1972 யாப்பு தமிழ் மக்களுக்கு ஒரு அடிமைச் சாசனம் என்று கூறிய செல்வநாயகம் அவர்கள் குறைந்தபட்ச மாற்றங்களையாவது செய்யக்கோரி கூட்டணி சார்பில் முன்வைத்த 6 அம்சக் கோரிக்கையை அரசாங்கம் அலட்சியப்படுத்தியது. அந்த சமயத்தில் 6 அமசக் கோரிக்கை என்பது இன்னொரு வகையிலும் பிரசித்தம் பெற்றிருந்தது. பங்களாதேசின் விடுதலைக்கு முன்னர் முஜிபுர் ரகுமான் 6 அம்ச கோரிக்கையை முன்வைத்துத் தான் அரசியலமைப்பு மாற்றத்தைக் கோரியிருந்தார் என்கிறார் ஏ.ஜே.வில்சன்.
புதிய அரசியலமைப்பின் கீழ் சத்தியப்பிரமாணம் எடுக்க வேண்டிய நிலையும் தோன்றியது. “இலங்கைக் குடியரசுக்கு விசுவாசமாக இருக்கவும், இலங்கைக் குடியரசின் அரசியலமைப்பின்படி ஒழுகுவதாகவும் சத்தியப்பிரமாணம் செய்கிறேன்.” என்று உறுதியளிக்கவேண்டும். இந்த யாப்பையே முற்றுமுழுதாக எதிர்த்தவர்களால் அந்த யாப்பின்படி ஒழுகுவதாக சத்தியப்பிரமாணம் செய்வது எப்படி என்கிற குழப்பம் தமிழர் தரப்புக்கு நேர்ந்தது. இதனை செய்யாது போனால் தேசிய அரச சபைக்கு செல்லவும் முடியாது.
தமிழரசுக் கட்சியின் இளைஞர்கள் பலரின் பலத்த எதிர்ப்பின் மத்தியில் “சத்தியப்பிரமாணம் செய்து அரச சபைக்குப் போவது” என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன் பிரகாரம் 04.07.1972 தமிழரசுக் கட்சியினர் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர்.
இந்த செயலானது இந்த யாப்பை தமிழர்கள் ஏற்றுக்கொண்டார்கள் என்று வியாக்கியானப்படுத்தப்பட்டுவிடும் என்று கடும் கோபத்துக்கு உள்ளானார்கள் இளைஞர் அணியினர். தமிழ் மக்களின் எந்த அபிலாஷைகளையும் உள்வாங்காத இந்த அரசியலமைப்பை முற்றாக நிராகரித்து சட்டவாக்க சபையிலிருந்து வெளியேறி வெகுஜனப் போராட்டங்களை தொடங்க வேண்டும் என்று அவர்கள் தலைமைக்கு அழுத்தம் கொடுத்தனர்.
அரசாங்க தரப்பும் இந்த சூழலை தமக்கு சாதகமாக எடுத்துக்கொண்டது. தமிழ் பிரதிநிதிகள் அரசியலமைப்பை ஏற்றுக்கொண்டு விட்டார்கள் என்று பிரச்சாரம் செய்தது.
செல்வநாயகத்தின் இராஜினாமா
இந்த நிலைமைகளை கருத்திற்கொண்டு பதவியேற்று மூன்றே மாதத்தில் எஸ்.ஜே.வி.செல்வநாயகம் 03.10.1972 அன்று தேசிய அரசு சபை உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்தார். தமிழ் மக்களின் அபிலாசைகளை அறிந்துகொள்ளும் வகையில் இதனால் வரப்போகும் இடைதேர்தல் முடிவுகள் அரசாங்கத்துக்கு பதில் கொடுக்கட்டும்; தமிழ் மக்கள் தமது அபிலாசைகள் என்ன என்பதை அந்த தேர்தலின் மூலம் புரியவைப்பார்கள் என்றார் செல்வநாயகம். இதன் மூலம் காங்கேசன்துறை தொகுதியில் இடத்தேர்தலை ஏற்படுத்தினார்.
“இனி, முடிவு தமிழ் மக்களுடையதாகும். நடைபெற்ற விடயங்களைக் கருத்திற்கொள்ளும் போது, என்னுடைய கொள்கையானது, இலங்கை தமிழர்களுக்கு தாம் அடிமை இனமாக இருக்கப் போகிறார்களா, சுதந்திர மக்களாக இருக்கப் போகிறார்களா என அவர்களுடைய எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் உரிமை இருக்கிறது. இந்த நிலைப்பாடு தொடர்பில் அரசாங்கம், என்னோடு மோதட்டும். நான் தோற்றால் என்னுடைய கொள்கையை நான் கைவிட்டுவிடுகிறேன். அரசாங்கம் தோற்குமானால், அது துன்னுடைய கொள்கையையும் அரசியலமைப்பையும் தமிழ் மக்கள் ஆதரிக்கிறார்கள் என்று சொல்லுவதை நிறுத்த வேண்டும்” என்று அறிவித்தார். இந்த இராஜினாமா தமிழ் இளைஞர்கள் மத்தியில் பலத்த வரவேற்பைப் பெற்றது.
இந்த அறிவிப்பை யாழ்ப்பாணத்தில் செல்வநாயகம் செய்தபோது ஒரு இளைஞன் அவருக்கு இரத்தத் திலகமிட்டான்.”நாம் இந்த நாட்டிலே மரியாதையோடு வாழ வேண்டுமென்றால், நாம் இந்த அரசியலமைப்பை எதிர்க்க வேண்டும். இல்லையென்றால் நாம் அடிமைகளாக வாழ வேண்டியது தான்”
என்று அக்கூட்டத்தில் உரை நிகழ்த்தினார்.
எப்போதோ கிளர்ந்திருக்க வேண்டிய தமிழ் இளைஞர்களின் கட்டுப்படுத்திக் கட்டிப்போட்டவர் செல்வநாயகம் என்றே கூறவேண்டும். அவர் ஒரு தீர்க்கதரிசி மாத்திரமல்ல, எளிமையும், பொறுமையும், ராஜதந்திரமும் மிக்க தலைவராகவே திகழ்ந்தார். தமிழ் மக்களை ஜனநாயகப் பாதையில் வழிநடத்தியவர். ஜனநாயகப் போக்கை தனது வாழ் நாள் காலம் முழுவதும் நம்பி, நடந்து ஏமாந்தவர்.
தொண்டமான் கொடுத்த பட்டம்
தொண்டமான் ஒரு முறை கூறினார் “செல்வநாயகம் தான் தமிழ் மக்கள், தமிழ் மக்கள் தான் செல்வநாயகம்” 1974 தமிழரசுக் கட்சியின் வெள்ளிவிழாவின் போது செல்வநாயகத்துக்கு “மூதறிஞர்” என்று பட்டமளித்தார் தொண்டமான்.
“நமது உரிமைகளை இழக்கச் செய்த இந்த புதிய அரசியலமைப்பை நாங்கள் ஏற்றுக்கொள்வோமாயின் நமது உரிமைகள் நிரந்தரமாக அழித்தொழிக்கப்பட்டுவிடும். நமது எதிர்கால சந்ததியினர் நம்மை சபிப்பார்கள்.” என்றார் தொண்டமான்.
இடைத்தேர்தலை நடாத்தி மக்கள் கருத்தை அறியத் தைரியமற்ற அரசாங்கம் அவசரகால சட்டத்தைப் பயன்படுத்தி அந்தத் தேர்தலை நடத்தாமல் இரண்டு வருடங்களாக இழுத்தடித்தது. நியமன தினத்தை பல தடவைகள் பின்போட்டுக்கொண்டே வந்தது. 1975 வரை காங்கேசன்துறை இடைத்தேர்தலை நடத்தவே இல்லை. சட்டசபையில் எஸ்.ஜே.வி. செல்வநாயகத்தின் சாத்வீகமான உரிமைக் குரல் இந்த காலப்பகுதியில்ஒலிக்கவில்லை. அதேவேளை இந்த இடைவெளியில் தமிழர்களை நசுக்கும் வேலைத்திட்டத்தின் விளைவாக தமிழ் இளைஞர்கள் மத்தியில் தீவிர உணர்வு வளர்ந்தெழுந்தது.
இதற்கிடையில் கவிஞர் காசி ஆனந்தன், வண்ணை ஆனந்தன், மாவை சேனாதிராஜா, இ.போ.ச.சுப்பிரமணியம் போன்ற முக்கிய தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்கள் பலர் கைதானார்கள். தமிழர் பிரதேசங்களுக்கு விஜயம் செய்த அரசாங்க அமைச்சர்களுக்கு எதிராக கறுப்புக் கொடி போராட்டம் தொடர்ந்தது. அதிலும் பல இளைஞர்கள் கைதானார்கள். அவர்களில் பலர் ஆண்டுக் கணக்கில் சிறையிருந்தார்கள். அவரசர கால சட்டத்தின் கீழ் அவர்கள் தண்டிக்கப்பட்டார்கள்.
புத்தூர், அச்சுவேலி, அளவை, கரவெட்டி போன்ற பிரதேசங்களில் இயங்கி வந்த பௌத்த – சிங்கள பாடசைகளுக்கு அரசாங்க அங்கீகாரம் கிடைக்கப்பட்ட விடயம் பற்றி ஏற்கெனவே குறிப்பிட்டிருந்தேன். 1973 ஆம் ஆண்டின் முற்பகுதியில் புத்தூர் பாடசாலைக்கு சிங்களத் தலைமை ஆசிரியரை நியமித்து அங்கு தமிழ் மாணவர்களுக்கு சிங்களம் போதிக்க முற்பட்டது அரசாங்கம். அந்த சிங்களப் பாடசாலையின் அருகில் 06.04.1973 “சட்ட மறுப்பு பாடசாலை” திறக்கப்பட்டது.
அதன் பொறுப்பாளர்களாக செல்வநாயகம், மு.சிவசிதம்பரம், வி.தர்மலிங்கம் புத்தூர் ஆனந்தன், அமிர்தலிங்கம் ஆகியோர் நியமிக்கப்பட்டார்கள். இதன் விளைவாக சிங்களப் பாளர் வகுப்பில் இரு பிள்ளைகளே எஞ்சியிருக்க ஏனைய பிள்ளைகள் புதிய தமிழ் பாடசாலைக்கு ஓடி வந்து விட்டார்கள். இதன் விளைவாக ஓராண்டு முடிவதற்குல் தமிழ்க் குழந்தைகளுக்கு சிங்களத்தைக் திணிக்கும் முயற்சி அரசாங்கத்தால் கைவிடப்பட்டது.
சுயாட்சியே தீர்வு
தமிழரசுக் கட்சியின் 12 வது மாநாடு மல்லாகத்தில் 1973செப்டம்பர் 7,8,9ஆம் திகதிகளில் நடைபெற்றபோது அதன் தலைவராக அமிர்தலிங்கம் தெரிவுசெய்யப்பட்டார். தமிழர் கூட்டணியின் ஒரு அங்கமாக தமிழரசுக் கட்சி இயங்கும் என்கிற தீர்மானத்தை அங்கு நிறைவேற்றினர். அதைத் தவிர வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
“இந்நாட்டுப் பெரும்பான்மைத் தேசிய இனத்தின் ஒத்துழைப்போடோ, சம்மதத்தொடோ தமிழ்த் தேசிய இனத்தின் உரிமைகளை நிலைநாட்டுவது சாத்தியமில்லை என்று கருதி தமிழ்த் தேசிய இனம் தம் பாரம்பரியமான தாயகத்தில், தமது சுயாட்சி உரிமையை நிலை நாட்டுவதே ஒரே வழி”என்று தமிழர் கூட்டணி தீர்மானித்தது. அக்கூட்டணியின் தலைவர்கள் அனைவரும் முதன் முறையாக ஒரேமேடையில் தோன்றி உரையாற்றினார்கள். (மேலதிக தீர்மானங்களை பெட்டிச் செய்தியில் பார்க்க)
காங்கேசன்துறை இடைத்தேர்த்தலை நடத்தத் தவறிய அரசின் ஜனநாயக விரோத நடவடிக்கைக்கு ஆட்சேபணைத் தெரிவிக்கும் வகையில் 2.10.1973 மாவிட்டபுரத்தில் ஆயிரத்துக்கும் மேற்ப்பட்ட ஆண்களும் பெண்களுமாக ஒருநாள் உண்ணாவிரத்தத்தை மேற்கொண்டார்கள்.
அந்த தேர்தல் முடிவுகள் பற்றி பின்னர் பார்ப்போம். அதற்கிடையில் இந்த அரசியலமைப்பு நிகழ்த்திய அநியாங்களை சற்று விபரிப்போம்.
குடியேற்றங்களின் விளைவு
இந்த அரசியலமைப்பின் கீழ் இருந்த சட்ட வாய்ப்புகளைப் பயன்படுத்தி “சிங்களமயம்” விரிவுபடுத்தப்பட்டது. திருகோணமலையில் ஏற்கெனவே தொட்டங்கப்பட்ட திட்டமிட்ட குடியேற்றப் பகுதிகளில் உதவி அரசாங்க அதிபர் பிரிவுகள் உருவாக்கப்பட்டன. அங்கெல்லாம் அரச கருமங்கள் யாவும் சிங்கள மொழியில் மேற்கொள்ளத் தொடங்கின. அத்தோடு நில்லாமல் திருமலை மாவட்டத்துக்கான அரசாங்க அதிபராகவும் சிங்களவரை நியமித்தது அரசாங்கம். அதன் மூலம் இனவாத அரசின் மேலதிக வேலைத்திட்டங்களுக்கு அவரின் ஒத்துழைப்பை போதிய அளவு பெற்றுக்கொண்டது.
வடக்கு கிழக்கு பகுதிகளுக்கு வெளியில் நூறாண்டுகளுக்கும் மேலாக தமிழ் மக்கள் செறிவாக வாழ்ந்த மலையகம், மேல்மாகாணம் போன்ற பகுதிகளில் கூட உதவி அரசாங்க பிரிவுகள் உருவாக்கப்படாத நிலையில் குடியேற்றம் நிகழ்ந்த இடங்களில் ஒரு சில ஆண்டுகளிலேயே சிங்களவர்களுக்கு உருவாக்கிக் கொடுக்கப்பட்டன. அந்த குடியேற்றங்களை பின்னர் பலப்படுத்துவதற்காக அவ் உதவி அரசாங்க பிரிவுகளை அடிப்படையாக வைத்து பிரதேச சபைகளை உருவாக்கி குடியற்றத்திட்டங்களை மேலும் பலப்படுத்தியது அரசாங்கம்.
திருகோணமலை வடக்கையும் கிழக்கையும் இணைக்கும் கேந்திரம் மட்டுமல்ல தமிழர் தாயகத்தினை வலுப்படுத்தும் இதயம் அது. வடகிழக்கின் தலைநகராக கொள்ளப்பட்டது. இனவாத அரச தலைவர்கள் தமது இலக்காக திருமலையை பறிப்பது, அல்லது சின்னபின்னப்படுத்துவது என்பதையே கொண்டிருந்தனர். அதனை செய்தும் காட்டினர்.
குடியேற்றங்கள் மூலம் பெருகிய சிங்கள மக்கள் வாழும் பகுதிகளை இணைத்து சேருவில என்கிற ஒரு புதிய தேர்தல் தொகுதியை உருவாக்கினர். எகேனவே இரட்டை அங்கத்தவர் தொகுதியாக இருந்த மூதூர் தொகுதி ஒற்றை அங்கத்தவர் தொகுதியாக ஆக்கப்பட்டது. அதாவது சிங்களவர்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கும் அதேவேளை, அங்கிருந்த தமிழர்களின் பிரதிநிதித்துவத்தை குறைப்பதில் வெற்றிகண்டனர். சேருவில, மூதூர், பகுதிகளில் உள்ள தமிழ் மக்கள் தமது பிரதிநிதித்துவத்தை இப்படித்தான் இழந்தனர். திருமலை மாவட்டத்தில் அதுவரை இரு தமிழர்களும், ஒரு முஸ்லிம் பிரதிநிதியும் தெரிவாகிவந்த நிலை மாறி ஒரேயொரு தமிழரே தெரிவாகும் நிலை தோன்றியது.
தேசிய அரசுப் பேரவையின் பிரதிநிதித்துவம் 151த்திலிருந்து 168ஆக அதிகரிக்கப்பட்ட போதும் அதனால் தமிழர்களின் பிரதிநிதித்துவத்தில் உரிய நியாயம் கிடைக்கவில்லை.
அலங்காரமான அடிப்படை உரிமை
அரசாங்க வேலைவாய்ப்பு விடயத்திலும் இன ரீதியான பாரபட்சம் தலைதூக்கியது. அதனைத் தடுப்பதற்கு அரசாங்க சேவை ஆணைக்குழுவோ, நீதிச்சேவை ஆணைக்குழுவோ இருக்கவில்லை. புதிய அரசியலமபீன் மூலம் அந்த அதிகாரங்கள் அமைச்சரவைக்கு உரித்தாக்கப்பட்டிருந்ததால் அமைச்சர்களின் தான்தோறித்தனத்தனத்துக்கு அது வழிதிறந்துவிட்டது. ஊழலும், இனப் பாரபட்சமுமே அரசாங்கத் தொழில்களை தீர்மானித்தன. இந்த பாரபட்சங்களுக்கான நீதியை எந்த சட்டங்களும் தமிழர்களுக்கு தரவில்லை.
இப்படியான நிலைமைகளில் அடிப்படை உரிமைகள் பகுதி பாதிக்கப்பட்டவர்களை பாதுகாக்கும் என்று கூறியிருந்தார் கொல்வின்.ஆர்.டீ.சில்வா. ஆனால் அந்த ஆட்சிகாலம் முழுவதும் அவசரகால சட்டம் அமுலில் இருந்ததால் “அடிப்படை உரிமை” ஏற்பாடும் வலுவிழந்தே வெறும் அலங்காரமாக காணப்பட்டது. ஆக அதனாலும் நீதி வழங்க முடியவில்லை.
நீதித்துறையின் சுதந்திரத்தைக் குறைத்து, நீதி மறு ஆய்வுக்கான அதிகாரத்தையும் மட்டுப்படுத்தி ஆங்கிலேயர்கள் இலங்கையர்களுக்கு வழங்கிவிட்டு சென்ற உரிமைகள் கூட சுதேசிகளால் உருவாக்கப்பட்ட “72” அரசியலமைப்பால் வழங்கமுடியவில்லை.
ஆக அரசியல் பிதிநிதித்துவம் குறைக்கப்படல், மொழித் திணிப்பு - பாரபட்சமும், வேலைவாய்ப்பு பறிப்பு, பல்கலைக்கழக நுழைவுக்கான கல்வித் தரப்படுத்தல் முறை, இந்திய வம்சாவழியினரை நாடுகடத்தல், தமிழர்களின் மீதான தொடர் கைது, சிறைவைப்பு, போன்ற எந்தவித அநீதியையும் எதிர்த்து நீதிகோருவதற்கான கதவுகள் அடைக்கப்பட்டே தமிழர் மீதான அநீதிகள் நிறைவேற்றப்பட்டன. ஜனநாயக வழிகளாலும், சாத்வீக கோரிக்கைகளாலும், பரஸ்பர சமரச உடன்பாடுகளாலும் நீதி கிடைக்கப்போவதில்லை என்பது உறுதியானது.
ஒரு நாட்டின் குடிமக்களில் ஒரு பகுதியினருக்கு மாத்திரம் நீதி மறுக்கப்பட்டு, சட்ட வாய்ப்புக்கான வழிகள் அடைக்கப்பட்டு அதிருப்தி, விரக்தி, வெறுப்பின் உச்சத்துக்கு தள்ளினால் என்ன ஆகும்.மைய அரசியலில் இருந்து முழுமையாக தூக்கித் தூர எறியப்பட்ட மக்கள் தமக்கான வாழ்வை இப்படித்தான் அமைத்துக் கொள்ள இயலும். தமக்கான தலைவிதியை தாமே தீர்மானிப்பதற்கு தள்ளப்பட்டது இப்படித்தான். தமிழர்களை வஞ்சித்த அரசியலில் இருந்து தம்மை பாதுகாத்துக்கொள்ள வழி தேடியது இப்படித்தான்.
“சோல்பரி தொடக்கி வைத்ததை கொல்வின் முடித்து வைத்தார்” என்று இந்த இனப்பாரபட்சத்தைப் பற்றி ஆசிரியர் தலையங்கத்தில் எழுதியது வீரகேசரி.
புதிய அரசியலமைப்பை ஆதரித்து கையெழுத்திட்டவர்கள் தமிழர்கள் அருளம்பலம், மாட்டின், தியாகராசா, இராசன், குமாரசூரியர், சுப்பிரமணியம் ஆகியோரே.
“டொனமூர் திட்டத்தை ஆதரிக்க தம்பிமுத்து என்ற ஒரு துரோகி மட்டுமே இருந்தான். சோல்பரி அரசியல் திட்டத்தை ஆதரித்திட இராசகுலேந்திரன் என்ற துரோகி மட்டுமே இருந்தான், ஆனால் தமிழருக்கு முழுக்க குழிபறித்துள்ள புதிய அரசியல் சட்டத்தை ஆதரித்திட ஆறு துரோகிகள் இருந்திருக்கிறார்கள் என்பதை என்னும்போது தமிழ் இனம் இரத்தக் கண்ணீர் வடிக்க வேண்டும்...” என்று “சுதந்திரன்” பத்திரிகை எழுதியது. (04.06.72)
இனவாதத்துக்கென்று உருவான சந்தை
இனவாத அரசியலுக்கான களம் இந்த யாப்பின் மூலம் விஸ்தரிக்கப்பட்டதனால் “இனவாதம்” என்பது வாக்கு வங்கியை கைப்பற்றும் ஆயுதமானது. இனவாதத்துக்கு உருவான சந்தை அதற்கான போட்டிக் களமானது. சிங்கள சாதாரண மக்கள் எளிமையாக பகடைக்கைகளாக்கப்பட்டார்கள். அம்மக்கள் பேரினவாதமயப்படுத்தப்பட்டார்கள்.
அரசியல் தேர்தல் களம் இனவாரி, மதவாரி, சாதிவாரி, குடும்பவாரி, பிரதேசவாரி வாக்கு வங்கிகளுக்குள் சுருண்டது.
தமிழ் சமூகம் குறைந்தபட்சம் தமது வளமான வாழ்வை அமைத்துக்கொள்ள துணைநின்ற பெரும் காரணியாக இருந்தது கல்வி. அதிலும் கைவைக்கத் தவறவில்லை ஆளும் இனவாத ஆட்சியாளர்கள். முன்னர் நிகழ்ந்த ஒரு நிகழ்வை நினைவுக்கு கொணர்வோம்.
1961ஆம் ஆண்டு சத்தியாக்கிரகம் நடைபெற்ற வேளையில் அன்றைய பிரதமர் சிறிமா பண்டாரநாயக்கவைப் பார்த்து “சத்தியாக்கிரகிககளின் மீது நான் இராணுவத்தை ஏவினால் என்ன செய்வீர்கள்?” என்று ஆணவமாகக் கேட்டார். அதற்கு அடக்கமாக பதிலளித்திருந்த செல்வநாயகம்.
“துப்பாக்கியுடன் தன் முன் தோன்றிய கொலைஞன் முன் உங்கள் கணவர் எந்த நிலையில் நின்றிருப்பாரோ அதே நிலையில் நாமும் நிற்கக் கூடும்.”
துரோகங்கள் தொடரும்...
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மல்லாகம் மாநாட்டுத் தீர்மானம்“இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பன்னிரண்டாவது மாநில மாநாடு – மொழியால், கலாசாரத்தால், வரலாற்றால், பிரதேசத்தால், ஒரு தனி இனமாக வாழ வேண்டுமென்ற உணர்ச்சியால், ஒரு தனித் தேசிய இனமாகக் கணிக்கப்படுவத பூரண தகுதிபெற்ற இலங்கைவாழ் தமிழ் பேசும் மக்கள்; சர்வதேச நீதிக்கிணங்க ஏற்றுக்கொள்ளப்பட்ட, ‘தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை’யென்ற அடிப்படைத் தத்துவத்தின்படி, தமது பாரம்பரியமான தாயகத்தில் இலங்கைத் தமிழ்த் தேசிய இனம் தன்னாட்சி காண்பதே எமக்குள்ளே ஒரேயொரு வழியென்று இத்தால் தீர்மாணிக்கிறது” என்று பிரகடனம் செய்தது.
• தமிழரசுக் கட்சி தமிழர் கூட்டணியின் அங்கமாக இருப்பது
• தன்னாட்சி கோரிக்கைக்கு சர்வதேச ஆதரவைத் திரட்டுவது.
• தமிழ்ப் பிரதேசத்தின் பொருளாதார விருத்திக்குப் பாடுபடுவது.
• சாதியொழிப்பு
• சிறையிலுள்ள இளைஞர்களை விடுவிக்க நடவடிக்கை எடுத்தல்
• காங்கேசன்துறைத் தொகுதி இடைத்தேர்தலை நடத்தும்படி வற்புறுத்தல்
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...