Headlines News :
முகப்பு » » அவுட்குரோவர் எனும் பெயரில் வெளியாருக்கு உபகுத்தகை - மல்லியப்பு சந்தி திலகர்

அவுட்குரோவர் எனும் பெயரில் வெளியாருக்கு உபகுத்தகை - மல்லியப்பு சந்தி திலகர்

தேங்காய் எண்ணையில் இருந்து முள்ளுத்தேங்காய் எண்ணைக்கு - பாகம் - 20)

ஹைபிரிட் முறையில் 'அவுட்குரோவர்' முறையை அறிமுகப்படுத்த முதலாளிமார் சம்மேளனம் முன்மொழிவைத் தந்துள்ளதாக கடந்த வாரம் சொல்லியிருந்தோம். 

இப்போது 25 நாட்கள் தோட்டத்தில் வேலை வழங்கப்பட வேண்டும் எனும் நிபந்தனை உள்ளது. அது முறையாக நடைமுறையில் இருக்கின்றதா? என்பது இரண்டாவது கேள்வி. இந்த 25 நாட்கள் வேலையை தற்போது உள்ள நடைமுறையின்படி 'செக்ரோல்' முறைப்படி வேலை வழங்குவது சராசரியாக மாதத்திற்கு நான்கு வாரங்கள் எனில், ஒரு வாரத்தில் மூன்று நாட்கள் (03) 'செக்ரோல்' முறைப்படி அதாவது  தற்போதைய கூட்டு ஒப்பந்த முறைப்படி வேலை வழங்குவது. 

எஞ்சியுள்ள 13 நாட்களுக்குமாக 'அவுட்குரோவர்' முறையை அறிமுகப்படுத்துவது. அதாவது, தோட்டத்தில் உள்ள தேயிலை மரங்களை ஒரு தொழிலாளிக்கு இத்தனை மரங்கள் (சுமார் 1500) என பிரித்து வழங்கி அவர்கள் அதனைப் பராமரித்து அதில் கொழுந்து பறித்து வழங்குதல் வேண்டும். அதனை ஒரு கிலோவுக்கு இன்ன விலை என்கின்ற அடிப்படையில் தோட்ட முகாமைத்துவம் கொள்வனவு செய்யும். 

முதலில் இந்த முறைமையினையே தோட்டங்கள் தோறும் அறிமுகம் செய்யும் முன்மொழிவே செய்யப்பட்டது. நீண்டகால 'செக்ரோல்' முறைக்கு பழகியிருக்கும் தொழிலாளர்களை உடனடியாக அவுட்குரோவர் முறைக்கு பழக்குவது சிரமம் என்பதன் அடிப்படைகளிலேயே இரண்டும் கலந்த ஹைபிரிட் முறையை அறிமுகப்படுத்துவதாக முதலாளிமார் சம்மேளனம் தெரிவிக்கின்றது. 'செக்ரோல்' முறைப்படி வேலை செய்யும் நாட்களுக்கு வழமைப்போன்று ஊழியர் சேமலாப நிதி (EPF), ஊழியர் நம்பிக்கை நிதி (ETF) என்பன செலுத்தப்படும் எனவும் கூறப்படுகின்றது. 

மறுபுறத்தில் குறித்த ஒரு தொழிலாளிக்காக ஒதுக்கப்படும் எண்ணிக்கையான தேயிலை மரங்களை பராமரிக்கும் பொறுப்பு தொழிலாளிக்கு உரியது. 'செக்ரோல்' முறைக்கு வேறாகவும் 'அவுட்குரோவர்' முறைக்கு வேறாகவும் தோட்டத்தில் உள்ள தேயிலைக்; காணிகளை பகிர்ந்துக்; கொள்வது அவர்களது திட்டம். இங்கு எழுதப்படுவது போல ஹைபிரிட் முறை அத்தனை இலகுவாக நடைமுறைப்ப டுத்தக் கூடிய ஒன்றல்ல. 

இது பற்றிய வாதப்பிரதிவாதங்கள் தொழிற்சங்க தரப்பினருக்கும் முதலாளிமார் சம்மேளனத்திற்கும் இடையே இடம்பெற்றது. குறித்த எண்ணிக்கையிலான தேயிலை மரங்கள் அமைந்திருக்கும் காணிகளை குறுங்கால, நீண்டகால அடிப்படையில் தொழிலாளரின் பெயரில் குத்தகைக்கு வழங்குதல் வேண்டும் எனும் கோரிக்கை தொழிற்சங்க தரப்பில் முன்வைக்கப்பட்டது. பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சின் மத்தியஸ்த்தத்தின் கீழ் இடம்பெற்ற பேச்சு வார்த்தைகளின்போது கொள்கை அளவில் அதற்கு உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. தற்போது முதலாளிமார் சம்மேளனம் முன்வைக்கும் முன்மொழிவுகளில் இந்த திருத்தத்துக்கும் உடன்பாடு காணப்பட்டுள்ளது. ஒரு தொழிலாளிக்காக ஒதுக்கப்படும் காணியின் பரப்பளவு என்ன? எவ்வளவு காலத்திற்கு குறித்த தொழிலாளியுடன் ஒப்பந்தத்தை மேற்கொள்வது? தேயிலைக்கான விலைகளை எவ்வாறு நிர்ணயிப்பது போன்ற விடயங்கள் இன்னும் தீர்க்கமாக பேசப்படவில்லை. 

இந்த 'அவுட்குரோவர்' முறைப்பற்றி அல்லது ஹைபிரிட் முறைப்பற்றி இப்போது இங்கு எழுதப்படுவதற்கு அல்லது பேசப்படுவதற்கு காரணமே எதிர்வரும் காலங்களில் இத்தகைய முறைமை நடைமுறைக்கு வந்தால் மக்கள் அதனை எவ்வாறு எதிர்க்கொள்ள போகின்றார்கள் என்பது பற்றிய முன்னறிவை மக்கள் பெற வேண்டும் என்பதற்காகவே தொடரினை வாசிக்கும் தொழிலாளிகள் பலர் இந்த முறைகள் குறித்து தொலைபேசியிலோ நேரடியாகவோ உரையாடும் போது சந்கேங்களை எழுப்பி வினாக்களை கோருவது ஆறுதலாக உள்ளது. நாளை தங்களுக்கு என்ன நடக்கப்போகிறது என்பது தொடர்பாக மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டியது தொழிற்சங்க, அரசியல் பணிகளில் மட்டுமல்ல ஊடகத்துறையில் இருப்பவர்களுக்கும் உள்ள பொறுப்பாகும். கூட்டு ஒப்பந்தக்காலம் வந்தவுடன் என்ன பேசுகிறார்கள் எவ்வளவு சம்பளம் என்ன நிபந்தனை என்பன வெளிப்படுத்துவதில் ஆர்வம் காட்டுகின்ற அளவுக்கு  பெருந்தோட்டக் கைத்தொழிலின் போக்கு எவ்வாறு செல்கின்றது என்பது பற்றிய ஆய்வாக ஊடகங்கள் இந்தப்பணியினை முன்னெடுத்ததாக தெரியவில்லை. சுமார் ஐந்து வருடங்களுக்கு முன்பதாகவே இந்த 'அவுட்குரோவர்' முறைப்பற்றி பேசப்பட்டது. 

ஊடகங்கள் அல்லது ஊடகவியலாளர்கள் இதுபற்றிய தேடல்களை செய்ய வேண்டியதன் அவசியத்தை நான் ஒரு சில ஊடகவியலாளர்களுடன் உரையாடியுள்ளேன்.

இப்போது இங்கே எழுதப்படுவது முழுமையான ஆய்வோ அல்லது அவுட்குரோவர் முறைமை சரியானது என்பதாக நியாயப்படுத்துவதோ அல்ல.  இப்படியான ஒரு மாற்றம் எம்மை அறியாமலேயே நிகழ்ந்து கொண்டிருக்கின்றது என்பதை தெரிவிப்பதற்காகவே. 

கண்டி சமூக அபிவிருத்தி நிறுவனம் தனது இரண்டாவது செயலமர்வை அண்மையில் கொழும்பிலே நடத்தியிருந்தது. சுயாதீன ஆய்வாளரான ஸ்கந்தகுமார், இலங்கை திறந்த பல்கழைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி ஏ.எஸ்.சந்திரபோஸ், ஆய்வாளராக கலைமகள் தங்களது ஆய்வு அறிக்கைகளை சமர்ப்பித்தனர். 

ஸ்கந்தகுமாரின் ஆய்வுகள் தோட்டங்களினதும், தொழிலாளர்களினதும் தற்போதைய நிலை குறித்தே அமைந்தது. விரிவுரையாளர் ஏ.எஸ்.சந்திரபோஸ் தற்போது அவுட்குரோவர் நடைமுறைப்படுத்தப்படும் தோட்டங்களில் உள்ள நிலவரங்களை எடுத்துரைக்க முயன்றுள்ளது. எனினும், தங்கள் ஆய்வுக்காகச் சென்ற இடங்களில் தோட்ட நிர்வாகங்களே அதிகம் தரவுகளை தர முயற்சிப்பதாகவும் தொழிலாளர்களிடத்தில் உரையாடக்கூடிய வாய்ப்புக்கள் மறுக்கப்படுவதாகவும் தெரிவித்தார். எது எவ்வாறாயினும் பெருந்தோட்டக் கம்பனிகளில் தொழிலாளர்களாக வேலை செய்யும் நம்மவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து ஐம்பதனாயிரத்துக்கு குறைவடைந்துள்ள நிலையில் தெற்கிலே சிறுதோட்ட உடமையாளர்களின் எண்ணிக்கை நான்கு இலட்சமாக உயர்ந்திருப்பதனை அவரது புள்ளி விபரங்கள் எடுத்துக்காட்டின.

கலைமகள்  கென்யா, இந்தியாவில் (அசாம்)  எவ்வாறு இந்த 'அவுட்குரோவர்' முறைகள் நடைமுறையில் உள்ளது என்பது தொடர்பாக தனது ஆய்வுகளை சமர்ப்பித்தார். 

இலங்கைத் தேயிலைக்குப் போட்டியாக சர்வதேச சந்தையில் திகழும் கென்யா, இந்தியா ஏற்கனவே அவட்குரோவர் முறைக்குள் வந்திருக்கின்றன. ஆனாலும் அவுட்குரோவர் முறையில் தொழிலாளிகளுக்கு காணிகளை பகிர்ந்து பெருந்தோட்டப் பயிர்ச்செய்கையை முன்னெடுக்கும் போர்வையில் தனியார் கம்பனிகளுக்கு குறிப்பிட்ட அளவு காணிகளை பகிர்ந்தளிக்கும் முறைமை அசாமிலும் அவதானிக்கப்பட்டுள்ளது. இலங்கையிலும் அத்தகைய நிலைமை பின்பற்றப்படும் அபாயம் உள்ளது. குறிப்பாக 'மத்துரட்ட பிளான்டேஷன்' அறிமுகப்படுத்திய அவுட்குரோவர் முறையின் கீழ் மாஹா ஊவ தோட்டத்தில் இப்போது புதிய தனியார் கம்பனி ஒன்று 'பயோடீ' எனப்படும் தேயிலை உற்பத்தி தொழிலை ஆரம்பித்துள்ளதாக தொழிலாளர்கள் விசனம் தெரிவித்து வருகின்றனர். 

இவ்வாறு உப குத்தகை (Sublease) முறையில் பெருந்தோட்டக் கம்பனிகள் தனியாருக்கு பரவலாக தேயிலைக் காணிகளை வழகி வருகின்றது. இதற்கு சட்டத்தில் இடம் இருப்பதாக கம்பனிகள் தரப்பில் வாதாடினாலும் தொழிலாளர்களுக்கு பகிர்வதற்கு பொருத்தமான காணிகள் இல்லாத நிலைமையினை இது தோற்றுவித்து வருகின்றது.

லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதார பிரச்சினையாக மாறியிருக்கும் இந்த 'அவுட்குரோவர்' முறை தொடர்பில் ஆழமான ஆய்வுகள் வேண்டப்படுகின்றன. 

(உருகும்)

நன்றி - சூரியகாந்தி

Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates