1991. எனக்கு வயது 17. “Abbreviation 1000” என்கிற சொற்சுருக்க நூலை வெளியிடுவதற்கு என்னை உந்தியவர் தோழர் ஜெயராமனும் (லெனின் மதிவாணனின் தந்தை), இலங்கை திராவிட கழகத் தலைவர் தோழர் இளஞ்செழியன், ஒடுக்கப்பட்டோருக்காக சங்கம் அமைத்து செயல்பட்ட என் மாமனார் பெருமாள் அவர்களுமே. தோழர் ஜெயராமன் என்னை மாக்சிய அரசியலுக்குள் நுழைத்தவர். அந்த அரசியலை செழுமைப்படுத்தியவர் எழுத்தாளர் செ.கணேசலிங்கனும் அவர் வெளியிட்ட “குமரன்” சஞ்சிகையும் தான். “Abbreviation 1000” றோணியோ முறையில் தான் வெளியானது.
பெரும் எடுப்புடன் எல்பின்ஸ்டன் மண்டபத்தில் அன்றைய கொழும்பு நகர மேயர் ரத்தினசிரி ராஜபக்சவின் தலைமையில் நிகழ்ந்தது. ஆனால் அது முறையான கணக்கில் எடுக்கக் கூடிய நூலாக இருக்கவில்லை.
புரட்சிகர அரசியலுக்கு எழுத்தும், ஊடகமும் எந்தளவு முக்கியத்தும் மிக்கது என்பதை உணர்ந்தபோது தான் மக்கள் கலை இலக்கிய பேரவையின் “விடிவு” சஞ்சிகையை தோழர் இம்தியாஸோடு (நிதானிதாசன்) சேர்ந்து நடத்திக் கொண்டிருந்தேன். : “தோழர் மனுசநேசன்”, “கோமதி” போன்ற புனைபெயர்களிலும் அதில் எழுதியிருக்கிறேன். அதையும் ஆரம்பத்தில் செ.கணேசலிங்கன் தான் பதிப்பித்துத் தந்தார்.
எழுத்து என்பது சமூக மாற்றத்துக்கான போராயுதமாக கைகொள்ளும் நோக்கில் தான் ஊடகத்துறையில் ஆழ்ந்து கால் பதித்தேன். ஊடகங்களில் என்ன பற்றாக்குறையாக இருக்கிறதோ, என்ன இன்று சொல்லப்படவேண்டுமோ அதைச் சொல்லவேண்டும் என்பதையே என் கடமையாக செய்து வருகிறேன். ஊடகத்துறைக்கு தேவையான அனைத்தையும் கற்றுக்கொள்ளவேண்டும் என்கிற வேகத்தில் நிறையவே கற்றுக்கொண்டேன்.
இதன் விளைவாகத் தான் நோர்வேக்கு புலம் பெயர்ந்ததன் பின்னர் “பறை” என்கிற சஞ்சிகையை வெளிக்கொணர்ந்தேன். அதன் பின்னர் பல சஞ்சிகைகள், பத்திரிகைகளுக்கு தொடர்ச்சியாக என் இலக்கில் எழுதிவருகிறேன்.
90 களில் தமிழீழ மக்கள் கட்சியின் தலைமறைவுப் பத்திரிகையாக வெளிவந்த “தமிழீழம்” பத்திரிகையின் ஆசிரியர் பொறுப்பை நான் ஏற்று நடத்தியிருந்தேன். ஒரே நேரத்தில் உலகில் பல நாடுகளில் வெளிவந்த இரகசிய பத்திரிகையாக அது இருந்தது.
***
90 களின் ஆரம்பத்தில் சரிநிகரில் இணைந்து அதன் ஆசிரியர்களில் ஒருவனாக கடமையாற்றித் தொடங்கினேன். சரிநிகரில் எனது சொந்தப் பெயரில் வெளியான கட்டுரைகள் குறைவு ஏறத்தாழ 90 வீத கட்டுரைகள் புனை பெயர்களிலேயே வெளிவந்தன. மொத்தம் 12 பெயர்களில் எழுதியிருப்பதை சமீபத்தில் தான் கணக்கெடுத்திருந்தேன்.
சரிநிகர் கொடுத்த அனுபவம் பெரியது. தமிழில் தொடங்கிய முதல் மாற்றுப் பத்திரிகை. துணிச்சல் மிக்க ஆழமான, முற்போக்கான உள்ளடக்கத்திற்காக நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. ஆனால் அதேவேளை அதை விற்கவும், வாங்கவும் அச்சமுற்ற காலமாகவும் அது இருந்தது. பல சிறிய கடைகளில் அடியில் மறைத்து வைத்திருப்பார்கள். குறிப்பிட்ட வாசகர்கள் “சரிநிகர்” என்று கேட்டபின்பு தான் அடியில் இருந்து உருவிக் கொடுத்த காலம் ஒன்றும் இருந்தது. அப்பேர்பட்ட பத்திரிகையில் பலரின் பெயர் புனைபெயர்களாக இருந்ததில் உங்களுக்கு ஆச்சரியமிருக்காது.
எனது முதல் நூல் உருவானதும் அங்கு தான். எனது சொந்தப் பெயரில் எழுதியது தான் “பாராளுமன்ற அரசியலில் பெண்கள்” என்கிற தொடர். பல வாரங்கள் தொடர்ந்த அந்த தொடருக்காக நான் கடும் உழைப்பைக் கொடுத்திருந்தேன். உண்மையில் அதனை நான் எழுதியதே அப்போது கொழும்பு பல்கலைக்கழகத்தில் தொடங்கிய ஊடகவியலாளர்களுக்கான டிப்ளோமா கற்கைக்கான இறுதி ஆய்வுக்காகத்தான். தமிழில் அக்கற்கை தொடங்கியபோது நாங்கள் தான் அதன் முதல் வருட மாணவர்கள். தமிழ் ஊடகங்களில் பணியாற்றிய முதன்மை நிலை ஊடகர்கள் அந்த கற்கையில் ஆக்கிரமித்திருந்தோம்.
அப்போது எங்கள் சரிநிகர் அலுவலகத்துக்கு முன்னால் இருந்த “பெண்கள் ஊடக வலையமைப்பு” என்கிற பெண்கள் அமைப்பின் பணிகளில் நானும் அவர்களுடன் பங்கெடுத்திருந்தேன். தோழமைக்கு உரிய மறைந்த சுனிலா அபேசேகர அவ்வமைப்பை தலைமை ஏற்றிருந்தார். அப்போதெல்லாம் நான் கண்ட ஒரு விடயம் பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவம் சம்பந்தமான உரையாடல்களில் எல்லாம் போதுமான தகவல்களுக்கு பஞ்சம் நிலவியது. என்னை உந்தியது அந்த பற்றாக்குறை தான்.
இன்று பெரும்பாலான தகவல்களை இணையங்களிலும் பெற முடிகிறது. ஆனால் 90களில் அப்படியல்ல. தொடருக்கான தகவல்களையும் தரவுகளையும் தேசிய சுவடி கூடத் திணைக்களம், கொழும்பு அருங்காட்சியக நூலகம், தேசிய நூலக சேவைகள் மன்றம் போன்ற இடங்களில் நாட்கணக்கில் இருந்து சேகரித்திருக்கிறேன். பின்னர் நான் செய்த ஆய்வுகளுக்கு அந்த அனுபவம் அதிகம் கைகொடுத்திருக்கிறது.
சரிநிகரில் எனது கவனத்துக்குரிய தொனிப்பொருளாக நான்கு விடயங்களில் அதிக கவனத்தை செய்து வந்திருக்கிறேன். அவை இடதுசாரித்துவம், தேசியம், சாதியம், பெண்ணியம். அதிலும் பேசாப்பொருளை பேசுவது என்பதில் குறியாக இருந்தேன். ஏலவே பேசப்பட்ட விடயங்களை பேசுவதில் என்னை விரயப்படுத்துவதில்லை என்று விரதமே இருந்தேன். பேசாப்பொருளை தேடிச் சென்று அதனை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியைத் தான் இன்றும் தொடர்ந்து வருகிறேன். குறிப்பாக விளிம்பு நிலையினரின் பிரச்சினைகளில் எனது கவனப்புள்ளியை செலுத்தினேன்.
அந்த வகையில் பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவம் பற்றிய எனது தொடரை பல வாசகர்கள் ஆவணப்படுத்தி வந்தார்கள். பல பல்கலைக்கழக மாணவிகளும், பெண்கள் அமைப்புகளைச் சேர்ந்தவர்களும், ஆய்வுகளை மேற்கொள்பவர்களும் கூட சரிநிகர் அலுவலகத்துக்கு வந்து இந்த தொடரின் பிரதிகளை எடுத்துச் சென்றிருக்கிறார்கள். இதன் முக்கியத்துவத்தை உணர்ந்த நண்பர்கள் நூலாக்கும் படி என்னை வலியுறுத்தி வந்தார்கள்.
அவர்களில் முக்கியமானவர் எனது ஆசானும், நண்பருமான சோதிலிங்கம் அவர்கள். என்னை ஆளாக்கியவர் அவர். என்னை எனக்கே கண்டுபிடித்துத் தந்தவர் அவர். என்னைப் போன்ற விளிம்பு நிலையிலிருந்து வந்தவர்களுக்கு சோதிலிங்கம் போன்ற மகத்தான மனிதர்களின் தேவை அவசியம். என்னை எழுத்தாளனாக்கி, மொழிபெயர்ப்பாளனாக்கி, அரசியல் ஆசானாக்கி, அரசியல் செயற்பாட்டாளனாக்கி அழகு பார்த்தவர் அவர். அவர் எனது எழுத்துக்களின் ரசிகனும் கூட. எனது “முதலாவது பிரசவத்தின்” மருத்துவச்சியும் அவர். அவர் எனது எழுத்துக்கள் நூலாக்கம் பெற வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்திய போதெல்லாம். மேலும் அது பூரணப்படுத்தும் வரை பொறுப்போம் என்பேன். ஆனால் அவரோ இருப்பதை முதலில் வெளியில் கொண்டுவருவோம் அடுத்த பதிப்பில் மேலதிக விடயங்களை சரிசெய்யலாம் என்பார்.
அப்படி நிர்ப்பந்தித்து வந்தது தான் “இலங்கை: அரசியலில் பெண்களும், பெண்களின் அரசியலும்”.
2000 ஆம் ஆண்டு நான் நோர்வே சென்று விட்டேன். 2001ஆம் ஆண்டு நான் இலங்கை வந்தபோது “மூன்றாவது மனிதன்” பதிப்பக ஆசிரியர் தோழர் பௌசர் மூலமாக அதனை நூலாக வெளிக்கொணர்ந்தேன். குறுகிய காலத்தில் அதன் வெளியீட்டுவிழா கொழும்பு தமிழ் சங்கத்தில் நிகழ்ந்தபோது அதற்கு தலைமை தாங்கியவர் பேராசிரியர் சிவத்தம்பி. செல்வி திருச்சந்திரன், மேனகா கந்தசாமி போன்றோர் விமர்சன உரையாற்றினார்கள்.
இன்று வரை பெண்களின் அரசியல் பிரதிநித்துவம் பற்றி விரிவாகக் கூறுவதற்கு இந்த ஒரு நூலே இருக்கிறது என்று கூற முடியும். சிங்களத்திலோ, ஆங்கிலத்திலோ கூட இது வரை வெளிவந்த நூல்களில் இந்தளவு விரிவாக இல்லை எனலாம். அடுத்த பதிப்பு இன்னும் சில மாதங்களில் வெளிவர விருக்கிறது. மேலும் பல பக்கங்களுடனும் மேலும் பல பல தகவல்களையும் அது உள்ளடக்கியிருக்கும்.
சிறு வயதில் எனது தகப்பனார் சேகரித்து வைத்திருந்த பல அரிய நூல்களை வறுமையின் காரணமாக ஆமர்வீதியில் தெரு வியாபாரியிடம் விற்று அதில் கிடைத்த பணத்தைக் கொண்டு நானும், எனது சிறு தங்கைகளும் வயிராறிய காலம் ஒன்று இருந்தது. பின்னர் எனது நூல்கள் நிறைந்த எனது அறையைக் கண்டு பூரித்துப் போனார் என் அப்பா. அதனை தனது நண்பர்களை அழைத்துக் காட்டி பெருமிதம் கொண்ட என் அப்பா எனது நூல் வெளியீட்டில் பார்வையாளர்களில் ஒருவராக ஓரமாக அமர்ந்திருந்து கண்ணீர் சொரிந்தார். ஓரிரு வாரங்களில் அவர் மாரடைப்பால் எங்களை விட்டு மறைந்தார்.
இந்த “முதலாவது பிரசவத்தின்” விந்தும் அவர் தான். வித்தும் அவர் தான். அவருக்கு இது காணிக்கை.
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...