99 வருடகால நம்பிக்கை துரோகத்தின் வரலாறு – 17
இலங்கையின் இனப்பிரச்சினையில் 1974 ஆம் ஆண்டு ஒரு முக்கிய திருப்பம். ஆயுதப் போராட்டத்துக்கு நேரடியாக உந்தப்படுவதற்கான உடனடிக் காரணிகள் உருவான ஆண்டு அது. தமிழாராய்ச்சி மாநாட்டு குழப்பங்கள் அதிரடியாக ஆயுத முனைப்புக்கு தள்ளியது.
“1974 ஜனவரி 10ம் தேதிச்சோகம் தமிழ்த்தேசிய தீவிரவாதத்தினை மீளமுடியாத எல்லைக்கு இட்டுச் சென்றது. அப்பொழுது இளைஞர் உரையாடுவதும் உடன்படிக்கையும் சிங்கள பௌத்தமயமான அரசுகளுடன் வீண் என்றும் பயன் எதுவும் அளிக்கப்போவதில்லை என்றும் உணர்ந்தார்கள்.” என்றார் பேராசிரியர் ஏ. ஜே. வில்சன்
1974 ஆம் ஆண்டு தை மாதம் 3 இலிருந்து தை மாதம் 10 ம் திகதி வரை யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.
தமிழாராய்ச்சிகளுக்கு ஊக்கமளிக்கும் நோக்குடன் வண பிதா சேவியர் தனிநாயகம் அடிகளால் தோற்றுவிக்கப்பட்ட உலகத் தமிழாராய்ச்சி மன்றத்தின் முதலாவது தமிழாராய்ச்சி மாநாடு 1966இல் மலேசியாவின் கோலாலம்பூரில் இடம்பெற்றது. அன்றைய மலேசியப் பிரதமர் துங்க்கு அப்துல் ரஹ்மான் ஆரம்பித்து வைத்த மாநாட்டுக்கு பல நாடுகளிலிருந்தும் தமிழ் ஆய்வாளர்களும், ஆர்வலர்களும் கலந்துகொண்டனர். இரண்டாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு 1968ஆம் ஆண்டு ஜனவரியில் மெட்ராசில் (சென்னை), இந்தியாவில் நிகழ்ந்தது. அன்றைய இந்திய குடியரசுத் தலைவர் ஸாகிர் ஹுசைனினால் அது ஆரம்பித்து வைக்கப்பட்டது. மூன்றாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு 1970இல் பிரான்சின் தலைநகர் பாரிஸ் நகரத்தில் இடம்பெற்றது. அதனை யுனெஸ்கோவின் தலைவர் டாக்டர் மல்கம் ஆதிசேஷையா ஆரம்பித்து வைத்தார்.
குழப்ப முயற்சி
இந்தப் பின்னணியில் இலங்கையில் நிகழவிருந்த மாநாட்டுக்கான ஏற்பாடுகள் பற்றிய கூட்டமொன்று கொழும்பில் நடத்தப்பட்டது. சிறிமா அரசாங்கத்தின் ஒரேயொரு தமிழ் அமைச்சரான அமைச்சர் குமாரசூரியரின் ஆதரவாளர்கள் முதல் மூன்று மாநாட்டிலும் கடைப்பிடிக்கப்பட்ட நடைமுறை இலங்கை மாநாட்டிலும் கடைபிடிக்க வேண்டும் என்று அந்தக் கூட்டத்தில் வலியுறுத்தினர். அதாவது இலங்கையின் தலைநகர் கொழும்பில், பிரதமர் சிறிமா பண்டாரநாயக்கவின் அங்குரார்ப்பணத்துடன் அது நிகழவேண்டும் என்றனர். பிரதமர் சிறிமாவோ தமிழ் மக்கள் மத்தியில் இழந்துவந்த செல்வாக்கை சரிசெய்ய இதனைப் பயன்படுத்திக்கொள்ள முயன்றார். மாநாட்டுக்காக கொழும்பில் உள்ள பண்டாரநாயக்க சரவதேச மாநாட்டு மண்டபத்தை இலவசமாக வழங்கவும், மாநாட்டுக்கான ஒத்தாசைகளை வழங்கவும் தயாரென்று ஏற்பாட்டுக்குழுவுக்கு அறிவித்திருந்தார்.
ஆனால் அந்தக் கூட்டத்தில் சமூகமளித்திருந்த பெரும்பாலானோர் விரும்பவில்லை. தமிழ் மக்களின் கடும் எதிர்ப்பையும் அதிருப்தியையும் எதிர்கொண்டிருக்கும் பிரதமர் சிறிமா கலந்துகொள்வதன் மூலம் அரசியல் சாயம் பூசப்பட்டுவிடும் என்றும் தமிழ் மக்கள் செய்வாக உள்ள யாப்பாணத்தில் நடத்துமாறும் கோரினர். இதனால் கோபம்கொண்ட எச்.டபிள்யு தம்பையா மாநாட்டு ஏற்பாட்டு தலைவர் பதவியிலிருந்து இராஜினாமா செய்தார்.
அரசாங்கத்துக்கு ஆதரவான பலரும் அதிலிருந்து வெளியேறினர். அந்த வெற்றிடங்களை நிரப்பியவர்கள் பலர் தமிழரசுக் கட்சியின் ஆதரவாளர்களாகத் தான் இருந்தனர். அக்கூட்டத்தில் பேராசிரியர் சு,வித்தியானந்தன் தலைவராகவும், ரி.துரைராஜா செயலாளராகவும், கோபாலப்பிள்ளை மகாதேவா பொருளாளராகவும் தெரிவுசெய்யப்பட்டனர்.
ஏனைய மாநாடுகள் தலைநகர்களில் நடந்ததாக இருந்தால் இந்த மாநாடும் தமிழர் தலைநகராக அதுவரை பேசப்பட்ட திருகோணமலையில் நடத்தியிருக்க வேண்டும் என்கிற குரலும் எழாமலில்லை.
குமாரசூரியரும் அவரின் ஆதரவாளர்களும் அந்த மாநாடு தமிழரசுக் கட்சியின் விழா என்று பிரச்சாரம் செய்தனர். அது அரரசாங்க விரோத சக்திகளின் நடவடிக்கை என்றும் கூறினர். இதற்கு எந்தெந்த வகையில் முட்டுக்கட்டை போடலாமோ அந்தளவு இடையூறுகளை செய்துகொண்டிருந்தனர். மாநாடு பற்றி பொது மக்களுக்கு அறிவிப்பதற்காக ஒலிபெருக்கி பாவனைக்கான அனுமதியை கொடுக்க பொலிசாரும் மறுத்தனர்.
மகாநாட்டுக்கு வரவிருந்த பல வெளிநாட்டு பேராளர்களின் விசா மறுக்கப்பட்டன. விசாவின்றி வந்தார்கள் என்கிற குற்றச்சாட்டில் வந்து இறங்கிய நான்கு பேராளர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து நாடு கடத்தப்பட்டார்கள். அவர்கள் தத்தமது நாடுகளில் அந்த அநீதி குறித்து ஊடகங்களுக்கு விளக்கினார்கள். அமைப்பாளர் குழுவில் இருந்த கொ.கமாதேவா, மறவன்புலவு க.சச்சிதானந்தம் ஆகியோர் அரசாங்கத்தினரை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தியபின்னர் தான், அதுவும் சிலருக்கு மாத்திரமே மட்டுப்படுத்தப்பட்ட அளவில் விசா வழங்கியிருந்தது.
மாநாட்டை நடத்துவதற்காக வீரசிங்கம் மண்டபமும், திறந்தவெளி அரங்கத்தையும் உபயோகிப்பதற்கு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தபோதும் குமாரசூரியரின் தலையீட்டால் அதற்கான அனுமதி வழங்கப்படுவது இழுத்தடிக்கப்பட்டு வந்தது. மாநாட்டுக்கு மூன்று நாட்களுக்கு முன்பு தான் அந்த அனுமதி கிடைத்தது. தொடர்பு ஊடகங்களான பத்திரிகைகளும், வானொலியும் மாநாடு நடைபெறாது எனும் ஐயப்பாட்டையே தோற்றுவிக்கத் தலைப்பட்டன.
உத்தியோகபூர்வமான அனுமதி கிடைக்கப்பட்டதன் பின்னர் தான் வேகமாக ஏற்பாடுகள் நடந்தன. யாழ் நகரையே விழாக்கோலம் பூணும்வகையில் ஒழுங்குகளை மக்கள் முன்னின்று அழகுபடுத்தினார்கள். அரசாங்கத்தின் எந்த உதவியும், ஆதரவுமின்றி வெற்றிகரமாக ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
ஒரு வகையில் இந்த மாநாட்டுக்கு கொடுக்கப்பட்ட நெருக்கடிகள் தமிழ் உணர்வாளர்களின் ஓர்மத்தை சீண்டிப்பார்ப்பதாவே அமைந்தது. இதனை வெற்றிகரமாக நடத்தி முடிக்க அவர்கள் பெரும் சிரத்தை எடுத்துக்கொண்டார்கள்.
எழுச்சிமிக்க உணர்வுபூர்வமான மாநாடு
முன்னைய மாநாடுகளில் கடைபிடிக்கப்பட்டதைப் போல இதன் அங்குரார்ப்பனத்திற்கும் பிரதமரை அழைத்திருக்கலாம். ஆனால் அந்த அழைப்புக்கு முன்னரே பிரதமர் பாதுகாப்பு காரணங்களைக் காட்டி மறுத்துவிட்டார். இப்படியான சந்தர்ப்பங்களில் அந்த பகுதி மேயர் அந்த தகுதியைப் பெறுவார். யாழ்ப்பாணத்தில் மேயராக இருந்த அல்பிரட் துரையப்பாவும் ஆளுங்கட்சி ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்தவராக இருந்ததால் அவரை அழைப்பதையும் தவிர்த்தனர். அவரை சம்பிரதாயத்துக்குக் கூட அழைப்பதை தவிர்த்தனர். அதற்குப் பதிலாக வன பிதா தனிநாயகம் அடிகளாரே 1974 ஜனவரி 3ஆம் திகதி ஆரம்பித்து வைத்தார். எழுச்சியுடனும் மகிழ்ச்சியுடனும் தொடங்கியது.
ஜனவரி மாதம் 10ஆம் திகதி வெளிநாடுகளில் இருந்து கலந்துகொண்ட அறிஞர்களை வழியனுப்பும் நிகழ்வாக ஒழுங்கு செய்யப்பட்டது. பெருமளவானோர் பேச எற்பாடாகியிருந்ததால் வீரசிங்கம் மண்டபம் அதற்கு போதவில்லை. எனவே அந்த நிகழ்வினை, வீரசிங்கம் மண்டபத்துக்கு வெளியில், திறந்தவெளி நிகழ்வாக நடத்தினர். இதற்கான அனுமதியை பொலிசார் வழங்கியிருந்தபோதும் சட்டவிரோதமாக வந்த ஜனார்த்தனன் நிகழ்வில் பேசமுடியாது என்ற நிபந்தனை இருந்தது.
ஆனால் அன்றைய தினம் மைதானம் திறந்திருந்த போதும் புறப்படலைகள் பூட்டப்பட்டிருந்தன. மாநகர முதல்வரிடமிருந்து கடிதம் வாங்கி வந்தால் மாத்திரமே அதனை திறக்க முடியும் என்று வெளியரங்க காப்பாளர் திறக்க மறுத்துவிட்டார். மாநகர முதல்வர் அல்பிரட் துறையாப்பாவை கண்டுடிக்கவும் முடியவில்லை. எனவே வீரசிங்கம் மண்டபத்தின் முன்னால் ஒரு திடீர் மேடை போடப்பட்டது.
விழா ஆரம்பமாகியது ஏறத்தாழ 50,000 பேரளவில் வீதியெங்கும் அமர்ந்து இருந்தனர். அப்போது போக்குவரத்து கட்டுப்பாட்டு பொலிஸ் இன்ஸ்பெக்டர் சேனாதிராஜா தன் மோட்டார் சைக்கிளில் கூட்டத்துக்கும் மேடைக்கும் நடுவில் போக முயன்ற போது ஏற்பாட்டுத் தொண்டர்கள் அதனை மறித்து அது பண்பல்ல என்று சுட்டிக்காட்டியதும் அவர் வேறு வழியில் சென்று விட்டார். ஆனால் சற்று நேரத்தில் இன்னொரு பொலிஸ் அதிகாரி அதுபோலவே அவரிடம் பேசி அனுப்பினர். அவர் போலீசுக்குத் திரும்பி இன்ஸ்பெக்டர் நாணயக்காரவிடம் வீதியை இடைமறித்து கூட்டம் நடத்துவதாக ஊதிப்பெருப்பித்துக் கூறினார். இரவு 8.30 மணியளவில் உதவி பொலிஸ் சுப்பிரின்ரண்டன் சந்திரசேகரவின் தலைமையில் கழகம் அடக்கும் பொலிசாரை ஏற்றிக் கொண்டு ஒரு ட்ரக்கில் வந்து சேர்ந்தார். இந்த மாநாட்டு பாதுகாப்புக்கென்று ஏற்கெனவே தென்னிலங்கையில் இருந்து வருவிக்கப்பட்டிருந்த பொலிசாருக்கு வேலை காத்திருந்தது.
ஜனார்த்தனன் திடீரென்று மேடையில் தோன்றினார். அங்கே அது சலசலப்பை ஏற்படுத்தியது. போலீசாருக்கும் இது வாய்ப்பாக அமைந்தது. மேடையில் இருந்த டொக்டர் மகாதேவா, பேராசிரியர் வித்தியானந்தன், துரைராஜா, அமிர்தலிங்கம் போன்றோரும் மாறி மாறி அவரை கீழே இறங்கக் கோரினர். பொலிசார் எந்த நேரத்திலும் குறுக்கிட்டு தலையிடலாம் என்கிற நிலையும் இருந்தது. அப்போது நெய்னார் முகமது பேசிக்கொண்டிருந்தார்.
வீரசிங்கம் மண்டபமும் கொல்லப்பட்டவர்களின் எதிரில் நினைவுத் தூபி அமைந்திருக்கும் இடத்தையும் உங்கள் மவுஸால் அசைத்து சுற்றிவராப் பார்க்கலாம்.
விபத்தல்ல படுகொலை
ட்ரக்கை முன்னோக்கி செலுத்தியபடி பின்னால் இருந்து கலகப் பொலிசார் நடந்து சென்றனர். கலைந்து செல்லுமாறு ஒலிபெருக்கியில் மக்களுக்கு உத்தரவிட்டபடி முன் சென்ற போது தொண்டர்கள் ஓடிப்போய் கூட்டத்தைக் குழப்ப வேண்டாம் என்று கோரினார்கள்.
சனத்திரளின் மீது பொலிசார் தாக்குதலை ஆரம்பித்தார்கள். கலவரத் தடுப்புப் பொலிஸாரினால் கலவரம் உருவாக்கப்பட்டது. மக்கள் அடித்து விரட்டப்பட்ட்டனர். மக்கள் சிதறி ஓடினர். கண்ணீர்ப் புகைக்குண்டுகள் வீசப்பட்டன. தடியடிகள் நடத்தப்பட்டன. வான் நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. பெண்களும் பிள்ளைகளும் நெரிசலில் மிதிபட்டுக் காயமடைய நேரிட்டதுடன் அநேகர் உடுத்த உடைகளையும் இழக்க நேரிட்டது.
அப்படி வான் நோய்க்கி பாய்ந்த ஒரு தோட்டா வீதியோர மின்சார கம்பியில் பாய்ந்ததில் கம்பி அறுந்தது. மின்சாரம் தடைப்பட்டதில் இருளும் சேர்ந்துகொண்டது. சிதறியோடிய மக்கள் கூட்டத்தினரில் ஒன்பது பேர் அந்த மின்சாரக் கம்பி தாக்கி 7 பேர் ஸ்தலத்திலேயே துடிதுடிக்க உயிரிழந்தார்கள். இருவர் பின்னர் ஆஸ்பத்திரியில் இறந்தார்கள்.
இந்த அராஜகங்களை வெளிநாடுகளில் இருந்து கலந்துகொண்ட அறிஞர்களும் நேரடியாக கண்ணுற்றார்கள். இந்த சம்பவம் நாடு முழுவதும் ஒரு அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. சிறிமாவோ அரசாங்கம் உண்மையைக் கண்டறிய ஆர்வம் காட்டவில்லை. தமிழர் ஐக்கிய முன்னணியினர் (தமிழர் விடுதலைக் கூட்டணி) இந்த கலவரத்துக்குக் காரணம் அல்‡ப்றட் துரையப்பா என்று குற்றம்சாட்டினர். ஒரு வகையில் இந்த நிலைமைகளுக்கும் அவருக்கும் தொடர்பிருப்பதற்கான நேரடி ஆதாரங்கள் எதுவும் இருக்கவில்லை.
அன்றைய இரவு, யாழ்ப்பாணம் பிரதான வீதியிலிருந்த ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அலுவலகம் தாக்கப்பட்டது. அல்பிரட் துரையப்பா சிறிமாவோ அரசாங்கத்தைச் சேர்ந்தவர் என்பது அவர் மீது இந்தப் பழி விழ காரணமானது. துரையப்பா மாநாட்டுக்கு அழைக்கபடாத்தால் அவர்தான் இந்த வன்முறையை கட்டவிழ்த்துவிட்டார் என்கிற பிரச்சாரம் வேகமாக பரப்பப்பட்டிருந்தது.
உலகத் தமிழர் பேரவைத் தலைவர் டாக்டர் ஜனார்த்தனனைக் கைது செய்வதற்கு ஏற்பாடுகள் நடந்தன அவர் ஒரு கிறீஸ்தவ மதகுருவின் உடையில் மாறுவேடம் பூண்டு ஜனார்த்தனன் கொழும்பு சென்றடைய இந்திய தூதரகம் மூலம் பாதுகாப்பாக அவர் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
மேயரையும், போலிசையும் எதிர்த்து ஹர்த்தால் போராட்டங்களையும் எதிர்ப்பு நடவடிக்கைகளையும் முன்னெடுத்தன தமிழ் கட்சிகளும் அமைப்புகளும்.
தமிழாராய்ச்சி மாநாட்டு சம்பவத்தில் கொல்லப்பட்டவர்கள்
பெயர்
|
ஊர்
|
தொழில்
|
வயது
|
|
1
|
வேலுப்பிள்ளை கேசவராஜன்
|
தொல்புரம்
|
மாணவன்
|
15
|
2
|
பரம்சோதி சரவணபவன்
|
பருத்தித்துறை
|
26
|
|
3
|
வைத்தியநாதன் யோகநாதன்
|
பளை
|
32
|
|
4
|
ஜோன்பிடளிஸ் சிக்மறிங்கம்
|
யாழ்ப்பாணம்
|
ஆசிரியர்
|
52
|
5
|
புலேந்திரன் அருளப்பு
|
தொழிலாளி
|
53
|
|
6
|
இராசதுரை சிவானந்தம்
|
நாச்சிமார் கோயிலடி
|
மாணவன்
|
21
|
7
|
இராஜன் தேவரட்னம்
|
நாயன்மார்கட்டை
|
26
|
|
8
|
சின்னத்துரை பொன்னுத்துரை
|
கோப்பாய்
|
ஆயுர்வேத வைத்தியர்
|
56
|
9
|
சின்னத்தம்பி நந்தகுமார்
|
சுழிபுரம்
|
மாணவன்
|
14
|
குற்றவாளிகளுக்கு பதவியுயர்வு
ஒரு நீதியான விசாரணையை சிறிமாவோ அரசாங்கம் நடந்தி உண்மையைக் கண்டறிந்து இருக்கலாம், ஆனால், சிறிமாவோ அரசாங்கமோ இந்த விடயத்தை உதாசீனம் செய்தது. குற்றமிழைத்த பொலிசார் தண்டனை பெறுவதற்குப் பதிலாக பதவியுயர்வு பெற்றனர். பிரதான காரணமாக இருந்த யாழ் உதவிக் காவற்துறை அத்தியட்சகர் சந்திரசேகரா பின்னர் சிறிமாவோ பண்டாரநாயக்கவால் காவற்துறை அத்தியட்சகராகப் பதவி உயர்த்தப்பட்டார்.
இந்தப் போக்கு தமிழ் மக்கள் மீது பழி தீர்க்கும் வடிவங்களாகவே தமிழ் மக்கள் பார்த்தார்கள். ஏற்கெனவே பிரிவினையையும் ஆயுத வன்முறையையும் வேண்டிய தமிழ் இளைஞர்களுக்கும் மேலும் சினத்தை உருவாக்கியிருந்தது. மறுபுறம் தமிழ் இளைஞர்கள் மத்தியில் அல்பிரட் துரையப்பா மீது கடும் வெறுப்பு தலைதூக்கியது. அல்பிரட் துரையப்பாவை தீர்த்துக்கட்டும் முடிவுக்கு இந்த உணர்ச்சி நிலை வலுப்பட்டது. தமிழ் அரசியல் வன்முறை வடிவத்துக்குள் பிரவேசிக்க தோதான சூழ்நிலை உருவாகத் தொடங்கிற்று.
அடுத்து வரும் வருடங்களில் தமிழ் மக்கள் நிறைய கலவரங்களைச் சந்திக்கவும் நிறைய அடிகளை வாங்கவும் நிறைய இழப்புகளுக்கு ஆளாவதற்கும், இதுவோர் ஆரம்பமாக இருந்தது.
இந்த சம்பவத்தை விசாரணை செய்ய உத்தரவிடும்படி கோரிக்கை விடுக்கப்பட்டபோதும் அன்றைய சிறிமா அரசாகங்கத்தால் அது திமிர்த்தனமாக நிராகரிக்கப்பட்டது.
மாநாட்டுக் கலவரம் தொடர்பாக, உண்மை நிலையை ஆராய அரசு சார்பற்ற நிறுவனமான ‘யாழ்ப்பாண பிரஜைகள் குழு’ ஒரு விசாரணைக் கமிஷனை அமைத்தது. இதன் தலைவராக ஓய்வு பெற்ற சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி ஓ.எல்.டி.கிரெஸ்டர் நியமிக்கப்பட்டார். இந்த விசாரணைக்குழு தனது அறிக்கையை 1974-ம் ஆண்டு பிப்ரவரி 18-ந்தேதி அளித்தது. அதில், “எந்த வித ஆத்திரமூட்டலும் இன்றி போலீசார் கண்ணீர் புகை பிரயோகம் செய்தனர். தேவையில்லாமல் மக்கள் மீது தாக்குதல் நடத்தியதற்கு போலீசாரே பொறுப்பு” என்று கூறப்பட்டிருந்தது. இந்த அறிக்கை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதன் முடிவை அரசு ஏற்கவில்லை..
தமிழாராய்ச்சி மாநாட்டில் உயிரிழந்த ஒன்பது பேரின் ஞாபகார்த்தமாக வீரசிங்கம் மண்டபத்துக்கு முன்னால் நினைவுத்தூபி அமைக்கப்பட்டுள்ளது. ஒன்பது நினைவுத்தூண்களைச் சூழ அந்த தூபி அமைக்கப்பட்டுள்ளது. அரச படையினரால் பலமுறை இடித்து வீழ்த்தப்பட்ட தூபி பல தடவைகள் திருத்தப்பட்டு இன்றும் வருடாந்தம் ஜனவரி 10ஆம் திகதி தமிழர்களால் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் ஒரு எதேச்சையான சம்பவமாக தோற்றம் தந்தாலும். இந்த சமவத்துக்கான பின்புல நீட்சி என்பது ஒரு அரசியல் ஒடுக்குமுறையின் வழிவந்த விளைவு என்பதை நாம் உணர முடியும். எனவே இது தான் இந்த சம்பவத்தை விபத்தென எவரும் கொள்வதில்லை. அதுவரையான அரசியல் கள நிலைமையின் விளைவு இது என்றால் அதன் பின்னர் நிகழப்போகும் மோசமான அரசியல் விளைவுகளுக்கு இது ஒரு முத்தாய்ப்பை திறந்து விட்டது.
துரோகங்கள் தொடரும்
நன்றி - தினக்குரல்
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...