வெறுப்புமிழும் / வெறுக்கத்தக்கதான கருத்துக்களை (Hate) கக்குவதற்கு வசதியான தளமாக சமூக வலைத்தளங்கள் இப்போது பயன்படுத்தப்பட்டு வருவதை நாளுக்கு நாள் அவதானிக்கலாம். இதில் முன்னணி வகிப்பது Face book எனப்படும் முகப்புத்தகம். இதில் காத்திரமான கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டு அதன் மூலம் நல்ல பல விடயங்கள் ஒருபுறம் நடந்தாலும் பிறிதொரு பக்கத்தில் இதில் பதிவு செய்யப்படும் கருத்துக்கள் இனங்களுக்கிடையே அல்லது தனி நபர்களுக்கிடையே வன்முறையை ஏற்படுத்துவதாகவே அமைந்து விடுகின்றது.
7.5பில்லியன் கொண்ட உலக சனத்தொகையில் 1.94 பில்லியன் மக்கள் முகநூல் பாவனையில் இருப்பதாக மார்ச்சு 2017 வரையான கணக்கெடுப்பின் ஊடாக அறிய முடிகிறது.
சமூகங்களை சிறந்த முறையில் ஒன்றிணைத்து அவற்றுக்கிடையே காத்திரமான கருத்துருவாக்கத்தை உருவாக்கவேண்டும் என்ற நோக்கில் உருவாக்கப்பட்ட இந்த 'வலைத்தளங்கள்' தற்போது தடம் மாறிச் செல்வதாகவே தள உருவாக்கத்திற்கு காரண கர்த்தா அண்மையில் கவலையையும் வெளியிட்டுள்ளார்.
இந்த ஊடாட்டம் இலங்கையைப் பொறுத்த வரையில் எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது பற்றி இவ்வார 'அலசல்' பேசுகிறது.
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை தன்னகத்தே கட்டிப்போட்டிருக்கும் ஒரு மாய உலகமே இந்த முகப்புத்தகம். முன் பின் தெரியாதவர்களின் ஒன்று கூடும் தளமான முகப்புத்தகத்தினால் வேண்டத்தகாத பல விடயங்கள் நடந்தேறுவது தவிர்க்க முடியாத தொன்றாகிவிட்டது.
ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்த மாணவர் மார்க் ஸுக்கர்பெர்க் (Mark Zuckerberg) என்பவரால் ஏதேச்சையாக உருவாக்கப்பட்டதுதான் இந்த /பேஸ்புக் . தனது ஒரு தனிப்பட்ட நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டாலும் இன்று நோக்கம் தவறிய பாதையிலேயே சென்றுகொண்டிருக்கின்றது என்று கவலைப்பட வேண்டிய அளவுக்கு கதை எதிர்மறையாக பயன்படுத்துபவர்களின் ஆதிக்கம் இருக்கிறது.
பேஸ்புக் உட்பட சமூக வலைத்தளங்களில் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் பதிவிடுவோரை அவமதிப்பு குற்றச்சாட்டுக்களின் கீழ் தண்டனை வழங்குவதற்கு அவசியமான சட்டதிட்டங்களை வெகு விரைவில் கொண்டு வரவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்தி ருந்தார்.
ஆனால், இந்த அறிவிப்பு இன்னும் முழுமைப்படுத்தப்படவில்லை என்பது ஒரு கசப்பான உண்மை. ஏனெனில் சில ஒழுங்குகளை நாட்டில் ஏற்படுத்த வேண்டுமாயின் இவ்வாறான விடயங்கள் உடனடி யாக அமுலுக்கு வரும் வகையில் நடை முறைப்படுத்தப்பட வேண்டும்.
2007ஆம் ஆண்டின் 56ஆம் இலக்க சிவில், அரசியல் தொடர்பிலான சர்வதேச இணக்கப்பாட்டு சட்டத்தை (International Covenant on Civil and Political Rights (ICCPR) ACT, No.56 of 2007) Article 3. (1) No person shall propagate war or discrimination, hostility or violence.
மேற்படி சட்டத்திற்கு கீழேயே இதனை அமுல்படுத்துமாறு நாடளாவிய ரீதியில் உள்ள பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கும் பிரதி பொலிஸ்மா அதிபர்களுக்கும் சிரேஷ்ட. பொலிஸ் அத்தியட்சகர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அண்மைய செய்திகள் ஊடாக அறியக்கிடைத்தது.
செய்தி ஊடகங்களில் பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சி என்பன செல்வாக்கு செலுத்தி வந்த காலம் தொழில்நுட்ப புரட்சியுகத்துடன் மாற்றம் அடையத் தொடங்கி, தற்போதைய தகவல் யுகத்தில் பாரிய மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. அண்மையில் லண்டன் பி.பி.சி தமிழோசை வானொலி தனது சேவையை சிற்றலை வரிசையில் நிறுத்திக்கொண்டது. இதற்கான காரணமாக சொல்லப்பட்டது. ''சமூகவலைத்தளங்களின் செல்வாக்கினால் வானொலிசேவை அர்த்தமற்றதாகிவிட்டது என்பதாகும்'' .
பி.பி.சி போன்ற உலகத்தரம் வாய்ந்த வானொலிகளை முடக்கும் அளவுக்கு இன்று சமூகவலைத்தளங்கள் செல்வாக்கு பெற்றுவிட்டன. இதில் பேஸ்புக், ட்வீட்டர், வட்ஸ்அப், வைபர், இன்ஸ்ட்ராகம், என பல்வேறு APP கள்.
இதில் 'முகநூலுக்கான' முக்கியத்துவமே தனி. இப்போதெல்லாம் பெரும்பாலும் இளம் வயதினருக்கு பேஸ்புக்தான் உலகம் என்றாகிவிட்ட நிலையில் ஒவ்வொரு மனிதனையும் தன்னகப் படுத்தியுள்ள பெருமை பேஸ்புக்கையே சாரும். எல்லோரும் தமது கைகளில் உள்ள ஸ்மார்ட் போன்களில் ,டெப், ஐ -பேட்களில் அல்லது கணனிகளில் ஒரு பேஸ்புக் தளத்தில் தம்மை இற்றைப்படுத்தியவாறே (Update) நாட்களைக் கழிக்கின்றனர். இது இன்றைக்கு இன்றியமையாத தொன்றாகிவிட்டது.
காலையில் எழுந்தவுடன் கண்ணாடியையோ அல்லது தனது கைகளைப்பார்த்து கண் விழிக்கும் காலம் போய் ஸ்மார்ட் போனில் 'காலை வணக்கம்' நண்பர்களே என்ற வாசகத்துடன் முகப்புத்தகத்தில் விழித்து எழும் காலமே இப்போது உருவாகியுள்ளது.
ஒருவரை தகாத முறையில் திட்ட வேண்டுமா? அல்லது ஒருவரின் செயற்பாடுகளை விமர்சிக்க வேண்டுமாயின் அதற்கான வசதியான தளமாக இப்போது பேஸ்புக்கையே பெரும்பாலானவர்கள் பயன்படுத்திக் கொள்கின்றனர். இலங்கையை பொறுத்தவரையில், அண்மைய காலங்களில் இந்த அவதூறான விடயங்களின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்தே செல்கின்றது. இதனை எச்சரிப்பதாகவே அண்மையில் ஜனாதிபதி வெளியிட்டுள்ள கருத்துக்களும் அமைகின்றது. பேஸ்புக்கில் இடம்பெறும் அவதூறான விடயங்களால் தற்கொலைகளின் எண்ணிக்கையின் அதிகரிப்புக்கு குறைவில்லை.
இப்போது தலை தூக்கியிருக்கும் பேரினவாதம் இந்த முகப்புத்தகத்தினூடாக உச்ச நிலையை அடைந்து வருகின்றது. இந்நிலை இன்றைய நல்லாட்சிக்கும் பேரும் சவாலாகவே அமைந்து விடுகின்றது.ஒருவர் மீது எந்தளவு தரக்குறைவான வார்த்தைப் பிரயோகங்களை பயன்படுத்த வேண்டுமோ அந்தளவிற்கு இந்தத் தளத்தை களமாகக் கொண்டு தான் வெற்றி கொண்டதாக திருப்தி பெற்றுக்கொள்கின்றனர்.
எந்த தளத்துக்கும் இல்லாத பெரும் சிறப்பு பேஸ்புக் வலைத்தளத்துக்கு உண்டு. இதற்கு காரணமே பின்னூட்டங்களும் அதற்குக் கிடைக்கும் பதிற் குறிகளும்.
பின்னூட்டங்கள் லைக் ஆகவும் கொமன்ட் ஆகவும் இடம்பெறுகின்றன. ஒருவர் பதிவிடும் பதியப்பட்டகருத்துக்கு பதிலுக்கு ஆதரவான, எதிரான கருத்துக்கள் பதிவிட்டு பல்வேறு சண்டை சச்சரவுகளை எல்லாம் தோற்றுவித்து விடுகின்றன.
நட்பு,காதல், இலக்கியம், அரசியல் என எல்லா விடயங்களும் பொதுவெளிக்குள் இலகுவாக உரையாடப்பட்டு வருகிறது மாத்திரமல்ல காத்திரமான கருத்துக்களை பேணுவதற்காக உருவாக்கப்பட்ட தளங்கள் தகராறுக்கான தளங்களாக மாறிவிட்டன. சிலர் பேஸ்புக்கில் மூழ்கிக் கிடக்கின்றனர். இதுகுடும்பங்களில் உறவு நிலை உரையாடல்களை குறைத்துள்ளது. குடும்ப அலகுகளின் சீர்குலைவுக்கு பேஸ்புக் பிரதான காரணமாகவும் இருக்கின்றது.
அரசியல் தளத்தில் அவசரமான கருத்துக்களைப் பதிவு செய்து காத்திரமான அரசியல் கருத்து பரிமாற்றத்தை பேஸ்புக் கேள்விக் குறியாக்கியுள்ளது எனலாம். ஒருவரின் நிதானத்தை தவறச் செய்கின்ற பிரதானதளமாக பேஸ்புக் இப்போது மாறி வருகின்றது.
தனிமனிதர்கள் தமது விருப்பு வெறுப்பு சார் சுமைகளை இறக்கிவைக்கவும், சுயகளிப்பை அடையவும் பயன்படுத்துவதாக நம்புகிற போதும் மாறி தமது நிம்மதியையே இழக்கச் செய்யும் ஒரு போதையாக மாறியிருக்கிறது.
ஒருபுறம் தகவல்கள், தரவுகள், கருத்துக்களை பெறுவதற்காகவும், பகிர்வதற்காகவும் பயன்படுத்தி வருவதாக நம்பிய போதும் மறுபுறம் புனைவுகள், பொய் பரப்புரைகள், அவதூறுகள், வதந்திகள் என்பவற்றுக்கும் இலக்காக நேரிடுகிறது. மனிதர்களின் சிந்த னையை கட்டுப்படுத்த வல்ல வேறெந்த ஊடக வலைப்பின்னலும் வரலாற்றில் இதுவரை இருந்ததில்லை. லைக்குகளுக்காகவும், கொமண்டுகளுக்காகவும் ஏங்கும் ஒரு புது உலகம் போதையேறிப் போயுள்ளது.
முகநூல் கணக்கு இல்லாதவரை ஏளனமாக பார்க்கின்ற ஒரு இளம் சமூகம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. ஒருவரின் பெயரை விட “முகநூல் கணக்கு” என்பதே அடையாளமாக உருவெடுத்துள்ளது.தனிமனித நேரம், உழைப்பு, சக்தி எல்லாவற்றையும் சுரண்டி இழுத்து வைத்திருக்கும் இந்த முகநூலில் இருந்து விடுதலை பெறுவதாக அறிவித்து கணக்கை மூடிவிட்டுச் சென்ற பல்லாயிரக்கணக்கானோர் அதே வேகத்தில் திரும்பி வரப்பண்ணியது தான் முகநூலின் ஆகக் கூடிய வெற்றி எனலாம்.
அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என கூறிய அந்தகாலம் போய் இப்போது அகத்தின் அழகு முகப்புத்தகத்தில் தெரியும் என்ற அளவுக்கு இன்று ஒவ்வொரு தனி நபரையும் ஆட்கொண்டிருக்கிறது சமூக வலைத்தளங்கள்.
சமூக வலைத்தளங்கள் கூர்மையான கத்தி போன்றதே கவனமாக கையாளாவிட்டால் நம் கையை பதம் பார்க்கும். இதனை பொழுதுபோக்காக மட்டுமே அல்லாமல் ஆக்கபூர்வமாக பயன்படுத்துவோம். ஆளில்லாமல் ஆயுதம் வெட்டாது என்பார்கள். முகநூல் ஒரு யுகமாக இருக்கலாம் அதனை பாவிப்பவர்களின் கைகயிலேயே சாதக பாதகம் தங்கியுள்ளது.
நன்றி - வீரகேசரி
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...