Headlines News :
முகப்பு » , , , , , » ஐவர் ஜெனிங்ஸ் : அரசியலமைப்பு சிற்பி - என்.சரவணன்

ஐவர் ஜெனிங்ஸ் : அரசியலமைப்பு சிற்பி - என்.சரவணன்

“அறிந்தவர்களும் அறியாதவையும்” 16

சேர் ஐவர்  ஜெனிங்ஸ் (Sir William Ivor Jennings 16.05.1903 – 19.12.1965) இலங்கையின் அரசியல், கல்வி வரலாற்றில் மறக்கமுடியாத பாத்திரம். சுதந்திர இலங்கையின் முதலாவது அரசியலமைப்பான சோல்பரி "அரசியலமைப்பின் சிற்பி" என்று கூறுவார்கள். அதுபோல இலங்கையின் பல்கலைக்கழக தோற்றத்தின் பிதாமகரும் கூட.

1903 இல் லண்டனில் பிறந்த அவர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் சட்டம், அரசியல், பொருளாதாரம் போன்ற விடயங்களில் கற்று சட்ட விரிவுரையாளராகவும் கடமையாற்றிக் கொண்டிருந்த போது பிரித்தானிய அரசாங்கத்தால் இலங்கைக்கு விசேட பணிக்காக அனுப்பப்பட்டார். 21.03.1941 இல் அவர் இலங்கை அனுப்பப்பட்டதே இலங்கைக்கான பல்கலைக்கழக உருவாக்கத்துக்காகத்தான்.

இரண்டாம் உலக யுத்தம் நிகழ்ந்துகொண்டிருந்த காலப்பகுதியில் அவர் இலங்கை வந்தார் என்பதை புரிந்து வைத்திருப்பதும்; அதன் பின் அவரால் நிகழப் போகும் அரசியல் மாற்றத்தை புரிந்துகொள்ள எளிமையாக இருக்கும்.

இலங்கைக்கு வருமுன்னரே அவர்; தான் புலமைபெற்ற அரசியல், சட்டம் தொடர்பில் சில முக்கிய நூல்களை இங்கிலாந்தில் வெளியிட்டிருந்தார். “நலிந்த சட்டம்” (The Poor Law Code - 1930) “சட்டத்திலும் யாப்பிலும் அரசியலமைப்பு விவகாரம்”  (Constitutional matters in The Law and the Constitution 1933), “மந்திரிசபை அரசாங்கம்” (Cabinet Government - 1936) “பாராளுமன்றம்” (Parliament - 1939) என்கிற நூல்கள் மிகவும் பிரச்சித்தி பெற்றவை. அவரது 38 வயதுக்குள் 13 நூல்கள் எழுதியிருந்தார்.

இலங்கையில் இரண்டாம் உலகப் போர் நிகழ்ந்த காலத்தில் அவர் சிவில் பாதுகாப்பு பிரதி ஆணையாளராக நியமிக்கப்பட்டார்.

பல்கலைக் கழக சிற்பி
லண்டன் பல்கலைக்கழகத்தின் மாதிரியைக் கொண்ட ஒரு பல்கலைக்கழகத்தை இலங்கையில் உருவாக்கும் அவரது முயற்சி “இலங்கைப் பல்கலைக்கழகம்” (University of Ceylon) என்கிற பெயரில் தலைநகர் கொழும்பில் உருவாக்கப்பட்டு பின்னர் அதன் ஒரு பகுதி பேராதனைக்கு 1952இல் பேராதனைக்கு மாற்றப்பட்டது.

பேராதனைப் பல்கலைக்கழகத்தை உருவாக்குவதில் அன்றைய கல்வி அமைச்சர் C.W.W.கன்னங்கரவின் ஒத்துழைப்புடன் கட்டி முடிப்பதில் பிரதான பாத்திரம் வகித்தார் ஜெனிங்ஸ். இலங்கை பல்கலைகழகத்தின் முதலாவது உபவேந்தராக 1942-1955 வரை கடமையாற்றினார்.

இந்த வருடத்துடன் பேராதனைப் பல்கலைக்கழகம் 75 ஆண்டு நிறைவையொட்டி வைர விழாவை கொண்டாடுகிறது. 

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் உருவாக்குவதில் ஜெனிங்ஸ் கண்ட கனவு எப்படி பலித்து என்பது பற்றி அவரின் “பேராதனைக்கான பாதை” (The Road to Peradeniya) பற்றிய நூலில் நிறையவே எழுதியுள்ளார். பேராதனைப் பல்கலக்கழகத்தின் ரம்மியமான அழகான தோற்றத்துடனான ஒரு பல்கலைக்கழகத்தை உலகில் வேறெங்கிலும் காண முடியாது என்று பூரிக்கிறார் அவர்.

சுதந்திர இலங்கையின் யாப்பு
2வது உலக யுத்தம் நிகழ்ந்துகொண்டிருந்தே போதே தனது சாம்ராஜ்ஜியத்துக்கு உட்பட்ட பல நாடுகளை விடுவித்து சுயாட்சி வழங்கும் முடிவுக்கு வந்த பிரித்தானியா அரசியல் யாப்பு சீர்த்திருத்தத்தின் மூலம் இலங்கையின் ஆட்சிமுறையில் மாற்றங்களை செய்துவிட்டு கிளம்பும் முடிவில் இருந்தது. கூடவே தனது பிடியையும் முற்றிலும் அகற்றாத வகையில் அந்த சீர்திருத்தம் அமையவேண்டும் என்பதில் கவனமாக இருந்தது. சுதேச தலைவர்களோ ”டொமினியன்” அந்தஸ்தைக் கோரிநின்றனர்.

யுத்தம் முடிந்ததன் பின் பொறுப்புடன் கூடிய அரசியலமைப்பொன்று வழங்கப்படுமென 1943 மே மாதம் பிரகடனப்படுத்தியது. பிரித்தானிய முடிக்குட்பட்ட சுயாட்சி முறைமையை கொண்டிருக்கக்கூடிய வகையில் உருவாக்குவதற்கான ஒரு நகலொன்றை அமைச்சரவையை உருவாக்கும்படி பிரித்தானிய அரசு வேண்டியது. இதனை 1943க்குள் தயாரிக்கும்படியும் நான்கில் மூன்று பெரும்பான்மை பகுதியினரின் ஒப்புதலைப் பெற்ற பின் இதனை நடைமுறைக்கு கொண்டு வரலாமென்றும் அதிலிருந்தது.

“அமைச்சர்களின் நகல்” (Minister’s Draft) எனும் பெயரில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த நகல் உண்மையிலேயே அமைச்சர்களால் உருவாக்கப்பட்டது அல்ல. டீ.எஸ்.சேனநாயக்கவின் மேற்பார்வையில் ஐவர் ஜெனிங்ஸ் தான் இதனை தயாரித்தார். இதன் பின்னணியில் இராஜதந்திர சூத்திரதாரியாக செயற்பட்ட இன்னொருவர் சேர்.ஒலிவர் குணதிலக.

சோல்பரி யாப்பின் பிதாமகர்.
இது தயாரிக்கப்பட்டதன் பின்புலம் பற்றி பின்னர் ஐவர் ஜெனிங்ஸ் எழுதிய ”இலங்கையின் அரசியலமைப்பு” (The Constitution of Ceylon) எனும் நூலில் பல விபரங்களைக் குறிப்பிடுகிறார். அது மட்டுமன்றி டீ.எஸ்.சேனநாயக்க 1952இல் இறக்கும் வரை அவரின் நண்பராகவும், பிரதான ஆலோசகராகவும் ஜெனிங்ஸ் விளங்கினார். 1949 இல் அவர் வெளியிட்ட “இலங்கை யாப்பு” (The Constitution of Ceylon) என்கிற நூலை டீ.எஸ்.சேனநாயக்கவுக்குத் தான் சமர்ப்பணம் செய்திருக்கிறார்.

1947 நவம்பரில் இராணி மாளிகையில் வைத்து இலங்கையின் சுதந்திர சாசனத்தில் பிரித்தானியா சார்பில் சேர் ஹென்றி மொங்க் மேசன் மூரேவும் - இலங்கையின் சார்பில் டீ.எஸ்.சேனநாயக்காவும் கையெழுத்திடுகிறார்கள். பின்வரிசையில் நடுவில் சேர் ஒலிவர் குணதிலக்கவுடன் சேர் ஐவர் ஜென்னிங்க்ஸ்.
அந்த உத்தேச யாப்பு நகல் 02.02.1944 இல் தேசாதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்ட வேளை அது குறித்து சிறுபான்மையினரின் கருத்தை அறிய ஆவல் கொண்டிருந்தார் தேசாதிபதி.

அந்த நகலுக்கு சிறுபான்மை இனத்தவர்களின் ஆதரவும் கிடைக்கவில்லை. தம்மிடமிருந்து எந்தவித யோசனைகளையும் கேட்டறியாமல் தயாரிக்கப்பட்ட இந்நகல் சிறுபான்மையினங்களுக்கு எதிரானவை என தமிழ் தலைவர்கள் தெரிவித்தார்கள். எதிர்த்தார்கள்.

இந்நகலை மீளப் பரிசீலிக்கும்படி அமைச்சர்களால் குடியேற்ற நாட்டுக் காரியதரிசியிடம் கோரப்பட்டது. இந்நகலைப் பரிசீலிப்பதற்குப் பதிலாக பிரித்தானிய அரசு இன்னொரு அறிவித்தலை விடுத்தது. ”1944 அறிக்கை” எனும் பெயரில் அழைக்கப்படும் இவ்வறிக்கையின் பிரகாரம் ”அமைச்சர்களின் நகலை” நடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியப்பாட்டை ஆராய்வதற்காக சோல்பரி தலைமையிலான ஆணைக்குழு அனுப்பப்பட்டது.

இதன் பிரகாரம் 1944 செப்டம்பர் மாதம் அரசியலமைப்பு சீர்திருத்தத்தைப் பரிசீலிப்பதற்கென சோல்பரி ஆணைக்குழு அமைக்கப்பட்டது. இக்குழு டிசம்பர் 22 இலங்கை வந்தது.

இந்த ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கை எந்தவிதத்திலும் பாதிக்காத வண்ணம் ஐவர் ஜென்னிங்க்ஸ் தயாரித்ததையே அமுல்படுத்தத் தான் சிங்களத் தலைவர்கள் விரும்பினர். ஆளுனரை தனிப்பட  சந்தித்து அதற்கான முயற்சிகளையும் செய்தனர்.

சோல்பரி ஆணைக்குழுவினருக்கு செய்வதற்கு பெரிதாக ஒன்றுமில்லை. “அமைச்சர்களின் நகல்” எனும் பெயரில் அழைக்கப்பட்ட ஐவர் ஜெனிங்ஸ் தயாரித்திருந்த அதே திட்டத்தையே சில மாற்றங்களுடன் தமது ஆணைக்குழுவின் சிபாரிசாக முன்வைத்தது. இறுதியில் ஜெனிங்ஸ்ஸின் “அமைச்சர்களின் நகல்” சோல்பரித் திட்டமாக 1945 ஒக்டோபர் 09இல் ஆனது.

ஜெனிங்ஸின் ஆலோசனையின் பேரிலேயே சிறுபான்மையினருக்கான காப்பீடான  29 (2) வது சரத்தும் சேர்க்கப்பட்டது.  அது இனக்குழுமங்களுக்கு மட்டுமல்ல, பல்வேறு ஒடுக்கப்படும் சாதியினருக்கும் கூட காப்பீடாக இருக்கும் என்று  ஜெனிங்ஸ் கூறினார்.  பிரித்தானிய அரசு “அயர்லாந்து சட்டத்தில்” ஏற்படுத்தியிருக்கும் 5ஆம் பிரிவுக்கு ஒப்பானது அது என்றார் அவர்.

“யாப்பு உருவாக்கத்தில் சிறுபான்மையினரின் பிரச்சினையே பிரதான சிக்கலாக இருந்தது. மற்றும்படி அனைத்தும் இலகுவாகவே இருந்தன” என்கிறார் ஜென்னிங்ஸ்.

சேர் ஒலிவர் குணதிலக்கவுடன் ஜெனிங்க்ஸ்

சோல்பரி யாப்பு உருவாக்க காலத்தில் ஒரு விடயத்தைக் குறிப்பிடுகிறார்.
“1938 Ceylon Blue Book எனது படுக்கை அறையில் இருந்தது. அதன் படி ஒரு கணக்குச் சூத்திரத்திற்குள் பிரதிநிதித்துவத்தை அடக்கிப் பார்த்தேன். 75,000 பேருக்கு ஒருவர் என்கிற ரீதியிலும், 1000 சதுர மைல்களுக்கு ஒருவர் என்கிற ரீதியிலும் பார்த்தால் (1931 தொகைமதிப்பின் படி) மக்கள் தொகையின் படி 70 ஆசனங்களும், பரப்பளவின் படி 24 ஆசனங்களும் இருந்திருக்க வேண்டும் என்பதைக் கண்டேன். ஆனால் யாழ் குடா நாடு உள்ளிட்ட வட மாகாணத்தில் நான்கு ஆசனங்கள் இருந்திருக்க வேண்டிய இடத்தில் 3 மட்டுமே இருந்தது கண்டு ஏமாற்றமண்டைந்தேன்." என்கிறார். (The Road to Temple Trees - Sir Ivor Jennings and the Constitutional Development of Ceylon: Selected Writings –H. Kumarasingham - CPA - 2015)
1953 ஆம் ஆண்டு ஜெனிங்ஸ் எழுதிய (The Ceylon historical journal சஞ்சிகையில்) 52ஆம் ஆண்டு தேர்தலில் இந்திய வம்சாவழியினரின் பிரஜாவுரிமை பறிப்பு ஏற்படுத்திய தாக்கம் குறித்து எழுதும் போது 1945இல் டொமினியன் அந்தஸ்து வழங்குவதற்கான வெள்ளையறிக்கை மீதான விவாதத்தில் மூவர் மட்டுமே எதிர்த்து வாக்களித்தனர் என்றும், தஹாநாயக்கவும் இரண்டு இந்தியப் பிரதிநிதிகளுமே அப்படி வாக்களித்தார்கள் என்கிறார். அனைவரும் ஆதரவாக வாக்களிப்பார்கள் என்று சேனநாயக்க ஆவலுடன் எதிர்பார்த்திருந்தாக ஜென்னிங்ஸ் தெரிவிக்கிறார். அதில் “இலங்கை இலங்கையர்களுக்கே” என்கிற கோஷம் அன்று எப்படி எழுந்திருந்தது என்பது குறித்தும் விபரிக்கிறார். 

ஜென்னிங்ஸால் கொணரப்பட்ட 29வது சரத்தாலேயோ, அல்லது தனது ஆலோசனையின் கீழ் செயற்பட்ட சேனநாயக்கவைக் கையாண்டோ இந்திய வம்சாவளியினரை பிரஜாவுரிமை பறிப்பிலிருந்து காக்க முடியாமல் போனது தற்செயல் என்று கடக்க முடியவில்லை.

தமிழர்களுக்கு நேர்ந்த அநீதிகளையிட்டு பிற் காலத்தில் சோல்பரி பிரபு வருந்தி கருத்து வெளியிட்டது போன்றே ஜெனிங்சும் கவலை வெளியிட்டார். இலங்கைக்கு சமஷ்டி ஆட்சியே சிறந்தது என்று அவர் கூறினார்.

தமிழர்களுக்கு அநீதி?
இலங்கையின் பூர்வீகக் குடிகளாக சிங்களவர்களுக்கு முன்னரே தமிழர்கள் இருந்திருக்கிறார்கள் என்று தனது நூலில் முன்னர் எழுதிய  ஜெனிங்ஸ்; பின்னர் நாட்டை திருப்பியளிப்பதற்கான யாப்பை வரையும் போது சிங்களவர்களிடம் ஆட்சியதிகாரத்தை வழங்கும் வகையிலேயே வரைந்தார் என்பது கவனிக்கத்தக்கது.

தமக்கு துரோகம் இழைக்கப்பட்டதாக தமிழர் தரப்பை போல சிங்களத் தரப்பும் ஜென்னிங்க்சை திட்டித் தீர்க்கும் எழுத்துக்கள் எங்கெங்கும் விரவிக் கிடக்கின்றன.

ஒரு முக்கிய அரசியல் நிலைமாறு காலகட்டத்தில்  ஜெனிங்ஸ் ஆற்றிய பாத்திரம் இலங்கை வரலாற்றில் அதி கவனத்துக்கு உள்ளாக்கப்படுகிறது. 2012ஆம் ஆண்டு மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் (CPA) வெளியிட்ட ஐந்து நூல்கள் மிகவும் முக்கியமான ஆய்வுகள்.  ஐவர்  ஜெனிங்ஸ் இன் பாத்திரம் பற்றி நிறைய விபரங்கள் அதில் வெளியிடப்பட்டுள்ளன. (“The Road to Temple Trees” Sir Ivor Jennings and the Constitutional Development of Ceylon: Selected Writings - Editor)

பிரபல சிங்கள தேசியவாதியான குணதாச அமரசேகர லேக்ஹவுஸ் சிங்களப் பத்திரிகையான  “சிலுமின” வுக்கு அளித்த பேட்டியொன்றில்.
“ஐவர் ஜென்னிங்க்ஸ் ஒரு ஏகாதிபத்தியவாதி. இந்த நாட்டில் சிறந்த அறிவாளிகளை உருவாக்குவதை அவர் செய்யவில்லை. மாறாக அரசாங்கத்துக்கு தேவையான சிவில் சேவகர்களை உருவாக்குவதையே அவர் செய்திருந்தார். இங்கிலாந்திலிருந்து வந்த ஒரு ஏஜென்ட் என்கிற வகையில் இந்த நாட்துக்குத் தேவையான கல்வியையோ சிந்தனையையோ தந்த மனிதன் அல்ல அவர்” என்கிறார்.
சர்வதேச யாப்பு நிபுணர்.
ஜெனிங்ஸ் 1955இல் இங்கிலாந்துக்கு திரும்பி விடுகிறார். அதன் பின் 10 ஆண்டுகள் 1965 இல் அவர் இறக்கும் வரை பல்வேறு நூல்களையும், பல நாடுகளுக்கான யாப்புருவாக்கத்தில் தனது பங்கையும் வழங்கி வந்தார். ஜெனிங்ஸ் உலகளவில் “யாப்பு வரைவு” துறையில் நிபுணத்துவம் பெற்றவராக திகழ்ந்து வந்தவர்.

இந்தியாவின் அரசியலமைமைப்பை உருவாக்கும் குழுவின் தலைவராக அம்பேத்கரை வரவிடாமல் செய்து ஒரு பிரிட்டிஷ்காரரான ஐவர் ஜென்னிங்சை என்பரைதான் நியமிக்க வேண்டும் என்று விரும்பினார் நேரு. ஆனால் மகாத்மா காந்தியின் தலையீட்டால் பின்னர் டாக்டர். அம்பேத்கர் நியமிக்கப்பட்டார்.

இந்திய அரசியல் யாப்பானது மிகவும் இறுக்கமானது, விரிவாக எழுதப்பட்டதால் மாற்றங்கள் செய்யக் கூடிய சாத்தியங்களை வெகுவாகக் குறைத்துவிடுகிறது என்ற குற்றச்சாட்டை ஜென்னிங்க்ஸ் முன் வைத்த போது “விரிவாக எழுதப்படாவிட்டால் அதை மிக எளிதாக அரசினால் உள்ளறுப்புச் செய்ய முடியும்” என்று அம்பேத்கர் மறுத்தது பற்றிய விவாதங்களும் காணக் கிடைகின்றன.

1959 இல் நேபாளின் அரசியலமைப்பை வரைந்தவரும் ஐவர் ஜென்னிங்க்ஸ் தான். சிங்கப்பூர், மலேசியா, மாலைதீவு, சூடான், எத்தியோப்பியா, தென்னாப்பிரிக்கா, போன்ற நாடுகளின் அரசியலமைப்பை வரைவதில் அவரது பங்களிப்பு முக்கியமானது. “பாகிஸ்தானின் அரசிலமைப்பு சிக்கல்கள்” என்கிற அவரது நூல் அங்குள்ள இனக்குழுமங்களின் பிரச்சினைகள் குறித்தும் ஆராய்கிறது. பாகிஸ்தானின் அரசியல் யாப்புருவாக்கதில் அவர் பிரதான ஆலோகராக செயற்பட்டார்.

எச்.குமாரசிங்கம் எழுதிய “யாப்பு சிற்பி” (Constitution-Maker: Selected Writings of Sir Ivor Jennings - 2014) என்கிற நூலில் மேற்படி நாடுகளில் யாப்புருவாக்கத்தின் போதான அனுபவங்கள் பற்றிய கட்டுரைகள் தொகுக்கப்பட்டுள்ளன.

பிற்காலத்தில் அவர் எழுதிய நூல்கள் இன்றும் சட்டம், அரசறிவியல் கற்போர் கையாளும் முக்கிய நூல்களாக திகழ்கின்றன.

தனது இறுதிக் காலத்தில் தான் கற்ற அதே பிரசித்தி பெற்ற கேம்பிரிஜ் பல்கலைக்கழகத்தின் உபவேந்தராகவும் 1961-1963 காலப்பகுதியில் கடமையாற்றினார். அவரது சேவைக்காக மகாராணி விருதுகளும்  (knight) பெற்றுக்கொண்டவர்.

இலங்கையின்  உயர்கல்வியில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியதில் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் தோற்றம் பெரும் பங்கு வகிக்கிறது. ஜெனிங்ஸ் நினைவாக பிரதான மண்டபத்துக்கு அவரது பெயரே வைக்கப்பட்டிருக்கிறது. 1965ஆம் ஆண்டு அவர் தனது 62வது வயதில் புற்றுநோயால் இறந்து போனார் ஜெனிங்ஸ்.


ஜென்னிங்க்ஸ் எழுதிய நூல்களில் சில
  • கட்சி அரசியல் (மூன்று பாகங்கள்) (Party Politics 1960-62)
  • “பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தின் அரசியல் யாப்புகள்” (Constitutional Laws of the British Empire 1938),
  • “பொதுநலவாய நாடுகளின் அரசியல் யாப்புகள்” (Constitutional Laws of the Commonwealth -1957)
  • “பாராளுமன்றம்” (Parliament -1939)
  • “மேற்கு ஐரோப்பாவுக்கான கூட்டாட்சி” (A Federation for Western Europe -1940)
  • “சட்டமும் யாப்பும்” (The Law and the Constitution - 5th Edition1959)
  • “உள்ளூராட்சி சட்டங்களின் அடிப்படைகள்” (Principles of Local Government Law 4th Edition -1960)
  • “பிரித்தானிய பொதுநலவாய தேசங்கள்” (The British Commonwealth of Nations - 4th Revised Edition -1963)
  • “இங்கிலாந்து அரசியலமைப்பு” (The British Constitution - 5th Edition - 1966)
  • “பேராதனைக்கான பாதை” (The road to Peradeniya), “கண்டி வீதி” (The Kandy road) ஆகிய முற்றுபெறாத நிலையில் இருந்த அவரது சுயசரிதை நூலை மிகச் சமீபத்தில் தான் H.A.I. குணதிலக என்பவரால் மீள தொகுக்கப்பட்டு வெளியிடப்பட்டது.


Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates