டட்லி-செல்வா ஒப்பந்தத்தை மீண்டும் நம்பினார்கள் தமிழ் தலைவர்கள். இம்முறை உடன்பட்டபடி வாக்குறுதிகளை நிறைவேற்றுவார்கள் என்று காத்திருந்தார்கள். 1956 க்குப் பின்னர் முதற் தடவையாக 1966 சுதந்திர தினக் கொண்டாட்டங்களில் கூட மனப்பூர்வமாக பங்கு பற்றினார்கள். எஸ்.ஜே.வி. செல்வநாயகம் யாழ்பாணத்தில் இலங்கை தேசியக் கொடியை ஏற்றினார். அதுவரை வடக்கு கிழக்கு பகுதிகளில் சுதந்திர தினத்தின் போது கருப்பு கொடி உயர்த்தியும், அந்த நாளை பகிஸ்கரித்தும், துக்க தினமாகவுமே அனுஷ்டித்து வந்தார்கள்.
டட்லி – செல்வா ஒப்பந்தத்தின் பிரதான விடயமே மாவட்ட சபைகளை உருவாக்குவது. ஆனால் அரசாங்கம் அமைக்கப்பட்டதன் பின்னர் எஸ்.ஜே.வி.செல்வநாயகம் தலைமையில் தமிழரசுக் கட்சி குழு பிரதமர் டட்லியை சந்தித்து அது குறித்து பேசியபோது “பதவியில் சில மாதங்கள் இருந்த பின்பு நீங்கள் உங்கள் கோரிக்கையை வற்புறுத்த மாட்டீர்களென நினைத்தேன்” என்று சடைந்தார்.
தமிழ் மொழியின் கதி
கல்வி அமைச்சராக பதவியேற்ற ஐ.ஆர்.எம்.ஏ.ஈரியகொல்ல வடக்கு கிழக்குக்கு வெளியே உள்ள பாடசாலைகளில் தமிழ் கற்பிப்பதை நிறுத்தினார். இந்த விடயத்தை டட்லியில் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டதன் மூலம் தற்காலிகமாக அந்த நடவடிக்கை நிறுத்தப்பட்டது. இந்த விடயத்தில் ஈரியகொல்ல தமிழ் எதிர்ப்புப் போக்கை தொடர்ந்தும் கடைபிடித்தார்.
தமிழ் மொழி உபயோக சட்டமூலத்தை தயாரிக்கும் பொறுப்பை திருச்செல்வத்திடம் ஒப்படைத்திருந்தார் பிரதமர். அதன் மூலம் தமிழ் மொழியை வடக்கு கிழக்கு பகுதிகளில் நிர்வாக மொழியாக மாற்றினார்.
1966ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் திகதி தமிழ் மொழி உபயோகச் சட்ட விதிகள் பாராளுமன்றத்தில் கொண்டுவந்தார் அமைச்சர் ஜே.ஆர்.ஜெயவர்த்தன. 1956 சிங்களம் மட்டும் சட்டத்தை வலியுறுத்தி கண்டிக்கு பாதயாத்திரையை கொண்டு சென்றவர் ஜே.ஆர். மொழிகள் விடயத்தில் எதிர்க்கட்சிகள் செய்தால் அது பிழை தாம் செய்தால் சரி என்கிற கொள்கைப் போலத் தான் என்.எம்.பெரேரா போன்றோரும் தாம் செய்தால் சரி அதையே எதிர்க்கட்சிகள் செய்தால் பிழை என்கிற போக்கை காண முடிந்தது.
“பறத் தமிழர் எமக்கு வேண்டாம்”
தொண்டமானையும், அண்ணாமலையையும் நியமன உறுப்பினர்களாக ஆக்கி தோட்டத் தொழிலாளர்களுக்கு பிரதிநிதித்துவம் வழங்கியதால் அதையும் இனவாத ரீதியில் தாக்கினர் இடதுசாரிகள். சிறிமாவின் தோல்வி, இந்தியவம்சாவழியினரை திருப்பி அனுப்புதல் பற்றி லங்கா சமசமாஜக் கட்சியின் பத்திரிகையான “ஜனசத்ய” “மீனாட்சியை வெளியேற்றுமுன் சிறிமா துரத்தப்பட்டார்.” என்று எழுதியது. அக்கட்சியின் இன்னொரு பத்திரிகையான “ஜனதின” பத்திரிகையில் “ரத்மலானையை தமிழ் நகராகக முயற்சி” (6 ஜூலை), “சிங்கள பௌத்தர்களே எழுக” (9 ஜூலை), “வடக்கிலுள்ள சிங்களவர்களுக்கு ஆபத்து” (25 ஓகஸ்ட்), “டட்லி-செல்வா ஒப்பந்தத்தை கிழித்தெறி” (23 நவம்பர்) என்றது.
விகாரமகா தேவி சிலையின் முன் தமிழ் மொழி ஏற்பாட்டு சட்டத்துக்கு எதிராக சிறிமாவின் தலைமையில் சத்தியப்பிரமாணம் செய்யும் பிக்குமாரும், இடதுசாரிக் கட்சியினரும் |
இந்த சட்டம் கொண்டுவரப்பட்ட போது எதிர்க்கட்சிகள் மோசமான துவேஷத்தை வெளிப்படுத்தியது மட்டுமன்றி அரச ஊழியர்களின் தொழிற்சங்கங்களை வேலைநிறுத்தப் போராட்டத்திலும் இறக்கின. விகாரமகா தேவி பூங்காவில் விகாரமகா தேவியின் சிலையின் முன்னால் சத்தியப்ப்பிரமானம் செய்துகொண்டனர். (துட்டகைமுனுவின் தாயார் தான் விகாரமகா தேவி. தமிழர்களைக் அழித்தொழிக்கும் போரில் எல்லாளனுக்கு போர்முனையில் வழிகாட்டியவர் விகாரமகாதேவி என்கிறது மகாவம்சம்.) தேசிய துக்க தினமாக அனுஷ்டித்தனர். அங்கிருந்து பாராளுமன்றத்துக்கு ஊர்வலமாகச் சென்று மசோதாவை வாபஸ் பெருமாறு வற்புறுத்துவதற்கு பெரும் ஊர்வலம் சென்றது. “பற தெமலா அப்பிட்ட எப்பா” (பறத் தமிழர் எமக்கு வேண்டாம்) என்ற கோசத்துடன் காலிமுகத்திடலை நெருங்கிய வேளை கொள்ளுபிட்டியில் அதனை தடுத்து நிறுத்தியது பொலிசார்.
துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட தம்பராவே ரத்னசார தேரோ |
பொலிசாரை எதிர்த்து ஊர்வலத்தினர் செய்த கைகலப்பில் பொலிசார் சுட்டனர். அந்த சூட்டில் பௌத்த பிக்கு தம்பராவே ரத்னசார தேரோ என்பவர் உயிரிழந்தார். இன்றும் அவரை சிங்களத் தேசியவாதிகள் மொழியுரிமைக்காக போராடி உயிர் நீத்த வீரராக கொண்டாடுகின்றனர். அவர் பற்றிய நூலும் கூட வெளிவந்திருக்கிறது. இந்த சம்பவத்தை நேரில் கண்ட “லங்காதீப” பத்திரிகையாளர் தர்மசிறி ஜயக்கொடி “சிங்கள பெரலிய” (சிங்கள கவிழ்ப்பு) என்கிற பெயரில் எழுதிய நூல் அந்த சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது.
பல எதிர்ப்புகளின் மத்தியில் சட்டம் நிறைவேற்றப்பட்டபோதும் தமிழ் மொழி விதிகள் அமுல் செய்யப்படவில்லை.
ஊர்வலத்தை கொள்ளுபிட்டியில் வைத்து கலைத்த பொலிசார் |
இதேவேளை தோல்வியடைந்திருந்த சிறிமா பண்டாரநாயக்க தலைமையிலான அணியில் இருந்த கட்சிகள் டட்லி அரசாங்கத்தை வீழ்த்துவதற்கு இனவாதத்தையும், தமிழர் எதிர்ப்பு போக்கையும் கைகொண்டன. டட்லி – செல்வா ஒப்பந்தம் பற்றி பகிரங்கமாக அறியப்பட்டிருந்தபோதும் அதன் உள்ளடக்கம் குறித்து வெளிப்படையான தகவல்கள் வெளியாகி இருக்கவில்லை. இந்த நிலையில் கொம்யூனிஸ்ட் கட்சியின் பத்திரிகையான “எத்த” (உண்மை) பத்திரிகையில் “இதோ அந்த இரகசிய” ஒப்பந்தம் என்று முழுமையாக வெளியிட்டு டட்லி தமிழர்களுக்கு விட்டுக் கொடுக்கப் போகும் அம்சங்கள் இதோ என்று பிரச்சாரம் செய்தது. இந்த பிரச்சாரம் டட்லி அரசாங்கத்துக்கு வெளியில் இருந்தும் நெருக்கடியை ஏற்படுத்தியது.
இத்தனைக்கும் பண்டா-செல்வா ஒப்பந்தத்தின் அளவுக்கு பலமான ஒரு ஒப்பந்தமாகவும் டட்லி – செல்வா ஒப்பந்தம் இருக்கவில்லை. அதை ஆதரித்தவர்கள் இதை எதிர்த்தது வெறும் இனவாத அரசியல் வங்குரோத்துத் தனமன்றி வேறென்னவாக இருக்க முடியும்.
“1966 மே 5 இல் “எமது இனத்துக்கு அநீதி இழக்கப்பட்டால் அரசாங்கத்திலிருந்து வெளியேறத் தயங்கமாட்டோம்” என்று வண்ணார் பண்ணைக் கூட்டத்தில் ஆற்றிய உரையை ஊதிப்பெருப்பித்து தென்னிலங்கை பத்திரிகைகள் செய்தி வெளியிட்டன. இதனால் குழப்பமடைந்த அரசாங்கம் அப்படி கூறவில்லை என்று மறுப்பு தெரிவிக்கும்படி செல்வநாயகத்தை அறிவிக்கும்படி கேட்டுக்கொண்டது. அதனை மறுத்த செல்வநாயகம் தான் கூறியதை தான் ஊடகங்கள் வெளியிட்டுள்ளன என்று சொல்லிவிட்டார். கூடவே கல்வி அமைச்சும், நீதியமைச்சும் தமிழ் மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருவதை பிரதமருக்கு சுட்டிக்காட்டினார்.
தமிழரசுக் கட்சி கூட்டத்தில் டட்லி
1966 ஆம் ஆண்டு ஜூன் மாதம் கல்முனையில் நடந்த தமிழரசுக் கட்சியின் மாநாட்டின் இறுதி நாளன்று பிரதமர் டட்லி சேனநாயக்காவும் கௌரவ பேச்சாளராக கலந்து கொண்டு உரையாற்றிய ஆச்சரியமான நிகழ்வும் நடந்ததது. அதுவரை ஒரு பிரதான தமிழ் அரசியல் கட்சியொன்றின் முக்கியத்துவம் வாய்ந்த கூட்டமொன்றில் நாட்டின் தலைவர் ஒருவர் அழைக்கப்பட்டதில்லை.
கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் டட்லி தனது உரையில்
“நான் பிரதமராக இருக்கும் வரை தமிழ் மொழியும் பண்பாடும் என்றுமே பாதிக்கப்பட மாட்டாது என்று தமிழர்களுக்கு உறுதியளிக்க விரும்புகிறேன். இலங்கைப் போன்ற பல்லின நாடொன்றில் பல்வேறு குழுக்களின் கலாசாரத்தையும் மொழியையும் பேணிப் பாதுகாப்பது ஜனயாகத்தின் முக்கிய அங்கம் என்பதை நீங்களும் என்னுடன் சேர்ந்து ஏற்றுக் கொள்வீர்கள். சுதந்திரத்தின் கனிகளை நாம் அனுபவிக்க வேண்டுமானால் இந்த இன சௌஜன்யம் பேணப்பட வேண்டும்... இலகுவில் வாக்கு கொடுக்கமாட்டேன்; கொடுத்தால் நிறைவேற்றத் தவறமாட்டேன்” என்றார்.
அது மட்டுமன்றி அதே 1966 செப்டம்பர் 9ஆம் திகதி ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட தமிழர்கள் பிரதமர் டட்லியின் விஜயத்தின் போது அவரை வரவேற்க திரண்டார்கள். யாழ் நகர் அலங்காரம் பூண்டது. அது தமிழர் வரலாற்றில் பதிவு செய்யப்படவேண்டிய நிகழ்வாக இருந்தது. ஏட்டிக்குப் போட்டியாக இருந்த தமிழரசுக் கட்சியும், தமிழ் காங்கிரசும் கூட ஒன்றுபட்டு பிரதமருக்கு அந்த வரவேற்பை அளித்தன.
இந்தளவு வரவேற்பு வெறுமனே பிரதமருக்கு அளிக்கப்பட வரவேற்பு அல்ல. இனப் பிரச்சினை குறித்து அரசாங்கம் கொடுத்திருந்த வாக்குறுதிக்கு வழங்கப்பட்ட வரவேற்பே. தமிழ் மக்கள் தமது நன்றியையும், நம்பிக்கையும் வெளிகாட்டிய வரவேற்பு அது.
ஆனால் அந்த நம்பிக்கைத் துரோகத்துக்கு நாங்களும் சளைத்தவர்கள் அல்லர் என்று பதிலுக்கு டட்லி அரசாங்கம் தன்னை குறுகிய காலத்திலேயே வெளிக்காட்டியது.
கூட்டரசாங்கத்தில் கைகோர்த்து இருந்த கே.எம்.பி.ராஜரட்னா வின் ஜாதிக விமுக்தி பெரமுன (JVP - தேசிய விடுதலை முன்னணி), பிலிப் குணவர்த்தனவின் ‘மக்கள் ஐக்கிய முன்னணி” உள்ளிட்ட 7 அமைப்புகளில் பெரும்பாலானவை மோசமான சிங்கள இனவாத கட்சிகளாக ஏற்கெனவே அம்பலமானவை.
“தமிழர்களின் தோலில் செருப்பு தைத்து அணிவேன்” என்று குரூரமாக இனவாதவாதத்தை வெளிப்படுத்திய கே.எம்.பி.ராஜரட்னவும் கூட்டரசாங்கத்தின் தலைவர்களில் ஒருவர்.
இதற்கு இடையில் இந்திய வம்சாவளியினரை நாடுகடத்தும் சிறிமா-சாஸ்திரி ஒப்பந்தத்தை அமுல் செய்வதற்கான சட்டத்தை இயற்ற முயன்றது டட்லி அரசாங்கம் தமிழரசுக் கட்சியும், தொண்டமானும் எடுத்த முயற்சியினால் அந்த சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன. (ஆனால் இந்த சட்டத்தில் மலையக மக்களை மோசமாக பாதிக்கக் கூடிய அந்த பகுதிகளை மீண்டும் சட்டத்தில் புகுத்தியது 1970 இல் பதவியேற்ற சிறிமா அரசாங்கம்)
அரசாங்கத்தை பேணிய தமிழரசுக் கட்சி
மாவட்ட சபைகளுக்கான வெள்ளை அறிக்கை 1968 ஜூன் மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இதற்கு எதிராக எதிர்க்கட்சிகள் பிக்குமார்களுடன் சேர்ந்து எதிர்ப்புப் பிரசாரங்களை மேற்கொண்டனர். அந்த சட்ட மூலத்தை ஆளுங்கட்சிக்குள் இருந்த அரசாங்க பாராளுமன்ற குழுவிலேயே பலத்த எதிர்ப்பு வெளியானதால் அது கைவிடப்பட்டது. டட்லி உடனேயே செல்வநாயகத்தையும், தமிழரசுக் கட்சியின் ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களையும் அழைத்து மாவட்ட சபை விடயத்தில் தனது இயலாமையை திரியப்படுத்தியதுடன் தான் அதற்குப் பொறுப்பேற்று இராஜினாமா செய்யப்போவதாக ஒரு போடு போட்டார். டட்லியின் சதி வலைக்குள் விழுந்த தமிழரசுக் கட்சி அவர் தொடர்ந்து பிரதமராக பதவி வகிக்க வேண்டும் என்று கேட்டுகொண்டது. அதாவது மாவட்ட சபை விடயத்தில் தனது இறுக்கத்தை தளர்த்தியது.
ஆளுங்கட்சியை விட மோசமான இனவாதத்தைதைக் கொண்டிருந்த எதிர்க்கட்சி ஆட்சியில் வராமல் தடுப்பது என்று செல்வநாயகம் கருதினார். அரசாங்கத்துக்கு நெருக்கடி ஏற்படுத்துவது தமிழர்களின் நலன்களை மேலும் மோசமாக்கும் என்று நம்பினார். “பிரதமருக்கு ஆதரவளிப்பதாக உறுதியளித்துள்ளேன். அவரை கைவிட்டு விடமாட்டேன் என்று நம்பிக்கையளித்துள்ளேன்” என்று செல்வநாயகம் கட்சித் தொண்டர்களை பொறுமை காக்கும்படி ஆசுவாசப்படுத்தினார்.
தமிழரசுக் கட்சிக்குள் வாலிபர் அணி தலைமையின் விட்டுக்கொடுப்புகளை கடுமையாக விமர்சித்தும், எதிர்த்தும் வந்தது. சகிப்புத் தனிமைக்கு எல்லையுண்டு என்று விரக்தியுடன் நடந்துகொண்டனர். கட்சிக்கும் இது பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியிருந்தது. டட்லியிடம் செல்வநாயகம் தமிழ் மக்களின் நீண்ட கால கோரிக்கையான திருகோணமலைப் பல்கலைக்கழகத்தை நிறுவுவதற்கு உடனேயே நடவடிக்கை எடுத்தால் அரசாங்கத்துக்கான ஆதரவைத் தொடர முடியும் என்று தெரிவித்துத் தான் மாவட்ட சபை விடயத்தில் டட்லியுடன் ஒரு புரிந்துணர்வுக்கு வந்தார்.
இதன்மூலம், திருகோணமலையில் தமிழ்ப் பல்கலைக்கழகம், காங்கேசன்துறையில் ஒரு துறைமுகம், தமிழ் மொழி (விசேட ஏற்பாடுகள்) சட்ட ஒழுங்குகளின் முழுமையான அமுலாக்கம் எனச் சிலவற்றையாவது சாதிக்க முடியுமா என்ற நப்பாசை தமிழரசுக் கட்சிக்கு இருந்தது. காங்கேசன்துறை துறைமுகத்துக்கான அடிக்கல்லை பிரதமர் நட்டதோடு சரி, அதற்கு மேல் அந்தத் திட்டம் நகரவில்லை.
டட்லி பல்கலைக்கழகத்துக்கு உடன்பட்டார். ஆனால் அதையும் சாக்குப் போக்குச் சொல்லி இழுத்து இழுத்தடித்து இறுதியில் வாக்குறுதியை நிறைவேற்றத் தவறினார்.
திருச்செல்வத்தின் விலகல்
திருகோணமலை கோனேஸ்வர ஆலயப் பிரதேசத்தைப் புனித நகராகப் பிரகடனப் படுத்துவது பற்றி ஆராய குழுவொன்றை நியமித்திருந்தார் திருச்செல்வம். மூவர் கொண்ட அந்தக் குழுவில் ஒரு சிங்களவர், ஒரு தமிழர், ஒரு பறங்கியர் என உள்ளடக்கியிருந்தார். சேருவில புனித விகாரையின் பிரதம தேரர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட அமைச்சர் திருச்செல்வத்துடன் எந்தவித கலந்தாலோசனையுமின்றி தனிச்சையாக பிரதமர் கலைத்தார். இதனால் அதிருப்தியடைந்த திருச்செல்வம் 16.09.1968 இல் தனது பதவியை இராஜினாமா செய்தார். இதன் மூலம் அமைச்சரவையில் இருந்து தமிழரசுக் கட்சி வெளியேறியது.
1967 நவம்பர், 1968 ஜனவரி காலப்பகுதிகளில் பிரதமரை சந்தித்து அதிருப்தியையும், ஏமாற்றத்தையும் எச்சரிக்கையையும் வெளிப்படுத்தினர் செல்வநாயகம்.
“எங்கள் இளைஞர்களின் அதிருப்தி நீண்ட கால நோக்கில் நாட்டுக்குத் தீங்காக அமையும்...
நான் அமைதியாக இருக்கத் தயாராக இருக்கின்றேன். ஆனால் எம் இளைஞர்கள் அவ்வாறு இருக்கத் தயாராக இல்லை. நீங்கள் எங்களைக் கைவிட்டுவிடலாம் என்று அவர்கள் கூறுகிறார்கள். என் மீது அவர்கள் கொண்டிருக்கும் மரியாதையினால் அவர்கள் என்னுடன் சேர்த்து செல்ல முடிகிறது. நான் ஏமாற்றப்படுகிறேன் என்று அவர்கள் உணரத் தலைப்பட்டால் அவர்களின் பார்வையில் நான் முட்டாளாகவே தென்படுவேன். அதன் பின்னர் அவர்கள் என்னை மதிக்க மாட்டார்கள். தமிழ் இளைஞர்கள் மத்தியில் எனது செல்வாக்கை தக்க வைப்பதற்கு உதவச் சிங்களத் தலைமைத்துவம் தவறுமேயானால். அவர்களே இறுதியில் இழப்பைச் சந்திக்க வேண்டியவர்கள் ஆவார்கள்.” என்றார்.
மாவட்ட சபை உருவாகாமல் விட்டால் தமிழரசுக் கட்சி ஆட்சியிலிருந்து வெளியேறிவிடும் என்று எதிர்க்கட்சிகள் கணித்தன. மாவட்ட சபைகள் நாட்டை பிளவுபடுத்தப் போகின்றன என்று பிரச்சாரம் செய்தன. தன்னை சிங்கள விரோதி என்றும், நாட்டை துண்டாடுபவன் என்றும் செய்யப்பட்ட பிரசாரத்தைக் கண்டு பீதியுற்றார் டட்லி சேனநாயக்க.
ஒக்டோபர் 17 பிரதமர் ஒரு அறிக்கையை வெளியிட்டார். நான் சமஸ்டிவாதிகளுடன் ஒப்பந்தம் செய்திருப்பதாக எதிரிகள் பிரச்சாரம் செய்கின்றனர். நான் செய்தது சமஷ்டி வாதிகளின் உதவியுடன் தேசிய அரசாங்கத்தை அமைத்தது மட்டும்தான்.” என்றார்.
எதிர்க்கட்சிகள் வைத்த பொறிக்குள் இலகுவாக மாட்டிகொண்டார் பிரதமர். ஒக்டோபர் 27 தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சிக் கிளை அரசாங்கத்திலிருந்து தமிழரசுக் கட்சி வெளியேற வேண்டும் என்கிற தீர்மானத்தை நிறைவேற்றியது. ஒக்டோபர் 27 கூடிய பொதுச்சபையைக் கூட்டினார் அமிர்தலிங்கம். அதற்கு முதல் நாள் செல்வநாயகம் டட்லியை சந்தித்தார்.“மாவட்ட சபைக்கு எதிர்ப்புகள் பலமாக இருப்பதால் தன்னால் அம்மசோதாவை இப்போதைக்கு கொண்டு வரமுடியாது” என்று பிரதமர் டட்லி கூறிவிட்டார்.
பத்திரிகையாளர்களிடம் பேசிய டட்லி திருச்செல்வம் தயாரித்தது நகல் மசோதா அல்ல. வெறும் ஆலோசனை மட்டுமே என்றார்.
ஜூன் 30 டட்லியை சந்தித்து விட்டு வந்த செல்வநாயகம் பத்திரிகையாளர்களிடம் இப்படிக் கூறினார்.
“நாங்கள் பண்டாரநாயக்கவினால் கைவிடப்பட்டோம், திருமதி பண்டாரநாயக்கவாலும் கைவிடப்பட்டோம். இப்போது உங்களால் கைவிடப்படுகிறோம் என்று கூறிவிட்டு வந்தேன்.” என்றார்.
துரோகங்கள் தொடரும்...
மாவட்ட சபை மசோதாவின் முக்கிய அம்சங்கள்1. ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒவ்வொரு மாவட்ட சபை இருக்கும்
2. மாவட்டத்தைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினரும் மாநகர சபை மேயர்களும், நகர சபை, கிராம சபை ஆகியவற்றின் தலைவர்களும் உஊராட்சி அமைச்சரால் நியமிக்கப்பட்ட மூன்று பெரும் அச் சபைகளின் உறுப்பினர்களாகவிருப்பர்.
3. ஒவ்வொரு மாவட்டத்துக்கும் நிர்வாகக் கமிட்டி ஒன்று இருக்கும் அதில் ஏழு பேருக்கு மேற்படாதோர் அங்கம் வகிப்பார் அவர்கள் மாவட்ட சபை உறுப்பினர்களாக தெரிவு செய்யப்படுவர்.
4. நிர்வாக கமிட்டியின் பனி மாவட்ட சபையை நிர்வகித்தல், அபிவிருத்தித் திட்டங்களை தயாரித்தல், அவற்றை அமுல் செய்தல் ஆகியவை.
5. மாவட்ட சபைகளுக்குக் கொடுக்கப்பட வேண்டிய அதிகாரங்கள்.
அ. விவசாயம் உணவு, விலங்கு வளர்த்தல், கைத்தொழில், கடற்தொழில், கிராம அபிவிருத்தி வீடமைப்பு, பிரதேச திட்டமிடல், சில குறிப்பிட்ட கல்வித் துறைகள், கலாசாரம், ஆயுர்வேதம், சமூக நலன், சுகாதார சேவை.
இதே வேளை சிங்கள மக்களின் பயத்தைப் போக்கும் வகையில் மாவட்ட சபைகளுக்குச் சில கட்டுபாடுகளையும் சேர்த்தார் திருச்செல்வம். அதன் மூலம் மத்திய அரசாங்கத்துக்கு மாவட்ட சபைகளை கட்டுப்படுத்தும் அதிகாரங்கள் எவை என்பதை வெளிப்படுத்தினார்.
1. மாவட்ட சபைகளை வழிநடத்தும், கட்டுப்படுத்தும் அதிகாரங்கள் அமைச்சர்களிடம் இருக்கும்.
2. மாவட்ட சபைகளுக்கு காலத்துக்குக் காலம் போது விசேட அறிவுத்தல்களை வளங்கும் அதிகாரம் உள்ளூராட்சி அமைச்சருக்கு இருக்கும். மாவட்ட சபைகளை அறிவுறுத்தல்கள் கட்டுப்படுத்தும்.
3. மாவட்ட சபைகள் தாங்கள் தயாரிக்கும் அபிவிருத்தித் திட்டங்களுக்கு மத்திய அரசாங்கத்தின் அங்கீகாரத்தைப் பெற வேண்டும்.
4. மாவட்ட சபைகள் தாங்கள் விதிக்கும் வரிகளுக்குப் பாராளுமன்றத்தின் அங்கீகாரத்தைப் பெற வேண்டும்.
5. நிதியமைச்சரின் அனுமதியுடனேயே கடன்களைத் திரட்டலாம்
6. ஒன்றோடொன்று இணையும் அதிகாரம் மாவட்ட சபைகளுக்கு இருக்காது.
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...