாம். இந்த கருத்தாக்கத்தின் நீட்சியே உயிருக்கு போராடிக்கொண்டிருப்பவர்களுக்கோ, காயப்பட்டவர்களுக்கோ, வேறு காரணங்களினால் இரத்தம் தேவைப்படுகின்ற சக மனிதருக்கு கூட தமது இரத்தம் போய் சேர்ந்து கலந்து விடக்கூடாது என்கிற சுய எச்சரிக்கை.

ஆனால், இதே போல் தமக்கோ, தமது குடும்பத்தினருக்கோ இரத்தம் தேவைப்படும் சந்தர்ப்பத்தில் அந்த இரத்தம் எவரிடமிருந்து கிடைக்கிறது என்று பார்க்கப்படப் போவதில்லை.

சிலவேளை இது வெறும் சிறு எண்ணிக்கையிலான உயர்சாதி வெறியர்கள் இரத்தம் தர மறுத்திருக்கக் கூடும். ஆனால், இது ஒரு மறைந்திருக்கும் ஆதிக்க சாதிய கூட்டு மனநிலை என்பதை அறிந்தே வைத்திருக்கிறோம்.

இது இரத்தத்தில் இருக்கும், நிலப் பத்திரத்தில் இருக்கும், கோவில் பதவிகளில் இருக்கும், கோவில் நுழைவிலும் இருக்கும், காதல் மறுப்பில் இருக்கும், இன்னும் பற்பல பாரபட்சங்களிலும் இருக்கவே செய்யும்.

சுவிசிலிருந்து நேற்று இரவு என்னுடன் உரையாடிய தோழர் ஒருவர் தனது பெறாமகள் ஒருவர் காதலித்து திருமணம் நடக்க இருந்த வேளை இறுதி 24 மணி நேரத்துக்குள் திருமணம் நின்றுபோன சம்பவத்தை தெரிவித்து கவலையடைந்தார். பெண் ஒடுக்கப்பட்ட சமூகத்து பின்னணி என்பது  இறுதி நேரத்தில் தான் தெரிந்ததாம். தமது சாதிய இரத்தப் புனிதத்தை அவர்கள் அந்த திருமணத்தில் காப்பாற்றியது அப்படித்தான். இத்தனைக்கும் சம்பந்தப்பட்ட காதலர்கள் புகலிடத்தில் பிறந்தவர்கள்.

15 வருடங்களுக்கு முன்னர் நான் நோர்வே வந்த புதிதில் ஒரு மறக்க முடியாத சம்பாஷனையை இந்த இடத்தில் நினைவு கூர வேண்டும். விடுதலைப் புலிகளுக்காக தனது நிதியை தாராளமாக வழங்கி வந்தவரும் அவர்களின் மேடைகளில் ஒரு பாடகராகவும் வளம் வந்த ஒரு நண்பர் இப்படி கூறினார். “தலைவர் எங்களுக்காகப் போராடட்டும். ஆனால், நாளைய ஆட்சி ஒரு கரையானின் தலைமையில் இருக்க முடியாது.”

அதே நபர் இன்னொரு சந்தர்ப்பத்தில் தனது 3 வயது மகனைக் காட்டி இவன் நாளைக்கு ஒரு வெள்ளைக்காரியைக் கூட இழுத்துக் கொண்டு வரட்டும். ஆனால், ஏதாவது கீழ் சாதிப் பெட்டையை மட்டும் இழுத்து வந்துவிடக்கூடாது” என்றார். என்னை அதிர்ச்சியடையைச் செய்த சம்பாஷனைகள் அவை.

தலைவர் தனது இரத்தத்தை சிந்தி தமிழ் ஈழத்தை பெற்றுக் கொடுத்துவிட்டு எக்கேடாவது கெட்டு போகட்டும். ஆனால், ஆள்வது வெள்ளாளர்களாக இருக்க வேண்டும்” என்கிற ஈனப் புத்தியை தற்செயல் என்று கடந்து விட முடியவில்லை. அது ஆதிக்க “யாழ், சைவ வேளாள மைய வாத”த்தின்  கூட்டு மனநிலையே.

டெயிலி மிரரின் மறுப்பு
இன்று 14ஆம் திகதி 'டெயிலி மிரர்' பத்திரிகை அந்த மறுப்பை முதல் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறது.

டொக்டர் சத்தியமூர்த்தி அனுப்பிய கடிதத்தில்; யொஹான் பெரேரா எனும் ஊடகவியலாளர் தொலைபேசியில் தன்னோடு இரத்தப் பற்றாக்குறை பற்றி கேட்டதாக கூறியிருக்கிறார். ஆனால் அந்த செய்தி பிழை என்கிறார். இரத்தப் பற்றாக்குறையும் இல்லை, சாதியப் பிரச்சினையும் இல்லை என்கிறார் அவர். மறுப்பை மூன்று நாள் தொடர்ந்து அதே முதல் பக்கத்தில் போடாவிட்டால் சட்ட நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் அனுப்பியிருந்த கடித்தத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.

இந்த கடிதத்துக்கு டெயிலி மிரர் சார்பிலும் பதில் கடிதம் அனுப்பப்பட்டிருந்தது. அதில் வருத்தம் தெரிவித்தும் மறுப்பை வெளியிடுவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.


ஆனால் இதே செய்தியை கடந்த 10ஆம் திகதியே சிங்கள ஊடகங்கள் வெளிக்கொணர்ந்து விட்டன. ஒரேயொரு வித்தியாசம் அந்த ஊடகங்கள் சத்தியமூர்த்தியின் பெயரைப் பயன்படுத்தி இருக்கவில்லை. மாறாக யாழ் போதனா வைத்தியசாலையின் அதிகாரிகள் தெரிவித்ததாக குறிப்பிட்டிருந்தன.

கடந்த 10ஆம் திகதி வெளியான "ரிவிர" பத்திரிகையில் வெளிவந்த செய்தி இது.

சாதியத்தை அடிப்படையாகக் கொண்டு யாழ். குடா நாட்டில் தமிழர்கள் சிலர் எந்த ஆஸ்பத்திரிகளுக்கும் இரத்தம் வழங்க முன்வராததால் யாழ்ப்பாண ஆஸ்பத்திரிகளில் இரத்தத்துக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால்  “பொசன் பௌர்ணமி”யன்று போதனா வைத்தியசாலையின் வேண்டுகோளுக்கு இணங்க இலங்கை படையைச் சேர்ந்த 200 இராணுவத்தினர் இரத்த தானம் செய்வதற்காக பஸ்களில் ஏறிச் சென்றார்கள்.
யாழ். பாதுகாப்பு கட்டளை அதிகாரி மேஜர் ஜெனெரல் தர்ஷன ஹெட்டியாராச்சி அவர்களிடம் யாழ். போதனா வைத்தியசாலையின் அதிகாரிகள் கேட்டுக்கொண்டதற்கிணங்க இராணுவத்தினர் இவ்வாறு அனுப்பப்பட்டனர்.
வியாழக்கிழமை 170 பைன்ட்களும் வெள்ளியன்று 100 பைண்டுகளும் இதனால் கிடைக்கப்பெற்றுள்ளன. வடக்கு மக்களின் உயிர்களைப் பாதுகாக்கும் நோக்குடன் இந்த வருடம் மாத்திரம் பருத்தித்துறை, தெல்லிப்பளை, சாவகச்சேரி, பளை, அச்சுவேலி ஆகிய ஆஸ்பத்திரிகளுக்கு ஆயிரம் பைன்ட் இரத்தம் வழங்கப்பட்டிருப்தாக மேஜர் ஜெனெரல் தெரிவித்தார்.
இராணுவத்தினரும் தகுந்த சந்தர்ப்பத்தில் இரத்தம் வழங்காமல் இருந்திருந்தால் வடக்கில் நோயாளிகள் பல சிரமங்களுக்கு உள்ளாகியிருக்கக் கூடும் என்று வடக்கு பாதுகாப்புத் துறை சுட்டிக்காட்டியுள்ளது”

இந்த செய்தியை அப்படியே பல சிங்கள இணையத் தளங்கள் மீள வெளியிட்டிருந்தன. 

டெயிலி மிரர் இன்று வெளியிட்டிருந்த மறுப்பில் ஒரு வரியைக் கவனிக்க வேண்டும். டொக்டர் சத்தியமூர்த்தி இப்படி கூறியிருக்கிறாராம். “Caste factor was not a major issue for the donation of blood in the north” என்கிறார். “வடக்கில் இரத்த தானத்தின் போது பிரதான பிரச்சினையாக சாதியம் இல்லை” என்கிறாரே தவிர “சாதியம் ஒரு காரணமே இல்லை” என்று அவர் கூறவில்லை. இதை அவர் டெயிலி மிரரரிடம் எப்போது கூறினார் என்று தெரியவில்லை. இந்த வரிகளை துணிவுடன் டெயிலி மிரர் போட்டதன் பின்னணி இனிமேல் தான் தெரியவரும்.

10ஆம் திகதியே இந்த செய்தி வெளியான வேளை மறுப்பு தெரிவிக்காத டொக்டர் சத்தியமூர்த்தி இப்போது திடீர் மறுப்பை வெளியிட்டதன் பின்னணி என்ன? எங்கிருந்து வந்த நிர்ப்பந்தம் என்கிற கேள்வி எழுகின்றது.

இதேவேளை இது இராணுவத்தினரின் நலனுக்காக டெயிலி மிரரால் புனையப்பட்ட ஒரு கதை என்று "கொழும்பு டெலிகிராப்" இணையத்தளம் ஒரு செய்தியையும் வெளியிட்டிருக்கிறது.

எங்கே இருக்கிறது தூய இரத்தம்
யுத்தம் நிகழ்ந்துகொண்டிருந்த போது காயப்பட்டவர்களுக்கும், நோயாளர்களுக்கும் வந்து சேர்ந்து கலந்த இரத்தம் சைவ வேளாள இரத்தம் மாத்திரம் அல்ல. தமிழரே அல்லாதவர்களின் இரத்தமும் தான் ஏற்றப்பட்டது என்பதை வசதியாக மறந்த கூட்டம் இது.

தென்னிலங்கையில் இருந்து கொண்டு வந்து சேர்க்கப்பட்ட இரத்தம் சிங்கள, முஸ்லிம் மக்களது மாத்திரமல்ல “சிங்களப் படையினரதும் தான்” என்பதை அவர்கள் அறிவார்களா, அல்லது அறியாமல் இருப்பதே மேல் என்று இருக்கிறார்களா.

இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட மரபணுச் சோதனைகள் இந்த இரத்த புனிதங்களை எப்போதோ உடைத்து நொறுக்கி சுக்கு நூறாக்கிவிட்டன. அதைத்தான் மறுத்தாலும் யுத்த காலத்தில் ஏற்றப்பட்ட இரத்தம் இலங்கை முழுவதும் இருந்து சேகரிக்கப்பட்டவை தான். அப்போதே இவர்களின் “தூய்மையும்”, “புனிதமும்” இவர்களின் அர்த்தத்தில் “கெட்டுவிட்டன”. அப்படியும் தூய்மையை காக்க விளையும் கவரிமான்கள் இந்த உண்மையை அறிந்ததும் என்ன செய்யப் போகிறார்கள்.

மீண்டும் கூறுகிறேன். இந்த செய்தி பொய்யாக இருக்க வேண்டும் என்றே நாம் விரும்புகிறோம். ஆனால், அந்த செய்தியையும் தாண்டி இந்த சாதிய மனோநிலை உயிர்ப்புடன் தான் இருக்கிறது என்பதை எம்மால் மறுக்க முடியாது.

கடந்த வருடம் இதே யாழ்ப்பாணத்தில் கோவில் திருவிழாவின் போது ஒடுக்கப்பட்ட சாதியினரை ஓரங்கட்டியதால் ஏற்பட்ட பிரச்சினையில் இராணுவம் தலையிட்டு படையினர் வடம் பிடித்து தேர் இழுத்த சம்பவத்தை இங்கு நினைவுறுத்த வேண்டியிருக்கிறது.


இதுவரைகாலம் ஒடுக்கும் கருவியாக இருந்து முழு இனத்தையும் இரத்தம் சிந்தவைத்த இராணுவத்திடமே போய் தேர் இழுக்கச் செய்ததும், இரத்தம் தரக் கோரி – பெற்றது அவமானமாக இல்லை; ஆனால், சொந்த “தமிழ்” இனத்துக்கு இரத்த தானம் வழங்குவது அவமானமாகிவிட்டதா. தேர் இழுக்க வந்த சிங்கள இராணுவம் எந்த சாதியாக இருந்தாலும் பரவாயில்லை, இரத்தம் கொடுத்த இராணுவம் எந்த சாதியானாலும் பரவாயில்லை ஆனால், எங்கள் சாதிக்கே எங்கள் ஆதரவு என்பது கடைந்தெடுத்த கேவலம் அல்லவா.?

கடந்த மூன்று மாதங்களாக சிங்கள பேரினவாத தினசரி பத்திரிகையான 'திவயின' பத்திரிகையில் தமிழ் மக்களைப் பற்றிய வரலாற்று மோசடிக் கட்டுரைகள் தொடராக வெளிவந்த வண்ணமிருக்கின்றன. “தமிழர்கள் என்று ஒரு இனமே இல்லை அவர்கள் மலபாரிகளே” என்று நிறுவும் வகையிலான ஆய்வுத் தொடரை வெளியிட்டு வருகிறார்கள். அவற்றில் தமிழர்கள் மத்தியில் உள்ள வெள்ளாளத் தனத்தையும் கடுமையாக சாடுகிறார்கள். (இது பற்றி தனியாக எழுத இருக்கிறேன். அல்லது எழுதுவோருக்கு நான் உதவி செய்வேன்.)

இந்தக் கட்டுரைகளில் தமிழர்களுக்கு என்றும் எந்தவொரு தாயகமும் கிடையாது என்றும் புனைந்து நிறுவி, சிங்கள மக்கள் மத்தியில் பரப்பும் கைங்கரியத்தை வெற்றிகரமாக நகர்த்திக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் சகலதும் அழிந்தாலும் சாதியத்தைப் பேணுவோம் என்கிற ஈனச் சபதத்துக்கு என்னவென்பது.

சாதி இரத்தம்” பற்றிய இந்த சம்பவங்களை இனவாதத் தரப்பு நன்றாகவே கையாண்டு வருகிறது என்பதை ஊடகங்கள் வெளியிட்டு வரும் செய்திகள் கட்டுரைகளிலிருந்து காண முடிகிறது.

இதற்குத் தானே ஆசைப்பட்டாய் தமிழ் நாய் சாதியே” என்று கேட்கத் தோன்றுகிறது.

Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates