மலையக மக்களின் வீட்டுத்தேவை நாளுக்குநாள் உக்கிரமடைந்து காணப்படுகின்து. இதற்கான பரிகாரத்தை காணவேண்டிய தேவை மேலெழுந்திருக்கின்றது. இந்நிலையில் மலையக மக்களின் வீடமைப்பு கருதி முறையான திட்டங்கள் முன்னெடுக்கப்படுதல் வேண்டும். இத்திட்டங்கள் வெற்றிபெறுவதற்கு பலரினதும் ஒத்துழைப்பினை பெற்றுக்கொள்வதோடு மலையக அரசியல்வாதிகள் ஐக்கியப்பட்டு குரல் கொடுக்கவும் வேண்டும்.
மலையக மக்கள் சுமார் இருநூறு வருட கால வரலாற்றினைக் கொண்டவர்களாக இந்நாட்டில் இருந்து வருகின்றனர். நாட்டின் அபிவிருத்தி கருதி இம்மக்கள் வழங்கும் பங்களிப்பு அளப்பரியதாகும். தேசிய வருமானத்தில் கணிசமான தொகையினை இம்மக்கள் ஈட்டிக்கொடுத்து வருகின்றார்கள். எனினும் இம்மக்கள் உழைப்பிற்கேற்ப ஊதியம் இல்லாத நிலையிலும் அடிப்படைத் தேவைகள்கூட நிறைவு செய்யப்படாத நிலையிலும் பெரும் சிரமங்களுக்கும், சிக்கல்களுக்கும் மத்தியில் வாழ்க்கையை தொடர்ந்து கொண்டிருப்பது ஒன்றும் புதிய விடயமல்ல. கம்பனியினரின் அடக்குமுறையினால் இம்மக்கள் நிலை குலைந்து போயிருக்கின்றார்கள். எல்லா நன்மைகளையும் பெற்றுக்கொடுப்பதாக வாக்குறுதியளித்து தோட்டங்களை பொறுப்பேற்றுக் கொண்ட கம்பனிகள் தொழிலாளர்களின் நன்மைகருதி உருப்படியாக எதனையும் செய்ததாக இல்லை.
நாளாந்தம் நெருக்குதல்களுக்கும் இன்னோரன்ன பிரச்சினைகளுக்கும் எமது மக்கள் முகம் கொடுத்து வருகின்றார்கள். இதற்கிடையில் வெளியார் உற்பத்தி முறையினை அறிமுகப்படுத்தி தொழிலாளர்களை மென்மேலும் சிரமத்திற்கு உள்ளாக்கும் முனைப்பில் கம்பனியினரின் காய் நகர்த்தல்கள் அமைந்திருக்கின்றன.
தோட்டத்தொழிலாளர்களின் குடியிருப்புகள் பழமை மிக்கதாகக் காணப்படுகின்றன. இவற்றைப் பழுதுபார்க்கும் நடவடிக்கைகள் கூட நீண்டகாலமாக இடம்பெறாதுள்ளன. லயத்துச் சிறைக்குள் தொழிலாளர்கள் முடங்கிப் போய்க் கிடக்கின்றார்கள். இதனால் இம்மக்களின் வாழ்வும் முடங்கிப் போனதாகவே காணப்படுகின்றது. ‘வீடு என்பது தனியே வெயிலுக்கான ஒரு ஒதுக்கிடம் அல்ல. அது சமூக நிறுவனமும் கூட. அங்கேதான் சமூக நாகரிகத்தின் அத்திவாரம் இடப்படுகின்றது. எனவே வீடு என்பது குறைந்த பட்ச தகுதிகளையாவது கொண்டிருக்க வேண்டும். காற்றோட்டம், குடிநீர் வசதி, கழிவகற்றும் வசதிகள், சுகாதாரமான சமையல் வசதி என்பனவும் வாசிக்க இடவசதிகளும், மின்சார வசதியும் தேவை. இத்தகைய அடிப்படை வசதிகள் ஆடம்பரமானவை அல்ல. சுகாதாரமான ஆரோக்கிய வாழ்க்கைக்கு இவ்வசதிகள் அத்தியாவசியமானவையாகும்’ என்று புத்திஜீவிகள் வலியுறுத்தி இருக்கின்றனர். எனினும் மலையக மக்களின் லயன் குடியிருப்புகளில் இத்தகைய வசதிகள் காணப்படுகின்றனவா என்றால் இல்லை என்றே பதில் வெளிவரும்.
தோட்ட லயன்களில் பல பொருத்தமற்ற அமைவிடங்களில் காணப்படுகின்றன. மலையடிவாரங்கள், கற்கள் நிறைந்த பிரதேசங்கள், சரிவான இடங்கள் எனப்பல இடங்களும் இதில் உள்ளடங்கும். பொருத்தமற்ற அமைவிடங்களில் லயன்கள் அமைக்கப்பட்டுள்ளதால் அனர்த்தங்களுக்கு உள்ளாகும் சூழ்நிலை அதிகரித்துக காணப்படுகின்றது. மண்சரிவுகள், கற்கள் உருண்டு விழுதல் போன்ற பல காரணிகளால் அனர்த்தங்கள் ஏற்பட்டு பல உயிர்கள் காவு கொள்ளப்பட்ட பல சம்பவங்கள் கடந்த காலத்தில் அதிகமாகவே இடம்பெற்றுள்ளன. இனியும் ஏற்படக்கூடிய வாய்ப்புகளும் அதிகமாகக் காணப்படுகின்றன. பல லயன்களின் சுவர்களில் வெடிப்புகள் காணப்படுகின்றன. இப்போதோ எப்போதோ இடிந்து விழும் அபாயத்தை இந்த லயன்கள் எதிர்நோக்கியிருக்கின்றன. வாழ்வதற்கு பொருத்தமற்ற சூழ்நிலையைக் கொண்ட இந்த லயன் அறைகளில் தொழிலாளர்கள் வேறுவழியின்றி அச்சத்துடன் வாழ்ந்து வருவதையும் அவதானிக்கக் கூடியதாக உள்ளது.
அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட சிலருக்கு பொருத்தமற்ற இடங்களில் வீடுகளை அமைக்க தோட்ட நிர்வாகம் காணிகளை வழங்கி இருந்ததாக கடந்த காலத்தில் தொழிலாளர்கள் கண்டனக்குரல் எழுப்பி இருந்தனர். இது மரத்தில் இருந்து விழுந்தவனை மாடு ஏறி மிதிக்கும் ஒரு நிலைக்கு ஒப்பானதாகும் என்றும் இவர்கள் மேலும் கருத்துகளை வெளியிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும். இந்நிலைமை மாற்றப்பட்டு வீடுகளை அமைக்கும் பொருட்டு பொருத்தமான இடங்களில் காணிகள் வழங்கப்பட வேண்டியது அவசியமாகும்.
இன்னும் சில இடங்களில் அனர்த்தம் ஏற்படக்கூடுமென்ற நிலையில் தொழிலாளர்கள் வேறு இடங்களுக்குச் செல்லுமாறு கோரப்படுகின்றார்கள். எனினும் அவர்களுக்கு மாற்றிடங்கள் பெற்றுக்கொடுக்கப்படுகின்றனவா என்பது கேள்விக்குறியாகி இருக்கின்றது. இதனால் தொழிலாளர்கள் சிரமத்துக்கு உள்ளாகி இருக்கின்றனர்.
தோட்டத் தொழிலாளர்களின் வீட்டுத் தேவை என்பது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமாகவே உள்ளது. புதிய குடும்பங்கள் நாளுக்கு நாள் தோற்றம் பெறுகின்றன. எனினும் குடும்பங்களின் தொகைக்கேற்ப உரிய வீடுகள் காணப்படவில்லை. இதனால் லயன் அறைகளில் மட்டுமல்லாது தற்காலிக குடில்களை அமைத்துக் கொண்டும் தொழிலாளர்கள் வாழ்க்கை நடத்தி வருகின்றனர். இத்தகைய தற்காலிக குடில்களிலும் பாதகமான விளைவுகள் அதிகமாகவே காணப்படுகின்றன என்பது சொல்லித் தெரிய வேண்டிய விடயமில்லை.
இன்னும் ஒரு சில லயன் அறைகளில் ஒன்றுக்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருவதனையும் அவதானிக்கக் கூடியதாக உள்ளது. இதனால் பல்வேறு பிரச்சினைகளும் தோற்றம் பெறுகின்றன. குடும்ப வாழ்க்கையின் இனிமையும் சீர்குலைகின்றது. வீட்டுத்தேவை உரியவாறு பூர்த்தி செய்யப்படாமையின் காரணமாக சுகாதார சீர்கேடுகள், கல்விநிலை பாதிப்பு, இயல்பு நிலை பாதிப்பு, உறவுகளுக்கிடையிலான விரிச்சல்கள் என்பனவும் தலைதூக்குகின்றன.
தோட்ட மக்களின் லயத்து வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்து தனிவீட்டு கலாசாரத்திற்கு இட்டுச் செல்ல வேண்டும் என்ற நோக்கில் கடந்த காலத்தில் பல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. வீட்டுத் திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டன. மாடி வீட்டுத் திட்டங்களும் அறிமுகப்படுத்தப்பட்டன. வரவு, செலவுத் திட்ட முன்மொழிவுகளிலும் வீடமைப்பு தொடர்பில் கூறப்பட்டிருந்தது. எனினும் வீடமைப்பு நடவடிக்கைகளில் குறிப்பிடத்தக்க வளச்சியினைக் காணமுடியவில்லை. எல்லாம் மந்தகதியிலேயே சென்றுகொண்டிருந்தது. இந்தியாவின் உதவியுடன் சில வீடுகள் நிர்மாணிக்கப்பட்டதும் தெரிந்த விடயமாகும். இந்நிலையில் இந்தியப் பிரதமர் மோடி மேலும் பத்தாயிரம் வீடுகளை நிர்மாணிக்க இந்தியா உதவும் என்று மலையக மக்களுக்கு மகிழ்ச்சியூட்டி இருப்பது சிறப்பம்சமாகும்.
மலையகத்தின் வீட்டுத்தேவை அதிகரித்துள்ள நிலையில் மலையக அரசியல் வாதிகள் கலந்து பேசி முறையான திட்டவரைவு ஒன்றினை முன்வைக்க வேண்டும். இதனை நிறைவேற்ற அரசாங்கம் மற்றும் ஏனைய நாடுகள், நிறுவனங்களின் உதவியினையும் பெற்றுக்கொள்ள வேண்டும்.
நன்றி - வீரகேசரி
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...