Headlines News :
முகப்பு » » தமிழ்க்கவி: தொடரும் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பாரா? - கருணாகரன்

தமிழ்க்கவி: தொடரும் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பாரா? - கருணாகரன்


கரைச்சி கலாசாரப் பேரவை வெளியிட்டிருக்கும் “கரை எழில் 2016“ என்ற மலரில் தமிழ்க்கவி எழுதிய “கிளிநொச்சியும் மலையகத்தமிழரும்“ என்ற கட்டுரை பலத்த சர்ச்சையை உண்டாக்கியுள்ளது. தற்போது கிளிநொச்சியிலும் தமிழ்ச்சமூக வலைத்தளங்களிலும் அரசியல் மட்டங்களிலும் இந்த விவகாரம் பரவலாக விவாதிக்கப்படுகிறது. இதற்குக்காரணம், குறித்த கட்டுரையில் கிளிநொச்சியில் உள்ள மலையகத்தமிழ்ச் சமூகத்தினர் தமிழ்க்கவியினால் இழிவு படுத்தப்பட்டதாகச் சொல்லப்படுவதே. தமிழ்க்கவியைக் கடுமையாகச் சாடியும் ஆதரித்தும் கருத்துகள் பகிரப்படுகின்றன. சிலர் மட்டுமே கட்டுரையைப் படித்திருக்கின்றனர். பலர் கட்டுரையை முழுமையாக வாசிக்காமலே விவாதங்களில் ஈடுபட்டிருக்கின்றனர். அப்படியானவர்கள் எத்தகைய பொறுப்பும் கண்ணியமும் இல்லாமல் மிகக் கடுமையான வார்த்தைப் பிரயோகங்களைச் செய்திருக்கிறார்கள். சிலர் இன்னும் கீழிறங்கி, தமிழ்க்கவியைத்தனிப்பட்ட முறையில் வார்த்தைகளால் தாக்கியிருக்கிறார்கள். அவரை மண்டையில் போட வேணும். அவருக்கு வயதாகி விட்டதால், அறளை பேர்ந்து விட்டது என்றவாறெல்லாம் எழுதித்தள்ளியிருக்கிறார்கள்.

இதைச் சிலர் உள்ளுர ரசிப்பதையும் பகிரங்கமாகக் கைதட்டி வரவேற்பதையும் காணமுடிகிறது. தமிழ்ச்சூழலில் இதுவொன்றும் ஆச்சரியப்படத்தக்க விசயமல்லத்தான். என்றாலும் இந்தப் போக்கு தொடர்ந்து வளர்ந்து கொண்டிருப்பதும் அதற்குத் தமிழ்ச் சமூகம் இடமளித்துக் கொண்டிருப்பதும் ஆரோக்கியமானதல்ல. எந்தவொரு விடயத்தையும் அணுகுவதற்குரிய அடிப்படைகள் உண்டு. அதிலும் சமூகம் சார்ந்த, பல்வேறு தரப்பினரைப் பாதிக்கக்கூடிய விடயங்களைப் பற்றிப் பேசும் விடயங்களில் மிகக் கவனமெடுத்துச் செயற்பட வேணும். தவறுகளும் குற்றங்களும் ஒருவரிடத்திலோ ஒரு சமூகத்திலோ காணப்படுகிறது என்றால், அதைச் சுட்டிக்காட்டவும் கண்டிக்கவும் விவாதிக்கவும் உரிய முறைகள் பேணப்படுவது அவசியம். பதிலாக சம்மந்தப்பட்ட தரப்பைக் கீழிறக்கமாகப் பேசுவதும் வன்முறை சார்ந்து தண்டிக்க முற்படுவதும் புறக்கணித்து ஒதுக்குவதும் முறையல்ல.

இப்போது குறிப்பிட்ட கட்டுரை “நமது மலையகம்“ http://www.namathumalayagam.com/    இணையத்தளம் உள்பட வேறு சில இணையத்தளங்களிலும் பகிரப்பட்டு, வாசிக்கக்கூடியதாகவுள்ளது. ஆனால், கட்டுரை வெளியாகியிருக்கும் “கரை எழில் 2016“ மலரின் விநியோகத்தைத் தடுத்து நிறுத்தியுள்ளதாகக் கரைச்சிக் கலாசாரப் பேரவை 12.04.2017 ஊடகங்கள் வாயிலாக அறிவித்திருந்தது. பின்னர் 13.04.2017 வியாழக்கிழமை கலாச்சாரப் பேரவையின் உத்தியோக புர்வ கடிதத்தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், குறித்த கட்டுரைக்கு கலாசாரப்பேரவை தன்னுடைய வருத்தத்தைத் தெரிவித்து, நடந்த தவறுக்குப் பொறுப்பையும் எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், எதிர்காலத்தில் இத்தகைய தவறுகள் நடக்காதபடி பார்த்துக்கொள்வதாகவும் உறுதியளிக்கப்பட்டிருக்கிறது. மேலும் ஏற்கனவே வெளியில் விநியோகிக்கப்பட்ட 15 பிரதிகளும் மீளப்பெறப்பட்டு, ஒட்டுமொத்தமாக உள்ள அனைத்துப் பிரதிகளிலும் குறித்த கட்டுரை திருத்தம் செய்யப்பட்ட பின்னரே பொதுமக்களிடம் கையளிக்கப்படும் என்றும் கலாச்சாரப்பேரவையின் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வளவுக்கும் குறித்த கலாச்சாரப்பேரவை இதுவரை (இந்தப் பதிவை எழுதிக்கொண்டிருக்கும் (13.04.2016 இரவு 10.00 மணிவரை) தன்னுடன் தொடர்பு கொள்ளவில்லை எனத் தமிழ்க்கவி சொன்னார். கட்டுரையில் குறிப்பிடப்படும் விடயம் தவறு என கலாச்சாரப் பேரவை அறிவிப்பதற்கு முன்னர் அதைக்குறித்துத் தன்னுடன் பேசவில்லை. கட்டுரை வெளியிடப்பட்டிருக்கும் மலரின் பிரதி தனக்குத் தரப்படவோ காண்பிக்கப்படவோ இல்லை. தான் எழுதிக் கொடுத்ததற்கும் அச்சிடப்பட்டுப் பிரசுரமாகியதற்கும் இடையில் ஏதாவது தவறுகள் நேர்ந்திருக்கிறதா? எனத் தான் பார்த்த பிறகே தன்னால்  எதைப்பற்றியும் பேசமுடியும், அதன்பிறகே கலாச்சாரப்பேரவை அறிவிப்பை விடுத்திருக்க வேணும் என்று கூறுகின்றார் தமிழ்க்கவி.

கடந்த 07.04.2017 வெள்ளிக்கிழமை “கரை எழில் 2016“ வெளியிடப்பட்டது. அன்றிரவே இந்த விடயம் சூடாகத் தொடங்கியது. இப்போது ஏறக்குறைய ஒரு வாரமாகிறது. உண்மையில் அன்றிரவு அல்லது மறுநாள் இந்த விடயத்தைப் பற்றிக் கலாசாரப் பேரவையும் தமிழ்க்கவியும் பேசி முடிவெடுத்திருக்க வேணும். இடையில் தமிழ்க்கவி வெளியுர்ப் பயணமொன்றில் இருந்தார் என்று கூறப்படுகிறது. இருந்தாலும் தொலைபேசி வழியாகவாவது கலாச்சாரப்பேரவை தொடர்பு கொண்டு பேசியிருக்க வேணும். அப்படிப் பேசியிருந்தால் இந்தளவுக்கு இந்த விடயம் பெரும்பரப்பைக் கொதிநிலைப்படுத்தியிருக்காது.

இதேபோன்றதொரு சம்பவம் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பச்சிலைப்பள்ளி கலாச்சாரப் பேரவை வெளியிட்ட பசுந்துளிர் மலரிலும் நடந்தது. அதிலும் ஒரு குறித்த சமூகத்தினரைக் கீழிறக்கம் செய்யும் விதமாக மூன்று கட்டுரைகள் எழுதப்பட்டிருந்தன. அந்தக் கட்டுரைகள் உருவாக்கிய எதிர்ப்பு மற்றும் சர்ச்சைகளால் அந்த மலரின் விநியோகம் இதேபோல இடைநிறுத்தப்பட்டது.

(02)

தமிழ்க்கவியின் குறித்த கட்டுரையைக் குறித்துத் தமிழ்க்கவியும் கலாச்சாரப் பேரவையும் இணைந்து பேசி அறிவிக்காதவரையில் உடனடியாக எதையும் சொல்ல முடியாதுள்ளது கட்டுரையைத் தன்னிடமிருந்து பெற்றுக்கொண்ட பிறகு அதைக்குறித்து தன்னுடன் கலாச்சாரப் பேரவையினரோ மலர்க்குழுவினரோ தொடர்பு கொள்ளவில்லை என்று கூறும் தமிழ்க்கவி, அந்தக் கட்டுரையில் திருத்தம் அல்லது மாற்றங்கள் செய்வதாயின் சொல்லுங்கள் என்று தான் கலாசார உத்தியோகத்தரிடம்  கூறியிருந்ததாக தன்னுடைய முகப்புத்தகத்தில் தெரிவித்திருக்கிறார். ஆகவே இடையில் ஏதாவது தவறுகள் நடந்திருக்குமோ என்று தான் சந்தேகப்படுவதாகவும் குறிப்பிட்டிருக்கிறார். ஆகவே இதுவரையான நிலவரப்படி கலாச்சாரப் பேரவையே இதில் கூடுதலான பொறுப்புக்குரியதாக உள்ளது. அல்லது தமிழ்க்கவியுடனான சம பொறுப்பிலிருக்கிறது.

முதலில் கட்டுரையின் எழுத்தாளரிடம் மலர்க்குழு அல்லது கலாச்சாரப்பேரவை தொடர்பு கொண்டு பேசியிருக்க வேணும். அதற்கு முன், குறித்த கட்டுரையை மலர்க்குழுவினர் கவனித்திருக்க வேணும். அதில் பொருத்தமற்ற முறையில் சமூகத்தினரைப் பாதிக்கும் வகையிலான கருத்துகள் தெரிவிக்கப்பட்டிருந்தால் அதைக்குறித்து கட்டுரையாளரோடு பேசித் திருத்தங்களைச் செய்திருக்க வேண்டும். அந்தத் திருத்தங்களைச் செய்வதற்குக் கட்டுரையாளர் உடன்படவில்லை என்றால், கட்டுரையை நீக்குவதற்கு மலர்க்குழு முடிவெடுத்திருக்கலாம். ஆகவே முதல் பொறுப்பு மலர்க்குழுவுக்கும் கலாச்சாரப்பேரவைக்குமே உண்டு. மட்டுமல்ல, விவகாரம் பொது அரங்கிற்கு வந்த ஒரு வாரத்தின் பிறகும்கூட உரிய முறையில் விடயம் அணுகப்படவில்லை. ஆனால், நடந்தவற்றுக்கு மன்னிப்புக் கோரியதும் திருத்தம் செய்ய முற்பட்டதும் எதிர்காலத்தில் இத்தகைய தவறுகள் நடக்காதபடி கவனித்துக் கொள்வதாக உறுதியுரைத்திருப்பதும் வரவேற்க வேண்டியது. ஏனையவை தமிழ்க்கவிக்கும் கலாச்சாரப்பேரவை மற்றும் மலர்க்குழுவுக்கும் இடையிலான விவகாரம். இந்த இரண்டு தரப்பும் பேசிய பிறகு எத்தகைய தீர்மானங்கள் மேற்கொள்ளப்படுகின்றன? எவ்வாறான அறிவிப்புகள் வெளியாகின்றன என்பதைப் பொறுத்தே நாம் எதையும் பேச முடியும். மேற்கொண்டு விவாதிக்க இயலும்.

ஆனால், சர்ச்சைக்குரியதாகியிருக்கும் இந்தக் கட்டுரை இன்று பொது வெளியில் பரவலாகப் பகிரப்பட்டுள்ளது. கலாச்சாரப்பேரவை தனக்குரிய பொறுப்பின் அடிப்படையில் திருத்தம் செய்து வெளியிட்டாலும் பொதுவெளியில் அதிகமாக வாசிக்கப்பட்டதும் வாசிக்கப்படப்போவதும் திருத்தம் செய்யப்படாத பிரதியேயாகும். ஆகவே தமிழ்க்கவி எழுதியதாக வெளியிடப்பட்டிருக்கும் இந்தப் பிரதியைக் குறித்தே இங்கே இந்தப் பதிவு சில விடயங்களைச் சுட்டிக்காட்டவும் அணுகவும் முற்படுகிறது.


இந்தப் பிரதியில் மலையகத் தமிழர்கள் வடபுலத்தில் எவ்வாறு வாழ வேண்டியிருந்தது. வடக்கில் அவர்கள் எப்படிப் பிற சமூகத்தினரால், நடத்தப்பட்டனர். அவர்கள் சந்தித்த பாதிப்புகள். அவர்கள் வாழும் இடங்கள் அல்லது வாழ்வதற்காகத் தேர்வு செய்த இடங்கள் என பல தகவல்களும் பல விடயங்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. சில மத நிறுவனங்கள் கூட அந்த மக்களை எப்படிப் பலவந்தப்படுத்தி மதமாற்றம் செய்ய முற்பட்டன எனவும் குறிப்பிடப்படுகிறது. இந்தத் தகவல்கள் விரிவான அடிப்படையில், சரியாக கால ஒழுங்கிலும் விவர ஒழுங்கிலும் புள்ளிவிவரங்களுடன் குறிப்பிடப்படவில்லை. அதாவது ஆய்வொழுக்கத்தின் அடிப்படையில் அமையவில்லை. ஆனால், சமூகவியல் பார்வையில் முக்கியமான விடயங்கள் பேசப்பட்டுள்ளன. பலவிடயங்கள் கூரிய கவனத்திற்குரியவை. பொதுவெளியை நோக்கிக் கேள்விகளை எழுப்பக்கூடியன. மட்டுமல்ல, இந்த மக்களை மேலாதிக்கம் செய்த, செய்ய முற்பட்ட அத்தனை தரப்புகளையும் வரலாற்றின் முன்னிறுத்திப் பொறுப்புக் கூற நிர்ப்பந்திப்பவை. போராட்ட காலத்தில்கூட இந்த மக்களின் அவலமும் துயரமும் முடிந்து விடவில்லை எனத் தமிழ்க்கவி குறிப்பிட்டிருப்பது மறுத்துரைக்க முடியாத உண்மையே.

அவ்வாறுதான் தமிழ்க்கவி குறிப்பிட்டிருப்பதாகக் கூறப்படும் “இவர்களது பெண்கள் பாலியல் ரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். தந்தை பெயர் தெரியாத குழந்தைகள் உள்ளனர். இவர்களுக்குப் பிறப்பு அத்தாட்சிப் பத்திரம் இல்லாதவர்கள் அதிகம். ஒரு குடும்பத்தில் பதினைந்து, பதினெட்டு வயதுப் பிள்ளைகளுக்கும் பிறப்பு அத்தாட்சிப் பத்திரம் இல்லை. அவர்களுடைய பெற்றோருக்கும் இல்லாமலிருந்தது....”

“இதேபோலக் காந்திகிராமத்திலும் வளர்ந்து திருமணம் செய்த ஆண்களுக்கும் அவர்கள் மகன்களுக்கும் பிறப்பு ஆதாரம் இல்லை. மகன் தனக்கு மோட்டார் சைக்கிளோட அனுமதிப்பத்திரம் எடுக்க முயன்றபோதே அவற்றின் அவசியம் தெரிந்தது. மலையக மக்களில் எழுதப்படிக்கத்தெரியாதவர்கள் அதிகம்தான். அது மட்டுமல்ல பிள்ளைகளை வீட்டு வேலைக்கு அனுப்புவதற்காக பாடசாலையிலிருந்து மறித்தல், தாய்க்குப் பிறக்கப்போகும் அடுத்த பிள்ளையை வளர்ப்பதற்காக பாடசாலை செல்ல முடியாமல் போனவர்கள் என நிறையவே சந்தித்தோம். எம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கும் இந்தக் குடும்பங்களிலிருந்து போராடப்போனவர்களும் அதிகம். காரணம் தேசப்பற்று அல்ல. அவர்களுக்குமொரு சமூக அந்தஸ்து தேவைப்பட்டதுதான். கிளிநொச்சியில் காடழித்து களனியாக்கிய மக்களில் பலர், தமக்கொரு குடிநிலமில்லாமல் இன்னும் பெரும் தனக்காரர்களையே தஞ்சமடைந்துள்ளனர்....” என்ற விடயங்களிலும் கவனிக்க வேண்டிய உண்மைகள் உள்ளன. ஆனால், இவற்றில் அதிகமானவை தனியே ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்குரியதல்ல. அதாவது, மலையகத்திலிருந்து வடக்கு நோக்கி வந்த மக்களுக்குரியது மட்டுமல்ல.

பிறப்பு அத்தாட்சிப் பத்திரம் இல்லாமல் இருக்கும் பிள்ளைகள் வன்னியில் அதிகமான இடங்களில் இருந்ததுண்டு. தனியே மலையக மக்களிடம் மட்டுந்தானென்றில்லை. இதைப்பற்றிய சரியான புள்ளிவிவரங்கள் பதிவாளர்களிடம் உண்டு. 2009 க்கு முன் இவ்வாறானவர்களுக்கான விசேட பதிவுகூடச் செய்யப்பட்டது. பல்வேறு காரணங்களால் அல்லது அக்கறையின்மையினால் தங்களுடைய பிள்ளைகளுக்கான பிறப்புப் பதிவைச் செய்யாமலே பல பெற்றோர் இருந்திருக்கிறார்கள். இதைப்பற்றிய தன்னுடைய அவதானத்தைக் கூறியிருக்கிறார் புஸ்பராணி. பல குடும்பங்களில் பிறப்பு அத்தாட்சிப்பத்திரத்தைப்பற்றிய அக்கறை இருந்ததில்லை. பின்னர் வேறு சந்தர்ப்பங்களில் வேறு தேவைகளுக்காகப் பிறப்பு அத்தாட்சிப்பத்திரம் தேவைப்படும்போதே அவர்கள் அதைப்பற்றி உணர்ந்திருக்கிறார்கள் என. இதனை நானும் அறிந்திருக்கிறேன். சிலர் அவ்வாறு அவதிப்படும்போது அவர்களுக்குச் சம்மந்தபட்ட அதிகாரிகளை அணுகி உதவியிருக்கிறேன்.

தவிர, மலையகத்திலிருந்து வடக்கு நோக்கி வந்த பெண்கள் மட்டுமல்ல, நலிவுற்ற சமூகங்களைச் சேர்ந்த ஏனைய பெண்களும் பாலியல் நெருக்கடிக்குள்ளாக்கப்பட்டுள்ளனர். இது உலகம் முழுவதிலும் உள்ள அதிகாரத்துவ நிலையின் வெளிப்பாடாகும். அதிகாரமுடையவர்கள், ஆதிக்க சக்திகள் ஏனைய தரப்பின் மீது பாலியல் ரீதியாகவும் பிற வழிகளிலும் தங்கள் அதிகாரத்தைப் பிரயோகிக்க முற்படுவதுண்டு. இங்கே கண்டிக்க வேண்டியது இந்த அதிகாரத்தரப்பே தவிர, பாதிக்கப்பட்டவர்களோ பலியாக்கப்பட்டவர்களோ அல்ல. தமிழ்க்கவியின் இந்தக் கட்டுரையின் தொனி பெரும்பாலும் பாதிக்கப்பட்ட மக்களின் நிலை நின்றே பேசுவதாக உள்ளது. ஆதிக்க சக்திகளை அம்பலப்படுத்துகிறது.  ஆனால், கட்டுரையின் இறுதிப்பகுதியான – இந்தப் பதிவில் மேலே சுட்டப்பட்ட பகுதியானது, தெளிவற்ற விளக்குமுறையினால், தவறான புரிதலுக்கு வழியேற்படுத்தியிருக்கிறது. இதனால் அது உரிய சமூகத்தினரால் எதிர்கொள்ள முடியாமல் ஆகி, இன்று பெரும் சர்ச்சையை உருவாக்கியிருக்கிறது. அதேவேளை இது ஒரு வஞ்சப் புகழ்ச்சி மரபுக்குரியது என்று கூறக்கூடிய ஒரு நிலைக்கும் கொண்டு போயுள்ளது.

 குறிப்பாக “தந்தை பெயர் தெரியாத குழந்தைகள் உள்ளனர். இவர்களுக்குப் பிறப்பு அத்தாட்சிப் பத்திரம் இல்லாதவர்கள் அதிகம்” என்பதுவும், “இந்தக் குடும்பங்களிலிருந்து போராடப்போனவர்களும் அதிகம். காரணம் தேசப்பற்று அல்ல. அவர்களுக்குமொரு சமூக அந்தஸ்து தேவைப்பட்டதுதான்” என்பதுவும் கடுமையான கோபத்தை குறித்தவர்களிடம் உண்டாக்கியுள்ளது. மேற்குறித்தவாறு தமிழ்க்கவி எழுதியிருந்தால் அது தவறானதே. அதற்கு அவர் வருத்தம் கொண்டு, குறித்த மக்களிடம் தன்னுடைய பொறுப்புக் கூறுதலைச் செய்ய வேணும். இதைத் தமிழ்க்கவிதான் தெளிவு படுத்த வேணும். அந்தப் பொறுப்பு அவருக்குண்டு. இதைக் குறித்து மிகத் தெளிவாக நமது மலையகம் http://www.namathumalayagam.com/2017/04/blog-post_82.html என்ற இணையத்தளம் விளக்கியுள்ளது. ”இந்த சர்ச்சைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய தார்மீக பொறுப்பு இனி தமிழ்க் கவியிடமே விடப்படுகிறது. அவரின் கட்டுரையின் உள்ளடக்கம் வன்னி வாழ் மலையக மக்கள் பற்றிய வரலாற்றுக் குறிப்பைப பற்றியதாக இருந்தாலும் சில இடங்களில்  மலையகத்தவர் பற்றி கூறிய விதம் சர்ச்சைக்குரியதே. அதற்கும் அவருக்கும் தொடர்பிருக்கிறதா இல்லையா என்பதை அவர் விளக்க வேண்டிய பொறுப்பு உண்டு. அவர் அப்படித்தான் எழுதியிருந்தார் என்றால் அதற்கான விளக்கத்தை எல்லோரையும் போல நாங்களும் எதிர்பார்க்கிறோம்” என.

தமிழ்க்கவி விடுதலைப் புலிகள் இயக்கத்தில் சுமார் 25 ஆண்டுகளுக்கு மேலாகச் செயற்பட்ட மூத்த போராளி. புலிகள் இயக்கத்தில் அவர் எழுத்து மற்றும் கலைத்துறையிலும் சட்டம் மற்றும் நீதித்துறையிலும் சமூகச் செயற்பாடுகளிலுமே ஈடுபட்டவர். இந்தப் பணிகளை அவர் அதிகமும் செய்தது அடிமட்டச் சமூகத்தினருடனும் கிராமங்களிலுமே. அதற்கு முன்பு, 1977 களிலும் எண்களின் முற்பகுதியிலும் காந்தியம் அமைப்பினரோடு இணைந்து செயற்பட்ட அனுபவத்தைக் கொண்டவர். குறிப்பாக சந்ததியார், டேவிற் ஐயா போன்றவர்களுடன் இணைந்து மலையகத்திலிருந்து வடக்கு நோக்கிய மக்களுக்கான பணிகளில் தன்னுடைய பங்களிப்பைச் சிறிய அளவிலேனும் செய்தவர். இதைவிட தமிழ்க்கவியின் வாழ்க்கைக் காலத்தின் பெரும்பகுதியும் வன்னியிலேயே கழிந்தது. அதிலும் வன்னிக்கிராமங்களில், மலையக மக்களுடன் நெருங்கியதாக.

இதைத் தவிர, எப்போதும் தன்னுடைய கவனத்தையும் கரிசனையையும் அவர் எப்போதும் பாதிக்கப்பட்ட மக்களைச் சார்ந்தே கொண்டிருந்திருக்கிறார். தமிழ்க்கவியின் எழுத்துகளும் வெளிப்பாடுகளும் இதைத் தெளிவாகச் சொல்லும். ஆனால், அவருடைய எழுத்திலும் நடைமுறை வாழ்விலும் சில சந்தர்ப்பங்களில் உணர்ச்சிகரமான அடையாளங்களையும் நாம் கவனிக்க முடியும். எழுந்தமானம், அவசரத்தன்மை, மேம்போக்கு போன்றவை அவரின் எழுத்திலும் பேச்சிலும் இருப்பதுண்டு. இருந்தாலும் இவற்றை ஒரு குறைபாடாக மற்றவர்கள் கருத முடியாத அளவுக்கு பல சந்தர்ப்பங்களிலும் வெளிப்படையாக எதையும் பேசும் இயல்பையும் நம்பக்கடினமான துணிச்சலையும் கொண்டிருந்தார். இத்தகைய இயல்பின் காரணமாக தமிழ்க்கவியைப் பாராட்டுவோரும் உண்டு. கடிந்து, கண்டிப்போரும் உண்டு. அவருடைய செயற்பாட்டுக்காலத்திலும் போராட்டக்காலத்திலும் இந்த இரு  நிலையை அவர் கொண்டிருந்தார். இதனால் அவர் எப்போதும் சிறிய அல்லது பெரிய சர்ச்சைகளில் எப்போதும் சிக்கியபடியே இருந்திருக்கிறார். கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு அவர் எழுதிய ஊழிக்காலம் என்ற நாவல் வெளியானபோதும் தமிழ்க்கவி இவ்வாறு பாராட்டையும் கண்டனத்தையும் பெற்றார். அவருடைய இந்த இரு நிலை காரணமாக ஒரு சாராரிடம் அவருக்கு ஆதரவு குவிந்தது. இன்னொரு சாரார் அவரைக் கண்டதும் முகத்தைத் திருப்பிக் கொள்ள முற்பட்டனர். இவற்றில் கிடைத்த அனுபவங்களையிட்டு அவர் தன்னை எந்தளவுக்குப் பரிசீலித்தார் என்று தெரியவில்லை. ஆனால், நிச்சயமாக தமிழ்க்கவி சமூக ஒடுக்குமுறைக்கோ மதிப்பிறக்கம் செய்யும் நோக்கிற்கோ சென்றிருக்க மாட்டார் என்பது என்னுடைய நம்பிக்கை. இதை அவரின் மீதான கடந்த கால, நிகழ்கால அவதானிப்பை வைத்தே தெரிவிக்கிறேன்.

(தொடரும்)

நன்றி - தேனீ
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates