Headlines News :
முகப்பு » , , » அம்மா பசிக்குது - என்.சரவணன் (சத்தியக் கடுதாசி)

அம்மா பசிக்குது - என்.சரவணன் (சத்தியக் கடுதாசி)


அதிர்ச்சி தரும் செய்தி ஒன்று சமீபத்தில் நிகழ்ந்தது.  மட்டக்களப்பு பகுதியில் ஒரு பெண், தனக்கு முகநூலில் நிகழ்ந்த அவமானத்தால் தனது தற்கொலையை நேரடியாக வீடியோவில் வெளியிட்டு மாண்டு போனார். தனக்கு நேர்ந்த அவமானத்தால் தனது இரு தங்கைகளும் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பதாலேயே தான் தற்கொலை செய்துகொள்வதாக வீடியோக் குறிப்புக் கூறியது. அந்தத்தாய், சாவதற்கான ஆயத்தங்களைச் செய்யும் தருணம், அருகில் வந்த குழந்தை, “அம்மா பசிக்குது” என்று கேட்ட காட்சி எவரையும் கண்கலங்கச் செய்யும்.

இந்தச் சம்பவம் என்னை நிம்மதி இழக்கச் செய்திருந்தது. என் தங்கை கல்யாணி தற்கொலை செய்து, இந்த வருடத்துடன் ஒன்பது ஆண்டுகள் ஆகின்றன. அவள் தன்னைத்தானே தீயிட்டு கருகிக் கொண்டிருந்தபோது அருகில் ஒரு வயதும் நிறைவுறாத அவளின் தவழும் குழந்தை கதறிக் கொண்டிருந்தது. அயலவர்கள் அக்குழந்தையைக் காப்பாற்றினார்கள்.

நோர்வே வந்திருந்த புதிதில் கடும் மன அழுத்தத்துக்கு உள்ளாகி இரு தடவைகள் நான் தற்கொலைக்கு முயன்று, இரண்டாவது தடவை பொலிசார் வந்து தலையிட்டுத் தடுத்து நிறுத்தினர். மன அழுத்தத்திலிருந்து வெளியே வருவதற்காகச் சிலகாலம் உரிய மருத்துவத்தையும் உளவள ஆலோசனைகளையும் பெற்றுக் கொண்டேன். இது தனிப்பட்ட விடயமாயினும் பகிர்வதற்கு நான் தயங்கவில்லை.

தற்கொலைக்கு முயற்சிப்பவர்கள், குறிப்பிட்ட ஒருவரையோ குழுமத்தையோ பழி தீர்க்கும் உள்நோக்கமும் கொண்டுள்ளனர் என உளவியல் சொல்கிறது. ஆனால் எனது நிலை வேறு. அசௌகரியமான நினைவுகளில் இருந்து மீள முடியாதபடி நெஞ்சு நெருப்பாக கதகதத்துக் கொண்டிருந்தது. என்னை என்னால் மீட்க முடியவில்லை. என் அமைதியின்மையை கட்டுப்படுத்தவும் முடியவில்லை. அன்று அந்தச் சித்திரவதையை நிறுத்த எனக்குத் தெரிந்த ஒரே வழி என்னை முழுமையாக நிறுத்திக் கொள்வது.

'தற்கொலை முயற்சி' என்பது மரபியலோடு தொடர்புபட்டது எனும் கருத்துண்டு. எங்கள் குடும்பங்களில் நிகழ்ந்து முடிந்த தற்கொலைகளை மீட்டுப் பார்க்கும்போது அது உண்மை தானோ என்று எண்ணத் தோன்றுகிறது. அப்போது உளவள ஆலோசனை எனக்குக் கைகொடுத்தது என்பதே உண்மை. மேற்படி பெண்ணின் தற்கொலையும் என்னைப் பாதித்தது இவ்வாறுதான்.

சமூக வலைத்தளங்கள் மூலம் மனக்காயங்களுக்கு உள்ளாவதும் அதனால் தமது கதையை முடித்துக் கொள்வதுமான சம்பவங்கள் வரவர அதிகரித்து வருகின்றன. இதில் பெண்களின் தொகையே அதிகம். சமூக வலைத்தளங்களின் மூலம் பெண்களின் படங்களும் வீடியோக்களும் அவதூறாக வெளிப்படுவதனால் அதிக பெண்கள் தொடர்ச்சியாகப் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.

நம்பகம் இல்லாதவர்களுடன் நெருக்கமாகவோ ஆபாசமாகவோ புகைப்படங்களை எடுக்க அனுமதிக்காதீர்கள் என்று எச்சரிக்கைகள் வெளியாகியபோதும், சில பெண்கள் அதன் ஆபத்தை இன்னமும் விளங்கியதாகத் தெரியவில்லை. நவீன தொழில்நுட்பங்களின் விளைவாக பள்ளிக்கூட மாணவிகளும் இப்படிச் சிக்க வைக்கப்படுகிறார்கள். அப்படி எடுக்கப்பட்ட புகைப்படங்களைப் பகிரங்கமாகச் சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதாக மிரட்டி, தமது தேவையை நிறைவேற்றிக் கொள்ளும் கயவர் கூட்டம் சமூகத்தில் அதிகரித்திருக்கிறது.

வேர்ல்ட் அட்லஸ் (World Atlas) என்கிற அமைப்பு (21.2.17) வெளியிட்ட இறுதி அறிக்கையில், 'உலகில் அதிகம் தற்கொலை நடக்கும் நாடுகளின் பட்டியலில் இலங்கை மூன்றாவது இடத்தில் இருக்கிறது' என்று கூறப்பட்டது. இது பெருமையல்ல; வெட்கப்பட, வேதனைப்பட வேண்டிய அதிர்ச்சிச் செய்தி. 

யுத்தம் நிகழ்ந்த காலப்பகுதியில் இலங்கை முதலாவது இடம் பிடித்திருந்தமை தெரிந்ததே. அப்போது தற்கொலை என்பது யுத்தத்தின் அங்கமாகவும் இருந்தது. அதேவேளை, யுத்தத்தின் பக்கவிளைவாகத் தற்கொலை செய்த சம்பவங்களும் ஏராளமாக நிகழ்ந்தன. அதேசமயம் மத்தியகிழக்கு நாடுகளுக்குச் சென்ற பெண்கள், சித்திரவதை பொறுக்காமல் தற்கொலை செய்த செய்திகளையும் கவனித்து இருப்போம்.
\
காதல், பரீட்சைத் தோல்விகளில் குடும்பத் தகராறுகளில் மட்டுமன்றி, கடனடைக்க முடியாமலும் கூடத்  தற்கொலைகள் நிகழ்கின்றன. மேற்குறித்த அறிக்கை, 'இலங்கையில் தற்கொலை செய்துகொள்பவர்களில் பத்துக்கு ஏழுபேர் பெண்கள்' என்கிறது.

உலக சுகாதார நிறுவனத்தினர் வெளியிட்ட அறிக்கையில் 'இலங்கையில் எட்டு இலட்சத்துக்கும் மேற்ப்பட்டவர்கள் மனஅழுத்தங்களால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் இதன் காரணமாக  ஆண்டுக்கு சராசரி மூவாயிரம்பேர் தற்கொலை செய்துகொள்வதாகவும் எட்டுக்கு ஒருவர் என்கிற விகிதத்தில் உளவியல் நோய்க்கு ஆளாகியிருப்பதாகவும் அவர்களில் நாற்பது வீதத்தினர் மாத்திரமே மருத்துவ உதவி பெறுகின்றனர்' என்றும் தெரிவிக்கப்பட்டது.

ஆண்களைவிட உணர்ச்சிவசப்பட்டுச் சாவை நாடும் பெண்கள் பற்றி நம் சமூகம் எப்போது அக்கறைப்படப் போகிறது? தற்கொலைக்கு உந்துகின்ற மனச்சோர்வுக்கான தீர்வை மருந்துக் கடைகளில் பெற முடியாது.  விரக்தி, மனச்சோர்வு, மன உளைச்சல், மன அழுத்தம் போன்றவற்றிலிருந்து விடுவிப்பதற்காக உளவள ஆலோசனைகள், வளர்ந்த நாடுகளில் தாராளமாகக் கிடைக்கின்றன. ஆனால் இலங்கை போன்ற நாடுகளில் உளவியல் உதவி என்பது 'பைத்தியங்களுக்கு' வழங்கப்படும் சேவையாகவே அர்த்தம் கொள்ளப்படுகிறது.

உளவள சேவை பற்றிய விழிப்புணர்வும் நம் சமூகத்தில் கிடையாது.
பெண்கள் ஏன் அதிகளவில் தற்கொலைக்கு உந்தப்படுகிறார்கள் என்பதன் சமூகக் காரணிகளை ஆராய வேண்டிய தருணம் இது. நம் தாய், தமக்கை, தங்கை, மனைவி, மகள், நண்பி என எவருக்கும் இப்படி ஒரு நிலை ஏற்பட்டு விடக்கூடாது என்று நாம் வேண்டிக் கொள்வதைப்போல, அதற்குக் காரணமான அடிப்படைகளைக் கண்டுபிடித்துத் தீர்ப்பதும் நம்மெல்லோரதும் கடமையாகிறது. இத்தகைய சாவு, நாளை நம் கதவுகளை தட்டும்வரை  காத்திருக்கத் தேவையில்லை. அதற்கு முன்பாகச் சமூக பொறுப்புடன் தற்கொலைக் கணக்குகளைத் தீர்த்தாக வேண்டும்.

நன்றி - IBC தமிழ் பத்திரிகை
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates