99 வருடகால நம்பிக்கை துரோகத்தின் வரலாறு – 19
“இலங்கை என்பது ஒரு நாடல்ல, பல அரசுகளை உள்ளடக்கிய தீவு. இவ்வரசுகளை ஒன்று என்று கூறுவானானால் அவர் ஒரு பொறுப்பற்ற கற்பனைவாதி”
என்று குறிப்பிட்டது வேறு யாருமல்ல சாட்சாத் பண்டாரநாயக்கா தான். 1926ஆம் ஆண்டு நீதியரசர் ஐசக் தம்பையா தலைமையில் யாழ்ப்பாணத்தில் நடந்த கூட்டத்தில் அவர் அப்படி குறிப்பிட்டார். சரியாக 50 வருடங்களில் அவரது துணைவியாரின் ஆட்சியின் போது அதன் தெளிவான வடிவம் “தனித் தமிழ் ஈழ” பிரகடமாக அறிவிக்க வேண்டி இருந்தது.
"வட்டுக்கோட்டைப் பிரகடனம்" அந்த 50 ஆண்டு காலத்துக்குள் ஏற்படுத்திய விரக்தியின் விளைவு. அது ஒரு திடீர் தீர்மானமுமல்ல. எல்லை கடந்த பொறுமையின் விளைவு. தாங்கொணா வடுக்களின் நீட்சியின் வினை.
இலங்கையின் தமிழர் அரசியலில் வரலாற்றுச் சிறப்பு மிக்க பிரகடனம்; “வட்டுக்கோட்டைத் தீர்மானம்”. ஒரு பெரும் திருப்புமுனைக் கூட ஏற்படுத்திய தீர்மானங்கள் அவை.
சோஷலிச தமிழ் ஈழப் பிரகடனத்தை பகிரங்கமாக அனைத்துத் தலைவர்களும் ஏகித்து பிரகடப்படுத்திய நாள் அது.
அகிம்சை வழியில் நீதி கோரிய போதெல்லாம் நம்பிக்கைத் துரோகங்களாலும், ஒப்பந்த முறிவுகளாலும், அரப் போராட்டங்களின் மீதான அடக்குமுறைககளாலும், கலவரப் படுகொலைகளாலும் பதில் சொன்ன இலங்கை அரசுக்கு “எங்கள் தலைவிதியை இனி நாங்கள் தீர்மானித்துக் கொள்கிறோம்” என்று பிரகடனம் செய்த நாள் அது.
1976 மே 13,14 ஆம் திகதிகளில் தமிழர் கூட்டணியிலுள்ள தலைவர்களின் தலைமையில் பண்ணாகத்தில் கூடிய மாநாட்டில் தமிழ் ஐக்கிய முன்னணி என்கிற பெயரை தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி (TULF - Tamil United Liberation Front) என்று பெயர் மாற்றம் செய்துகொண்டனர். ஆக தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் முதலாவது தேசிய மாநாடு அது.
கூட்டணியின் முப்பெரும் தலைவர்களாக எஸ்.ஜே.வி.செல்வநாயகம், ஜி.ஜி.பொன்னம்பலம், எஸ்.தொண்டமான் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். அ.அமிர்தலிங்கம் அதன் செயலாளராக அறிவிக்கப்பட்டார்.
இழந்த தேசத்தை மீட்டல்
அமிர்தலிங்கம் பிறந்த ஊரான வட்டுக்கோட்டையில் நிகழ்ந்த இந்த மாநாடு உணர்ச்சி மிகுந்த மாநாடாக அமைந்தது. கலந்துகொண்ட பெருந்தொகையான வாலிபர்களின் “தமிழீழம் வாழ்க” என்றும், தமிழீழத்தை பிரகடனம் செய்யுங்கள் என்கிற வானைப் பிளக்கும் கோஷத்துடன் நிகழ்ந்தது. இளைஞர்களின் நிர்ப்பந்தத்தால் ஏற்கெனவே நெருக்கடிக்குள்ளாகியிருந்த கூட்டணி இதற்கு மேலும் அவர்களின் அபிலாஷைகளை புறந்தள்ள முடியாது என்கிற நிலைக்கு வந்தடைந்திருந்தது.
ஐக்கிய இலங்கைக்குள் தமிழர்கள் தன்மானத்துடனும் பாதுகாப்புடனும் வாழ்வதற்கான சுயாட்சி அரசொன்றை அமைப்பதற்கு சிங்கள மக்களின் ஒத்துழைப்பைப் பெறுவதற்கு தமிழரசுக் கட்சியும் அதன் பின் தமிழர் கூட்டணியும் எடுத்த முயற்சிகள் யாவும் தோற்று விட்டதை எடுத்துக் கூறினார். எமக்கென தனி நாடு கூறுவதைத் தவிர எமக்கு வேறு வழியில்லை என்றார். அதனைத் தொடர்ந்து அந்த வட்டுக்கோட்டை பிரகடனத்தை முன்மொழிந்தார். மு. சிவசிதம்பரம் அத் தீர்மானத்தை வழிமொழிந்தார்.
அமிர்தலிங்கத்தின் உரையில்
“சங்கிலி மன்னனை போரால் தோற்கடித்ததன் மூலம் தமிழ் மண்ணை ஆளும் அதிகாரத்தையும், இறைமையையும் போர்த்துக்கேயர் பெற்றனர். அவ்வாட்சி அதிகாரமும் இறமையும் போத்துக்கேயரிடமிருந்து, ஒல்லாந்தரும் அதன் பின் பிரித்தானியருக்கும் சென்றன. பிரித்தானியர் இலங்கைக்கு சுதந்திரம் வழங்கிய போது அந்த ஆட்சி அதிகாரமும் இறைமையும் தமிழ் மக்களுக்கு அளிக்கப்பட்டிருக்க வேண்டும். பிரித்தாநியைர் அதனை செய்யவில்லை. சிறுபான்மை மக்களுக்கு பாதகமான சட்டங்கள் இயற்றப்படலாகாது என்கிற உத்தரவாதத்துடன் சிங்களவரிடம் அதிகாரத்தை ஒப்படைத்தனர். சிங்களவர்கள் ஆட்சி அதிகாரத்தை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தி தமிழ் மக்களை இரண்டாம் தரப் பிரஜைகளாக்கினர். தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளுக்குக்கூட எந்த அரசாங்கமும் செவிசாய்க்கவில்லை. அதனால் இழந்த இறைமையைத் திரும்பப் பெறுவதற்கு போராடுவதைத் தவிர வேறு எந்த வழியும் தமிழ் மக்களுக்கு இல்லை” என்றார்.
தமிழீழம் பற்றிய வரையறையும் முதற் தடவை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இந்த வட்டுக்கோட்டைத் தீர்மானம் அன்றைய தமிழ் இளைஞர்களின் விடுதலை வேட்கைக்கு போராட்ட வடிவத்தை கொடுத்தது. விரைவில் வரவிருக்கும் பொதுத் தேர்தலில் ஏற்படுத்தப் போகும் மக்கள் தீர்ப்புக்கு முத்தாய்ப்பு வைக்கப்பட்டது. ஒரு வகையில் ஒரு போருக்கான மறைமுக அறைகூவல் என்று கூட கூறலாம். அது தான் நிகழ்ந்ததும்.
இந்த மாநாட்டுக்கு கிட்டிய காலப்பகுதியில் இரண்டு முக்கிய நிகழ்வுகளையும் இத்தோடு தொடர்புபடுத்த வேண்டியிருக்கிறது. புத்தூரில் மக்கள் வங்கிக் கிளை கொள்ளயடிக்கப்பட்டமை, 'தமிழ் புதிய புலிகள்' என்ற ஆயுதம் தாங்கிய தமிழ் இளைஞர்களின் இயக்கம் தன்னை 'தமிழீழ விடுதலைப் புலிகள்' என்று பெயர் மாற்றிக் கொண்டமை என்பனவும் மாநாட்டுக்கு ஒரு சில நாட்களுக்கு முன்னர் தான் நிகழ்ந்தன.
தொண்டமானின் விலகல்
வட்டுக்கோட்டை தமிழீழப் பிரகடனம் இலங்கை தொழிலாளர் காங்கிரசுக்குத் தர்மசங்கட நிலைமையை ஏற்படுத்தியிருந்தது. இ.தொ.காவின் அங்கத்தவர்களான மலையக மக்கள் வாழும் மலையகம் தமிழீழத்தின் ஒரு பகுதியல்ல. அத்துடன் தமிழீழத்துக்காக நடத்தப்படும் போராட்டம் மலையக மக்கள் மீது சிங்கள மக்களின் ஆத்திரத்தைத் தூண்டிவிடும். இவற்றையெல்லாம் கவனத்தில் எடுத்த இ.தொ.கா கூட்டணியிலிருந்து வெளியேற முடிவு செய்தார். தமிழீழத்தை உருவாக்குவதன் மூலம் தோட்டங்களில் வேலை செய்யும் எமது மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது. அது எமது மக்களின் நிலைமையை சிக்கலானதாக்கிவிடும் என்று ஊடகங்களுக்கு தொண்டமான் விளக்கினார்.
தமது நிலைப்பாட்டை விளக்கி அதன் செயலாளர் செல்லச்சாமி கூட்டணியின் செயலாளர் அமிர்தலிங்கத்துக்கு மே.21 எழுதிய கடித்ததில் கூட்டணியிலிருந்து விலகும் அறிவித்தலையும், கூட்டணியில் தொண்டமான் தொடர்ந்தும் தலைவராக இருக்க முடியாததன் காரணத்தையும் குறிப்பிட்டிருந்தார்.
மலையகத்தைப் பொறுத்தவரை அரசுடன் அண்டியே அரசியல் இருப்பை சரிசெய்ய வேண்டியிருந்தது உண்மை. ஆனால் இ.தொ.காவின் நிலைப்பாட்டையும், விலகளையும் ஒரு துரோக நடவடிக்கையாக சில விஷமிகள் பிரச்சாரப்படுத்திக் கொண்டே இருந்தார்கள். அதன் பின் வந்த ஜே.ஆர். அரசாங்கத்தில் தொண்டமான் அமைச்சு பதவி ஏற்றுக்கொண்டமையை இந்த பிரசாரத்துக்கு சாதகமாக்கிக் கொண்டார்கள்.
ஆனால் கூட்டணியின் தொடர் நடவடிக்கைகளுக்கு தாம் இணைந்து செயல்படுவோம் என்று செல்லச்சாமி தனது கடிதத்தில் குறிப்பிட்டிருந்ததுடன் அந்த வாக்குறுதிப்படி தொண்டமான் நடந்து கொண்டார். பல விடயங்களில் கூட்டணியை கலந்தாலோசித்தே தனது நடவடிக்கைகளை எடுத்தார்.
இனவாதிகளுக்கு இன்றும் கிலி
வடக்கு முதலமைச்சர் சி.வீ.விக்னேஸ்வரனின் தலைமையில் வட்டுக்கோட்டைப் பிரகடனத்தை அரசியல் அரங்குக்கு மீண்டும் கொண்டுவர முயற்சிகள் நடந்து வருவதாக சென்ற வருடம் பிரபல சிங்களப் பத்திரிகையான திவயின தொடர்ச்சியாக செய்திகளையும், கட்டுரையும் வெளியிட்டுவந்தது. (29.04.2014 கட்டுரை, 17.01.2016 செய்தி) வட்டுக்கோட்டைப் பிரகடனம் போன்ற ஒன்று திரும்பியும் வரவிடாமல் முளையிலேயே கிள்ளியெறிவதற்கான முன்னெச்சரிக்கை பிரச்சாரங்கள் நெடுகிலும் தான் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை “பயங்கரவாத தீர்மானமாக” எப்போதும் சிங்கள மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்து நிறுவி வந்த இனவாத சக்திகள் வட்டுக்கோட்டையை “வட்டுக்கோட்டை” என்று கூட அவர்களின் பல நூல்களில் விழிப்பதில்லை. "பட்டகோட்டே" (Batakotte, බටකෝට්ටෙ) என்று தான் அவர்கள் விழிக்கிறார்கள். அப்படி இருந்த சிங்களப் பிரதேசம் தான் இப்போது தமிழ் ஆக்கிரமிப்பாளர்கள் தமிழ்படுத்தி “வட்டுக்கோட்டை” என்று வைத்திருக்கிறார்களாம். இந்த பெயர் பற்றி பல விவாதங்கள் பல இணையத்தளங்களில் மேற்கொள்ளப்பட்டு வருவதை நீங்கள் கணாலாம்.
மகிந்தபால என்கிற பிரபல சிங்கள அரசியல் ஆய்வாளரை ஒருவரை ஆதாரம் காட்டி ரியல் அட்மிரல் கலாநிதி சரத் விஜேசேகர “நாட்டை தீயிட்ட வெள்ளாள அதிகாரத் தாகம்” (2017 இல் ஐ.நா. மனித உருமைகள் கவுன்சிலில் தமிழர்களுக்கு எதிராக உரையாற்றிவிட்டு அறிக்கை சமர்ப்பித்து வந்தவர்) என்கிற தலைப்பில் எழுதிய ஒரு கட்டுரையில் “சிங்களவர்களை அழிப்பதற்கென்று தயார்படுத்தப்பட்ட ‘வட்டுக்கோட்டை பொடியன்கள்’ மறுபுறம் திரும்பி வட்டுக்கோட்டை தீர்மானத்தை தோற்றுவித்த வெள்ளாளத் தலைவர்களை அளித்துத் தள்ளினார்கள்” என்கிறார். “வட்டுக்கோட்டை பிரகடனம்” என்கிற வாக்கியம் அன்று மட்டுமல்ல இன்று வரை சிங்களத் தலைவர்களினதும்,. இனவாதிகளினதும் வயிற்றில் புளியைக் கரைத்துக் கொண்டிருக்கும் தீராப் பயம் என்பதை இன்று வரை அவர்கள் அதற்கு கொடுத்து வரும் முக்கியத்துவத்திலிருந்து அறிந்து கொள்ளலாம்.
எஸ்.ஜே.வி செல்வநாயகம் இறப்பதற்கு ஒரு சில மாதங்களுக்கு முன்னர் இலண்டன் பி.பி.சிற்கு பேட்டியளித்த போது 'நாங்கள் ஒரு தமிழ் 'ஜின்னா'வை உருவாக்கத் தவறிவிட்டோம்' (“We had failed to produce a Tamil Jinnah at the time”) என்றார். சுதந்திரம் கிடைப்பதற்கு முன்னரே சிங்களத் தலைமையில் எமக்கு நம்பிக்கை கிடையாது என்று ஆங்கிலேயர்களிடம் எடுத்துச் சொல்லி எமது பிரதேசத்துக்கான விடுவித்துக் கொள்வதில் அன்றே உறுதியாக இருந்திருக்கலாம் என்பதே அந்த வார்த்தையின் சாராம்சம்.
வரலாற்று சிறப்புமிக்க வட்டுக்கோட்டைத் தீர்மானமானது அதன் பின்னர் “தாயகம்”, “தமிழ்த் தேசியம்”, “சுயநிர்ணய உரிமை”, “தன்னாட்சி” போன்ற கோரிக்கைகளுக்கும், கருத்துருவாக்கத்திற்கும் பாதையை திறந்து விட்டது. ஆயுதப் போராட்டத்திற்கான கருத்துக் களத்தை ஸ்தூலமாக விதைத்தது.
துரோகங்கள் தொடரும்...
வட்டுக்கோட்டைத் தீர்மானம்!தவிசாளர் எஸ். ஐே. வி. செல்வநாயகம், கியுசி, பா.உ (காங்கேசன்துறை)
1976 மே 14ஆந் தேதியன்று (வட்டுக்கோட்டைத் தொகுதியிலுள்ள) பண்ணாகத்தில் கூடுகின்ற தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் முதலாவது தேசிய மாநாடு,
இலங்கைத் தமிழர்கள் தங்களின் தொன்மைவாய்ந்த மொழியினாலும் மதங்களினாலும் வேறான கலாசாரம், பாரம்பரியம் ஆகியவற்றினாலும் ஐரோப்பிய படையெடுப்பாளர்களின் ஆயுதப்பலத்தினால் அவர்கள் வெற்றி கொள்ளப்படும் வரை பல நூற்றாண்டுகளாக ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தில் தனிவேறான அரசாகச் சுதந்திரமாக இயங்கிய வரலாற்றின் காரணமாகவும் எல்லாவற்றுக்கும் மேலாக தமது சொந்தப் பிரதேசத்தில் ஒரு தனி நாட்டினமாக வாழ்ந்து தம்மைத் தாமே ஆளும் உலவுருதியாலும், இலங்கை வாழ் தமிழ் மக்கள் சிங்களவரில் இருந்து வேறுபட்ட ஒரு தனிநாட்டினம் என்று இதனால் பிரகடனப்படுத்துகிறது.
1972இன் குடியரசு அரசியலமைப்பு தமிழ் மக்களைப் நவ காலனித்துவ எஜமானர்களான சிங்களவர்களால் ஆளப்படும் ஒர் அடிமைத் தேசிய இனமாக ஆக்கியுள்ளதென்றும் தமிழ்த் தேசிய இனத்தின் ஆட்சிப்பிரதேசம், மொழி, பிரசாவுரிமை, பொருளாதார வாழ்க்கை, தொழில் மற்றும் கல்வி வாய்ப்புக்கள் ஆகியவற்றை இழக்கச்செய்வதற்கு சிங்களவர்கள் தாம் முறைகேடாகப் பறித்துக் கொண்ட அதிகாரத்தைப் பயன்படுத்துகின்றனரென்றும் அதன்மூலம் தமிழ் மக்களின் தேசியத்திற்கான இயற்பண்புகள் யாவும் அழிக்கப்படுகின்றனவென்றும் இம்மாநாடு உலகுக்கு அறிவிக்கின்றது.
மேலும் தமிழ் ஈழம் என்ற தனிவேறான அரசொன்றைத் தாபிப்பதற்கான அதன் ஈடுபாட்டுக்கடப்பாடு தொடர்பில், வடக்கு மற்றும் கிழக்குப் பிரதேசங்களுக்கு வெளியே வாழ்கின்றவர்களும் வேலை செய்கின்றவர்களுமான பெரும்பான்மையான பெருந்தோட்டத் தொழிலாளர்களின் ஒரு தொழிற்சங்கமான இலங்கைத் தொழிலாளர்காங்கிரஸ் வெளிப்படுத்திய அதன் ஒவ்வாமைகளைக் கருத்தில் கொள்கின்ற அதேவேளையில்,
ஒவ்வொரு தேசிய இனத்தினதும் உள்ளியல்பான சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் சுதந்திரமான, இறைமைபொருந்திய, சமயச்சார்பற்ற, சமதர்மத் தமிழீழ அரசை மீட்டளித்தலும் மீள உருவாக்குதலும் இந்நாட்டில் தமிழ்த் தேசிய இனம் உளதாயிருத்தலைப் பாதுகாக்கும் பொருட்டுத் தவிர்க்க முடியாததாகியுள்ளதென இம்மாநாடு தீர்மானிக்கின்றது. இம்மாநாடு மேலும் பிரகடனப்படுத்துவதாவது:
மேலும் இம்மாநாடு, சுதந்திரத்திற்கான இப்புனிதப்போரில் தம்மை முழுமையாக அர்ப்பணிக்க முன்வரும்படியும் இறைமையுள்ள தமிழ் ஈழ அரசென்ற இலக்கு எட்டப்படும்வரை அஞ்சாது போரிடும் படியும் பொதுவில் தமிழ்த் தேசிய இனத்துக்கும் குறிப்பாக தமிழ் இளைஞர்களுக்கும் அறைகூவல் விடுக்கின்றது.
- தமிழ் ஈழ அரசு வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலுள்ள மக்களைக் கொண்டதாக இருக்கவேண்டுமென்பதுடன் இலங்கையின் எந்தப்பகுதியிலும் வசிக்கின்ற தமிழ் பேசுகின்ற மக்களுக்கும் தமிழ் ஈழத்தின் பிரசாவுரிமையை விரும்பித்தெரிகின்ற உலகின் எப்பகுதியிலும் வசிக்கின்ற ஈழ வம்சாவழித் தமிழர்களுக்கும் முழுமையான, சமமான பிரசாவுரிமைகளை உறுதிப்படுத்தவும் வேண்டும். தமிழ் ஈழத்தின் ஏதேனும் சமயத்தைச் சேர்ந்த அல்லது ஆட்சிப்பிரதேசத்தைச் சேர்ந்த சமூகமொன்று வேறு ஏதேனும் பிரிவினரின் மேலாதிக்கத்திற்குட்படாதிருத்தலை உறுதிப்படுத்தும் பொருட்டு தமிழ் ஈழத்தின் அரசியலமைப்பு சனநாயகப் பன்முகப்படுத்தற்கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டிருக்கவேண்டும்.
- தமிழ் ஈழ அரசில் சாதி ஒழிக்கப்படவேண்டுமென்பதுடன், பிறப்பின் அடிப்படையில் பின்பற்றப்படும் பெருங்கேடான பழக்கமான தீண்டாமை அல்லது ஏற்றத்தாழ்வு முற்றாக ஒழித்துக் கட்டப்படவும் எவ்வகையிலேனும் அதனைக் கடைப்பிடித்தல் சட்டத்தால் தண்டிக்கப்படவும் வேண்டும்.
- தமிழ் ஈழம் அவ்வரசிலுள்ள மக்கள் சார்ந்திருக்கக்கூடிய எல்லாச்சமயங்களுக்கும் சமமான பாதுகாப்பும் உதவியும் வழங்குகின்ற சமயச்சார்பற்ற ஓர் அரசாக இருக்க வேண்டும்.
- தமிழ் அரச மொழியாக இருக்க வேண்டும் எனினும் தமிழ் ஈழத்தில் சிங்களம் பேசுகின்ற சிறுபான்மைகள் அவர்களின் மொழியில் கல்வியையும் அலுவல்களையும் தொடர்வதற்கான உரிமைகள் சிங்கள அரசிலுள்ள தமிழ் பேசும் சிறுபான்மைகள் பாதுகாக்கப்படும் சரி எதிரிடையான அடிப்படையில் பாதுகாக்கப்பட வேண்டும்.
- தமிழ் ஈழத்தில் மனிதனால் மனிதன் சுரண்டப்படுதல் தடை செய்யப்படும். உழைப்பின் மகத்துவம் பாதுகாக்கப்படும். சட்டத்தினால் அனுமதிக்கப்படும் எல்லைகளுக்குள் தனியார் துறையின் இருப்புக்கு அனுமதி வழங்கப்படுகின்ற அதே வேளையில், பண்டங்களின் உற்பத்தி மற்றும் விநியோகம் என்பன அரச உரிமையின் கீழ் அல்லது அரச கட்டுப்பாட்டுடன் மேற்கொள்ளப்படும். பொருளாதார அபிவிருத்தி சோசலிசத் திட்டமொன்றின் அடிப்படையில் ஏற்படுத்தப்படும். ஒரு தனிநபரின் அல்லது குடும்பத்தின் செல்வம் தொடர்பில் உச்சவரம்பு விதிக்கப்படும். இவ்வகையில் தமிழ் ஈழம் ஒரு சமதர்ம அரசாக இருக்க வேண்டும்.
- தமிழ் தேசிய இனத்தின் இறைமையையும் சுதந்திரத்தையும் வென்றெடுப்பதற்கான போராட்டத்திற்கான செயல்திட்டமொன்றை மிதமிஞ்சிய தாமதமின்றி வகுத்தமைத்து அதனைத் தொடங்கவேண்டுமென தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் செயற்குழுவை இம்மாநாடு பணிக்கின்றது.
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...