Headlines News :
முகப்பு » » அரசியலும் வியாபாரமும் - ஜீவா சதாசிவம்

அரசியலும் வியாபாரமும் - ஜீவா சதாசிவம்


மேர்வின் சில்வா ஊடகவியலாளர்களால் அவ்வளவு இலகுவில் மறந்துவிடக்கூடிய பெயர் அல்ல. இப்போதைய நல்லாட்சிக்கு முன்பு இருந்த ஹீரோ அப்போது இவருடைய செயற்பாடு எப்படி இருந்தது என்று ஊகிக்கலாம். பலராலும் நகைப்பாக பார்க்கப்படும் ஒருவர். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி காலத்தில் துணிச்சலாக குழப் படி செய்த அரசியல்வாதிகளில் மேர்வின் முதன்மையானவர் என்பது மறுக்க முடியாது.

'கலாநிதி மேர்வின் சில்வா, என்ன அரசியலில் இருந்து ஒதுங்கியே விட்டாரா என்று பலரும் பேசிக்கொண்டிருந்த நிலையில் கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் திடீரென ஓர் அறிவிப்பு. "நீங்கள் வியாபாரத்தில் ஈடுபட வேண்டுமாயின், அரசியலில் ஈடுபடுவதிலிருந்து ஒதுங்கிவிட வேண்டும்" இது மேர்வின் சில்வாவின் அதிர்ச்சியான அறிவிப்பு.

அப்படியாயின் மேர்வின் சில்வா கூட அரசியலில் புனிதத்துவம் இருக்க வேண்டும் என்கிறார்.? புதிய அரசியல் கட்சியொன்றை ஆரம்பிக்க உள்ளதாக முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா ஒரு அறிவிப்பை கடந்தவாரம் ஊடகவியலாளர் மத்தியில் விடுத்தார். அநீதி' என்ற பதம் அவர் ஆரம்பிக்கவுள்ள புதிய கட்சியில் இடமில்லை என்பதுதான் அவரது பிரதான நோக்கு.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் ஊழல் செய்யா விட்டால் அரசியலையே முன்னெடுக்க முடியாது என்றளவிற்கு அரசியலில் மாத்திரம் அல்ல ஊடகவியலிலும் கூட ஊழலை செய்து கொண்டு வந்தவருக்கு இப்போது சமூக பொறுப்பு ஏற்பட்டுள்ளது.

இது வரவேற்கத்தக்க தான். ஏனெனில், நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சியின் பின்னர் தூய அரசியலை முன்னெடுப்போம். என்ற தொனிப்பொருளில் நாடளாவிய ரீதியில் ஜனாதிபதியின் தலைமையில் பல்வேறு வேலைத்திட்டங்கள் செயற்படுத்தப்பட்டு வருகின்றமை யாவரும் அறிந்ததே. 

2015 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 12 ஆம் திகதியளவில், ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டத்தில் இதுவரை சுமார் 26 பாராளுமன்ற உறுப்பினர்கள் அங்கத்துவம் பெற்றிருக்கின்றமை வரவேற்ககத்தக்க விடயம். அந்த இயக்கம் M12M என அழைக்கப்படுகிறது. இந்த M12M ஊடாக நாட்டின் பல பாகங்களிலும் தூய அரசியல் முன்னெடுப்புகள் இடம்பெற்று வருகின்றன. இவ்வாறான நேரத்தில், முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா எதிர்ப்பார்க்கும் தூய அரசியலையும் M12M முன்னெடுக்கும் தூய அரசியலையும் பற்றி இந்தவார அலசல் ஆராய்கிறது.

2015 நல்லாட்சி உருவாக்கமானது மக்களின் வாக்களிப்பினால் மட்டும் உருவானதல்ல. சிவில் சமூகங்களின் தொடர்ச்சியான உரையாடல்களும் அழுத்தமும் ஆட்சி மாற்றத்தை நோக்கியதாக இருந்தது. இதன் உருவாக்கத்திற்கு ஏறக்குறைய 45 சிவில் அமைப்புக்கள் பங்கேற்றிருந்தன. அத்தகைய சிவில் சமூகங்களுள் சர்வோதய, பெவ்ரல், ரைட்ஸநவ், சணச போன்ற நிறுவனங்கள் ஒன்று சேர்ந்து 2015ஆம் ஆண்டு மார்ச்சு 12ஆம் திகதி M12M எனும் இயக்கத்தை ஆரம்பித்து அரசியல்வாதிகளின் இணக்கப்பாட்டுடன் ஒரு பிரகடனத்தை சைக்காத்திட்டன.

இதில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அப்போதைய எதிர்க்கட்சித்தலைவர் நிமால் சிறிபால டிசில்வா,கூட்டமைப்புத்தலைவர் இரா.சம்பந்தன், ஜே.வி.பி சார்பில் சுனில் ஹந்துன்நெத்தி, த.மு.கூட்டணி சார்பில் மனோகணேசன் , சிறிதுங்க ஜெயசூரிய எனும் பலரும் இந்த பிரகடனத்தில் கைச்சாத்திட்டனர். 

அரசியலை தூய்மையாக்குவதற்கு அந்த பிரகடனங்கள் முன்வைக்கும் விடயங்கள் இவைதான். அரசியல்வாதியாகும் ஒருவர் நியாயமான முறையில் பணம் சம்பாதிப்பவர், அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தாதவர், இலஞ்சம அல்லது ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகாதவர், மக்களால் இலகுவாக நெருங்கக் கூடியவராக இருத்தல், சுற்றாடலுக்கு தீங்கு ஏற்படுத்தாதவராக இருத்தல், சமூக சேவையாற்ற சிறந்தவர், சகல இன, மத, கலாசாரங்களுக்கும் மதிப்பளிப்பவர், பெண்களுக்கு அரசியல் பங்கேற்கும் பொருட்டு பாலின சமத்துவத்தை ஊக்குவிப்பவர் போன்ற தகுதிகளை உடையவராக இருத்தல் வேண்டும். 

மேற்படி, பிரகடன உள்ளடக்தை பார்க்கும் போது இப்போதைய அரசியல் கலாசாரத்தில் இவை இல்லை அல்லது குறைவு என்ற காரணத்தினாலேயே இவற்றைக் கொண்டு வருவதன் மூலம் நல்லாட்சியை உருவாக்க முடியும் என சிவில் அமைப்புக்கள் நம்புவதாகக் கொள்ளலாம்.

இந்த தூய அரசியல் முன்னெடுப்புடன் தொடர்புடையதான இரண்டாவது மாநாடு கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த மண்டபத்தில் 2016 மே இடம்பெற்றபோது, மேற்குறிப்பிட்ட மேல்மட்ட அரசியல் வாதிகளுக்கு மேலாக பாராளுமன்ற உறுப்பினர்கள் 26பேர் இந்த M12M இயக்கத்துடன் இணைந்திருப்பதுடன் தூய அரசியலை முன்னெடுக்க தயாராக இருப்பதாக ஜனாதிபதி முன்னிலையில் உறுதிமொழியும் எடுத்துக்கொண்டனர்.

அதற்கமைய இவ்வருடம் மார்ச்சு மாதம் முழுவதையும் இந்த தூய அரசியல் முன்னெடுப்புக்கான பிரசார பணிகளை முன்னெடுத்தது. ஆரம்ப வைபவம் சுதந்திர சதுக்கத்தில் ஆரம்பமாகியது.

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மக்கள் எவ்வாறு வாக்களிக்க வேண்டும் என்பது தொடர்பான பிரசாரத்தை M12M நாடு முழுவதும் முன்னெடுத்தப்போது பல்வேறு மாவட்டங்களிலும் வரவேற்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டுக்கான இறுதி நிகழ்வு கடந்த7ஆம் திகதி பண்டாரநாயக்க ஞாபகார்த்த மண்டபத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்றது.

இவ்வாறான பல்வேறு முன்னெடுப்புக்களுடன் ஒப்பிடுகின்ற போது அடிமேல் அடியடித்தால் அம்மியும் நகரும் என்பதுபோல தூய அரசியலை முன்னெடுப்பது பற்றி மேர்வின் சில்வா பேசுகின்ற நிலை வரவேற்கக் கூடியதே. ஆனால், அவர் கூறுவதைப்போல வியாபாரம் செய்வதை நிறுத்தவிட்டு அரசியல் செய்வதால் மட்டும் அரசியலை தூய்மைப்படுத்தி விட முடியாது. நல்ல வியாபாரிகள் அரசியல்வாதிகளாக இருக்கும் போது இதே நாட்டில் தான் அரசியல் வியாபாரிகளும் இருக்கின்றார்கள். 

சுங்கத்தீர்வையற்ற வாகனங்களை இறக்குமதி செய்ய தடை விதிப்பதனால் மட்டும் தூய அரசியல் வாதிகளை உருவாக்கிவிட முடியாது. சாதாரணமாக சுமார் 100 ஊழியர்களைக் கொண்ட நிறுவன நிறைவேற்று அதிகாரிக்கு மாதாந்த சம்பளத்துடன் வழங்கப்படும் வாகன தங்குமிட வசதிகளையும் இவ்விடத்தில் ஒப்பிட்டுக் கூற வேண்டும்.

எனவே, லட்சக்கணக்கிலும் ஆயிரக்கணக்கிலும் வாக்குகளைப் பெற்று அவர்களுக்கு சேவையாற்ற வேண்டிய பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு வாகனம் ஒன்றை வழங்குவதும் நல்ல சம்பளத்திட்டம் ஒன்றை வழங்குவதும் அவசியம். வாகனத்திற்காக சுங்கத்தீர்வை சலுகை வழங்கும் முறை நிறுத்தப்பட்டு பாராளுமன்ற உறுப்பினர் ஆனதும் அவருக்கு வாகனத்தை வழங்கும் நடைமுறை அறிமுகப்படுத்தப்படல் வேண்டும். பதவி காலம் முடிந்தவுடன் திரும்ப பெற்றுவிட வேண்டும்.

தீர்வை சலுகையை வைத்துக்கொண்டு வாகனம் வாங்க முதலீடு செய்ய முடியாதவர்கள் அந்த தீர்வை சான்றிதழை விற்று வாகனம் வாங்க முயற்சிக்கும் போதே அது ஊழலாகப் பார்க்கப்படுகின்றது. அது மாத்திரமன்றி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான சம்பளத் திட்ட முறைமை பற்றியும் இங்கு குறிப்பிட வேண்டும்.

பராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கான அடிப்படைச் சம்பளம் 54,000 ரூபா தான். 2017ஆம் ஆண்டு அவர்களுக்கு வருகைக் கொடுப்பனவு 500 இல் இருந்து 2500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 8 நாள் அமர்வு என்றால் 20ஆயிரம் மேலதிகமாகக் கிடைக்கும். ஆக 74,000 ரூபா எரிபொருள். தூரங்களுக்கு அமைவாக சராசரி 50000 ரூபா வழங்கப்படுகின்றது. மொத்தம் 125000 ரூபா. இது ஒரு நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரிக்கு வழங்கப்படும் தொகையை விட மிகக் குறைவானதே.

இதனை வைத்துக்கொண்டு அவர்களது தொகுதியில் இடம்பெறும் பலதரப்பட்ட விடயங்களுக்கு செல்ல வேண்டும். இதனையெல்லாம் சமாளிக்க முடியாதவர்கள் அடுத்து யோசிப்பது வியாபாரம். நேரடியாக கடைபோட்டுக்கொண்டு உட்கார்ந்து செய்யும் வியாபாரத்தையும் இவர்கள் வேலைப்பளுவால் முன்னெடுக்க முடியாது. ஆகவே இவர்கள் நாடும் வியாபார முறைமை கமிஷன் கடைசியாக மக்களின் அபிவிருத்திக்காக முன்னெடுக்கப்படும் வீதியமைப்பு முதல் வீடமைப்பு சகல அபிவிருத்தி திட்டங்களில் இருந்தும் பெற்றுக்கொள்ளும் நிலைக்குத் தள்ளுகிறது. 

இதனை கேள்விபட்டு இலகுவான வியாபாரமாக அரசியலைத் தெரிவு செய்யும் கலாசாரம் தோன்றுகிறது. இப்படி சீர்கெட்டு நிற்பதுதான் இந்த நாட்டின் அரசியல்.

எனவே, வியாபாரி அரசியல்வாதியாவதை தடுப்பதற்கு முதலில் 'அரசியல் வியாபாரம் நிறுத்தப்படல் வேண்டும். முறைமை மாற்றப்படல் வேண்டும். அதற்கு சிங்கப்பூர் போன்ற நாடுகளில் நல்ல சம்பளம் வழங்கி வேறு தொழில் செய்ய முடியாதவாறு முன்னெடுக்கப்படும் முறைமைகள் பற்றி நம்நாடும் சிந்திக்க வேண்டியுள்ளது.

மேர்வின் சில்வாவே ஆரம்பிக்கவுள்ள தனது புதிய கட்சியில் இதனை சிந்தித்தால் ஏனையோர் சிந்திக்க என்ன தயக்கம்.

நன்றி - வீரகேசரி

Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates