கருப்பு நிறத்தை அபச குணத்தோடு தொடர்புபடுத்தி பார்க்கும் ஐதீகம் இந்திய துணைக்கண்டத்தில் நிலவி வருவது நமக்குத் தெரியும்.
ஆனால் இலங்கையில் கருப்பை ஒரு இனத்தை அடையாளம் காணும் குறியீடாக இருந்து வருகிறது என்பதை அறிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்.
“ஆம். தமிழர்கள் கருப்பாக இருப்பார்கள்” / “கருப்பாக இருப்பவர்கள் தமிழர்” என்கிற ஒரு ஐதீகம் சிங்களவர்கள் மத்தியில் நீண்ட காலமாக நிலவி வருகிறது. இதை பல சிங்கள நண்பர்களும் உறுதிபடுத்தியிருக்கிறார்கள்.
நம் நாட்டுக்கு வரும் வெளிநாட்டவர்களோ இதில் யார் தமிழர், யார் சிங்களவர் என்று அடையாளம் காண மாட்டார்கள். தமிழர்களில் எந்தளவு கருப்புத் தோலைக்கொண்ட உருவங்கள் இருக்கின்றனவோ அதே விகிதத்தில் சிங்களவர்கள் மத்தியிலும் இருக்கவே செய்கின்றனர். அப்படியிருக்கும் போது தமிழர்கள் அனைவரும் கருப்பாகவே இருப்பார்கள் என்கிற ஐதீகத்தின் ஆரம்பம் எது என்று பல தடவைகள் எனக்குள் கேட்டிருக்கிறேன். தேடியுமிருக்கிறேன்.
சிங்களவர்களை ஆரியர் வம்சாவளியாகவும், தமிழர்களை திராவிடம் வம்சாவளியாகவும் கருதிவரும் புனைவின் பாற்பட்டதாக இது இருக்கலாம் என்றும் எண்ணத் தோன்றுகிறது. மேலும் மண்ணின் மைந்தர்களாக சிங்களவர்களை முன்னிறுத்துகிறபோது சிங்களவர்களை கதாநாயகர்களாகவும் தமிழர்களை வில்லன்களாகவும் கருதும் கருத்தாக்கத்தின் விளைவாகவும் இது வளர்ந்து வந்திருக்கலாம். சிங்களத் திரைப்படங்களில் வரும் தமிழர்களைக் கூட அவர்கள் கருப்பல்லாதவர்களாக காட்டுவதில்லை. சிங்கள முற்போக்காளர்களால் எடுக்கப்படும் “கலை” படைப்புகள் கூட இதில் விதிவிலக்கு இல்லை.
எல்லாளன் துட்டகைமுனு போர் பற்றிய சித்திரங்கள், சிலைகள் கூட விதிவிலக்கில்லை. எல்லாளனையும் அவனது படையினரையும் கூட கருப்பர்களாக முன்னிறுத்தியிருப்பதை எங்கெங்கும் காணக் கூடியதாக இருக்கிறது. 2015இல் வெளிவந்த “மகாரஜ கெமுனு” என்கிற திரைப்படமும் சரி கடந்த வருடத்திலிருந்து நீண்ட தொடராக வெளிவந்து கொண்டிருக்கும் “கெமுனு மகாரஜ” என்கிற தொலைக்காட்சித் தொடரிலும் தமிழ் எல்லாளனை கருப்பாகவும் சிங்கள துட்டகைமுனுவை வெள்ளையாகவும் தான் பாத்திரங்கள் சித்திரிக்கப்பட்டுள்ளன. மகாவம்சத்தில் எல்லாளனையோ தமிழர்களையோ கறுப்பர்களாக எங்கும் குறிப்பிட்டதில்லை.
துட்டகைமுனுவை உயிர்ப்பிப்பதற்கான தேவை இன்றைய இனவாதத் தரப்புக்கு அதிகரித்திருக்கிறது. கூடவே அவர்களை கருப்பு, வெள்ளையாகவும் காட்டுவதன் உள்நோக்கம் அரசியல் நிறைந்ததும் கூட. வெள்ளை என்றால் “தூய்மை”, “புனிதம்”, கருப்பு என்றால் “அழுக்கு”, “அபசம்” என்கிற கருத்தாக்கத்தினதும் நீட்சியும் தான்.
இலங்கையில் 20 வருட காலம் கைதியாக இருந்த ஆங்கிலேயனான ரொபர்ட் நொக்ஸ் தனது “இலங்கைத் தீவின் வரலாற்றுத் தொடர்பு” ( An Historical Relation of the Island of Ceylon by Robert Knox - 1681) நூலில் “இங்குள்ள மக்களை விட மன்னன் கருப்பாக இருக்கிறார்” என்று எழுதினார்.
ஒரு சம்பவத்தையும் இங்கு குறிப்பிடுவது பொருந்தும்.
1996ஆம் ஆண்டு சரிநிகரில் பணிபுரிந்துகொண்டிருந்த போது தமிழர்கள் கைது செய்யப்படுவது குறித்த ஒரு அட்டவணையை தயாரித்து அதனை தினசரி புதிப்பிப்பத்துக் கொண்டு வந்தேன். தினசரி ஆங்கில, சிங்கள, தமிழ் பத்திரிகைகளில் இருந்து அந்தத் தகவல்களைத் கணினியில் தொகுத்தேன். இடம், திகதி, யாரால், எத்தனை பேர், ஆண்கள்/பெண்கள், செய்தியின் மூலம் என்கிற தரவுகள் பல பக்கங்களாக என்னிடம் இருந்தன.
அப்போது சர்வதேச மன்னிப்புச் சபையைச் சேர்ந்தவர்கள் இலங்கையில் மனித உரிமை மீறல் பற்றிய விசாரணைக்காக வந்து கோல்பேஸ் ஓட்டலில்தங்கியிருந்தார்கள். அவர்களை சந்திப்பதற்கு அன்றைய “ஹிரு” என்கிற சிங்கள முற்போக்கு பத்திரிகையின் தோழர்கள் அவர்களை சந்தித்து பல அறிக்கைகளை சமர்ப்பிப்பதற்கு ஏற்பாடாகியிருந்தது. அவர்களுடன் மனித உரிமைகள் பற்றிய பணிகளில் சேர்ந்து இயங்கி வந்ததால் நானும் அவர்களுடன் கோல்பேஸ் ஓட்டலுக்குச் சென்று பிரதிநிதிகளைச் சந்தித்து நான் கொண்டு சென்ற அந்த கைது பட்டியலையும் ஒப்படைத்து விட்டு வெளியே வந்தோம்.
இந்தியத் தூதரகத்துக்கு முன்னால் உள்ள பஸ் நிலையத்தின் அருகில் வைத்து சிவில் உடை தரித்த மூவர் மறைவிடத்திலிருந்து வெளியே வந்து எங்களை ஓரமாக வரச் சொன்னார்கள். அவர்களுக்கு எங்கள் சந்திப்பு தெரிந்திருந்தது. எங்கள் மூவரிடமும் அரசாங்கம் வழங்கிய ஊடக அடையாள அட்டையும் இருந்தன. பத்திரிகை வேலையாக நாங்கள் அவர்களை சந்தித்தோம் என்று கூறியும் அவர்கள் எங்களை குடைந்தெடுத்துக் கொண்டிருந்தார்கள். இறுதியில் அவர்கள் என்னை மட்டும் அழைத்துக் கொண்டு கொள்ளுபிட்டி பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றார்கள்.
தோழர் ரோஹித்த பாஷனவும் மற்ற தோழரும் உடனேயே உரிய இடங்களுக்கு அறிவித்து என்னை விடுவிப்பதற்கான ஒழுங்குகளைச் செய்தார்கள். அன்றைய பி.பி.சி செய்தியிலும் கூட “பத்திரிகையாளர் கைது” பற்றிய செய்தி என்னுடைய பேட்டியுடன் வெளிவந்தது.
பி.பி.சி கொள்ளுபிட்டி பொலிசுக்கு தொடர்பு கொண்டு கேட்ட கேள்விகளைத் தொடர்ந்து என்னை அவர்கள் ஒரு சில மணித்தியாலங்களில் விடுவித்து விட்டார்கள். பிபிசி கேட்ட கேள்விகளில் ஒன்று அவர் ஊடக அடையாள அட்டையையும் காட்டிய பின்னர் அவரை அழைத்துச் செல்ல மேலதிக காரணம் என்ன என்பது தான். “நாங்கள் அவர் புலியாக இருக்கக் கூடும் என்று நினைத்தோம்” என்றார்கள். புலியாக சந்தேகப்பட என்ன காரணம் என மேலும் வினவினார்கள். அதற்கு அந்த பொலிஸ் அதிகாரி கூறிய பதில். அவர் “கருப்பாக” இருந்தார். என்பது.
“ஹிரு” பத்திரிகை தோழர்கள் அதுவரை “கருப்பு” பற்றிய இந்த ஐதீகத்தின் அரசியலை புரிந்து கொண்டிருக்கவில்லை. இந்த சம்பவம் அவர்களையும் மிகவும் பாதித்திருந்தது. தோழர் பாஷன இதுபற்றி விரிவான ஒரு கட்டுரையை பின்னர் ஹிரு பத்திரிகையில் எழுதினார்.
2007 ஆம் ஆண்டு பெண்கள் ஊடக கூட்டமைப்பில் பணிபுரியும் எனது நண்பி சித்திரா “விகல்ப” (மாற்று) என்கிற சிங்கள ஊடகத்துக்கு அளித்த பேட்டி இப்படி தொடங்குகிறது...
“இப்போது நான் என் நெற்றியில் பொட்டு வைப்பதில்லை. எனது அடையாளத்தை அப்படி மறைத்தாலும் அவர்கள் நான் தமிழ்பெண் என்பதை அடையாளம் கண்டு விடுகின்றனர். ஏன் என்றால் நான் ‘கருப்பு’. பொது இடங்களில் நான் கூர்ந்து கவனிக்கப்படுவதற்கு எனது நிறம் ஒரு முக்கிய காரணம்”
என்று தொடர்கிறது அந்த பேட்டி.
திலீபன் பற்றிய ஒரு நல்ல சிங்கள கட்டுரையொன்றில் கூட “கருப்புத் தமிழனின் வெள்ளை இதயம்” என்று தான் எழுதுகிறார் எழுத்தாளர் கசுன் மகேந்திர ஹீனடிகல.
தமிழர்களை கருப்பாகவும் தம்மை கருப்பல்லாதவர்களாகவும் காணும் சிங்களப் பார்வைக்குப் பின்னால் உள்ள நிறப் பெருமிதம் ஒரு வகையில் தமிழர்களை அதற்குக் கீழ் நிலையில் வைத்து இழிவாகப் பார்க்கும் பண்பேயன்றி வேறில்லை. தமிழர் மீதான வெறுப்புணர்ச்சியின் வளர்ச்சிக்கு இது நிச்சயம் துணை செய்திருக்கிறது என்றே கூற வேண்டும்.
புகலிடங்களில் தஞ்சமைடந்த தமிழர்கள் பலர் கருப்பர்களாகக் கருதுவது ஆப்பிரிக்க வம்சாவளி கருப்புத் தோலுடைய மனிதர்களைத் தான். காப்பிரியர்கள் என்றெல்லாம் இழிவாக பார்க்கும் வெறுப்புணர்ச்சி தமிழர்கள் மத்தியிலும் இருக்கிறது. ஆனால் அவர்கள் தஞ்சமடைந்த அந்தந்த நாட்டின் “மண்ணின் மைந்தர்களுக்கோ” ஆப்பிரிக்கர்களும் கருப்பர்கள் தான். இலங்கையர்களும் கருப்பர்கள் தான்.
சாதியம் பற்றி அம்பேத்கார் ஒன்றைக் குறிப்பிடுவார். இடை நிலைச் சாதியினர் எல்லோரும் தம்மை மேலிருப்போர் மிதித்திக் கொண்டே, இடித்துக் கொண்டே இருக்கிறார்கள் என்று சாடிக் கொண்டிருப்பார்களாம். அதே வேளை அவர்கள் தமக்குக் கீழே உள்ளவர்களை இடித்துக் கொண்டே, மிதித்துக் கொண்டே இருப்பார்களாம்.
உலகில் நிறவாதத்தின் அரசியல் பாத்திரம் வேறொன்றாக இருக்கலாம். ஆனால் இலங்கையில் அது இனவாதத்தோடு சேர்ந்து வித்தியாசமான வேறு வடிவத்தில் இயங்கிக் கொண்டிருப்பதை சற்று உன்னிப்பாகப் பாருங்கள் உங்களுக்கு வேறு பல செய்திகள் அங்கே காத்திருக்கும்.
நன்றி IBC தமிழ் பத்திரிகை
IBC தமிழ் பத்திரிகை - 2 by SarawananNadarasa on Scribd
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...