என்னதான் நாங்கள் சமத்துவமும் சம உரிமையும் பேசிக்கொண்டும் பரப்பிக்கொண்டும் திரிந்தாலும் நம் கண்முன்னே இன்னும் காலா காலமாக உரிமைகளை சரிவரப் பெறமுடியாத மலையக சமூகத்தின் ஆதங்கங்களுக்கு எங்களால் பதில் சொல்ல முடியவே இல்லை. தொழிலாளர் வர்க்கமாகவே இலங்கைக்கு கொண்டுவந்து இன்று வரை தொழிலாளர் வர்க்கமாகவே வாழ்ந்து விட்டு செல்லும் துர்பாக்கிய நிலையில் மலையக மக்கள் இருந்துகொண்டிருக்கின்றனர். தினக்கூலிக்கும் மிக குறுகிய மாத சம்பளத்திற்கும் அடிமைகளாக தேயிலை தோட்டங்களில் இன்னமும் மிஞ்சி இருக்கின்ற சாதாரண மனிதர்களின் அவலம் மிகக் கொடியது. குறுகிய லயன்களில் போதிய வசதி எதுவும் இல்லாமல் மருத்துவம் கல்வி போன்ற அடிப்படைத் தேவைகள் சரிவர இன்னமும் பூர்த்தி செய்யப்படாமல் குளிரில் வாடி மடிகின்ற மலையக தொழிலாளர் வர்க்கத்தின் குரல்கள் வெளிப்படுத்தப் படவேண்டும்.
என்னதான் வாக்குரிமை வசதிகள் என்று நுண்மையாக அரசியல் வழிநடத்தல்களோடு உரிமைகள் கொடுக்கப்பட்டு கொண்டிருந்தாலும், அதே சமயத்தில் ஒடுக்கப்பட்டுக்கொண்டிருக்கின்ற இன்னொரு சமூகம் இருந்துகொண்டே இருக்கின்றது. எல்லோரின் போர்வையிலும் அவர்களும் அடிபட்டுப் போனாலும் அங்காங்கே எழுகின்ற இலக்கிய குறிப்புக்களில் தெளிவாக பதிவிடப்படுகின்றனர். சாதியத்தாலும் அவர்களின் ஆரம்ப கால வருகை நோக்கத்தினாலும் புண்படுத்தப்பட்டு, இறைச்சி சதையின் மேல் நெளிகின்ற புழுவைப்போல அலட்சியமாகவும் அசிங்கமாகவும் பாட்டாளி வர்க்கத்தினரால் இன்னமும் பார்க்கப்பட்டுகொண்டிருக்கின்றனர்.
இந்த தொழிலாளர் பாட்டாளி வர்க்க பேதம் பற்றி மிக நுண்மையான கதையாடல் மூலம் வெளிபடுத்துகின்ற தெளிவத்தை ஜோசப்பின் படைப்புத் தான் கூனல் சிறுகதை.
சிறுகதை இலக்கியத்தின் ஒரு கூறான மெய் தரிசனத்தை இந்த கதையின் பின்னணியில் காணலாம். கதையின் ஆரம்பத்திலிருந்து சாதாரண தேயிலை ஆலையில் வேலை செய்கின்ற தொழிலாளர்களின் நகர்வுகளோடு தொடங்குகின்றது கூனல். மேற்ப்பார்வையாளர் தனது மேற்பார்வைக்கு வருகின்ற கணம் வரை , அவர்களின் வேலை பரபரப்பிலாமலும் அமைதியாகவும் நடந்துகொண்டிருக்கின்றது. மேற்பார்வையாளரின் முன் வேலையை பரபரப்பாக்கிக் கொள்கின்ற முறையும், அந்த பரபரப்பு வெறும் செய்கையில் மட்டுமே இன்றி உற்பத்தி வேகத்தை ஒரு போதும் அதிகரித்ததில்லை என்ற நிதர்சனமான பார்வையையும் ஜோசப்பின் மொழியாடலின் மிக லாவகாமாக வெளிப்படுகின்றது. தொழிற்சாலையின் ஒவ்வொரு கூறுகளும் அதில் வேலைசெய்கின்ற தொழிலாளர்களும் அவர்களின் உடல் அசைவுகள் , மன சிக்கல்கள், தேவைகள் , கஷ்டங்கள் என்று நுட்பமான விபரித்தல் ஊடாக கொண்டு சென்று கதையின் மைய பகுதிக்குள் நுழைகின்றார்.
கதையின் மைய பகுதி ‘பெனிங்சின்’ என்கிற உயர் வகைத் தேயிலையை கையாள்கின்ற பெயர் குறிப்பிடாத தொழிலாளி பற்றியது. அந்த பெயர் குறிப்பிடாத நபர் முழு தொழிலாளர் வர்க்கத்தின் அடையாளமாக நகர்த்தபடுகின்றார். அவனின் மனநிலை பற்றிய சித்திரமாக ஜோசப் ஒவ்வொரு மலையக தொழிலாளியையும் முன்நிறுத்துகின்றார்.
லயன்களில் வசிக்கின்ற மக்களின் பொதுமையான தொழில் தேயிலை தோட்டம் சார்ந்ததாகவே இருக்கும். தேயிலை களத்தில் வேலைசெய்கின்ற ஒரு சாரார், தேயிலை ஆலையில் வேலைசெய்கின்ற ஒரு சாரார் , தேயிலை போக்குவரத்தில் வேலை செய்கின்ற இன்னொரு சாரார் என தேயிலையின் உற்பத்திகளோடு ஒன்றித்து வேலைசெய்கின்ற மக்கள் அவர்கள். கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்பதற்கு மிக பொருத்தமான உதாரணம் அவர்கள் குடிக்கின்ற தேநீர். என்னதான் உயர் ரக தேயிலையுடன் வேலை செய்தாலும் அவர்களுக்கு கிடைப்பது என்னவோ கடைசி தரத்திற்கு முன்னைய தர தேயிலையாகும். கடைசி தர தேயிலை மரங்களுக்கு உரங்களாக பயன்படுத்தப்படும். ரேசன் அரிசி வாங்குவது போல தேயிலையை அவர்கள் வாங்கிக்கொள்வார்கள். இரண்டாம் வடித்தலுக்கு சாயம் வராத கஞ்சல்கள்(தேயிலை) சீக்கிரம் தீர்ந்து போக அயலவர்களிடம் வாங்கி சமாளித்துக் கொள்வார்கள். எத்தனை நாட்களுக்கு இதே போக்கில் செல்வது. மாத முடிவுகளில் வெறும் சுடு தண்ணீர் குடித்துவிட்டு குளிருக்குள் வேலைக்கு செல்கின்ற துயரம் மிக்க வாழ்க்கை அவர்களது. கதையின் நாயகனது.
மனதின் பாய்ச்சலில் நல்ல தேநீர் அருந்தி விடவேண்டும் என்று உயர் ரக தேயிலை சிறிய அளவை தனது கைகளில் மடிப்புக்குள் நிறைத்து சுருட்டி விடுகின்றான். மாடு மாதிரி வேலைகளை செய்து விட்டு இறுதியாக சோதனை செய்யும் இடத்தில், முகத்தில் வெறுமையும் பயமும் மிரட்சி கொள்ள காத்திருக்கிறான். துரதிஷ்டவசமாக அவனின் திருட்டு பிடிபட்டு விட்டது. எல்லோர் முன்னிலையிலும் அவமானப்படுகிறான். குற்றத்தை ஒப்புக்கொள்கிறான். அவன் வியாபாரத்திற்க்கோ அல்லது வேறு தீய நோக்கத்திலோ தேயிலையை திருடியிருக்கவில்லை. அவனின் சிறிய ஆசைக்கு, ஒடுக்கப்பட்ட ஒரு சமூகத்தின் மிக சிறிய விருப்பிற்கு அங்கே முட்டுக்கட்டை போடப்படுகிறது.
சிறுகதையின் இறுதி வரிகள், இதுவரை வாசகன் சுற்றிக்கொண்டிருக்கும் உலகத்தின் இருண்ட பக்கங்களை வெளிபடுத்துகிறது. இரவில் மூடை மூடையாக தேயிலை ஒரு கருப்பு காரில் ஏற்றப்படுவதும் அதை காவலாளி சலனமின்றி அவதானிப்பதும் திட்டமிட்ட பாட்டாளி திருட்டை அமபலபடுத்துகிறது. ஒரு சிறிய அளவு தேயிலையை விருப்பிற்காக கொண்டு செல்லும்போது குற்றவாளியாக பிடிபட்ட தொழிலாளியும், அதே தேயிலையை இருட்டில் மூடை மூடையாக சொந்த லாபத்திற்காக பாட்டாளி களவாடும் போது காவலாளி மௌனமாக ஆதரிப்பதும் வர்க்க பேதத்தின் பரவலாக்கத்தை விளிகின்றது. சோதனை செய்யும் இடத்தில் அவன் ஒரு பெருமனதோடு விடுவிக்கப்பட்டிருக்கலாம், இதனால் எதுவும் ஆகிவிடப்போவதில்லை. ஆனால் அந்த விடுதலையை தடுப்பது தொழிலாளி என்ற வர்க்க நிலையே. இதுவே பாட்டாளி வர்க்கம் சுரண்டு மூடையாக குவிக்கும் போது “ யான் ஒன்றும் அறியேன் பராபரமே” என்றிருப்பதும் வர்க்க நிலையே.
தெளிவத்தை ஜோசப் கூனல் என்ற சிறுகதையின் மூலம் கூனலாகிப்போன மலையாக தொழிலாளர் வர்க்க உணர்வு நிலை போராட்டத்தை பதிவிடுகின்றார்.
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...