(தேங்காய் எண்ணையில் இருந்து முள்ளுத்தேங்காய் எண்ணைக்கு - பாகம் 14)
வன்னி மலையக மக்கள் பற்றி கணிசமாக பேசிவிட்ட நிலையில் கடந்த வாரம் பதுளை பக்கம் சென்றிருந்தேன். மீணடும் வன்னிநோக்கி திருப்பிவிட்டது ஒரு தொலைபேசி அழைப்பு:
‘உங்களைப் பற்றியும் எழுதியிருக்கிறாங்க’ நம்ம மக்கள் என்டால் இவுங்களுக்கு கேவலமாக போச்சு. நாங்க பிறப்பு சான்றிதழ் இல்லாத ஆட்களா? அப்பா பெயர் தெரியாதவர்களா? என அழைப்பெடுத்தவர் பதற்றப்பட்டார். யார் என்றேன். ‘தமிழக்கவி’ எனறார் அன்பர். தமிழ்க்கவியா? என்றேன் ஆச்சரியமாக ஆமாம், நீங்கள் கட்டாயம் படிக்க வேண்டும். முகவரி கொடுங்கள் அனுப்பிவைக்கிறேன் என்றார் அன்பர். வாகனம் ஓட்டிக்கொண்டு வந்ததால் சரி முகவரி அனுப்புகிறேன் தபாலில் சேருங்கள் என தொடர்பைத் துண்டித்தேன். மனது திரும்பவும், திரும்பவும் தமிழக்கவியா..? தமிழ்க்கவியா? எனக் கேட்டுக்கொண்டே வந்தது.
தமிழ்க்கவி அம்மா தொடர்பில் தெரிந்த சில விடயங்கள் அறிமுகமாக. இவர் விடுதலை புலிகள் இயக்க முன்னாள் போராளி.அவர்களின் ஊடகப்பிரிவில் கடமையாற்றியவர். வசதிகளற்ற சூழலில் வீடியோ கெமரா கையாள்வது வரை நிகழ்த்திக் காட்டியவர். வெளிப்படையாக பேசும் சுபாவம் உள்ளவர். புலிகளுடன் இருந்துகொண்டே அவர்களையும் விமர்சித்தவர். மட்டக்களப்பு இலக்கிய சந்திப்பில் அவரது உரை கேட்டு அசந்துபோனேன். யுதார்தமாக பேசுபவர். வன்னியில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தீவிரமாக செயற்பட்டுக்கொண்டிருக்கும் செயற்பாட்டாளர். Thamayanthi KS என்ற முகநூல் கணக்கு அவருடையது.
கிளிநொச்சி மாவட்டம் கரைச்சி பிரதேச செயலகத்தினால் ஆண்டுதோறும் இதழ் ஒன்று வெளியிடப்பட்டு வந்துள்ளது. தலைப்பு : கரை எழில்.
2016 ஆம் ஆண்டுக்கான இதழ் கடந்தவாரம் வெளிவந்திருகக்pறது. இதில் முதலாவது கட்டுரையே ‘கிளிநொச்சியும் மலையக மக்களும்’. பொதுவாக இலங்கைக்கு மலையக மக்கள் வந்த விதம் குறித்தும் கிள்நொச்சியில் வந்து குடியேறிய விதம் குறித்தும் பேசுகிறது கட்டுரை. தலைப்பில் கூறப்ப்ட்டவாறு இல்லாமல் மலையக மக்கள் பற்றிய தகவல் தேடல்களாக அதிகளவும் கிள்நொச்சியில் அவர்கள் வாழ்வு பற்றி மிகக் குறைவாகவும் பதிவு செய்வது கட்டுரையின் பலவீனம். அது ஒரு புறம் இருக்க கட்டுரையில் மூன்று விடயங்கள் சர்ச்சைக்குரியதாக பார்க்கப்படுகின்றது.
- மலையக மக்களுக்கான பிறப்பு சான்றிதழ் பற்றியது.
- வன்னியில் மலையகப் பெண்களின் பாலியல் நடத்தை பற்றியது.
- போராட்ட இயக்கத்தில் தேசப்பற்றில்லாமல் கௌரவத்துக்காக மட்டுமே வன்னி மலையகத்தவர்கள் இணைந்தார்கள் என்பது.
இந்தக்கட்டுரையை வாசிக்கும் வரை தமிழக்கவி அம்மாவிடம் நான் தொடர்பை ஏற்படுத்த முயலவில்லை. உண்மையில் அவர் என்ன சொல்ல வருகிறார் என்பது தெரியாமல் அவருடன் விவாதிக்க முடியாது. ஒருவாறு தகவல் கிடைத்து ஒரு இராப்பொழுதுக்குள் கட்டுரையை தேடி எடுத்து படித்தாயிற்று. அந்தக் கட்டுரையின் மொழிநடை குழப்பகரமாகவே உள்ளது. அதனை வாசகர்கள் நமதுமலையகம்.கொம் இணையத்தில் முழுமையாக வாசிக்கலாம்.
மலையக மக்களின் பிறப்புச் சான்றிதழ் பற்றி உண்மை நிலைவரம் என்ற ஒன்று இருக்கிறது. முன்பு தோட்டத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு தோட்ட நிர்வாகம் பிறப்பு அத்தாட்சி அட்டை (Birth card) என்ற ஒன்றை வழங்குவார்கள். அது தற்காலிகமானது. அதனடிப்படையில் கச்சேரியில் பிறப்பு சான்றிதழைப் பெற்றுக்கொள்ள வேண்டும். இது பெரும்பாலும் நடப்பதில்லை. பாடசாலை அனுமதி கூட பிறப்பு அட்டை அடிப்படையில் நிகழ்ந்துவிடும். இந்த பிறப்பு அட்டையுடனேயே இருந்துவிடுபவர்கள் கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை எழுத விண்ணப்பிக்கும்போதுதான் அரசாங்க பிறப்புசான்றிதழுக்கான தேவை எழும். அப்போதுதான் அதனைப் பெற்றுக்கொள்ள அங்காலாயப்பார்கள். நான் உட்பட. இதனை ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றிலும் பகிரங்கமாக சொல்லியுள்ளேன். எனவே வன்னி மலையகத் தமிழர்களுக்குள்ளும் இந்த பிறப்பு சான்றிதழ் இல்லாத நிலை இருக்க வாய்ப்புண்டு. இந்தப் புரிதல் இல்லாமல் மலையக மக்களின் பிறப்பு சான்றிதழ் பற்றி எழுதவந்தபோதுதான் சர்ச்சை வந்திருக்க கூடும்.
//தந்தை பெயர் தெரியாத குழந்தைகள் உள்ளனர். இவர்களுக்க பிறப்பு அத்தாட்சிப் பத்திரங்கள் இல்லாதவர்கள் அதிகம். ஒரு குடும்பத்தில பதினைந்து பதினெட்டு வயதிலுள்ள பிள்ளைகளுக்கு பிறப்பு அத்தாட்சி இல்லை என்ற போது அப்பிள்ளைகளின் தாய் தந்தை இருவருக்குமே இல்லை என்பதை அறிந்த போது திடுக்கிட்டோம்.//
ஏன கட்டுரையாளர் குறிப்பிடுவதற்கு முன்பதாக ‘இவர்களுது பெண்கள் பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர்’ என்ற ஆழமற்ற வரிகளுடன் வசனம் பிறப்பு சான்றிதழ் பற்றி பேச விழைந்தபோது சர்ச்சைக்குரியதாக மாறுவதைத் தவிர்க்க முடியவில்லை.
‘எம்மிடையே வாழ்ந்துகொண்டிருக்கும் இந்தக் குடும்பங்களில் இருந்து போராடப் போனவர்கனும் அதிகம் காரணம் தேசப்பற்றல்ல அவர்களுக்கு ஒரு சமூக அந்தஸ்து தேவைப்பட்டதுதான்’ எனபதுவும் சர்ச்சையை எழுப்பியுள்ளது. இதற்கு முன்னதான அத்தியாயங்களில் போராடப்போனவர்கள் பற்றி பதிவுகள் இடம்பெற்றுள்ளது. இறுதியுத்ததத்தில் அதிகம் உயிரிழந்தவர்கள் மலையக மக்கள் என்ற கணிப்பு இருக்கும்போது ‘இறக்கப்போகும்போது என்ன் சமூக அந்தஸ்து’ எனும் கேள்வி எழத்தான் செய்கிறது. இந்த கருத்துத் தொடர்பில் எழுத்தாளர் அன்னம் சிந்து ஜீவமுரளி இட்டிருக்கும் முகநூல் பதிவு அவதானத்தைப்பெற்றது.
/கோவக்காரரை போட்டுத்தள்ளவும் காதலிச்சப் பெட்டையின்ரை தேப்பனையும் அண்ணனையும் போட்டுததள்ளவும், காணிச்சண்டையை வெல்லவும் இயக்கத்துக்குப் போன் ஆக்கள் எல்லாம் மலையக மக்களுக்கு தேசப்பற்று இல்லாமல் தான் போராடப் போனவை எண்டு சொன்ன உடனை ரோசம் வேற பொத்திக்கொண்டு வருகுதாம்./
வன்னி வாழ் மலையகத் தமிழ் மக்கள் கட்டுரையின் இந்தப் பகுதி குறித்து விசனத்துடன் இருக்கின்றனர். அவர்களுக்குள் ஒரு எழுச்சியை ஏற்படுத்தியிருப்பதுபோல தெரிகிறது. அந்த விசன வெளிப்பாடு தொடர்பில் கட்டுரையாளர் உரிய விளக்கம் அளிக்க வேண்டியுள்ளது.
யாழ்ப்பாண மக்கள் தொடர்பில் மலையகத் தமிழர்களுக்கு உள்ள பொதுவான அபிப்ராயம் என்னவெனில் அவர்கள் தங்களை தரக்குறைவானவர்களாகவே பார்க்கிறார்கள் என்பது. அது 90 சதவீத உண்மையும் கூட. எஞ்சிய 10 வீதமானோர் மலையகத் தமிழ் மக்கள் மீது அனுதாபம் கொண்டோர். அல்லது அவர்களுது உரிமைக்காக குரல்கொடுப்போர் அவர்களை அங்கீகரிப்போர் என கொள்ளலாம். என்னைப்பொருத்தவரைக்கும் தமிழக்கவி அம்மா இந்த 10 சதவீதத்திற்குள்தான் இருந்திருக்கிறார். இந்தக்கட்டுரையின் பெரும்பாலான பகுதி அதனையே காட்டுகின்றது. எனினும் மேலே குறிப்பிட்ட சில பகுதிகள் மாத்திரமே முகநூலில் விவாதத்துக்கு உள்ளாகியுள்ளது. குறித்த கட்டுரை அவராக எழுதவில்லை. இதற்கு பின்னணியில் அரசியல் காரணம் இருக்கிறது என வாதிட்டவர்களும் உள்ளனர்.
வெளிவந்த இந்த இதழ்களின் பிரதிகளைத் திரும்பப் பெறுவது என்றும் திருத்தத்துடன் பிரசுரம் செய்வது என்றும் தற்போதைய பிரதிகள் ரத்துச் செய்யப்படல் வேண்டும் என்றும் தமிழ் மிரர், தமிழ் வின், தேசம் போன்ற இணையத்தளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. எழுத்தாளர் கருணாகரன் இவ்வாறு குறிப்பிடுகிறார்.
‘கட்டுரையாளரும் மலர்க்குழுவும் இது குறித்து வருத்தம் கொண்டிருப்பதாகவும் தகவல்.ஆனால் இந்த வருத்தத்தைச் சம்பந்தப்பட்ட தரப்பினர் பொதுவெளியில் தெரிவித்திருப்பதாகத் தெரியவில்லை’.
ஊடகவியலாளர் சரவணனும் குறிப்பிடுவதுபோல
‘தமிழக்கவியை அறிந்தவர்கள் அவர் அவ்வாறு மலையக மக்கள் மீது வெறுப்புணர்ச்சிகொண்டிருக்கக் கூடியவர் அல்லர் என்பதை அறிவார்கள்’ அவர் பக்க கருத்தை அறிவது இந்த இடத்தில் முக்கியம்’
சரவணின் கருத்தில் உள்ள விடயத்திற்றாக நாம் அடுதத வாரம் வரை காத்திருக்க வேண்டியுள்ளது. இந்தப் பத்தியின் அத்தியாயம் 14 புதுவருட பிறப்பை ஒட்டி வழமையான காலத்திலும் முன்கூட்டியே எழுதப்படுவதால் அவரது கருத்துக்கள் இங்கே இடம்பெறவில்லை. அடுத்த வாரத்திற்குள் அவரது விளக்கம் கிடைக்கும் பட்சத்தில் அதனையும் சேர்த்துக்கொள்வோம்.
கட்டுரையில் ஆங்காங்கே மலையக மக்கள் எவ்வாறு காணிகளை சுத்தமாக்கி தொழில்களைச் செய்தார்கள் என்பதுபோன்ற பதிவுகள் இடம் பெற்றுள்ளன. அது முள்ளுத்தேங்காய் தொடரில் பேசப்பட்டுக்கொண்டு வந்த வன்னி மலையகத்தவர்களின் தொழில் நிலைமைகள் பற்றிய வாசிப்பினை அதிகமாக்கியுள்ளது. எது எவ்வாறெpனுனினும் வெளிவந்த கரை எழில் ஒரு கறையை ஏற்படுத்திச்செல்வதனைத் தவிர்க்க முடியவில்லை. மலையக மக்கள் தொடர்பான யாழ்ப்பாண மனநிலை இங்கு விவாதத்துக்கு உள்ளாகியுள்ளது.
கட்டுரையில் என்னைப்பற்றியும் எழுதயிருபடபதாக அன்பர் சொன்னதை தேடிச்சென்றேன். கட்டுரை இறுதி இவ்வாறு முடிகின்றது.
‘இதே கிளிநொச்சியில் இடம் பெய்ர்ந்து வந்து கல்விகற்ற ஒரு சிறுவன் இன்று பாராளுமன்றில் தன்மக்களுக்காக குரல் கொடுக்கிறார் என்பது பெருமை’
இதில் கட்டுரையாளர் குறிப்பிடுவது என்னையெனில், இந்த சந்தர்ப்பத்தில் இரண்டு விடயங்களைப் பதிவு செய்ய விரும்புகிறேன்.
- அந்த சிறுவன் நான் என்றால் கிளிநொச்சியில் கல்வி கற்ற 83-86 காலம் சிறுவனது பள்ளிக்காலத்தில் மகிழ்ச்சியானதாக இருக்கவில்லை. அந்த நாளைய ஒடுக்குமுறை பற்றி இதற்கு முன்னர் எழுதியிருக்கிறேன்.
- ‘தன்மக்களுக்காக குரல் கொடுக்கிறார்’ என்றால் அது வன்னியில் வாழும் மலையகத் தமிழருக்காகவும்தான்.
(உருகும்)
நன்றி - சூரியகாந்தி
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...