ஒரு சமுதாயத்தின் வளர்ச்சி அதன் கல்வியிலும் இளைய தலைமுறையிடமும் தான் தங்கியிருக்கிறது. கல்வியை புறக்கணித்து விட்டு எந்தவொரு சமூகமும் முன்னேற முடியாது. அந்த வகையில் மக்களின் இருப்பும் முன்னேற்றமும் அடிப்படையாக கல்வியை முன்னிறுத்தியே காணப்படுகின்றது. மலையக கல்வியானது வெளி மாகாண ஆசிரியர்களை நம்பியே இருந்தது. பின்னர் தோட்டப் பாடசாலைகள் அரசுடமையாக்கப்பட்டு மலையகத்தவர்கள் ஆசிரியர்களாகவும் கல்வித்துறை ஊழியர்களாவும் பரிணமிக்க தலைப்பட்ட காலத்தில் மறுமலர்ச்சி அடைந்தது. மேலும் பாடசாலைக்கு மேலதிகமாக ஆசிரியர் கலாசாலைகளும் கல்வியியற் கல்லூரிகளும் மலையகத்துக்கென பிரத்தியேகமாக நிறுவப்பட்டு சேவை விஸ்தரிக்கப்பட்டது.
இன்றளவில் எடுத்துக் கொண்டால் தேசிய ரீதியில் தவிர்க்க முடியாத இடத்தை மலையக கல்வித்துறை அடைந்துள்ளது. மலையக சமூகத்தின் மிகப்பெரும் ஆரம்பமே பாடசாலைகளும் ஆசிரியர்களும் தான். என்று கூறுமளவிற்கு இன்று கல்விக்கட்டமைப்பு வளர்ச்சிக் கண்டுள்ளது.
தேசிய தொழிலாளர் படையில் கணிசமான அளவு இன்று மலையக சிறுபான்மை தமிழர் என்ற எமது அடையாளத்தால் நிரப்பப்படுகின்றது.
அதேபோல் தனியார் துறையை எடுத்துக்கொண்டாலும் குறிப்பிடத்தக்க அளவு ஊழியர்களின் தேவையை பூர்த்தி செய்கின்றோம்.
எனினும் ஒட்டுமொத்த சமூகத்தினை எடுத்து நோக்குமிடத்து பிற்போக்கு சிந்தனையிலும், சுரண்டப்படும் கூலிகளாகவும் உரிமைகள் குறித்த தெளிவற்றவர்களாகவும் இன்றும் இருப்பதற்கு என்ன காரணமென்று ஆய்வு செய்வது பொருத்தமானது. மேலும் ஒவ்வொரு வீட்டிலும் இன்று படித்த ஒருவர் இருந்தும் ஏன் சமூக மீட்சி அசாத்தியமானதாக இருக்கின்றது என்ற கேள்வி எழுகின்றது.
இதற்கான பிரதான காரணம் கல்விச் சமூகம், சமூக அந்தஸ்திலும், பொருளாதாரத்திலும் உயர்வை அடையும் போது சாதாரண சமூகக் கட்டமைப்பில் இருந்து விலகிச் செல்கின்றது. தமது சொந்தத் தேவைகளின் நிமித்தமும், பிள்ளைகளின் கல்வி போன்ற தேவைகளுக்காகவும் இவர்களின் நகர்வு நகர்ப்புறங்களை நோக்கியதாக இருக்கின்றது. எனவே இது போன்ற ஒரு சமூக உப குழு தனித்து சென்றுவிடுவதால் மீண்டும் சாராசரி சமூகம் கைவிடப்படுகின்றது.
தோட்டத் தொழிலாளர்கள் என்ற ரீதியில் எடுத்து நோக்குமிட த்து மலையக மக்களை அடையாளப்படுத்தும் ஒரு பிரிவினர் என்றால் அது அவர்கள்தான். எனினும் எவ்வளவு காலத்திற்கு அடிப்படை வசதிகளற்ற வாழ்விடங்களிலும், போதிய வருமானம் இல்லாத தொழிலிலும் நீடித்து எமக்கு அடையாளத்தை கொடுக்க முடியும். குறிப்பாக ஆசிரியர் என்ற ரீதியில் பார்ப்போமானால் மலையக சிறுபான்மை இனம் என்ற சிறப்பு ஒதுக்கத்திலேயே பெரும்பாலான தொழில் வாய்ப்புகள் எமக்கு கிடைக்கப் பெற்றுள்ளன.
இவ்விடத்தில் மலையக மக்களின் அடையாளமும் இன விகிதாசாரமும் இல்லாமல் இருப்பின் இதுபோன்ற வாய்ப்புகள் கிடைத்திருக்குமா என்பதை சற்று மீட்டிப்பார்க்க வேண்டும். இன ஒடுக்குமுறைக்கு ஆளான சமூகத்துக்கு கற்றவர்களின் வழிகாட்டலும் உதவியும் தவிர்க்க முடியாதவை. எடுத்துக்காட்டாக மொழி சமத்துவம், காணி உரிமை குறித்து விவாதிக்கும் போது அடிமட்ட தொழிலாளர்கள் மட்டுமே முன்னிலைப்படுத்தப்படுகின்றனர். அரச ஊழியர்களாவோ அல்லது தனியார் ஊழியர்களாகவோ பணியாற்றும் மலையகத்தவரின் இடம் இங்கு வெற்றிடமாகவே காணப்படுகின்றது.
ஒட்டுமொத்த மலையக சமூகமும் இன்று இந் நாட்டில் பாரபட்சமாக நடத்தப்படுவதற்கு உதாரணங்கள் முன்வைக்கத் தேவையில்லை. காரணம் மலையக மக்கள் எந்த மட்டத்தில் இருந்தாலும் அங்கு இராண்டாந்தர இடமே வழங்கப்படுகின்றது.
இதனை உணராமல் எவரும் இல்லையயெனினும் சுயலாபம் கருதி மௌனிகளாகவும் செயற்படாமலும் இருக்கின்றனர்.
உண்மையில் மலையக சமூகத்தை பொறுத்த வரையில் கல்விச் சுழல் நெருக்கடியானது என எவரும் வாதிட முடியாது. காரணம் இன்றளவில் பாடசாலை மட்டக் கல்வி வாய்ப்புகள் ஓரளவு சுதந்திரமானதாவே உள்ளன. எனினும் கேள்வி என்னவெனில் ஏன் மலையக பாடசாலைகள் சமூகத்தின் வழிகாட்டியாக இன்னும் மாறவில்லை என்பதே ஆகும். பாடத்திட்டங்களும் வகுப்பறைக் கற்பித்தலும் தொழிலாளர்களை உற்பத்தி செய்யலாம். இப்பணிகளை செய்வதற்கான ஊதியத்தை ஆசிரியர்கள் பெற்றுக் கொள்ளலாம். எனினும் சமூக நோக்குக் குறித்தும் உரிமைகள் குறித்தும் மாணவ சமூதாயத்தை தெளிவடையச் செய்யும் கடமையும் மேலதிகமாக ஆசிரியர்கள் கையில் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. இங்கு எதிர்பார்ப்பது எல்லாம் இவர்களின் பணி பாடசாலைக்கு வெளியே சமூக மீட்சிக்காக பயன்பட வேண்டும். எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தாம் கற்றோர் என்று ஒதுங்கிச் செல்லும் போக்கு ஆரோக்கியமானதல்ல. மாறாக இவர்களே இப்போராட்டங்களில் முன்னிற்க வேண்டும்.
குறிப்பாக இன்று மலையக மக்களின் காணி உரிமை குறித்த சிந்தனைகள் பரவலாக முன்வை க்கப்படுகின்றன. இது விடயத்தில் மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தி கற்ற சமூகத்தினரே செயற்பட வேண்டும். அதிலும் தலைகுனிய வேண்டிய சூழலை அரசியல்வாதிகளுக்கு பின்சென்று ஊழியம் செய்யும் ஆசிரியர்கள் ஏற்படுத்திவிடுகின்றனர். எதுவித சமூக பிரக்ஞையுமற்று இதுபோன்ற அதிபர் பதவிகளுக்காகவும் இடமாற்றம் போன்ற அற்ப சலுகைகளுக்காவும் அரசியல்வாதிகளின் கால்களைப் பிடித்துகொண்டிருப்பதை எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
மலையக சமூகம் உற்பத்தி செய்யும் ஆளணி கல்விச் சமூகம் தான். எனவே இங்குள்ள சமூகக் கடமையில் எனக்கென்ன பங்கு என்று ஒவ்வொரும் உணர வேண்டும். காரணம் தனி மனித வெற்றிகளால் அல்லது முன்னேற்றத்தால் எந்தப் பலனும் இல்லை. மாறாக அது சமூகத்தின் வெற்றியாக அமைய வேண்டும். அதற்கு ஆசிரியர்கள் முன்வரிசையில் நிற்க வேண்டும்.
நன்றி - வீரகேசரி
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...