Headlines News :
முகப்பு » » குப்பையால் 'நாறும்' நல்லாட்சி - ஜீவா சதாசிவம்

குப்பையால் 'நாறும்' நல்லாட்சி - ஜீவா சதாசிவம்


தலைநகர 'குப்பை'யை நீக்க மேல்மாகாண முதலமைச்சர் இசுரு தேவப்பிரியவிற்கு கால அவகாசம் கொடுத்துள்ள ஜனாதிபதி , 'குப்பை' யை நீக்கத் தவறினால்,  கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலைமை வரும் எனவும்  எச்சரித்துள்ளார். இந்த குப்பைப் பிரச்சினை நாட்டின் பல பகுதிகளிலும் பெரியதொரு நெருக்கடியாக மாறியிருக்கிறது. 

இது இவ்வாறிருக்க 'குப்பை' பிரச்சினையை முறையாக நுவரெலியா மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கையாளவில்லை என்ற அடிப்படையில் இ.தொ.கா. 'மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை'  நிறைவேற்றுவதில் உறுதியான கொள்கை உடையது என்று   'மக்களின் நலன் கருதி'  மேற்படி குழுவின் 'இணைத்தலைமை' (பாராளுமன்ற உறுப்பினர் பதவியை அல்ல) பதவியில் இருந்து  காங்கிரஸின் பொதுச்செயலாளர்   ஆறுமுகன் தொண்டமான் பதவி விலகுவதாக அறிவித்திருக்கிறார் . 

'குப்பை' யால் விலகினார், விலக்கப்படுவார் என்பதான எச்சரிக்கைகள் , சமிக்ஞைகள் இந்த விவகாரத்திற்கு முழுமையான தீர்வை தந்துவிடுமா? குப்பையால் 'நாறும்' நல்லாட்சி எவ்வாறான வேலைத்திட்டங்களை கடைப்பிடிக்க வேண்டும் என்பதை அலசுகிறது இவ்வார 'அலசல்'.

'குப்பை '... மீதொட்டுமுல்ல சம்பவத்தையடுத்து மிகவும் பிரபலம் பெற்று வரும் ஒரு சொல். தலைநகரை  ஆக்கிரமித்திருந்த இந்த  'குப்பை'  நாடாளாவிய ரீதியில் நாற்றமெடுத்துள்ளதை அன்றாடம் ஊடகங்கள் வாயிலாக அவதானிக்கின்றோம். '' சாதாரண 'குப்பை' பிரச்சினைக்கு தீர்வு கொடுக்க முடியாத அரசாங்கத்தினால் 'அரசியல்' பிரச்சினைக்கு எப்படி தீர்வு வழங்க முடியும்'' என்பது பொதுமக்களின் கேள்வி. இந்த கேள்வி நல்லாட்சிக்கு சவால்  விடுப்பதாகவே அமைந்துள்ளது. 

வீதியில் செல்லும் போது குவிந்திருக்கும்  'குப்பை' யினால் நாற்றம் எடுப்பதாகவும் இந்த 'நாற்றத்தை' போக்க துரித நடவடிக்கை எடுக்குமாறும் தொலைபேசியினூடாக பிரதமர் அண்மையில், கொழும்பு மாநகர சபைக்கு அழுத்தம் கொடுத்திருந்தார். இவ்வாறு பல வழிகளில் அழுத்தம் கொடுக்கப்படும் போது இதற்கு யார் பொறுப்பு என்ற கேள்வி எழுகின்றது? அதிகாரத்தில் உள்ள ஒவ்வொருவரும் ஆளுக்கு ஆள் அழுத்தம் கொடுத்து விடுவதனால் மாத்திரம் குப்பை பிரச்சினைக்கு  தீர்வு கிடைத்து விடுமா? என்ன?

'குப்பை' யை ஒவ்வொரு பிரதேசங்களிலும் முகாமைத்துவப்படுத்தும் முறைகளை கையாள வேண்டும் என கடந்த வருடம் ஜனாதிபதி தலைமையில் நாடளாவிய ரீதியில் கழிவகற்றும் ஒரு முகாமைத்துவ முறைமை  ஆரம்பித்து வைக்கப்பட்டது.  உக்கும், உக்காத பொருட்களை கொட்டும் முகாமைத்துவம் பற்றி பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. 

இது பற்றி பல பிரதேசங்களிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறான தொரு முகாமைத்துவ முறைமை ஆரம்பிக்கப்பட்ட இற்றைக்கு சுமார் ஏழு மாதங்கள் கடந்துள்ள நிலையில் இந்த முறைமையை எத்தனைபேர் கடைப் பிடிக்கின்றனர்? ஆனால், வெளி மாவட்டங்களை நோக்கினால் பல பிரதேசங்களில் அதாவது தோட்டப்பகுதிகளில் இம்முறைமை  கிரமமாக கையாளு வதையும் அவதானிக்கலாம். 

அபிவிருத்தியில் வளர்ச்சியை கண்டுள்ள பல பிரதேசங்களிலேயே இவ்வாறான முகாமைத்துவ முறைமையில் சிக்கல் இருப்பதாகவும் சுட்டிக்காட்டப்படுகின்றது.  அரசாங்கத்தினால் அறிமுகப் படுத்தும் இவ்வாறான நல்ல பல வேலைத்திட்டங்களுக்கு பொதுமக்களின்  ஆதரவும் முழுமையாக கிடைக்குமானால்  குப்பை பிரச்சினை இந்தளவுக்கு வந்து இருக்குமா அரசாங்கத்தை குற்றவாளியாக இனங்காணும்  பொதுமக்கள் அரசின் நல்ல பல திட்டங்களை வரவேற்று ஒத்துழைத்தால்  ஆரோக்கியமான நிலைமையை உரு வாக்கலாம்.

''வீதியோரங்களில் குப்பை மேடு மலை போன்று குவிக்கப்பட்டுள்ளன . இது திட்டமிட்ட செய்யப்பட்டதாக தெரிய வருகின்றது. கொழும்பு நகரை அசுத்தமற்றதாக காண்பிக்க முனைகின்றனர். எமக்கு மக்கள் ஆதரவு வழங்க வேண்டும் என்று அவர்கள் எதிர்ப்பார்க்கின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள், வேறு இடத்தில் இருந்து வந்து கொழும்பில் குப்பை கொட்டுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கு இராணுவ, பொலிஸ் உதவி நாடப்படும். இது தொடர்பாக  இதுவரையில் 17 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளனர். எமது வேலைத்திட்டத்திற்கு உதவி புரியும் முகமாக குப்பையை வகைப்படுத்தி தருமாறு கோருகின்றோம் என்று கொழும்பு மாநகர சபை ஆணையாளர் வி.கே.ஏ. அநுர இரண்டு நாட்களுக்கு முன்பதான ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் தெரிவித்துள்ளார். 

ஆம்! குப்பை அகற்றல் பிரச்சினைக்கு  முடிவு கட்ட வேண்டுமாயின் மக்களின் முழுமையான பங்களிப்பு அவசியம் என்பதை பொதுமக்களும் உணர்ந்து செயற்பட வேண்டியது காலத்தின் தேவையாக உள்ளது. இந்நிலையில், ஆளுக்கு ஆள் கையிலெடுக்கும் குப்பைவிவகாரத்தை கையாள்வதற்கு இலங்கையில்  எவ்வாறான  தேசிய கோள்கை இருக்கின்றது என்பது பற்றி  சிந்தித்துப் பார்க்கவேண்டும்.   

குப்பை விவகாரத்தை கையாளும் எவ்வாறான அதிகாரம் முதலமைச்சருக்கு இருக்கின்றது என்பதை  நோக்கினால் எவ்வாறான கொள்கை இங்கு வகுக்கப்பட்டுள்ளது   என்பது பற்றிய ஒரு கேள்வி எழுகிறது. இலங்கையில் குப்பைகளை கையாள்வதற்காக இருக்கின்ற  தேசிய கொள்கை என்ன? அதனை மீள் சுழற்சிக்கு உட்படுத்துவதா? வகைப்படுத்துவதா?  போன்று கொள்கை ரீதியில் பொதுவான ஒரு தீர்மானம் இருக்க வேண்டும். இவ்வாறானதொரு தீர்மானம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கின்றதா? தேசியக்கொள்கைத் தீர்மானம் என்பது பாராளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்டாலேயே அது நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்படுவதாக அமையும்,  அவ்வாறு இல்லாத பட்சத்தில் இந்த குப்பை பிரச்சினைக்கு எப்போதும் ஒரு முடிவு கிட்டுவதாக இருக்காது. 

இலங்கையைப் பொறுத்தவரையில், உள்ளூராட்சி நிறுவனங்கள் அவர்களது வசதிகளுக்கேற்ப  குப்பைகளை கொட்டுவதற்கு தீர்மானம் எடுப்பதை அவதானிக்கலாம்.   உள்ளூராட்சி மன்றம் கொள்கை தீர்மானம் எடுக்கும் இடமல்ல. அதற்கு மேலுள்ள நிறுவனங்கள் எடுக்கும் தீர்மானங்களை அமுல்படுத்தும் நிறுவனமாகவே உள்ளூராட்சி மன்றங்கள் செயற்பட வேண்டும். கிராம மட்டத்தில் உருவெடுத்த குப்பை பிரச்சினை   இப்போது தேசிய மட்டத்திற்கு வியாபித்துள்ளது.  அந்தவகையில் நாடளாவிய ரீதியில் உள்ள பல பிரதேசங்களிலும் ஆங்காங்கு குப்பைப் பிரச்சினையை வைத்து ஆர்ப்பாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்தே வருகின்றது. அண்மையில் அட்டனில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தையும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டும். இந்த ஆர்ப்பாட்டத்தின் பின்னணி ஒரு பொறுப்பான  பதவியில் இருந்து பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் விலகும் அளவிற்கு முடிவு ஏற்பட்டுள்ளது. 

தொடர்ச்சியாக நடைபெற்று வந்த நுவரெலியா மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தில் , இந்த கூட்டத்திற்கு பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சும் சமூகமளிக்கின்றமையால், இந்த குப்பை விவகாரத்தை முடிப்பதற்கு பொருத்தமான காணிகளை பெற்றுக் கொடுக்குமாறு அந்த அமைச்சிடம் பொறுப்பளிக்கப்பட்டது. அதற்கமைய அமைச்சரவைக்கு  அறிவித்து அதன் அனுமதி கிடைத்தப்பின்னர் அம்பகமுவ, நுவரெலியா பிரதேச  சபை பகுதியில் பெற்றுக்கொடுப்பதாக  அறிவிக்கப்பட்டது. அதற்கான அனுமதி கடந்த செவ்வாய்கிழமையே பெறப்பட்டுள்ளது. 

இதனை குழுக்கூட்டத்தில் அறிவித்து அமுல்படுத்தப்படுவதற்கு முன்னர் அட்டன் நகரில் ஆர்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டு ஒரு நாளில் குப்பை அகற்றுவதாக அறிவிக்கப்பட்டும் விட்டது. ஆனால், இது நடந்ததா?

அமைச்சுப்பதவியில் இல்லாத பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் திடீரென அதனை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுப்பதாக அறிவித்து மக்களுக்கு உறுதியளித்து திடீர் நடவடிக்கையினால் இந்த பதவியையும் துறக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதா என எண்ணத் தோன்றுகிறது. அமைச்சரவையினால் வழங்கப்பட்ட அனுமதியும் உரிய முறையில் அமுல்படுத்தப்படவில்லை என்றகுற்றச்சாட்டும் இந்நிலையில் எழுந்துள்ளது. 

குப்பையின் இழுபறி நிலையில் ஒவ்வொரு பிரதேசங்களிலும் தொற்று நோய்கள் அதிகரித்து இன்று வைத்தியாசாலைகளில் இடமில்லாதளவிற்கு நோயாளிகளும் நிரம்பியுள்ளனர். டெங்கு நோயாளர்களும் அதிகரிக்கின்றனர்.  தனிப்பட்ட அரசியல் நலன்களுக்காக இவ்வாறான அரசியல் தலையீடுகள் இந்த அரசியல் முறைமை குப்பைகளையும் விட்டு  வைக்க வில்லை என்பது கவலைக்குரிய விடயமே.  யார் சரி யார் பிழை என்று குறைகளைக் கூறிக்கொண்டிருக்காமல் இதனை  சமூகப்பிரச்சினையாகக் கருதி  'தேசிய கொள்கை' திட்ட முறைமை ஒன்றை அரசாங்கம் கையாளுமாயின்  இந்த குப்பையில்  இருந்து நல்லாட்சி மீள்வதாக அமையும்.  

ஆனால், சிலர் அரசியலில் தங்களை தக்கவைத்துகொள்வதற்கு இந்த 'குப்பை அரசியலை'யும் உத்தியாக கையாண்டு மக்களை கஷ்டப்படுத்துகின்றனர் என்பது வேதனைக்குரிய விடயமே!

நன்றி - வீரகேசரி


Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates