Headlines News :
முகப்பு » , » அஞ்சுகம் : மலையக இலக்கியத்தின் முதல் பெண் ஆளுமை - மு.நித்தியானந்தன்

அஞ்சுகம் : மலையக இலக்கியத்தின் முதல் பெண் ஆளுமை - மு.நித்தியானந்தன்


(கூலித் தமிழ் நூல் கட்டுரையின் இறுதியில் இணைக்கப்பட்டுள்ளது)

இந்து சனாதன மரபு பெண் ஒடுக்குமுறையைக் கருத்தியல்ரீதியிலும் யதார்த்த சமூகக் கட்டமைப்பிலும் தீவிரமாகச் செயற்படுத்திவந்திருக்கிறது. இந்து சமூக அமைப்பில் பேணப்பட்டுவந்த தேவதாசி முறை இந்தப் பெண் ஒடுக்குமுறையின் கொடூர வடிவமாகும். தமிழ்நாட்டுக் கோயில்களில் திருப் பணிக்காக அர்ப்பணிக்கப்பட்ட நடன மங்கையர்களை தேவதாசிகள் என்று வழங்குவர். பொதுவழக்கில், இவர்கள் தாசிகள், விபச்சாரிகள் என்றே கூறப் பட்டார்கள். புகழ் வாய்ந்த ஒவ்வொரு கோயிலிலும் இத்தகைய தேவமாதர்களின் படை ஒன்றிருப்பதைக் காணலாம்.

"சமய சாஸ்திரங்களின் பேராலும், கடவுளின் பேராலும் பகிரங்கரமாய் விய பிசாரம் செய்யும் பெண் சமூகம் 'புண்ணியபூமி’ என்று போற்றப்படும் இந்நாட்டில்தான் உண்டு. இதைப் போல் உலகில் வேறெங்கும் காணமுடியாது என்றே நம்புகிறேன். தேவதாசிமுறை நம்முடைய நாகரிகத்திற்கும் கலைப் பெருமைக்கும் பெருங்களங்கமாய் இருக்கிறது. இந்நாட்டில் பெண்களின் பெருமைகளைப் பற்றி வானளாவப் பேசப்படுகிறது. ஆனால், நடைமுறை வேறுவிதமாயிருக்கிறது. பெண்கள் விலங்குகளிலும் இழிவாக நடத்தப்படுகின் றனர். வியபிசாரத்திற்கென்றே ஒரு பெண் சமூகத்தைச் சிருஷ்டித்து க்கொண்டு வாழ்ந்த-வாழும் எமது ஆணுலகத்தின் மனப்பான்மையை என்னென்பது?’ என்று மூவலூர் ஆ. ராமாமிர்தத்தம்மாளின் தாஸிகள் மோச வலை அல்லது மதிபெற்ற மைனர் (1) என்ற நாவலின் முன்னுரையில் கூறுகிறார் செ. வெள்ளைத்துரைச்சி நாச்சியார்.

“தேவதாசிகள் என்று ஒரு கூட்டமே, ஆரிய பார்ப்பனர்களிடமிருந்துதான் உற்பத்தியாகி இருக்கவேண்டுமென்று நூலாசிரியர் ஒரிடத்தில் சுட்டிக்காட்டி யிருப்பது மிகவும் சிந்திக்கவேண்டிய உண்மையாகும். ஆரிய பார்ப்பனரது ரிக்வேதத்தில் கூறப்பட்டுள்ள நியோய விவாக முறையைச் சிறிது ஆராய்ந் தால், இந்நாட்டில் தங்கள் கூட்டத்தைப் பெருக்குவதற்காக மறைமுகமான பல விபசாரமுறைகளை ஆரியர் இந்நாட்டில் ஏற்படுத்திவிட்டார்கள் என்பது வெள்ளிடைமலைபோல் விளங்கா நிற்கும்’ என்று இந்நாவலின் புகழுரையில் குறிப்பிடுகிறார் திருமதி. குருசாமி குஞ்சிதம் அவர்கள்.

"ஓர் இலக்கிய சிருஷ்டி என்ற வகையில் தாசிகள் மோசவலை அல்லது மதிபெற்ற மைனர்' என்ற இந்த நாவல் பெரும் கணிப்பிற்குரியதல்ல எனினும், தாசியாகவே வாழ்ந்த தனிப்பட்ட அனுபவத்தின் அடிப்படையில் எழுதப்பட்டதால், ஒரு சமூக ஆவணம் என்ற வகையில் இது பெரும் அக்கறைக்குரிய ஒன்றாகும்’ என்கிறார் அறிஞர் கமில் ஸ்வலெபில். (2)

இழிவுபடுத்தப்பட்ட இந்தக் கணிகையர் குலத்திலிருந்து எழுந்த இலக்கிய வெளிப்பாடுகள் இன்று ஆழ்ந்த ஆராய்வுக்குள்ளாகியுள்ளன. இதன் அற்புத வெளிப்பாடாக, தஞ்சையை ஆண்ட நாயக்க மன்னனான பிரதாபசிம்மனின் அரசவையில் பெண் புலவராகவும் நடனக் கணிகையாகவும் இசைஞானமிக்க வராகவும் பிரபலம்பெற்றிருந்த முத்துப்பழனி (1730 - 1790) இயற்றிய 'ராதிகா சாந்தவனம்’ என்ற சிருங்கார ரசம் ததும்பும் தெலுங்குக் காவியம் அற்புதமான காதல் இலக்கியமாகப் பேசப்படுகிறது.

“எதுவும் வழிந்து ஒழுகிவிடாமல், விளிம்பிலே ததும்பிக்கொண்டிருக்கும் வகையில் நவரசங்களின் அற்புதமான கலவையில் உருவான இலக்கியம்’ என்று மதிப்பிடுகிறார், இக்காவியத்தை மறுமதிப்புச் செய்த கணிகை பெங்களூர் நாகரத்தினம்மாள்.

ஆண் புலவர்கள் தமது சிருஷ்டிகளை ஒரு பெண் கவிக்குச் சமர்ப்பணம் செய்வது வழக்கில்லையாயினும், அக்காலத்தில் பல்வேறு ஆண் கலைஞர்கள் தமது படைப்புகளை முத்துப்பழனிக்குச் சமர்ப்பணம் செய்துள்ளமை அவரது மேதைமையைப் புலப்படுத்துவதாகவே உள்ளது.

ஆனால், ஆந்திராவின் சமூக மறுமலர்ச்சி இயக்கத்தின் தந்தை என்று போற்றப்படுபவரும், தெலுங்கின் முன்னோடி நாவலாசிரியருமான கந்துகூரி வீரேசலிங்கம் (1848 -1919) மிகக் கடுமையான வார்த்தைகளில் முத்துப் பழனி யின் ராதிகா சாந்தவனத்தை நிராகரித்தார்.

இந்த முத்துப்பழனி ஒரு பரத்தை’ என்றும், இந்நூலின் பல பகுதிகள் ஒரு பெண்ணின் வாயிலிருந்து வந்தது ஒருபுறமிருக்க, அவற்றை ஒரு பெண் தனது செவிகளாலேயே கேட்கக்கூட உகந்தது அல்ல, சிருங்கார ரசம் என்ற போர்வை யில், ஒரு வெட்கமும் இல்லாமல், பாலியல் பற்றிய பச்சையான வர்ணனை களால் தனது கவிதைகளை நிறைத்திருக்கிறார் என்றும் அவர் எழுதினார். 'ஒரு விபசார தாசிகுலத்தில் பிறந்த ஒருவரிடமிருந்து இம்மாதிரிக் கவிதைகள் வரு வதில் ஆச்சரியப்பட எதுவுமில்லை’ என்றும் இந்த உன்னதக் கவிமேதையின் மீது தீர்ப்பெழுதினார் அவர். (3)

முத்துப்பழனியின் சிருங்காரப் பிரபந்தமான ராதிகா சாந்தவனத்தின் கவித் துவ மேன்மையை நிலைநிறுத்த பெங்களூர் நாகரத்தினம்மாள் முன்வைத்த வாதங்கள் ஆணித்தரமானவை. ஆங்கிலேயர் ஆட்சியில் முத்துப்பழனியின் காவியத்தின் மீது விதிக்கப்பட்டிருந்த தடை நீண்ட போராட்டத்தின் பின்னரே 1947இல் நீக்கப்பட்டது.

முத்துப்பழனியின் ஒரு கவிதை இது: (4)

இதழ்களில் ஈரமிடு
அவளின் இதழ்களை உன் நாவின் முனையால்
ஈரமிடு அழுந்தக்கடித்து அவளை அச்சுறுத்திவிடாதே
அவளின் கன்னங்களில்
மோஹனமாய் முத்தமிடு
உனது கூர்மையான
நகங்களால் அவளைக்
கீறிவிடாதே
அவளின் முலைகளை உனது விரல்நுனியால் தடவிவிடு
முலைகளை இறுகக்கசக்கி
அவளை அச்சுறுத்திவிடாதே
மெதுவாய் மிருதுவாய்
சம்போகம் செய்
பலவந்தப்படுத்தி அவளைப் பயமுறுத்திவிடாதே
இதெல்லாவற்றையும் உனக்குச் சொல்ல நான் ஒரு முட்டாள்
அவளைச் சந்தித்து
அவளோடு நீ காதல் போர்
நிகழ்த்தும்போது
நான் சொன்னவற்றையா
நினைத்துப்பார்க்கப்போகிறாய்
என் அன்பே
இந்துப் பாரம்பரியத்தில் கல்வியை மேற்கொள்ளவும்,நடனம், இசை போன்ற லலித கலைகளைப் பயிலவும், இலக்கியம் பயிலவும் சாதாரணப் பெண்களுக்கு

வாய்ப்புகள் இல்லாத நிலையில், கணிகையர் குலத்துப் பெண்களுக்கே இந்த வாய்ப்புகள் இருந்தன. மேட்டுக்குடியினரின் சிருங்கார சுகானுபவங்களுக்கு விருந் தளிக்கப் பிறந்த இவர்கள் லலித கலைகளைக் கற்றுத் தேர்ந்தவர்களாக விளங்க அனுமதிக்கப்பட்டிருந்தனர். சிறந்த பெண் எழுத்துக்கள் இந்தக் கணிகையர் குலத் திலிருந்தே உற்பவித்துள்ளன.

இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் தமிழகத்திலிருந்து இலங்கை நோக் கிப் புலம்பெயர்ந்த மக்கள் கூட்டத்தில் தேவதாசிகளும் இசை, நடனக் கலைஞர் களும் இடம்பெற்றுள்ள கதை சுவாரஸ்யமானது. யாழ்ப்பாணத்தைச் சார்ந்த புர வலர்களினதும், கோயில் ஆதீனகர்த்தாக்களினதும் அழைப்பின்பேரில் யாழ்ப் பாணத்திலும் கொழும்பிலுமாக தேவதாசிகள் இறைப்பணிபுரிந்துவந்துள்ளனர்.

அந்தப் பாரம்பரியத்தில் "கொழும்பு நகரிலே திருக்கோயில் கொண்டெழுந் தருளியிருக்கும் பூரீ சிவகாமியம்பிகா சமேத பொன்னம்பலவாணேசுரர் திரு வடிகளுக்கடிமை பூண்ட மாது பூரீ கா. கமலாம்பிகையார் புத்திரி க. அஞ்சுகம்’ இயற்றிய, "உருத்திர கணிகையர் கதாசாரத் திரட்டு (5)  என்ற நூல் மலையக இலக்கியத்தின் உன்னதமான முன்னோடிப் பெண் ஆளுமையை வெளிப் படுத்திநிற்கிறது.

'வரலாற்று நாயகி தாசி அஞ்சுகம்’ என்று இந்நூல்பற்றிய கட்டுரை ஒன்றை சோ. சிவபாதசுந்தரம் நாழிகை (6)  இதழில் எழுதியிருக்கிறார்.

"யாழ்ப்பாணக் கலாசாரத்தின் சென்ற நூற்றாண்டு வடிவத்தின் ஓர் அம் சத்தை” இந்நூலில் காணலாம் என்று சிவபாதசுந்தரம் இக்கட்டுரையில் குறிப் பிடுகிறார்.

ஆகம, புராண இதிகாசங்களிலிருந்து தேவதாசிகள் எனப்படும் உருத்திர கணிகையர் வரலாற்றைத் தொகுத்துக் கூறும் இந்நூலில் அன்னை அஞ்சுகம் தனது ஆழ்ந்த புலமையை வெளிப்படுத்தி நிற்கிறார்.

திருக்கைலாச மலையிலே உமாதேவியாருக்குச் சேடியராயிருந்த கமலினி யின் அவதாரமாயுள்ளவரும், அரிபிரமேந்திராதி தேவர்களாலும் அறிதற்கரிய பரம்பொருளாகிய தியாகேசப்பெருமான், சுந்தரமூர்த்திசுவாமிகள் பொருட்டுத் தூதராகி எழுந்தருளும் பேறுபெற்றவருமாகிய பரவையாரும், சோமசுந்தரப் பெருமான் இரசவாதம் செய்யும்பொருட்டு எழுந்தருளும் பேறு பெற்ற பொன்னணையாரும், இவர் போன்ற பிறரும் திருவவதாரஞ் செய்த உருத்திர கணிகையர் கோத்திரச் சிறப்பை சிற்றறிவுடையளாகிய யானோ எடுத்துச் சொல்லவல்லேன்' என்று அஞ்சுகம் தனது முகவுரையில் கூறுகிறார். பரவையார், பொன்னணையார், மாணிக்கவல்லி, மானந்தை, மாணிக்கநாச்சியார், ஞான வல்லி, அருணகிரிப் பெருந்தகையாரின் தாயார், சோமி, வெள்ளையம்மாள், கூத்தாள், மாதவி, சித்திராபதி, மணிமேகலை ஆகிய கணிகையரின் வரலாற்றை அஞ்சுகம் இந்நூலில் ஆழமாக எழுதிச்செல்கிறார்.

இந்த உருத்திர கணிகையரின் வரலாற்றை எழுதுவதற்கு இவர் எடுத்தாண் டிருக்கும் இலக்கிய நூல்களின் பட்டியல் பிரமிப்பூட்டுவதாகும். சிவஞான தீபம், சிவஞான சித்தியார், சித்தாந்த சிகாமணி, இறையனாரகப்பொருள், ஆசௌசதீபிகை, திருவருட்பா ஆகிய வைதீக சித்தாந்த நூல்கள் அனைத்தையும் அஞ்சுகம் ஆளுமையோடு கையாண்டிருக்கிறார். அபத்தக் கலப்பில்லாத சுத்த வைதீகத்தில் ஆழ்ந்து தோய்ந்த அஞ்சுகம் அசுத்த வைதீகங்களுள் ஒன்றாகிய மீமாஞ்சம் என்னும் சமயத்தைக் கண்டிக்கும்போது, பின்வருமாறு கூறுகிறார்:

'மீமாஞ்சமாவது உலகமெல்லாம் அநாதிநித்திய, கர்த்தா ஒருவரில்லை; சிவன் முதலிய எல்லாரும் அநித்தர்; வேதம் அநாதி நித்தியம்; வேதத்திற் காணப்பட்ட சிவன் முதலிய சத்தங்களே பிரமம்; அச்சத்தங்கள் தம்மின் வேறாகிய தேவர்கள் அறிவிப்பன அல்ல; வேதம் விதித்த தருமங்களே இம்மை மறுமைப் பயன்களைத் தருவன. இங்ங்ணம் கூறிய ஞானமும் ஆசைவிட்டுச் செய்யும் கருமமுமாகிய இரண்டுங் கால்களாக முத்தியடையலாம், என்றிவ்வாறு கொள்ளும் சமயமேயாம். இக்கருத்தை அடக்கிய மீமாஞ்சை என்னும் நூல் சைமினியால் வேதத்தின் வழிநூலென்றே சாட்டிச் செய்யப்பட்டது.*

அஞ்சுகம் இந்நூலில் பக்கத்திற்குப் பக்கம் தனது ஆழ்ந்த சைவசித்தாந்த ஞானத்தை வெளிப்படுத்திச்செல்கிறார்.

இந்நூலாக்கத்திற்கு அஞ்சுகம் எடுத்தாண்ட 44 இலக்கிய நூல்களின் விபரம் அவரது தமிழ்ப் புலமைக்கு அரும்பெரும் சான்றாகும்.

சங்க இலக்கியங்கள், ஐம்பெருங்காவியங்கள், புராணங்கள், இராமாயண, பாரத இதிகாசங்கள் அனைத்தையும் நுணுகி ஆராய்ந்து உருத்திர கணிகையர் கதாசாரத்தை அஞ்சுகம் திரட்டித் தந்திருக்கிறார். இலங்கையின் தலைநகரான கொழும்பிலே திருக்கோயில் கொண்டெழுந்தருளியிருக்கும் பூரீ சிவகாமி அம் மையார் சமேத கொழும்பு பொன்னம்பலவாணேசுரப் பெருமானுக்கு அடிமை பூண்ட கமலாம்பிகை என்னும் எனது தாயார் எனக்குப் புத்திரப்பேறின்மையால், தமது பெண்வழிச் சந்ததி என்னோடு நின்றுவிடுமென்பதை நன்குணர்ந்து, தம் கோத்திர வரலாற்றை ஒரு புத்தகரூபமாய்ப் பிரசுரித்து வெளிப்படுத்தும்படி எனக்குப் பன்முறையுங் கட்டளையிட்டுவந்தார்’ என்று அஞ்சுகம் இந்நூலின் முகவுரையில் குறிப்பிடுகிறார்.

திருக்கண்ணமங்கை என்னும் திருப்பதியைச் சேர்ந்த அபிஷேகவல்லி என் னும் தேவதாசி மரபில் உதித்த ஆறு தலைமுறையினரின் வரலாற்றை அஞ்சுகம் இந்நூலில் விரிவாக எழுதுகிறார்.

அபிஷேகவல்லி தென்மொழி, வடமொழி, தெலுங்கு முதலிய மொழிகளைக் கற்றும், பரத சாஸ்திரத்தைப் பயின்றும், இசை பாடியும், நடனமாடியும் சிறப் புப் பெற்று, "மகாவித்துவவசி’ என்ற பட்டமும் பெற்றவர். அவரது கோத்திரத்தில் உதித்த வெள்ளையம்மாள் என்பாரும் கல்வியிற் சிறந்தவராய்த் திகழ்ந்து, பர்வதம்

என்ற புத்திரியையும், காந்தப்பர் என்ற புத்திரனையும் பெற்றார். பர்வதத்திற்குப் பிறந்த காமாட்சி என்னும் தேவதாசியே அஞ்சுகத்தின் பாட்டியாவார். காமாட்சி தனது மகளான கமலாம்பிகைக்குப் பத்து வயதில் திருப்பொட்டுத்தாரணம் என்னும் பொட்டுக்கட்டும் சடங்கை நிகழ்த்தினார். காமாட்சியார் தனது மகள் கமலாம்பிகைக்குச் சிறப்பான தமிழ்க் கல்வியையும் கற்பித்து, திருவாரூர் பரத சாஸ்திர வித்துவானாகிய மருதப்ப நட்டுவனாரிடம் ஆடற்கலையையும் பயிற்றுவித்தார்.

1850இல் யாழ்ப்பாணம் கைதடியைச் சேர்ந்த விக்கினேசுராலய தருமகர்த்தா வான காசிநாத முதலியாரின் மகன் வேலப்ப முதலியார், தமிழகத்திலுள்ள குளிக்கரைக்கு சிவக்ஷேத்திர தரிசனம் செய்யச் சென்ற வேளையில், கமலாம் பிகையின் நடனச் சிறப்பைப் பார்த்து, தமது திருக்கோயில் உற்சவத்துக்காகக் காமாட்சியையும் அவரது பதினொரு வயது மகள் கமலாம்பிகையையும் கைதடிக் குக் கொண்டுவருகிறார்.

கமலாம்பிகையும் ஆடல் பாடல்களில் சிறந்து விளங்கி, அவரது கீர்த்தி யாழ்ப்பாணம் முழுதும் பரவியது. அப்போது கொழும்பில் பிரபலம் பெற்றுத் திகழ்ந்த பொன்னம்பல முதலியாரின் திருமண வைபவத்தில் நடனமாடக் கமலாம்பிகை அழைக்கப்பட்டு, அவர் அங்கு சென்று, நடனமாடிக் கீர்த்தி பெற் றார். பின்னர், கமலாம்பிகை பிரசவத்திற்காக, தமிழ்நாட்டில் குளிக்கரைக்குத் தன் தாயாருடன் சென்று, அங்கு சந்தானவல்லி என்ற பெண் குழந்தையைப் பெற்றார். கமலாம்பிகையின் தாயார் காமாட்சியாரும் சில காலத்தின் பின் மரணமுற்றார்.

இந்நிலையில், கைதடி ஆதீனகர்த்தாக்கள் குளிக்கரையிலிருந்து மீண்டும் கம லாம்பிகையையும் அவரது மகள் சந்தானவல்லியையும் கைதடிக்கு அழைத்து வந்து, கோவில் பணிகளில் ஈடுபடுத்தினர். அங்கு வாழும் காலத்தில், கமலாம்பிகை அன்னம்மா என்ற இரண்டாவது மகவைப் பெற்றார்.

கமலாம்பிகையின் மூத்த புதல்வி சந்தானவல்லிக்கு ஆடல் பாடல்களைக் கற் பிப்பதற்கு, கமலாம்பிகையின் மைத்துனரும், பாட்டு, நட்டுவாங்கம், மிருதங் கம், தவில் முதலியவற்றிலே கீர்த்தி பெற்றவருமாகிய புன்னைவனம் நட்டுவனார் அவர்களைத் தமிழகத்தின் திருப்புகலூரினின்றும் அழைப்பித்திருந்தார். இவரது தவில் வாசிக்கும் திறமையை வியந்து, பூரீலபூரீ ஆறுமுக நாவலரின் தமைய னாரும், சிறந்த வித்துவானும் சங்கீதத்தில் வல்லுநருமாகிய பூரீலழறி பரமானந் தப் புலவர் அவர்கள் சிங்கமுகச் சீலையும் வெள்ளிக் கழியும் பரிசளித்தார்கள்.

இக்காலத்தில், கொழும்பில் சிவாலயப் பிரதிஷ்டா கும்பாபிஷேகத்திற்கு வருமாறு பொன்னம்பல முதலியார் வேண்டியதை அடுத்து, கமலாம்பிகை தமது இரு புதல்வியர்களோடும், பரத சாஸ்திர வித்துவான் புன்னைவனம் நட்டுவனா ரோடும் கொழும்பு வந்தார். கொழும்பு சிவாலயத்திலே கணிகையராகத் திகழு மாறு பொன்னம்பல முதலியார் கேட்க, அதற்கிணங்கி, கமலாம்பிகை தனது மூத்த புதல்வி சந்தானவல்லிக்கு பொட்டுக்கட்டி அவ்வாலயத்தின் கணிகையாக்கினார்.

அதன் பின் கமலாம்பிகை தமது புதல்வியருடன் கொழும்பிலேயே வசிக்க லானார்.

பின்னர், கமலாம்பிகைக்குக் குழந்தைவேல் என்ற ஆண்மகவும், அஞ்சுகம் என்ற பெண்மகவும் பிறந்தனர்.

கமலாம்பிகை தனது 73ஆவது வயதில் மரணமடைந்த பின்னர், கொழும்பு பொன்னம்பலவாணேசர் ஆலயத்தின் ஆதீனகர்த்தாவாகத் திகழ்ந்த பொன்னம் பலம் இராமநாதன் அவர்கள் அஞ்சுகத்தை ஆலயப் பணிகளில் ஈடுபடுத்தி, உதவிவந்தார்.

இந்த அஞ்சுகம்தான் தங்கள் கணிகையர் குல வரலாற்றையும், அபிஷேக வல்லியின் தலைமுறையிலிருந்து தங்களின் குலவரலாற்றையும் எழுத்தில் பதித்த அறிஞராவார்.

கமலாம்பிகையின் ஐந்தாவது புத்திரியான அஞ்சுகம், மாயூரம் பரத சாஸ் திர வித்துவான் கந்தசாமி நட்டுவனாரிடம் ஆடல் பாடல்களைக் கற்றுச் சிறந்த நர்த்தகியாகத் திகழ்ந்தார். அஞ்சுகம் 12ஆவது வயதில் பூரீபொன்னம்பலவாணே சுரர் சந்நிதியில் திருப்பொட்டுத்தாரணஞ் செய்துவைக்கப்பட்டார்.

பின்னர், யாழ்ப்பாண சங்கீத வித்துவான் பூரீ நாகலிங்கம் அவர்களிடம் இந் துஸ்தானி இசையையும், மைசூர் சமஸ்தான வித்துவான் கிருஷ்ணசாமி முத லியார், திருசிரபுரம் அழகிரிசாமி செட்டியார் ஆகியோரிடம் வாய்ப்பாட்டையும், திருநெல்வேலி சீதாராம் பாகவதரிடம் வீணையையும் பயின்றார்.

சிலகாலம் சென்றபின், கொழும்பிலுள்ள பிரபல வர்த்தகர் க. சின்னையா பிள்ளை அவர்களின் அபிமான ஸ்திரீயாயினார். அதன்பின் அஞ்சுகம் தனது 16ஆவது வயதில் வேதாரணியம் சொ. சுந்தரேசக் குருக்களிடம் சிவதீட்சை பெற்று, பின் யாழ்ப்பாணம் குழந்தைவேற்பிள்ளை உபாத்தியாயரிடம் தமிழ் இலக்கியமும் கற்றுத் திகழ்ந்தார்.

"சிறியேன் 25 வருடம் மேற்கூறிய கனவான் அவர்களின் (க. சின்னையா பிள்ளை) அபிமான ஸ்திரீயாயிருந்து வாழ்ந்த செல்வவாழ்க்கையின் அருமை பெருமையும் மனமகிழ்ச்சியும் இத்துணையதென எடுத்துச்சொல்லுந்தரத்தவன்று' என்று அஞ்சுகம் குறிக்கிறார்.

அஞ்சுகம் இயற்றிய உருத்திர கணிகையர் கதாசாரத்திரட்டு’ என்ற நூல் இருபதாம் நூற்றாண்டின் முதல் தசாப்தத்தில் ஈழத்துத் தமிழ் அறிஞர்களின் கொடுமுடிகள் எனக் கருதத்தக்க அனைத்துப் புலமையாளர்களினதும் பாராட் டைப் பெற்றமை அஞ்சுகத்தின் பெருந்தமிழ்ப் புலமைக்கு சாட்சியமாகும்.

"கருவி நூலுணர்வும், உருக்கிடும் இசைத்தமிழ் உணர்வும், சிறந்த நாடக நூலுணர்ச்சியுங்கொண்டு, தேவநற் தொண்டினில் சிறந்தே திகழும் அஞ்சுக மாது பத்திமெய் யன்புக்கருளுவார் சிவபெருமானே’ என்று சிறப்புப்பாயிரம்

வழங்குகிறார் மகாவித்துவான் மாதகல் சு. ஏரம்பையர் அவர்கள்.
கல்வியின் மிக்குள கவிஞர் புகழு
நல்லிசைப் புலமை நன்கு வாய்ந்துள்ள
கிஞ்சுக மலர்பொரூஉங் கேழ்நிறச் செவ்வா
யஞ்சுக மெனும்பெயரடைந்தமெல்லியலே!
என்று வாழ்த்துகிறார் பிரம்மபூரீசி. கணேசையர் அவர்கள்.

யாழ்ப்பாணம் நீர்வேலி சிவ.சங். சிவப்பிரகாச பண்டிதர், மயிலிட்டி பிர சித்த நொத்தாரிஸ் க. மயில்வாகனப்பிள்ளை, மகாவித்துவான் உ.ப.வே.திரு.ஸா. இராகவாசாரியார், நாகபட்டினம் வித்துவான் ஜி. சதாசிவம்பிள்ளை, யாழ் சி. மா. தியாகராச பண்டிதர் போன்ற தமிழ்ப் புலமை மரபினர் அஞ்சுகப் பண்டிதையின் இலக்கியப் பணியை மெச்சியுள்ளனர்.

இருபதாம் நூற்றாண்டு ஈழத்துத் தமிழ் வசனநடை வரலாற்றில் உருத்திர கணிகையர் கதாசாரத்திரட்டு” நூலின் வசனநடையின் மேன்மை விதந்து குறிப் பிடத்தக்கதொன்றாகும். புராண வரலாறுகளைச் செய்யுள் மூலத்தில் ஆய்ந்து, தெளிந்து சுவையான சிறப்புமிக்க உரைநடையில் வார்த்துத் தந்திருக்கும் அஞ்சு கத்தின் பணி மெச்சத்தக்கதாகும்.

தமிழகத்தின் குளிக்கரையைச் சேர்ந்த அஞ்சுகம், யாழ்ப்பாணம் கைதடியில் வளர்ந்து, கொழும்பு சிவனாலயத்தில் "பொட்டுக்கட்டிய தேவதாசியாகத் திகழ்ந்து, க. சின்னையாபிள்ளை என்ற வர்த்தகரின் அபிமான ஸ்திரீயாக வாழ்ந்து, உருத்திர கணிகையர் கதாசாரத்திரட்டு’ என்னும் அரிய இலக்கிய நூலினை ஆக்கி, தனது குலக்கோத்திரத்தின் சரித்திரத்தைப் பதிவுசெய்த வரலாற்று ஆசிரியையாகக் கெளரவம் பெறுகிறார்.

எனினும், உருத்திர கணிகையர் மரபினை முற்றுமுழுவதாக ஏற்றுக்கொண்ட அஞ்சுகம், தமது குலத்தினர் இம்மரபைத் தொடர்ந்து பேணிவர வேண்டுமென்று அழுத்தம்திருத்தமாகக் கூறியிருக்கிறார்.

“நம் குலக்கன்னிகை எப்பொழுது திருப்பொட்டணியப் பெற்றாளோ அப் பொழுதே "தேவதாசி"யெனவும், "தேவர் அடியாள்" எனவும் பெயர் பெறு கின்றாள். ஒரு நாயகனால் திருமாங்கல்யம் கட்டப்பட்ட ஒரு நாயகி, அவ னிடத்தில் எவ்வகைத் தொடர்புடையவளாகின்றாளோ, அவ்வகைத் தொடர்பை, இவள் ஈசுரனிடத்திற் கொண்டவளாகின்றாள். ஆகவே, இவள் சிவகைங்கர்யத் திற்குரியாளென்பதையே அத்திருப்பொட்டு விளக்கிநிற்கிறது. அல்லாது, பிறி தொரு விஷயத்தில் பெருநிதி சம்பாதிக்கலாம் என்பதைக் குறித்து நிற்கவில்லை.

"அங்ங்னந் திருப்பொட்டணிந்த பின், நாணமென்பதை விட்டவளாகிச் சந்நிதானங்களிலே பலசன சமூகத்தில் பாடவும் ஆடவும் தக்கவளாகின்றாள். அவ்வாறானபோது, தான் கற்ற ஆடல் பாடலாகிய வித்தையைக்கொண்டு செல் வப்பொருளைத் தேடுவதும், அப்பொருளைக்கொண்டு தானதருமங்கள் செய்வ தும், ஈசுரத்தியானஞ் செய்வதுமாகிய விஷயங்களிற் பொழுதுபோக்குவதன்றோ கல்வியறிவுக்கு அழகாகும்?

"தந்தை - தாயர், ஆண் குழந்தைகளை இளமையிலேயே கல்விகேள்விகளிற் சிறந்தவர்களாக்கிச் செல்வப்பொருள்கள் தேடும் வழியைக் கற்பிக்கின்றார்கள். அவ்வாறே, கணிகைக் கன்னியர்க்கும் இளமைதொட்டு நீதிநூல்களையும் ஆடல் பாடலையும் நன்கு கற்பித்துவைத்தால், அவை வாயிலாகப் பொருளையும் சம்பாதித்துக் கீர்த்தியையும் பெற்று நல்வாழ்வடைவரன்றோ! செந்தமிழ்க் கல்வி யிலும் ஆடல் பாடலாகிய குலவித்தையிலும் சிறந்தவர்களாகிய அஞ்சனாட்சி, சோமி, சண்முகவடிவு முதலானோர் எவ்வளவு பெருமையையும் பெருவாழ் வையும் பெருங்கீர்த்தியையும் பெற்றிருக்கின்றார்கள். இவர்களின் நிலைமையை எய்தும்படி கற்பித்துவைக்கின்ற பெற்றோரல்லவோ நற்பெற்றோர். இவர்களல் லவோ பிள்ளைகளிடத்து உள்ளீடான மெய்யன்புள்ளவர்கள். இவர்களை யன்றோ நாம் என்றும் முன்னிருத்திப் போற்றி வழிபடவேண்டும்’ என்று இந் நூலின் முடிப்புரையில் அஞ்சுகம் அம்மையார் தெரிவித்திருக்கும் கருத்துகள் கணிகையர் குலமரபைப் பேணும் அவரது தீர்க்கமான வாதத்தை வெளிப்படுத்து வனவாகும்.

இந்து சனாதன மரபை எவ்விதக் கேள்வியுமின்றிப் பரிபூரணமாக விசு வசித்து, அதனை முழுமையாக ஏற்றுக்கொண்டுவிட்ட தன்மையை அஞ்சுகம் அம்மையார் இக்கணிகையர் கதாசாரத்திரட்டிலே வெளிப்படுத்துகிறார்.

கணவன்-நாயகன் இறந்ததும், அவரோடு அவரது பத்தினியும் உடன்கட்டை ஏறுவதே உத்தம பத்தினிக்கு அழகு என்றும், அதனைக் கணிகைக்குலமும் கைக் கொண்டொழுக வேண்டும் என்றும் அஞ்சுகம் அம்மையார் பல இடங்களிலே வலியுறுத்துகிறார்.
"காதலரிறப்பிற் கனையெரிபொத்தி
யூதுலைக்குருகினுயிர்த்தகத்தடங்கா
தின்னுயிரீவ ரீயாராயி
னன்னீர்ப் பொய்கையினளியெரிபுகுவர்
னளியெரி புகா அராயினன்பரோ
டுடனுறை வாழ்க்கைக்கு நோற்றுடம்படுவர்
பத்தினிப் பெண்டிர்”
என்பது மணிமேகலை.

மேற்கூறிய இலக்கணங்கொண்டு ஒழுகாத மகளிர் சுவாலித்தெரிகின்ற கொடு நரகடைந்து துன்புறுவதென்க. அல்லதுா உம் தீயொழுக்குடையராகிய மகளிர் நாய், நரி, பேய், புலி, கூகை, பன்றி, மலப்புழு ஆகிய இழிந்த பிறப்புக்களை எய்துவரென நீதிநூல்கள் வலியுறுத்திக் கூறுகின்றன.

“அஃதன்றி, உத்தம இலக்கணமுடையராகிய கற்புடை மாதர்நாயகனிறந்தவப் பொழுதே அக்கினிப்பிரவேசத்தை வெஃகி மனாதிதிரிகரண மொருங்குற முயற் சிப்பரேல், பரிமகப் பேறடைவரென்றும், அங்ங்ணமே செய்துமுடித்தோர்

யமதூதரினின்றும் நீங்கி, கணவனோடு சுவர்க்கலோகப் பிராப்தி பெறுவரென் றும், நாயகன் மகாபாதகனாயினும் அவனோடு உடன்கட்டை ஏறினவள் கற் புடையாளெனக் கண்டவிடத்து, யமன் அவனை விடுத்தோடுவன் எனவும் கூறு கின்றன’ என்று அஞ்சுகம் மிகத் தீர்க்கமாகக் கூறுகிறார்.

கணவனுடன் அக்கினிப்பிரவேசம் செய்யாதுவிட்டால், ஏற்படக்கூடிய இழி பிறப்புகள் பயமுறுத்தக்கூடியதாயும், உடன்கட்டை ஏறிவிட்டால் சொர்க்க லோகம் போகலாம் என்று கூறுவது நியாயமற்ற வஞ்சக ஆசைவலை போன்றுமே தோன்றுகிறது.

இந்து சனாதனப் புராணப்புனைவுகளை மெய்யென்று நம்பிவிட்ட பாங்கு இந்நூலின் அனைத்துப் பக்கங்களிலும் பளிச்சிடுகிறது.

“இப்பிரபு (க. சின்னையாபிள்ளை) என்னை அபிமான ஸ்திரீயாய் மதியாது, சொந்தப் பாரியாகவே மதித்துவந்தமையால், யான் அவருக்கு முன் இவ்வுலக வாழ்வை விட்டுநீங்க வேண்டுமென்னும் பேரவாப் பூண்டிருந்தேன். சிவபெரு மான் அப்பிரபுவையே முன்னர்த் தமது திருவடியிற் சேர்த்துக்கொண்டார்’ என்று எழுதும் அஞ்சுகம், அப்பிரபு இறந்ததும், அதிர்ஷ்டவசமாக உடன் கட்டை ஏறிவிடாமல், நிதானித்து,

'ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று

சூழினுந்தான் முந்துறும்’

என்ற திருக்குறள்வழி அமைதிகண்டமை நமது நற்பேறாகும்.

தேவதாசி மரபை இல்லாதொழிக்கும் புரட்சிக் குரல்கள் தமிழகத்தில் பின் னாளில் வேகம் பெற்று, அம்மரபு சட்டவிரோதமானது என்று பிரகடனப் படுத்தப்பட்டது.

ஆனால், வலிமை வாய்ந்த இந்து சனாதன மரபிற்குப் பலியாகிப்போன அஞ் சுகத்தின் தமிழ்ப் புலமை வரலாற்றில் அவருக்குத் தனித்துவமான இடத்தைத் தேடிக் கொடுத்திருக்கிறது.

இன்று புத்தெழுச்சி பெற்றுவரும் மலையக இலக்கியப் பாரம்பரியத்தின் மூத்த தலைமகளாக அன்னை அஞ்சுகம் நிலைபெறுகிறார். விளிம்புநிலை சமூ கத்தின் ஆறு தலைமுறை வரலாற்றை எழுதிவைத்துவிட்டுச் சென்ற இம் மாதரசி, வாயிழந்துபோன மலையகச் சமுதாயத்தின் உயரிய அங்கீகாரத்திற்குரிய மகத்தான இலக்கிய ஆளுமை என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

உசாத்துணை
  1. மூவலூர் ஆ. ராமாமிர்த்தம்மாள். 1939. தாஸிகள் மோசவலை அல்லது மதிபெற்ற மைனர். ஈரோடு: குடி அரசுப் பதிப்பகம்.
  2.   Kamil V. Zvelebil. 1987. A Devadasi as the Author of a Tamil novel. Journal of the Institute of Asian Studies 5, 1 Sep. 1987.
  3.   Susie Tharu, K. Lalita. 1993. Women writing in India. 600 B.C. to the Early Twentieth Century. CUNY: The Feminist Press, Page 3.
  4.   Ibid, Page 118.
  5.   * க. அஞ்சுகம். 1911. உருத்திர கணிகையர் கதாசாரத் திரட்டு. கொழும்பு: மீனாம்பாள் அச்சி
  6.   " நாழிகை, ஜனவரி 1994 லண்டன்.
கூலித்தமிழ் நூலிலிருந்து நன்றியுடன் மீள்பதிவு செய்யபடுகிறது.
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates